Serial Stories கடல் காற்று

கடல் காற்று-20

 ( 20 )

” யாரடா நீ…? ” தனசேகரனது தோளை பற்றி தள்ளினான் யோகன் .

” ஏய் ..நீ யாரடா …எதற்காக என் சம்முவை தள்ளுகிறாய் ? ” பதிலுக்கு அவன் எகிற அவன் தாடையை பதம் பார்த்தது யோகனின் கை .

” ராஸ்கல் …” அடிபட்ட ஆத்திரத்தில் தனசேகரன் யோகனின் கழுத்தை பற்ற முயல , அவன் தனசேகரனை தள்ள முயல ….புழுதி பறந்த்து அந்த இடத்தில் .

இருவருக்குமிடையே ஓடி வந்து விழுந்து இருவரையும் பிரிக்க முயன்றாள் சமுத்ரா .ஏனெனில் இந்த சண்டை அங்கேயிருந்த மக்கள் சிலரின் கண்ணில் பட்டு அவர்கள் ஓடி வர துவங்கினர் .அத்தோடு கார் டிரைவர் வேறு பாட்டியை விட்டு விட்டுவந்தவன் வேகமாக ஓடி வந்து கொண்டு டிருந்தான் .

யோகன் அவர்கள் முதலாளி .அந்த மக்கள் கையில் சிக்கினானென்றால் தனசேகரன தொலைந்தான். .இதனாலேயே அவர்களை பிரிக்க முயன்றாள் சமுத்ரா . .

” யோகன் …ப்ளீஸ் ..அவரை விடுங்க …அவர் என் அத்தை பையன் தனசேகரன் .” என கத்தினாள் .

சட்டென தனித்து நின்றவன் தன்னை அடிக்க ஓங்கிய தனாவின் கைகளை பற்றி நிறுத்தி ” ஓ…அது ..இவர்தானா ..? சாரிம்மா …எனக்கு தெரியாது …” என்றவன் ” நல்வரவு நணபரே ” என்றபடி அவன் கைகளை இழுத்து தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்

தங்கள் முதலாளியை அடிப்பவனை இன்று கொன்றே தீர்த்து விடுவது என்ற வெறியுடன் கையில் அகப்பட்டதையெல்லாம் ஆயுதமாக்கியபடி  நெருங்கி வந்த மக்கள் இந்த திடீர் மாற்றத்தால் செய்வதறியாது நின்றனர் .

” எனக்கு தெரிந்தவர்தான் .சீக்கிரமே எனக்கு உறவாக போகிறார் .ஒன்றும் பயமில்லை .நீங்கள் போய் வேலையை பாருங்கள் ” என அவர்களை அனுப்பினான் யோகன் .

இவனை எந்த கணக்கில் சேர்ப்பது என தடுமாறி நின்றான் தனசேகரன் .எனக்கும் அதே குழப்பம் தான் என அவனிடம் ஜாடை காட்டினாள் சமுத்ரா .

இந்த ஜாடை பரிமாற்றத்தில் ஒரு நொடி முகம் கறுத்தவன் மறு நொடியே தன்னை மாற்றிக் கொண்டு ” வாருங்கள் தனா .வீட்டிற்கு போய் பேசலாம் ” என அவனை அழைத்து சென்றான் .

போகலாம் என்ற சமுத்ராவின் பார்வையால் அவனை பின் தொடர்ந்தான் தனசேகரன் .

வீட்டில் தனசேகரனை யோகன் உபசரித்த விதத்தில் இவர்களிருவரும் சற்றுமுன் சண்டையிட்டார்களென சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் .அதுவும் வேறு யாரும் தனாவை உபசரிக்க கூட விடவில்லை அவன் .தானே உணவு பரிமாறி ,தானே அவன் தேவைகளை கவனித்தான் .

கை துடைக்க டவல் முதற்கொண்டு எடுத்து வைத்தான் .அவனது வேலை விபரம் விசாரித்தான் .தனாவுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதை கவனமாக கேட்டுக் கொண்டான் .

” நான் இரவு வெளியே தங்கிவிடுவேன் தனா .இங்கே  வீட்டில் அப்பா மட்டுந்தான் .அதனால் இரவு வேறு ஆண்களை வீட்டினுள் தங்க வைப்பது கிடையாது .அதனால் நீங்கள் அவுட்ஹவுசில் தங்கிக் கொள்ளுங்கள் .

சொன்னதோடு மட்டுமன்றி அவன் தோள்களை அணைத்தபடி அவுட்ஹவுஸ் உள்ளே வரை அழைத்து சென்று அங்கிருந்த வசதிகளையும் விளக்கி விட்டு அவன் குட்நைட் சொல்லி கதவை மூடிய பிறகே திரும்பினான் .

தோப்பு வீட்டிற்கு கிளம்புவதற்காக புல்லட் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தவன் விழிகள் விரிந்தன .புல்லட் மேல் சாய்ந்து நின்றபடி இருந்தாள் சமுத்ரா .

,” ஏன் .்? எதற்கிந்த நாடகம் …?”

” நாடகமா …? எதை சொல்கிறாய் …? நம் வீட்டிற்கு வந்த விருந்தாளியை உபசரிக்க வேண்டாம் …?அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் .”

” அவரைத்தானே  கடற்கரையில் அந்த அடி அடித்தீர்கள் …”

” ஆ…மாம் …ஆனால் அப்போது அவர் யாரென்று தெரியாதே …பிறகு நீதானே உன் உறவினரென்று …”

” நான் சொன்னபிறகுதான் அவர் என் உறவினரென்று தெரியுமா …?இதை நான் நம்ப வேண்டுமா …? அன்று கோவிலில் என் மொபைலை உங்களிடம் விட்டு வந்தேனே , அன்றே அதனை ஆராய்ந்து விடவில்லை நீங்கள் …? அதில் எங்கள் போட்டோ , விபரங்களை அறிந்து கொண்டு விடவில்லை …?” தன் ஊகத்தை உறுதி செய்து கொள்ள மெல்ல கேட்டு பார்த்தாள் .

” இல்லையே …” எளிதாக கைகளை விரித்தான் .அதற்கு முன்பே எனக்கு அவனை தெரியும் .அவன் மட்டுமல்ல உன் சம்பந்தப்பட்ட அனைவரையுமே , எல்லாமே எனக்கு தெரியும் …அப்படி யாரென்று தெரியாத ஆளை வீட்டினுள் விட மாட்டேன் சமுத்ரா ” சிறு கேலி அவனிடம் .

” பிறகு ஏன் இன்று அவரை அப்படி அடித்தீர்கள் …?” கோபமாக கேட்டாள் .

” எனக்கு அவனை பிடிக்கவில்லை …அடித்தேன் “

” ஏன் …? “

” ஏனோ …அவன் மூஞ்சு பிடிக்கவில்லை …அதனால் அடித்தேன் .ஆனால் நான் மட்டுமே அடிக்க வேண்டுமென நினைத்தேன் .அதனால் என் மக்களிடமிருந்து நானே காப்பாற்றினேன் …”

” எவ்வளவு கல்நெஞ்சம் உனக்கு …?”

” எனக்கா …?நான் கல் நெஞ்சக்காரனாயிருந்தால் இந்நேரம் அவன் உடல் கடலில் மிதந்து கொண்டிருக்கும் …” என்றான் வெறுமை குரலில் .

” என்னது …?” அதிர்ந்தாள் .
இவன்  தனசேகரன் என்னை தாங்கி பிடித்தது பிடிக்காமல் அவனை அடித்தானோ ? இப்படி தோன்றியது சமுத்ராவிற்கு .

” அப்படித்தான் எண்ணமிருந்த்து எனக்கு .ஆனால் நீதான் ‘ யோகன் ‘ என்று என்னை ஆசையாக அழைத்து அந்த எண்ணத்தை அழித்து விட்டாய் ” கவலை போல் கூறினாலும் …குரலில் நிரம்பி வழிந்த்து உற்சாகமே …

நாக்கை கடித்துக் கொண்டாள் சமுத்ரா .யோகனா …? அப்படியா அழைத்து தொலைந்தேன் .போச்சு சும்மாவே நரி …இதற்கு தேனைக் காட்டினால் …

” என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் மனதில் …?” தன் இயலாமையின் கோபத்தை அவன் மேல் காட்டினாள் .

ஏதோ சொல்ல வாயெடுத்து விட்டு பின் நிறுத்தி ” உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று …” அழுத்தமாக சொன்னான் .

” அது …கனவிலும் நடக்காது …” உறுதியாக கூறினாள் .

அழுத்தமான காலடியுடன் அவளை நெருங்கியவன் , அவள் முகத்தருகில் குனிந்தான் ” அதையும் பார்க்கலான்டி …” குரோத்த்துடன் கூறினான் .

அவனது ” டி ” யை உணர்ந்து ஆத்திரப்பட்டு அவள் நிமிரும் முன் அவள் முகத்தில் புகையை கக்கியபடி பறந்த்து அவன் புல்லட் .




—–

” இங்கே இவன் யார் சம்மு …? இவன் பார்வையே சரியில்லை .நேற்று உன்னை வேறு பிடித்து தள்ளுகிறான் .நீ ஏன் இவன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் …? ” வெறுப்புடன் கேட்டான் தனசேகரன் .

” இந்த ஜனங்களுக்கெல்லாம் இவர்தான் தலைவர் போல் இருக்கிறார் தனா .இவர் உதவியில்லாமல் இங்கே என்னால் எதுவும் செய்ய முடியவதில்லை .அதனால் …எனக்கு வேறு வழி இல்லை ” தோள்களை குலுக்கினாள் .

” எவ்வளவு பெரிய விசயம் .நீ எளிதாக தோள் குலுக்குகிறாயே …”

” என்னப்பா பெரியவிசயம் …லாவண்யா விசயம் வேறு இவரிடம்தான் இருக்கிறது .அதனால் இவரை ஒரேடியாக ஒதுக்க முடியவில்லை “

” இவன் …இ…இவன் கேரக்டர் ..இவன் பெண்களிடம் …அது …எல்லோரும் அறிந்த விசயமாக இருக்கிறதே ….இரவு வீடு தங்குவதில்லையென்று எவ்வளவு தைரியமாக சொல்கிறான் …இவனை…இவனோடு எப்படி உன்னால் தங்க முடிகிறது ? “

” என்ன சொல்ல வருகிறீர்கள் …? தனா இது என்னுடைய தொழில் .இதற்கெல்லாம் பயந்தால் நான் இந்த வேலை பார்க்க முடியாது .” அவனை கூர்ந்தாள் .

” அப்படி நீ இந்த வேலை பார்த்தே தீர வேண்டுமென்று என்ன அவசியம் .வேண்டாமென்று ஒரு லட்டர் எழுதிக் கொடுத்து விட்டு என்னோடு வந்து விடு “

ஒரு விரும்பத்தகாத மௌனம் இருவருக்குமிடையே நுழைந்த்து .கடலை வெறித்தாள் சமுத்ரா.

அது ஒரு பின்மாலை பொழுது .கொஞ்சம் பேச வேண்டுமென கூறி சமுத்ராவை அழைத்துக் கொண்டு அந்த கடற்கரையில் அமர்ந்திருந்தான் தனசேகரன் .

சமுத்ராவின் மௌனம் தனாவை கலக்க பேச்சை சிறிது மாற்ற எண்ணி ” சே ..என்ன நாற்றம் …ஒரே கருவாட்டு நாற்றம் .இங்கே எப்போதும் இப்படித்தான் இருக்கும் போலவே .உனக்கு கஷ்டமாக தெரியவில்லையா சம்மு ?” மூக்கை உறிஞ்சியபடி கேட்டான் .

” எனக்கு அப்படி தெரியவில்லை .பழகிவிட்டது .நீங்கள் புதிதென்பதால் …உங்களுக்கு தோன்றுகிறது .ஆனால்  ” எங்கே …?” ஒற்றைச் சொல்லால் வினவினாள் .

நீ இங்கே வந்தே மூன்றே வாரங்கள் தானே ஆகிறது .அதற்குள் உனக்கு பழகிவிட்டதா ? என்றெண்ணியபடி
“என்னோடு …” அவசரமாக கூறினான் தனசேகரன் .” எனக்கு மூன்று வருட ஒப்பந்தம் சண்மு .குடும்பத்தை அழைத்து செல்லும் அனுமதி உண்டு .அதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விடலாம் ” மிகுந்த உற்சாகம். அவன் குரலில் .

” ஓ…என் வேலை …?”

” அதைத்தான் விட்டு விட சொன்னேனே .அங்கே எனக்கு கிடைக்கும் சம்பளத்திற்கு நீ வேலை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது .அதனால் …”

” நீங்கள் வேலை பார்ப்பீர்கள் .நான் சமையல் செய்து வீட்டை பார்க்க வேண்டுமில்லையா …?”

” இல்லையில்லை …அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை சம்மு .அங்கே போய் உனக்கேற்ற வேலை ஒன்றை தேடிக் கொண்டால் ஆயிற்று ” அவசரமாக கூறினான் .அவனுக்கு சமுத்ராவை தெரியும் .கணவனேயானாலும் அவனை சார்ந்திருக்க விரும்ப மாட்டாள் .தன் தனித்தன்மையை நிலை நிறுத்த
நினைக்கும் பெண் அவள் .

தன்னை சமுத்ரா தவறாக எண்ணிவிடக் கூடாதே என்ற தவிப்பு தனசேகரனுக்கு .

” நான் வந்த அன்று உங்களுக்குள் என்ன பிரச்சுனை சம்மு ? எதற்காக உன்னை அப்படி தள்ளினான் ? ” ஆராயும் பார்வையுடன் கேட்டான் .

” நீங்கள் என்ன சொல்லாமல் திடீரென வந்து நிற்கிறீர்கள் ? “

எப்படி பேச்சை மாற்றுகிறாள் பார் என குறைபட்டபடி ” எனக்கு பாரின் ஆர்டர் வந்துவிட்டது.அதனை உன்னிடம் நேரில் சொல்லும் ஆசை .பஸ்ஸில் ஏறியதும் உனக்கு போன் செய்தேன் .டவர் இல்லாததால் சரியாக கேட்கவில்லை .அதோ அங்கே ரோட்டில் இறங்கி பார்த்தால் இங்கே நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தீர்கள் .விரைந்து வந்தேன் .என்ன விசயம் சம்மு …?”

மிக தெளிவான விளக்கம் தனசேகரன் அளித்தும் அவன் கேள்விக்கு பதிலளிக்கும் எண்ணமென்னவோ சமுத்ராவிற்கு வரவில்லை .மணலை குவித்து கோபுரமாக்கிக் கொண்டிருந்தாள் அவள் .

” அக்கா …” என்ற அழைப்புடன் ஓடி வந்தாள் செல்லி .இவர்களிருவருமாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் சற்று தள்ளி தயங்கி நின்றாள் .

” சும்மா வா செல்லி .இவர் என் நண்பர்தான் .என்ன விசயம் சொல்லு ..”




நண்பரா …? நானா …? என்றெண்ணியபடி

செல்லியை பார்த்து சிரிப்பென்ற பெயரில் ஒரு செய்கை செய்து வைத்தான் தனசேகரன் .

” அக்கா எனக்கு நான் கேட்ட காலேஜ்லயே இடம் கிடைச்சிருச்சு .இதோ லட்டர் .முதல்ல உங்க்கிட்டதான் காட்டனும்னு வந்துக்கிட்டிருக்கும் போது , நீங்க இங்கே உட்கார்ந்திருக்கிறதை பார்த்திட்டு ஓடி வந்தேன் ” மூச்சிரைத்தது அந்த பெண்ணிற்கு .

” வாவ் வாழ்த்துக்கள் செல்லி …ரொம்ப சந்தோசம்மா …” என்னவோ தனக்கே சீட் கிடைத்தாற் போல் குதூகலிக்கும் சமுத்ராவை பெருமூச்சோடு பார்த்தான் தனசேகரன் .

” முதலில் நீங்க நம்ம ஐயாவோடதான் உட்கார்ந்திருக்கிங்கன்னு நினைத்தேன் .நல்லது இரண்டு பேரிடமும் சொல்லிடலாம்னு வந்து பார்த்தா …இவரு …” சிறு குறைபாடு செல்லியின் குரலில் .அத்தோடு யாரடா நீ பார்வை தனசேகரன் மேல் …

இந்த குட்டியை பாரேன் …அதற்குள் சமுத்ரா மேல் என்ன உரிமை …? என்னை பார்வையாலேயே இந்த விரட்டு விரட்டுகிறதே …முகச்சுளிப்புடன் எண்ணிக்கொண்டான் .

” என்னம்மா …ஐயாவை எதுக்கு பார்க்கனும் ? “

” அக்கா சீட் இந்த காலேஜ்ல எனக்கு மட்டுந்தான் கிடைச்சிருக்கு .என் ப்ரெண்ட்ஸ் இரண்டு பேருக்கு வேறே காலேஜ்ல கிடைச்சிருக்கு .ஆனா மத்த மூணு பேருக்கு …?அவுங்க கொஞ்சம் மார்க் கம்மி …ஆனாலும் படிக்கிறதுல ரொம்ப ஆர்வமா இருக்காங்க .அதான் ஐயாகிட்ட கேட்கலாம்னு …”

” ஓ…இந்த நேரத்தில் அவர் செங்கல் தொழிற்சாலையில் இருப்பாரென நினைக்கிறேன் .வா நேரிலேயே போய் பேசி விடுவோம் ” என்றவள் எழுந்து நடக்க தொடங்கிவிட திகைத்தான் தனசேகரன் .

நான்கு எட்டு வைத்த பிறகு நினைவு வந்தவளாக நின்று திரும்பி அவனை பார்த்து ” தனா நீங்க ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போயிடுங்க. நான் இப்போ வந்திடுறேன் ” எட்றபடி ஆட்டோவிற்காக ரோட்டிற்கு நடக்கலானாள் .

அணைந்து விட்ட புஸ்வானமாய் அமர்ந்திருந்தான் தனசேகரன் .




What’s your Reaction?
+1
17
+1
12
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!