Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-7

7

“அட, சுடச்சுட ஒரு தோசை.அதிலும் உன்னுடைய டியர் ஃப்ரெண்ட் சுட்டு தர போகிறார்கள். இதை சாப்பிடுவதில் உனக்கு என்னப்பா சிரமம்?” கேட்டபடி கதிர்வேலனை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்  ஜெயசூர்யா.

அவன் குரல் கேட்கவும் சந்தியா அடுப்படிக்குள் நுழைந்து தோசை சுட துவங்கினாள். டேபிளுக்கு அவள் வந்தபோது ஜெய சூர்யாவின் அருகிலேயே ஒரு மாதிரி கூனிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்த கதிர்வேலனை ஆச்சரியமாக பார்த்தாள். “கதிர் எங்கள் வீட்டில் சாப்பிட போகிறாயா?”

” அது… வந்து… உன் இவர்தான் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்”

” ஏன் கதிர் இதற்கு முன்னால் இங்கே சாப்பிட்டதில்லையா?”

” இல்லை, அது சுபாஷ் ஐயாவுக்கு பிடிக்காது”

 ஜெயசூர்யா கேள்வியாக சந்தியாவை பார்க்க அவள் தோசையை தட்டில் வைப்பது போல் அவருக்கு குனிந்து “பிறகு சொல்கிறேன்” என முணுமுணுத்தாள். “என்ன கதிர் உனக்கும் தோசை சுட்டு விடவா?” 

கதிர்வேலன் தலையை சொரிந்து கொண்டு ” ம் ” என்றான்.

 அடுத்து இரண்டு தோசைகளை சுட்டுக் கொண்டு வந்து கதிர்வேலன் முன் தட்டில் வைத்து சட்னி ஊற்றினாள். ” ம் சாப்பிடு”

 கதிர்வேலன் கூச்சத்துடன் உண்ண துவங்கினான்.ஜெயசூர்யா தட்டில் அடுத்த தோசை வைக்கும் போது அவன் அவள் பக்கம் குனிந்து ரகசியமாக “கோபமா?” என்றான்.

” எதற்கு?”

” அந்த கிளவுஸ் விஷயத்தில்…”

 சந்தியாவிற்கு கோபம்தான். ஆனாலும் கதிர்வேலனை சாப்பிட வைத்ததில் அந்த கோபம் குறைந்திருந்தது. “கோபம் இல்லை” அடுத்த தோசை சுட போனாள்.

” எனக்கு தெரியும். உனக்கு கோபம் தான்.”இப்போது சுட்டு வந்த தோசைகளை வேறொரு தட்டில் வைத்து அவள் முன் நகர்த்தினான். “நான் சாப்பிட்டாயிற்று நீ சாப்பிடு” கதிர்வேலனுக்கும் சந்தியாவிற்கும் சட்னி  ஊற்றினான்.

“எனக்கு வேறு ஐடியா இருக்கிறது சந்தியா” இப்போது ஜெயசூர்யாவின் குரல் உயர்ந்திருக்க கதிர்வேலன் “என்ன ஐடியா சார்? எதைப்பற்றி?” என்று கேட்டான்.

 “சாலையோர குடிசைகளில் முந்திரிப்பருப்பு வறுக்கிறார்களே அந்த பெண்களுக்காக. சந்தியா நாளை நீயும் எங்களுடன் வருகிறாயா? அவர்களை பார்த்து கொஞ்சம் பேசலாம்”

 நினைவு தெரிந்த நாள் முதல் அந்த பெண்களின் கடின உழைப்பை பார்த்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பவளாயிற்றே, வேகமாக தலையசைத்தாள். “போகலாம்”

“கதிர் நாளை காலையில் 9:00 மணிக்கெல்லாம் வந்துவிடு. ஏய் மிச்சம் வைக்காமல் சாப்பிடடா” ஜெயசூர்யா கரிசனமாய் அதட்ட, கதிர்வேலன் கலங்கிய கண்களை குனிந்து மறைத்துக் கொண்டான். சாப்பிட்டு முடித்ததும் ஜெயசூர்யாவின் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு எழுந்தான்.

 கதிர்வேலன் சென்றதும் வாசல் கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்த ஜெயசூர்யா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த சந்தியாவிற்கு உதவத் தொடங்கினான். “நீங்கள் போய் படுங்கள். நான் கழுவி வைத்து விட்டு வருகிறேன்”

” ஏன் நாம் எல்லோரும்தானே சாப்பிட்டோம்.கழுவுவதற்கு மட்டும் நீயா?” தலைகுனிந்து மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை வியப்பாக பார்த்தபடி அடுப்பை துடைக்க ஆரம்பித்தாள் சந்தியா.

” இந்த கதிர்வேலன் கதை என்ன சந்தியா?”




” அது… வந்து… அப்பா அவனை பொதுவாக வீட்டிற்குள் விடுவதில்லை. வெளி வேலைகள் தோப்பு வேலைகள் மட்டும்தான் சொல்வார்.காரணம் அவன்  கீழ் ஜாதி என்று…” மேலே செல்ல சந்தியாவிற்கு வாய் வரவில்லை.

“ஷிட்… இந்த நவீன யுகத்திலும் இதுபோன்ற பத்தாம்பசலி ஆட்கள் இருக்கிறார்களா என்ன?” ஜெயசூர்யாவிடம் கோபத்துடன் ஆதங்கமும் இருந்தது.

” ப்ச்…இது கிராமம். இங்கே இன்னமும் நிறைய மனிதர்கள் இப்படித்தான் இருக்கின்றனர்” 

“நீ கூட உன் அப்பாவிற்கு எடுத்துச் சொல்லவில்லையா சந்தியா?”

” நிறைய முயற்சித்தேன். எதுவும் நடக்கவில்லை.அப்பா பிறர் சொல்வதை கேட்டுக் கொள்பவர் கிடையாது” இருவரும் பேசியபடி மாடிக்கு வந்தனர்.

 ஹாலில் இருந்த சோபாவை பார்த்தபடி நின்றான் ஜெயசூர்யா. சந்தியா வேகமாக இரண்டு எட்டுகள் எடுத்து வைத்து சோபாவில் போய் அமர்ந்து கொண்டாள். “என் இடத்தை பிடிக்க நினைக்காதீர்கள்”

“இதற்கும் கோபமா சந்தியா ?”

” ம்கூம்.இது எனக்கென்றால் சரியாக இருக்கும்.உங்களுக்கு எப்படி போதும்?” 

“புரியவில்லை சந்தியா”

குஷனை சரியாக வைத்து கொண்டு படுத்தாள். “என் உடம்பிற்கு இந்த சோபா சரியாக இருக்கும்.பனை மரத்தில் பாதி இருப்பவருக்கு இந்த குட்டி சோபா எப்படி போதும்?” கேட்கும்போதே அவளுக்கு சிரிப்பு வந்துவிட ஜெயசூர்யாவும் புன்னகைத்தான்.

” இதைத்தான் அப்போது சொன்னாயா? இப்போது வரை புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன்” என்றவனின் கண்கள் சோபாவில் ஒயிலாக படுத்திருந்த மனைவியின் மீது படிந்திருந்தது.

” இங்கே என்ன பார்வை? காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டுமே,  போய் படுங்கள்” சந்தியா சொல்ல மனமின்றி உள்ளே போனான்.

 மறுநாள் காலை கிளம்பும்போது “கார் சாவி கொடுங்க சார்.நான் ஓட்டுறேன்” கதிர்வேலன் கை நீட்ட ஜெயசூர்யா தயங்கினான். “உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?”

“ஹெவி வெகிக்கிள் லைசென்ஸ் வைத்திருக்கிறேன்.  கொஞ்ச நாள் லாரி கூட ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்புறம் அது சரி வரலைன்னு விட்டுட்டேன்” 

 ஜெயசூர்யா சந்தியாவை திரும்பி பார்த்தான். அவள் ஒப்புதலாக தலையசைக்கவும் உங்க வீட்டம்மா உத்தரவு கொடுத்தாச்சு. கொடுங்க” என்றான் கதிர்வேலன் போலி சலிப்புடன்.

” ஏய் இதெல்லாம் என் இஷ்டம்டா, அவ கிட்ட ஏன் கேட்க போகிறேன்” ஜெயசூர்யா கோபமாக மோவாய் உயர்த்திக் கொள்ள,” ஆஹா நம்பிட்டேன்” என கலாய்த்தான்.

கேலி கிண்டல்களுடன் பயணித்து மூவருமாக முந்திரி பருப்பு உடைக்கும் பெண்களிடம் சென்று பேசினார்கள். ஜெயசூர்யா சாலையோரம் இருந்த ஒவ்வொரு குடிசையாக சென்று பருப்புகள் உடைக்கும் முறையை கவனித்தான்.

 “அட எங்க ஊர் மாப்பிள்ளையா நீங்க?’ ஒரு பெண் கேட்க “அப்படி சொல்ல முடியாதுடி, இவர் ஒரு வகையில் நம்ம ஊர் பிள்ளைதான்” என்றபடி வத்தார் ஒரு வயதான பெண்.

” நம்ம சபாநாயகம் ஐயாவோட மகன் இவர்.பிறந்ததே இங்கேதான். இரண்டு வருசம் இங்கேதான் இருந்தாங்க. பிறகுதான் பட்டணம் போய்ட்டாங்க. தம்பிக்கு என்னைய நினைப்பிருக்காது. நீங்க பிறந்த உடனே அம்மாவையும் உங்களையும் பார்த்துக்கிறதுக்காக ஐயா என்னைதான் வேலைக்கு வெச்சிருந்தாரு. உங்க வீட்டோட தங்கியிருந்து உங்களையும் அம்மாவையும் பாத்துக்கிட்டேன்”  

ஜெயசூர்யா அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்க்க இன்னமும் அவள் கண்களில் தாய்மையின் காருண்யம் தெரிந்தது. இப்போதும் அவன் சிறுவனாய் இருந்தால் அள்ளி மடியில் போட்டுக் கொள்ளும் ஆவல் இருந்தது.

” ஆமாம் நான் உங்கள் ஊர் பிள்ளைதான். உங்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் எல்லோரும் என்னுடன் ஒத்துழைப்பீர்கள்தானே?” அவன் கேட்க பெண்கள் அனைவரும் தலையசைத்தனர்.

” என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்?” வீட்டிற்கு வந்ததும் ஏதோ யோசனையுடன் மொட்டை மாடியில் நின்றிருந்தவனிடம் வந்து கேட்டாள் சந்தியா.

“புதிதான யோசனை ஒன்றும் இல்லை சந்தியா.நிலையான வருமானம் இவர்களுக்கு இல்லைதானே? பருப்புகளை நாமே கொள்முதல் செய்து உடைக்க இவர்களை பணியில் அமர்த்தி மாத சம்பளமாக கொடுத்தால் என்ன என்று யோசிக்கிறேன். இவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கம்பெனி சார்பில் நாமே ஏற்றுக் கொள்வோம் “




“நல்ல யோசனைதான். ஆனால் வருமானம் சிறுதென்றாலும் இப்போது இவர்கள் முதலாளியாக இருக்கிறார்கள்.உங்கள் யோசனைக்கு சம்மதிப்பார்களா என்று தெரியவில்லை”

” அதற்காகத்தான் அவர்களுடன் கலந்து பேசினேன்.இது அவர்களுக்கு நன்மைதான் செய்யும் என்று நீ தான் புரிய வைக்க வேண்டும்”

“முயற்சிக்கிறேன். வாங்க சாப்பிடலாம்”

” ஒரு நிமிடம் சந்தியா” நகர போனவளை நிறுத்தினான். சிறு தயக்கத்துடன் மெல்ல கைநீட்டி அவள் கைப்பற்றினான். “நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். இங்கே நீ எனக்கு ஒரு புது தொழிலை உண்டாக்கி கொடுத்திருக்கிறாய். அத்தோடு இந்த ஊர் மக்களின் அன்பையும் பாசத்தையும் எனக்குரியதாக்கியிருக்கிறாய். இவர்கள் எல்லோரும் அவர்களில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் நீதான் காரணம்” உணர்ச்சி பொங்க பேசியவன் இரு கைகளாலும் அவள் தோள் பற்றி தன் பக்கம் திருப்பினான்.

” மற்றவர்கள் எப்படி நன்றி சொல்வார்களோ…எனக்கு இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. தவறாக நினைத்துக் கொள்ளாதே சந்தியா” என்றவன் அவள் தோள்களை இழுத்து தன் மேல் சாய்த்து கொண்டான். 

இரு கைகளையும் அவளை சுற்றி படர விட்டு உச்சந்தலையில் முகம் பதித்து நின்றான் “ரொம்ப நன்றி சந்தியா” 

சந்தியா அவனுடைய அணைப்பில் மூச்சு விடவும் பயந்து போய் அப்படியே நின்றிருந்தாள்.




What’s your Reaction?
+1
32
+1
27
+1
2
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!