Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-8

8

“என்னாச்சு சார் இன்னும் கிளம்பலையா?” மறுநாள் காலையிலயே வந்து விட்ட கதிர்வேலன் பனியனுடன் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த ஜெயசூர்யாவை பார்த்து கேட்டான்.

” நான் கிளம்பியாச்சு. உன் பிரண்டு என்ன பண்றாங்கன்னு போய் பாரு. காலையிலிருந்து கண்ணிலேயே படவில்லை”

 வெளியே ஜெயசூர்யாவின் குரல் கேட்டதும் அடுப்படிக்குள் நின்றிருந்த சந்தியா படபடப்பை குறைக்க மிக்ஸிக்குள் போட்டிருந்த தேங்காய் சில்லுகளை ஓட விடலானாள். முதல் நாள் அப்படி அவன் திடீரென்று அணைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதிகபட்சம் அரை நிமிடம் அவளை அணைத்து நின்றிருப்பான். பிறகு உடனே விடுவித்தான்.

” நன்றி சந்தியா” என்றான்.குனிந்து கவிழ்ந்திருந்த அவள் முகத்தை பார்க்க முயன்றான்.

” தூக்கம் வருகிறது” அவன் முகத்தை பார்க்காமலேயே முணுமுணுத்து விட்டு கீழே இறங்கி வந்து சோபாவில் முடங்கிக் கொண்டாள். 

ஏதோ ஒருவகை நமநமப்பு உடல் முழுவதும் இன்னமும் அதிர்ந்து கொண்டிருக்க ,காலை எழுந்தது முதல் அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து அங்கும் இங்குமாக மறைந்து கொண்டிருக்கிறாள். அதையும் அவன் கண்டு கொண்டதை இப்போது உணர்ந்தவளின் கை கால்களில் ஒருவித நடுக்கம் பரவியது.இவன் என்ன அப்படியா என்னை கவனித்துக் கொண்டிருக்கிறான்? 

“சந்தியா கிளம்பவில்லையா?” உயர்ந்த குரலில் கேட்டபடி உள்ளே வந்த கதிர்வேலனை “சட்னி அரைத்து விட்டேன். சாப்பிடலாம்.தட்டுகளை எடுத்துக் கொண்டு போய் வை” என்று வேலை ஏவி அகற்றினாள்.

” நான் வீட்டில் சாப்பிட்டுத்தான் வந்தேன். நீங்கள் ரெண்டு பேரும் சாப்பிடுங்கள்” கதிர்வேலன் தட்டுகளையும் உணவு பாத்திரங்களையும் எடுத்து டேபிளில் பரப்பினான்.

” பரவாயில்லை எங்களோடு சேர்ந்து இரண்டு இட்லி சாப்பிடு, உட்கார்” என்றபடி ஜெயசூர்யா உள்ளே வர இமைகள் படபடக்க அவனைப் பார்க்காமல் பக்கவாட்டிற்கு திரும்பிக் கொண்டாள். 

” கதிர் வாசலில் யாரோ கூப்பிடுவது போல் தெரிந்தது. போய் பார்” கதிர்வேலனை அனுப்பியவன் திரும்பி நின்ற சந்தியாவிற்கு முன்னால் வந்து நின்றான்.

” இங்கே பார் சந்தியா, உனக்கு கோபம் என்றால் என் கன்னத்தில் நான்கு அறை கூட வைத்து விடு. ஆனால் இப்படி முகம் திருப்பி மட்டும் நிற்காதே”

 சந்தியா புரியாமல் அவனை ஏறிட “நான் நேற்று உன்னிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தேன். அந்த அணைப்பு என் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக மட்டும்தானே தவிர தவறான எண்ணத்தில் கிடையாது. அது உனக்கு தவறாகப்பட்டால்… சாரி மன்னித்துவிடு. இனி உன்னை அப்படி தொடுவதில்லை”

” இல்லை, அப்படி இல்லை.. நான் அப்படி நினைக்கவில்லை…” பதட்டமாக இடையிட்டாள்.

” பிறகு ஏன் இப்படி முகம் திருப்பிக் கொண்டிருக்கிறாய்?”

“அது வந்து எனக்கு ஒரு மாதிரி… கொஞ்சம் கூச்சமாக இருந்தது” பேசியபடி கவலையுடன் அவனை நிமிர்ந்து பார்க்க ஜெயசூர்யாவின் முகம் இப்போது இலகுவாய் இருந்தது. முகம் நிறைய புன்னகை மலர்ந்திருந்தது.

” அவ்வளவுதானே அந்த கூச்சத்தையெல்லாம் சீக்கிரமே போக வைத்து விடலாம். சாப்பிட வா” ஜெயசூர்யா டேபிளில் போய் அமர்ந்து கொள்ள இன்னமும் அதிக கூச்சம் வந்துவிட தலை குனிந்து தானும் அமர்ந்தாள் சந்தியா.

“வாசலில் யாரும் கிடையாது. ஏன் சார் கனவில் எதையாவது நினைச்சுட்டு நினைவுல எதையாவது சொல்லுவீங்களா?” கேட்டபடி உள்ளே வந்த கதிர்வேலன் அவர்கள் இருவருக்கும் உணவை பரிமாற ஆரம்பித்தான்.

” கனவில் ஆயிரம் நினைப்பு இருக்கும் கதிர்.அதெல்லாம் நினைவில் நடக்கவா செய்கிறது?” ஏதோ உள் அர்த்தத்தில் ஜெயசூர்யா பேசுவதாக பட, “எல்லோருக்குமே கனவு நினைவாகாதுதானே கதிர்?”என்று பதில் கொடுத்தாள் சந்தியா.

” என்னுடைய கனவுகளை நான் பெரும்பாலும் நனவாக்கிக் கொள்வேன். ஏனென்றால் நனவாகும் சாத்தியம் உள்ளவைகளைத்தான் கனவில் நினைப்பேன்” என்றபோது ஜெயசூர்யாவின் முகம் மிக நேராக சந்தியாவையே பார்த்திருந்தது.




 கதிர்வேலன் படபடவென்று கைதட்டினான் “செமையா சொன்னீங்க சார். நனவில் நடக்கும் என்று தெரிந்ததை மட்டும் கனவா கண்டோம்னா பிரச்சனையே இல்லையே”

” ஆமாம் கதிர்.அவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும், சில நேரம் நாம் கனவில் பார்த்த தேவதைகளை நேரில் சந்திக்கும் போது அப்படியே ஸ்தம்பித்து நின்றுதான் போய் விடுகிறோம்”

 அப்படி எந்த தேவதையை நீ பார்த்தாய் உடனடியாக அவனிடம் சண்டை பிடிக்கத் தோன்றிய மனதை அடக்கிக் கொண்டு கேள்வியாக அவனை ஏறிட்டாள் சந்தியா.

” என்னது சந்தியாவை பக்கத்துல வச்சுக்கிட்டு தேவதையை பார்த்தீர்களா?” தோழிக்காக அவள் நினைத்ததை உடனே செய்திருந்தான் கதிர்வேலன்.

” ஏய் கதிர் திரும்ப அரிவாளை தூக்கிக் கொள்ளாதே! அந்த தேவதையே உன் பிரண்டுதான்பா” அவன் இலகுவாக சொல்லி கையை சந்தியா பக்கம் நீட்ட வெட்கத்தில் முகம் சிவந்த அவள் செல்லமாக அவன் கையை அடித்து தள்ளினாள்.

” இதென்ன வெட்டிப்பேச்சு! வேலையை பார்க்கலாம் கிளம்புங்க”

” ஆமாம் நிறைய வேலை இருக்கிறது. இதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” அவன் சொன்ன விதத்தில் ஏனோ மனம் சிலிர்க்க உதடு மடித்து கடித்து தன்னை சமனப்படுத்தினாள்.

 அதற்குள் தொழில் பேச்சுக்குள் போய்விட்டிருந்த கணவனை கவனித்தாள். “ரோட்டோரத்தில் மட்டுமில்லாமல் சிலர் வீட்டிலேயும் முந்திரிப் பருப்புகளை உடைப்பார்கள் சார். அவர்களையும் போய் பார்க்கலாமா?” கதிர்வேலன் கேட்க மறுத்தான் ஜெயசூர்யா.

” இல்லை கதிர் பருப்பு உடைப்பவர்களிடம் நாம் தெளிவாக பேசி விட்டோம்.அவர்கள் நன்றாக யோசித்து தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.ஒரு நான்கு நாட்கள் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கலாம். இன்று நமக்கு வேறு வேலை இருக்கிறது. அங்கேதான் கிளம்புகிறோம்”

” எங்கே போகிறோம்?” சந்தியா கேட்க ” பருப்புகளை மெஷினால் உடைப்பவர்களிடம் போய் பேசலாம். மெஷின்களை கைவிட்டு இதுபோல் ஆட்களை வைத்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்வோம். இதனால் ஆதனக்கோட்டை பருப்பு என்றாலே கையால் உடைத்த தரமான கெட்டுப் போகாத பருப்புகள் என்ற பெயர் கிடைக்கும்” ஜெயசூர்யா பேசிக் கொண்டே போக சந்தியா உறைந்து நின்றிருந்தாள்.

 அவள் முகத்தை பார்த்த கதிர்வேலன் திரும்பி ஜெயசூர்யாவை பார்த்து “நாம் இரண்டு பேர் மட்டும் போயிட்டு வரலாம் சார்.சந்தியா வேண்டாம்” என்றான்.

” ஏன் சந்தியாவிற்குத் தானே அவர்களை தெரியும். அவளை வைத்துதான் நான் அவர்களிடம் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும்”

” அவள் வேண்டாம் சார்.நான் உங்களை அறிமுகப்படுத்துகிறேன்”

“ப்ச்  எதையாவது சொல்லாதே கதிர். சந்தியா நீ கிளம்பு”

“இல்லை நான் வரவில்லை” சந்தியா சொல்ல ஜெயசூர்யாவின் புருவங்கள் சுருங்கியது்

“என்ன விஷயம் சந்தியா?”

 அவள் தலைகுனிந்து கொள்ள கதிர்வேலன் “அந்த பேக்டரி ஓனர் ரவிச்சந்திரன் அய்யா… அதான் நம்ம சந்தியாவுக்கு கல்யாணம் பேசினாங்களே மாப்பிள்ளை அவர்தான். அவர பாக்க வர்றதுன்னா சந்தியாவுக்கு சங்கடமா இருக்கும் தானே சார்?” என்றான்.

 சந்தியா வேகமாக அங்கிருந்து செல்ல முற்பட ஜெயசூர்யா அதட்டினான். “சந்தியா நில்லு”

 சந்தியா நின்றாலும் திரும்பாமல் முதுகு காட்டி நின்றாள். “ஏன் இவ்வளவு தவறு செய்தாய் சந்தியா?” ஊசி முனை போல் கூர்மையாக இருந்தது ஜெயசூர்யாவின் கேள்வி.

” தவறா ?”குழப்பமாய் திரும்பினாள்.

” அப்பா பேச்சைக் கேட்டு மணமேடையில் அனாதரவாக விட்டுப் போனவன் தவறா? அவனால் ஏமாற்றப்பட்டு தவித்திருந்தவள் தவறா?” சந்தியா மௌனமாக நின்றாள்.

வேகமாக அவளருகே சென்று அவள் தோள்களை பற்றினான். “நிமிர்ந்து என்னைப் பார் சந்தியா. என் முகத்தைப் பார்த்து சொல்.அந்த ரவிச்சந்திரனை பார்ப்பதற்கு உனக்கெதற்கு தயக்கம்? உன்னை நேரில் சந்திக்க வெட்கப்பட்டு அவன்தான் ஒளிய வேண்டும். நீ கைவிட்டுப் போனதால் நான் ஒன்றும் வீழ்ந்து விடவில்லைடா என்று அவன் முன்னால் நீ நிமிர்ந்து நிற்க வேண்டாமா?”

 கண்டிப்பும் மென்மையும் கலந்து கேட்டபடி ஒரு கையால் அவள் கன்னங்களை பற்றி முகத்தை தூக்கி தன் முகம் பார்க்க வைத்தான். “நீ வருந்துகிறாயா சந்தியா? அவன் கிடைக்காமல் போய்விட்டானே என்று நினைக்கிறாயா?” கண்ணோடு கண் கலந்து கேட்டவனை பார்த்தபடி தலையசைத்து மறுத்தாள். 

” இல்லை, அவனை நேரடியாக பார்ப்பதில் சிறு தயக்கம். அது… மீண்டும் இவன் முகத்தில் விழிக்க வேண்டுமா,என்பதாகக் கூட இருக்கலாம்” தன் கண்களை அவனிலிருந்து விலக்கிக் கொள்ளாமல் பதில் சொன்னாள்.

 ஜெயசூர்யாவின் முகம் பூவாக மலர்ந்தது. வலது கையை அவள் உச்சந்தலை மேல் வைத்து செல்லமாய் ஆட்டி “வெரி குட்” என்றான் உற்சாகமாக.

 படபடவென்று கைதட்டல் சத்தம் கேட்டு இருவரும்  திரும்பி பார்க்க கதிர்வேலன் கைகளை உரத்து தட்டிக் கொண்டிருந்தான். உற்சாகமும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் இருந்தது. மிக லேசாக கண்கள் கூட கலங்கியிருந்தன.

” ரொம்ப சந்தோசம் சார்,சந்தியா நீங்கள் ரெண்டு பேரும் ரொம்ப நாளைக்கு நன்றாக இருக்க வேண்டும்” இரு கைகூப்பி அண்ணாந்து கடவுளை தொழுது கொண்டான்.




” உன்னைப்போல் ஒரு ஃபிரண்ட் எங்களுக்கு இருக்கும்போது நாங்கள் நன்றாகத்தான் இருப்போம் கதிர். வாருங்கள் நாம் போகலாம்” ஜெயசூர்யா இரு பக்கமும் இருவரின் கைகளையும் பற்றிக்கொண்டு துள்ளலுடன் நடந்தான்.

 அந்நேரத்தில் அவன் உலகிலேயே அதிர்ஷ்டம் வாய்ந்தவனாக தன்னை நினைத்தான். ஆனால் அங்கே ரவிச்சந்திரனோ மிகவும் அதிர்ஷ்டமான நாள் என்று ஜெயசூர்யா எண்ணியிருந்த நாளை துரதிஷ்டமானதாக்க துடித்துக் கொண்டிருந்தான்.




What’s your Reaction?
+1
28
+1
32
+1
3
+1
1
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Mahalakshmi
1 month ago

Super story

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!