Entertainment lifestyles News

மண்ணில் புதைந்து வரும் நகரம் – மண்ணில் புதைந்து வரும் நகரம் – அவசரமாக ஊரை விட்டு கிளம்பும் மக்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து கொண்டிருக்கிறது. வீடுகள் மற்றும் கட்டமைப்புகளின் சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் காணப்படுகின்றன. சாலைகள் எல்லாம் உடைந்து சிறிது சிறிதாக அந்த ஊரே மண்ணில் மூழ்கி கொண்டிருக்கிறது. இதனால் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும் ஜோஷிமத் நகர மக்கள் உள்ளாகியுள்ளனர். உத்தரகாண்ட் அரசு அவசர அவசரமாக மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.




பீதியில் உறைந்த பொதுமக்கள்

ஜோஷிமத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்களை உண்டாகியுள்ளன. சில வீடுகள் இடிந்து பூமியில் தரைமட்டமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜோஷிமத் பகுதியில் ஆபத்தான இடங்கள், அபாயகரமான பகுதிகள், நிலப்பிளவு ஏற்பட்ட பகுதிகள்,வீடுகளில் ஏற்பட்ட பிளவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி தேசிய பேரிடர் மீட்புக் குழுவை வரவழைத்துள்ளார். மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கும் முகாம்களுக்கும் அவர்கள் அழைத்து செல்கின்றனர். ஜோஷிமத்தின் அபாயகரமான பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 600 குடும்பங்களை அவசர அவசரமாக வெளியேற்றும் பணியில் உத்தரகாண்ட் அரசு ஈடுபட்டுள்ளது.




அழகிய ஜோஷிமத்

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும். ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் செல்லும் எவரும் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நகரில் சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்வது வழக்கம். தவுலிங்கா, அலக்நந்தா ஆகிய இரு நதிகளும் ஜோஷிமத் நகரில் சங்கமித்து செல்கின்றன. இந்த நகரைச் சுற்றி ஏராளமான சுற்றுலாத் தளங்கள் இருப்பதால், ரிஷிகேஷ், பத்ரிநாத் செல்பவர்கள் இங்கு தங்கி செல்கிறார்கள். இந்த அழகிய நகரில் அடிக்கடி நிலச்சரிவு, பூகம்பம் ஏற்படும் பகுதியாக புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

திடீரென்று ஏற்பட்ட விரிசல்

இந்நிலையில் ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக திடீரென நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து ஏராளமான வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கோயில் இடிந்து விழுந்துள்ளது. பல வீடுகள் திடீரென மண்ணில் புதைந்துள்ளன. இதனால் 3 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளில் குடியிருக்க அச்சப்பட்டு சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.




மக்களுடன் உத்தரகாண்ட் அரசு

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி நிருபர்களிடம் கூறுகையில் ” இப்போதுள்ள சூழலில் மக்களின் உயிரைக் காப்பதுதான் முதன்மையானது. ஆதாலல் ஜோஷிமத்தில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். ஜோஷிமத்தின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஜோஷிமத் நகரை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். ஜோஷிமத் பூமியில் புதைந்து பேரழிவு ஏற்படக் கூடும் என்பதற்கான எச்சரிக்கைகள் பல தசாப்தங்களாக ஒலித்து வருகின்றன.

சக்தியற்ற புவியியல்

அமைப்பு இமயமலை அடிவார பகுதிகள் அனைத்துமே நிலசரிவு மற்றும் நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் அபாயம் கொண்டவை. இயற்கையிலேயே சக்தியற்ற அமைப்பை அப்பகுதி கொண்டுள்ளது. ஜோஷிமத் பூமிக்கு அடியில் சில அங்குலங்கள் மூழ்கியதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தின் புவியியல் அமைப்புதான். நிலச்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளின் மீது நகரம் அமைந்துள்ளதால், அந்த நிலம் குறைந்த அளவிலான் தாங்கும் திறன் கொண்டது. அதிக அளவு கட்டுமானம் மற்றும் மக்கள் தொகையை அதனால் தாங்க முடியாது.




கூடுதல் காரணங்கள்

நீர்மின் திட்டங்கள் போன்ற கட்டுமானப் பணிகளாலும், தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கம் மற்றும் அதிகப்படியான மக்கள்தொகை காரணமாகவும் ஜோஷிமத் நகரம் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வாழும் மொத்த மக்கள் தொகையே மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் சொற்பம் தான். கட்டுமானம் மற்றும் பெருகிவரும் மக்கள் தொகை மட்டுமின்றி, விஷ்ணுபிரயாகில் இருந்து இங்கு வரும் பல நீரோடைகள் ஜோஷிமத்தில் உள்ள பாறைகள் மற்றும் மண் அரிப்பு ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன. இதனால் நிலம் மிகவும் தளர்வடைந்துள்ளது.

இனி என்ன நிலவரம்

இது தவிர ஜோஷிமத் நிலப்பரப்பு எவ்வாறு உள்ளது, அங்கு மனிதர்கள் எதிர்காலத்தில் வாழமுடியுமா, நிலச்சரிவு ஏற்படும் பகுதிகள் எவை என்பது குறித்து ஆய்வுசெய்ய நிலவியல் வல்லுநர்கள் குழு, புவியியல் வல்லுநர்கள் குழு, கட்டுமான வல்லுநர்கள், ஐஐடி வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வல்லுநர்களை உத்தரகாண்ட் அரசு நியமித்துள்ளது. 

மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தம்

சார்தம் சாலைத் திட்டம், என்டிபிசியின் நீர்மின்சாரத் திட்டம் உள்ளிட்ட முக்கியக் கட்டுமானப்பணிகள் அனைத்தும் அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன. ஜோஷிமத்தில் வாழ முடியாத சூழல் நிலவுவதையடுத்து, ஏராளமான மக்கள் அரசு அலுவலகங்கள் முன் நேற்றிலிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிவாரணம் அளிக்கும் உத்தரகாண்ட் அரசு

ஜோஷிமத்தில் ஆபத்தான பகுதியில் குடியிருக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் வேறு இடத்துக்கு மாற்றும் பணில் உத்தரகாண்ட் அரசு ஈடுபட்டுள்ளது. புதியவீடுகளில் குடியேறும் மக்களுக்கு மாத வாடகையாக ரூ.4 ஆயிரத்தை உத்தரகாண்ட் அரசு வழங்க இருக்கிறது. இதையடுத்து, 5௦ குடும்பத்தினர் தற்காலிக முகாம்களை விட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளனர். உத்தரகாண்டின் ஜோஷிமத்தில் இருந்து நிலம் சரிவு காரணமாக இடம்பெயர்ந்து வரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இருக்குமாறு சாமோலி மாவட்ட நிர்வாகம் இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (HCC) மற்றும் தேசிய அனல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) ஆகியவற்றை கேட்டுக்கொண்டுள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!