Serial Stories Uncategorized

சிகப்பு கல்லு மூக்குத்தி-4

4

“புதிய கடைக்கு 50,000 டோக்கன் அட்வான்ஸ் கொடுத்ததோடு நிற்கிறது. இன்னமும் ஒரு வாரத்தில் மீதம் நான்கரை இலட்சத்தை கொடுத்தால்தான் கடை சாவியை கொடுப்பேன் என்கிறார் கடை உரிமையாளர். நம்மால் சேர்ந்தாற் போல் பத்தாயிரம் கூட புரட்ட முடியவில்லை” கவலையுடன் சொன்னான் குழந்தைவேல்.

 அந்த புதிய கடை முன்பே ஜவுளிக்கடை இருந்த இடமாதலால் உள் அலங்கார வேலைகள் எதுவும் செய்ய வேண்டியிருக்காது.அப்படியே இவர்களிடம் இருக்கும் சாமான்களை அங்கே எடுத்து வைத்தால் போதும். அதனால் தான் மிகவும் விரும்பி அதற்கு 50 ஆயிரம் முன்பணம் கொடுத்துவிட்டு எனக்கே வேண்டும் என்று பேசி வைத்து விட்டு வந்திருந்தான் குழந்தைவேல்.

 ஆனால் இப்போது அவர்கள் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. “சசி உன் அம்மா வீட்டில் கேட்டு பார்க்கலாமா?” குழந்தைவேல் மிகவும் தயங்கித் தயங்கி மனைவியிடம் கேட்டான்.மதுராட்சி அதிர்ந்தாள். சசிகலா கொஞ்சம் நல்லவள்தான். பொறுமையாக குடும்பத்தை கொண்டு செல்பவள். ஆனால் அவள் அம்மா வீட்டினர் அந்த அளவு பாந்தமானவர்கள் கிடையாது.எந்நேரமும் குறை கூறலும் குத்தல் பேச்சுமாகவே இருப்பார்கள்.

 ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கும்போதே குறை கண்டுபிடிப்பவர்கள் இப்போது கையில் பணம் இல்லை என்று போய் நின்றால் அவ்வளவுதான். இதையே சசிகலாவும் எண்ணினாள் போல, கண்கள் கலங்க கணவனை பார்த்து “உனக்குத் தெரியாதா?” என்று கண்களாலேயே கேட்டாள்.

 குழந்தைவேல் கலங்கிய கண்களை மறைக்க தலையை குனிந்து கொண்டான். “அண்ணா நான் என் ஃபிரண்ட்ஸ் இரண்டு மூன்று பேரிடம் கேட்டிருக்கிறேன். பார்க்கலாம், எப்படியும் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்” அண்ணனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டிற்குள் மூச்சு முட்டுவது போல் இருக்க வாசல் பக்க அறைக்கு வந்து தனது தெருப்புற ஜன்னலிடம் சரணடைந்தாள்.

 ஜன்னல் திண்டில் அமர்ந்து கொண்டவள் போனை எடுத்து நம்பரை அழுத்தினாள். “ஹலோ… சித்தி நீங்களா? சித்தப்பா இல்லையா?” என்ன இது சித்தப்பா போனில் சித்தி பேசுகிறார்கள் மனதின் நெருடலை குரலில் மறைத்தபடி கேட்டாள்.

” இல்லைம்மா வந்து… சித்தப்பா தூங்குகிறார்…இல்லை வெளியே போய் இருக்கிறார்”

” ஏன் சித்தி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்?” விரக்தியாய் கேட்டாள்.




” மதுரா எங்களை தப்பாக நினைத்துக் கொள்ளாதேம்மா. குழந்தையும் வந்து கேட்கத்தான் செய்தான்.ஆனாலும்…

உங்களுக்கு இல்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறதே என்ற கவலைதான் எங்களுக்கு. நாங்கள் இதே ஊரில் வாழ வேண்டும் இல்லையாம்மா! ஊர் பெரியவர்களை பகைத்துக் கொள்ள முடியாதே. எங்களை மன்னித்துவிடும்மா” போனை வைத்து விட்டாள்.

 இவர்கள் கொஞ்சம் தூரத்து சொந்தம். அவர்களிடம் தங்கள் நிலைமையை சொல்லி பணம் கேட்டால் இந்த ஊருக்குள் நாங்கள் வாழ வேண்டாமா என்கிறார்கள். அப்படியென்றால்… மனதில் மூண்ட கோபத்துடன் வேகமாக கிளம்பி போய் சர்வேஸ்வரனை சந்தித்தாள்.

” ஆமாம் நான்தான் எல்லோரிடமும் உன் அண்ணனுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறேன்” அசராமல் பதில் சொன்னான்.

” ஏன் இப்படி செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தான் வேண்டும்? நாங்கள் குடும்பத்தோடு கஷ்டப்படுவதை பார்த்து ரசிக்க வேண்டுமா?உங்கள் நோக்கம் தான் என்ன?”

 இரு விரலால் சொடக்கிட்டவன் அவளை நோக்கி விரல் நீட்டினான் “நீ… நீ வேண்டும்” அவன் சொன்ன விதத்தில் உடம்பெங்கும் நெருப்பு எறிவது போல் இருக்க சட்டென அவன் கன்னத்தை நோக்கி கையை வீசினாள் மதுராட்சி.

 அவள் கை கன்னம் தொடும் கடைசி வினாடியில் கையை பற்றியவன் அப்படியே பின்னால் வளைத்து முறுக்கினான். “கன்னத்தை காட்டிக்கொண்டு ஈ என்று இளித்துக் கொண்டு நிற்பேனோ?”

” கையை எடுடா” மதுராட்சி கத்த, “டாவா…” மேலும் கையின் அழுத்தத்தை கூட்டினான்.

 சில நாட்களுக்கு முன் அவன் தோள்களை அழுத்திய வலியே இன்னமும் குறையாதிருக்க, இப்போது இந்த கை வலியும் சேர்ந்து கொள்ள வலது கை தோள்பட்டையோடு பெயர்ந்து கீழே விழப்போகிறது என்றே நினைத்தாள் மதுராட்சி.

” மிருகம் நீ…” வேதனையுடன் கூறியவளின் முகத்தை குனிந்து பார்த்தவன் “அழவில்லையா?” என்று அவள் கண்களைப் பார்த்தான்.

 ரத்தமாய் சிவந்துவிட்ட கண்களுடன் அவனைப் பார்த்தவள் முறைப்பை சிறிதும் குறைக்கவில்லை. “வலிக்கவில்லை!?” இப்போது அவன் குரலில் சிறு ஆச்சரியம் எட்டிப் பார்த்தது.




” நான் எப்போதும் நியாயத்தின் வழி நடப்பவள்.எனக்கு வலிக்கவில்லை” தலை உயர்த்தி கர்வமாய் சொன்னாள்.

 அடேங்கப்பா என்பது போல் கீழுதட்டை பிதுக்கிக் கொண்டவன்,அவள் கையை விடுவித்தான். தடதடவென கை நடுங்க அதனை தன் உடம்போடு அழுத்தி நடுக்கத்தை குறைக்க முயன்றாள்.

” இங்கே கொடு, கொஞ்சம் நீவி விட்டால் நடுக்கம் குறையும்” சர்வேஸ்வரன் கையை தொட முயல வேகமாக பின்னடைந்தாள்.

” தொடாதே…” இடது கை நீட்டி எச்சரித்தாள்.

” சரி நீ கிளம்பு” அவன் சொல்ல வேகமாக வெளியேறினாள். இந்த கையை வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் போக முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. யோசனையோடு கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு,ஸ்கூட்டியை பார்த்தபடி நின்றபோது அவள் அருகே காரை கொண்டு வந்து நிறுத்தினான் டிரைவர்.

” ஐயா உங்களை வீட்டில் விட்டுட்டு வர சொன்னாங்க அம்மா. ஏறுங்க…” காரில் ஏற தன்மானம் இடம் கொடுக்காவிட்டாலும் எங்காவது விழுந்து மயங்கி விடுவோமோ என்ற பயம் இருந்ததனால் காரில் ஏறிக் கொண்டாள். 

மன வலியுடன் கை வலியும் சேர்ந்து கொள்ள உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளுக்கு ஃபோனில் நல்ல செய்தி வந்தது. அவள் கேட்டிருந்த நண்பர்கள் வட்டத்தில் ஒருவரிடம் இருந்து பணம் கிடைக்கலாம் என்று தகவல் வர மதுராட்சி துள்ளிக் குதிக்காத குறைதான்.

 பணம் கிடைத்ததும் முதல் வேலையாக அந்த சர்வேஸ்வரன் முகத்தில் கரியை பூச வேண்டும் என்றெண்ணிக் கொண்டவள் வரவேண்டிய இடத்தை தோழியிடம் கேட்டு மனதில் குறித்துக் கொண்டாள்.

மறுநாள் தோழி குறிப்பிட்டிருந்த குற்றாலத்தில் இருக்கும்  கிரீன் கார்டன் ரிசார்ட்டுக்கு சென்ற போது அவள் தோழி சுபாஷினி வாசலில் நின்றிருந்து அவளை வரவேற்றாள்.

” சுபா ரொம்ப தேங்க்ஸ்டி. நான் எதிர்பார்த்த எல்லோருமே பணத்தேவை என்றதும் ஓடிவிட்டார்கள். நினைத்தே பார்த்திராத நீதான் இப்போது உதவியிருக்கிறாய்”

” ஏய் எதற்காகடி இவ்வளவு எமோஷன்?”

 மதுராட்சி கண்களை சிமிட்டி கொண்டாள். “உனக்கு என் நிலைமை தெரியாது சுபா.மானத்துடன் வாழ்வதற்காகந இந்த நேரத்தில் உன் காலை தொடக்கூட நான் தயாராக இருக்கிறேன்”

 ” சீ என்ன வார்த்தையடி பேசுகிறாய்? என்னால் முடிகிறது.உதவுகிறேன்”

 இருவரும் பேசியபடி வில்லா அமைப்பில் தனித் தனியாக அமைந்திருந்த அந்த அறைக்கு வந்திருந்தனர். “வணக்கம் சார் இதுதான் என்னுடைய பிரண்ட்”

 உள்ளே இருந்த ஆண் ஒருவரிடம் சுபாஷினி அறிமுகம் செய்தாள்.

” கிரேட் உன்னுடைய பிரண்டு ரொம்ப அழகு” அந்த ஆணின் கொத்தும் பார்வையில் மதுராட்சியினுள் ஒரு பயம் வந்தது.

“உட்கார் மதுரா” சுபாஷினி அவளை அழுத்தி சோபாவில் உட்கார வைக்க அதே நேரம் பாத்ரூம் கதவை திறந்து மற்றொரு ஆண் வெளியே வந்தான். இவன் வயதானவனாக முன்புற வழுக்கைத் தலையும் பெரிய தொப்பையுமாக இருந்தான். ஆனால் அவன் கண்களில் வயதுக்கேற்ற கண்ணியம் இல்லை.

” வாவ் வாட் அ சேப்” மதுராட்சியை கண்களாலேயே துகிலுரித்தான்.

 மதுராட்சி சட்டென எழுந்து கொண்டாள். “சுபாஷினி இவர்கள் சரியில்லை. நான் கிளம்புகிறேன்”

” அவசரமாக பணம் தேவை என்று சொன்னாய்தானே…அதுவும் லட்சக்கணக்கில். அதனால்தான் இந்த வேலையை உனக்கு ஏற்பாடு செய்தேன்”

” அப்படி என்ன வேலை?”

” இதோ இந்த வேலைதான்” சுபாஷினி ஆல்பம் போன்ற ஒன்றை எடுத்து டீப்பாயில் போட அது திறந்து கொண்டது. உள்ளே விதம் விதமான உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த பெண்களின் போட்டோக்கள்.




” உனக்கு  நல்ல வடிவான உடலமைப்பு மதுரா.இவர்கள் அட்வர்டைஸ்மென்ட் ஏஜென்சி நிறுவனத்தினர். பெண்களுக்கான உள்ளாடைகளை விளம்பரப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். மிகப் பெரிய பிராண்ட் இது. நீ மட்டும் ஒத்துக் கொண்டால் whatsapp ,insta,fb,twitter என்று சோசியல் மீடியா முழுவதும் உன்னுடைய போட்டோக்கள் வீடியோக்கள் தான் இருக்கும். நீ இந்த உடைகளை அணிந்து கொண்டு கொடுக்கும் போஸ்களை பார்த்து எத்தனை பெண்கள் பிராக்களை வாங்க போகிறார்கள் பாரேன்” சுபாஷினி விவரிக்க மதுராட்சிக்கு வாந்தி வரும் போலிருந்தது.

” கரெக்ட் உடைகளை அணிந்து காட்டுவதற்கும் உடம்பு வேண்டும். அது உன்னிடம் இருக்கிறது. இப்போதே சில சாம்பிள்ஸ்சை எங்களுக்கு போட்டுக் காட்டினாயானால் நாங்கள் முடிவெடுக்க வசதியாக இருக்கும்” அந்தக் கிழவனின் வாயிலிருந்து எச்சில் வழியாதது ஒன்றுதான் குறை. மற்றொருவன் அகன்ற விழிகளில் எதிர்பார்ப்போடு அமர்ந்திருந்தான்.

“ஐந்து லட்சம் கேட்டாயாமே,உடனே அவ்வளவு தர முடியாது. இப்போது ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து விடுகிறோம். ஐந்து வருட அக்ரீமெண்ட் போட்டுக்கொள்ளலாம்.மீத பணத்தை கொஞ்சம். கொஞ்சமாக வாங்கிக் கொள். ஐந்து வருடங்களுக்கு வேறு எந்த ஆட் ஃபிலிமிலும் நடிக்க கூடாது. உடம்பை இப்படியே கட்டுக் குலையாமல் மெயின்டெய்ன் செய்ய வேண்டும். நாங்கள் கூப்பிடும் இடத்திற்கு வந்து சொல்லும் முறையில் போஸ் கொடுக்க வேண்டும்”

 அவர்கள் முடிவே ஆகிவிட்டது போல் பேச மதுராட்சி எழுந்து கொண்டாள். “இல்லை சார் இந்த வேலையில் எனக்கு விருப்பமில்லை. நான் கிளம்புகிறேன்” 

சுபாஷினி அவள் கையை பிடித்தாள். ” ஏன்டி உனக்கு என்னைப் பார்த்தால்  எப்படி தெரிகிறது? ஃபோனில் அப்படி புலம்பினாயே… பணம்டி…பணம். சும்மா வந்துவிடுமோ லட்சக்கணக்கில். உன்னை நம்பி இவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். இதில் எனக்கு கூட கமிஷன் வரும். உன்னை விட முடியாது. முதலில் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கும்.போகப் போக எல்லாம் சரியாகிவிடும்”

” சை நீயெல்லாம் ஒரு பிரண்டா?” மதுராட்சி அவள் கையை உதறிக் கொண்டு போக முயல, அவளை முந்திக்கொண்டு வேகமாக போய் கதவை மூடினான் அந்த ஆள். 

“பாப்பா மிரளுது.புதுசு..கூச்சப்படுது. நாமாகவே டிரெஸ்ஸை கழட்டி நம்ம கம்பெனி டிரஸ்ஸை போட்டு விட்டோமானால் கூச்சம் போய்விடும்” அந்தக் கிழவன் கையில் ஆடையோடு நெருங்க மதுராட்சி பதட்டத்துடன் அறைக்குள் அங்கும் இங்கும் ஓடலானாள்.

” எவ்வளவு நேரம் ஓடுவாய்? நாங்கள் மூன்று பேர் உன்னால் தப்பிக்க முடியாது” சுபாஷினி கத்த அந்த நேரம் அறைக் கதவு தட்டப்பட்டது. கிழவன் பாய்ந்து வந்து மதுராட்சியின் வாயை இறுகப்பொத்தி அறைக்குள் இழுத்துப் போனான்.”யார் என்று பார்த்து சீக்கிரமா அனுப்பிட்டு வாங்க” 

அவன் பிடியில் திமிறியபடி உள்ளே இருந்த மதுராட்சி வெளியே கேட்ட குரலில் அசுர பலத்துடன் அவனை தள்ளினாள். “சர்வா நான் இங்கே இருக்கிறேன்” அவள் சொல்லி வாய் மூடும் முன் அங்கே வந்திருந்தான் சர்வேஸ்வரன்.

 கையை கத்தி போல் வைத்து கிழவனின் சொட்டை தலையில் இறக்க அவன் அப்படியே கீழே உட்கார்ந்தான். அவள் கைப்பற்றி இழுத்துப் போனான்.ஹாலில் சுபாஷினியும் மற்றொருவனும் அடிவாங்கி கவிழ்ந்து கிடந்தனர்.அவனது இந்த முரட்டுப் பிடியிலும் மதுராட்சிக்கு கை வலித்தது. ஆனாலும் அந்த வலி சுகமாக இருந்தது.




What’s your Reaction?
+1
49
+1
24
+1
3
+1
1
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
21 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!