Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-3

3

” விடு துளசி ,இப்படி நம்மை தவறாக நினைப்பதில் இந்த ஆண்களுக்கு ஒரு திருப்தி”  பிரியா 

கிருஷ்ணதுளசியை சமாதானப்படுத்தினாள்.

“அப்படி இல்லடி அவர்களுக்கு போட்டியாக நாமும் மாறிக் கொண்டு வருகிறோம் என்ற பொறாமை” ரஞ்சனி சொல்ல மூவருக்குமே சிரிப்பு வந்தது.

 சிரித்து பேசி நிரஞ்சனின் கேள்வியை கடந்தாலும் கிருஷ்ணதுளசியின் அடி மனது கொதித்துக் கொண்டுதான் இருந்தது.அதெப்படி கண்கள் கொஞ்சம் சிவந்து இருந்தால் இப்படி கேட்பானாமா? இவன் வீட்டுப் பெண்கள் எல்லாம் இப்படித்தான் குடித்துவிட்டு… மேலே மனதிற்குள் நினைப்பதற்கும் தயங்கி நினைவோட்டத்தை நிறுத்தினாள்.

 “இந்த ஹெச் ஓக்கு ஒரு நாள் என்கிட்ட இருக்குடி, என்கிட்ட எதிலாவது மாட்டுவான்” 

சூளுரைத்தவளை வித்தியாசமாக பார்த்தனர் தோழிகள்.

” ஏய் அவன் நம்ம கம்பெனி எம்டி. அவன் எப்படி உன்னிடம் மாட்டுவான்?”

” எப்படியோ…? ஆனால் மாட்டுவான்..” ஏனோ 

கிருஷ்ணதுளசியின் மனதிற்குள் அப்படித்தான் தோன்றிக் கொண்டிருந்தது.

 இந்த எண்ணத்துடனே தனது வீடு இருக்கும் தெருமுனை திரும்பியவுடன்தான் முதல் நாள் இரவு அவள் அறைக் கதவை தட்டியவன் நினைவிற்கு வந்தான். கதவு திறந்து வருபவள் யாரென்று தெரியாத அளவு தடுமாற்றத்தில்  இவர்கள் இருந்து கொண்டு பெண்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நக்கல் பண்ணுகிறார்கள், சலித்தபடி வீட்டு கதவை திறந்து நுழைந்தாள்.

 அந்த தண்ணி வண்டியை காலையில் சுஜாதா ஆன்ட்டியிடம் மாட்டி வைத்து விட்டு வந்தது நினைவு வந்தது. அனேகமாக அவன் வீட்டை காலி செய்திருப்பான், இது போன்ற ஒழுக்க கேடுகளை ஆன்ட்டி அனுமதிப்பதே இல்லை நினைத்தபடி மாடிப்படியில் கால் வைத்தவள் திகைத்தாள்.

 வீட்டிற்குள் இருந்து அட்டகாசமான ஆணின் சிரிப்பொலி கேட்டது. ஏனோ அது அவனுடைய சிரிப்புதான் என்று  தோன்றி விட இவனை இன்னுமா ஆன்ட்டி வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்?

 மாடிக்கு போய் ரிப்ரெஷ் ஆகிவிட்டு கீழே வர வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு அப்போதே ஆன்ட்டி வீட்டு கதவை தட்டினாள். “கதவு திறந்துதான் இருக்கு. உள்ள வாம்மா” சுஜாதாவின் குரல் கேட்க கதவை தள்ளித் திறந்தவள் வாசலுக்கு நேராக இருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்திருந்த அவனைத்தான் பார்த்தாள்.

 அதே மேனரிசம் அந்த படத்து ஹீரோவின் போஸ். இவன் என்ன இப்படி ஒரு சினிமா பைத்தியமாக இருக்கிறான்!

இவளை பார்த்ததும் அவன் புன்னகைத்து “ஹலோ” என்க அப்பாவியாய் விழிகளை விரித்தாள் கிருஷ்ணதுளசி.




” இது யார் ஆன்ட்டி? “

 அவன் திகைக்க சுஜாதா சிரித்தார்.

“நான்தான் உன்னிடம் சொல்லியிருந்தேனேம்மா. என்னுடைய சொந்தக்கார பையன். பெயர் அஸ்வத்”

“உங்கள் ரிலேஷன் ஒரு வாரம் கழித்து வரப்போவதாகத்தானே  சொல்லியிருந்தீர்கள். இப்படி நடு இரவில் கதவைத் தட்டி தள்ளாடிக்கொண்டே டார்லிங்னு கூப்பிடுவார் என்று சொல்லவே இல்லையே!”

சுஜாதா சங்கடத்துடன் விழிக்க அவனோ கண்கள் மின்ன அவளை பார்த்திருந்தான்.

” ஏழு நாட்கள் முன்னால் வந்ததால் உனக்கு என்ன பிராப்ளம் கிருஷ்ணா?” அவன் சாதாரணமாக கேட்க கிருஷ்ணதுளசிக்கு கோபம் வந்தது.

” என்னுடைய முழு பெயரை சொல்லி கூப்பிடுங்கள்” 

“அவ்வளவு நீளமாக பெயர் சொல்ல என்னால் முடியாது. உன் ஆன்ட்டி இப்படித்தானே கூப்பிடுகிறார்கள். நானும் அப்படியேதான் கூப்பிடுவேன். அழகான பெயர் கிருஷ்ணா…” பேச்சின் முடிவில் அவன் கண்சிமிட்ட 

கிருஷ்ணதுளசிக்கு பற்றிக் கொண்டு வந்தது. 

இதுவும் அந்த சினிமா ஹீரோவின் மேனரிசம். படத்தில் ஹீரோயினியிடம் பேசும் நிறைய சீன்களில் இப்படித்தான் அவன் கண் சிமிட்டினான். குறும்பாக பேசுகிறானாம். கிருஷ்ணதுளசிக்கு அஸ்வத் மேல் வெறுப்பு கூடிக்கொண்டே போனது.

“அர்த்த ராத்திரியில் முழு போதையில் அடுத்த அறைக்கதவை தட்டி வெளியே வந்த பெண்ணை அணைக்க வருபவனுக்கு தண்டனை கிடையாதா ஆன்ட்டி?” அதெப்படி அவனை இன்னமும் நீ வீட்டிற்குள் வைத்திருப்பாய் என மல்லுக்கு நின்றாள்.

“சுஜா நடந்த தவறுக்கு நான் நேற்று இவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். மாடியில் தங்கிக் கொள் என்று நீ சாவி கொடுத்திருந்தாய். இடது வலது குழப்பமாகி இவள் அறைக் கதவை தட்டி விட்டேன்” 

கிருஷ்ணதுளசி இடையிட்டாள் “முழு போதையில் இருந்தீர்கள்”

” ஆமாம்” தயங்காமல் ஒத்துக் கொண்டான். “இல்லாவிட்டால் சரியாக எனது அறைக்கல்லவா போயிருப்பேன்! தட்டிய கதவை ஒரு பெண் திறந்ததும் அப்போது எனக்கு சுஜாவை தவிர வேறு பெண் நினைவில் வரவில்லை. சுஜா  என்று நினைத்துதான் டார்லிங் என்றேன்”

 கிருஷ்ணதுளசி புருவம் சுருக்கினாள். “யார் இந்த சுஜா?”

 ஒரு நிமிடம் அறைக்குள் மௌனம் நிலவ “பக்” என்று சிரித்தான் அஸ்வத். சுஜாதாவை பார்க்க அவர் புன்னகைத்தார்.

” அச்சு அப்படித்தான்மா, சின்ன பிள்ளையிலிருந்தே என்னை டார்லிங்னுதான் கூப்பிடுவான்”

 கிருஷ்ணதுளசிக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. இது என்ன உறவோ!

” சுஜா டார்லிங் கிருஷ்ணாவிற்கு நம் மேல் பொறாமை போல் தெரிகிறது” அஸ்வத் மீண்டும் கண்களை சிமிட்டினான். 

கண்ணை நோண்டனும் உதடுகளுக்குள் முணுமுணுத்தவளை கூர்ந்து பார்த்து கண்டுகொண்டு இன்னமும் அழுத்தமாக கண் சிமிட்டினான்.

“டார்லிங் உன் கிருஷ்ணா முன்னாடி கண்ணில் தூசு ஏதாவது விழுந்துட்டா…ஐயோ போச்சி! கண்ணே போயிடும் போலவே!”

“என்னடா?” சுஜாதா புரியாமல் பார்க்க, “இதோ இப்படி கண்ணை சிமிட்டினேன், அதற்கு கண்ணை நோண்டிடுவேன்னு சொல்றா” சிறு குழந்தை போல் ஆட்காட்டி விரலை அவளை நோக்கி நீட்டி புகார் சொன்னான்.

“கிருஷ்ணா அச்சு ரொம்ப நல்ல பையன்மா,இல்லாமல் அவனை உன்னுடன் மாடியில் தங்க சொல்வேனா?”

 சுஜாதா பொய் சொல்ல மாட்டார் என்று தெரிந்தாலும் ஏனோ அந்த அஸ்வத்திடம் நேருக்கு நேர் நின்று சண்டையிடவே தோன்றியது கிருஷ்ணதுளசிக்கு.




போனில் மெசேஜ் டோன் வர எடுத்து பார்த்தாள்.எதிரில் அமர்ந்திருந்த அஸ்வத்தின் முகத்தில் கூர்மை வந்தது. அவளது அலுவலக ஆப்பில்(app) இருந்து ஒரு வேலைக்கான செய்தி வந்திருந்தது. இன்று இரவுக்குள் அதனை முடித்து அனுப்ப வேண்டும் என்று சொல்லி இருந்தான் நிரஞ்சன்.

 சரிதான் இரவிலும் நிம்மதியாக இருக்க விட்டு விடாதீர்கள் மனதிற்குள் சலித்தபடி நிமிர்ந்தவள் அஸ்வத்தின் கூர்மையான பார்வைக்கு புருவம் சுருக்கினாள்.

” எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறாய்?”

ஆஹா  இப்போது உனக்கு சொல்லி விட்டுத்தான் மறு வேலை பார், தனக்குள் நொடித்துக் கொண்டவள் “ஆன்ட்டி எனக்கு வேலை வந்து விட்டது. நான் மாடிக்கு போகிறேன். இரவு உங்களுக்கும் சேர்த்து தோசை செய்து விடுகிறேன். நீங்கள் எதுவும் சமைக்க வேண்டாம்” கிளம்பினாள்.

 வாசல் படியை தாண்டும் போது, அவள் வேலை பார்க்கும் கம்பெனி பெயரை சுஜாதா அஸ்வத்திடம் சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது.

 முழுதாக மூன்று மணி நேரங்கள் அங்கிங்கு அசையாமல் லேப்டாப் முன்னால் உட்கார்ந்து நிரஞ்சன் சொன்ன வேலையை அவள் குழுவினருடன் கலந்தாலோசித்து செய்து முடித்து அப்டேட் செய்துவிட்டு கிருஷ்ணதுளசி நிமிரும்போது கடிகாரம் ஒன்பதரை காட்டியது.

ஷ்.. மறந்தே போய் விட்டேனே, ஆன்ட்டி 8 மணிக்கெல்லாம் சாப்பிட்டு மாத்திரை போட்டு படுத்து விடுவார்களே! சிறு குற்ற உணர்வுடன் வேகமாக படி இறங்கினாள். 

அவள் நினைத்ததற்கு மாறாக கீழ் வீடு விளக்கு வெளிச்சத்தில் இருக்க, “சாரி ஆன்ட்டி ஆபீஸ் ஒர்க்ல மறந்துட்டேன். இதோ தோசை மாவு கையோடு எடுத்துட்டு வந்துட்டேன். தக்காளி சட்னி இருக்குது. இங்கேயே இரண்டு தோசை ஊத்தி ரெண்டு பேருமே சாப்பிடலாம்”

 சொன்னபடி வீட்டிற்குள் வந்தவள் நாசி உணர்ந்த புதுவித வாசத்தில் ஒரு நிமிடம் நின்று மூச்சை இழுத்தவள் “ஆஹா ஆன்ட்டி என்ன சமைக்கிறீங்க? வாசம் தூக்குதே!” கேட்டபடி கிச்சனுக்குள் போக அங்கே மரக் கரண்டியை பிடித்தபடி அடுப்பின் முன் நின்றிருந்தான் அஸ்வத்.

” ஹாய்! வா சாப்பிடலாம்” என்றான். அடுப்பில் புல்கா ரொட்டி புஸ் என எழும்பிக் கொண்டிருந்தது. “புல்கா ரொட்டி, நாட்டுக்கோழி மசாலா செம காம்பினேஷன். சூப்பரா இருக்கும்” தட்டில் சிக்கனையும், ரொட்டியையும் வைத்து நீட்டியவனை ஆச்சரியமாக பார்த்தாள் கிருஷ்ணதுளசி.

” உங்களுக்கு சமைக்க தெரியுமா?”

“இதை சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லு” அடுத்த ரொட்டியை அடுப்படி ஓரம் இருந்த சிறு உணவு மேஜையில் அமர்ந்திருந்த சுஜாதாவிற்கு நீட்டினான்.

“நீயும் இப்படி உட்கார்ந்து சாப்பிடம்மா” சுஜாதா சொல்ல தட்டில் இருந்த உணவின் வாசம் மூக்கைத் துளைக்க அமர்ந்து ரொட்டியை பிய்த்து வாயில் வைத்த 

கிருஷ்ணதுளசியின் கண்கள் உணவின் ருசிக்கு தாமாக மூடிக்கொண்டன.

” டெலிஷியஸ்” தன்னையறியாமல் அவள் சொல்ல “தேங்க்யூ” என்றான் அடுப்பை பார்த்தபடி நின்றிருந்த அஸ்வத்.

” எப்படா அச்சு இவ்வளவு டேஸ்ட்டா சமைக்க கத்துக்கிட்ட?” சுஜாதா கேட்க “டேஸ்ட்டா சாப்பிட பிடிக்கிறவங்க, தானாவே சமைக்க கத்துக்கிடுவாங்க சுஜா, எனக்கு சமைச்சு போட ஆள் இல்லைன்னு நானே சமைக்க ஆரம்பிச்சிட்டேன்” பேசிய படியே அவனும் இவர்கள் அருகில் சாப்பிட அமர்ந்து கொண்டான்.

 வாய் நிறைய உணவை அடைத்துக் கொண்டு “உங்கள் அம்மா…” விசாரித்தாள் கிருஷ்ணதுளசி.

” அம்மா இல்லை”  உடனே பதில் சொன்னவனை “அச்சு” என அதட்டினாள் சுஜாதா.

” என்னுடன் இல்லை என்று சொல்ல வந்தேன். அதற்குள் என்ன கோபம் டார்லிங்?” கொஞ்சலான குரலில் சொன்னபடி சுஜாதாவின் தோளில் இடக்கையை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். 

” அம்மா கூட சண்டை போட்டுட்டு வந்துட்டீங்களாக்கும்?” கிருஷ்ணதுளசி சிறு முறைப்புடன் கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தவன் உதடு குவித்து மெலிதாய் விசில் அடித்தான்.

” சுஜா டார்லிங் நம்ம கிருஷ்ணாவுக்கு எவ்வளவு அறிவு பார்த்தாயா?” ஒரு நக்கலான கண் சிமிட்டல்.

 கிருஷ்ணதுளசி எழுந்து விட்டாள். “நான் மாடிக்கு போகிறேன் ஆன்ட்டி” 

அவள் பின்னாலேயே மாடியேறி வந்தவனை திரும்பி பார்க்கக் கூடாது என்றெண்ணியபடி கதவை பூட்டிக் கொள்ளப் போனபோது எதிர்பக்கம் அறைக்குள் நின்று அழைத்தான் அஸ்வத். “கிருஷ்ணா நான் ரொம்ப கெட்ட பையன் இல்லைதானே?”

புரியாமல் அவனைப் பார்க்க “சமைத்தெல்லாம் போட்டிருக்கிறேன்பா. கொஞ்சம் பார்த்து சொல்லு” அவன் கேட்ட விதத்தில் புன்னகைக்க துடித்த இதழ்களை இறுக்கிக் கொண்டாள்.

” சமைப்பவர்களெல்லாம் நல்லவர்களா?” 

” நீங்கள்… நிறைய பெண்கள், இந்த சமையலை வைத்து தானே நல்லவர் பட்டம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போதெல்லாம் நாங்கள் ஆண்களும் அதையே ஃபாலோ பண்ண ஆரம்பித்து விட்டோம். சொல்லு நான் இத்தனூண்டாவது நல்லவன்தானே?”ஆட்காட்டி விரலில் விரற்கடை அளவு காட்டி கேட்டான்.

 “சமைக்க தெரியாத பெண்கள் எல்லாம் கெட்டவர்களும் இல்லை, சமைக்க தெரியும் ஆண்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை” சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டாள் கிருஷ்ணதுளசி.

“ஏய் கிருஷ்ணா! ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் சொல்லு” அஸ்வத்தின் கத்தல்  கதவில் மோதி மீண்டும் அவனிடமே திரும்பியது.




What’s your Reaction?
+1
48
+1
21
+1
3
+1
5
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!