Big Boss Tamil 7 Entertainment

Big Boss Tamil 7: நேற்று ஆக்சிஜன் டாஸ்க்

 பிஸிக்கல் டாஸ்க் இந்த எபிசோடில் இருந்து தொடங்கியது.ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்ற இருதரப்பும் மூச்சுத்திணற போராடினார்கள். மல்யுத்த வீரர்கள் மாதிரி ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு தரையில் கிடந்தார்கள். இந்த தள்ளுமுள்ளுவில் கதவு கண்ணாடி உடைந்தது. ‘சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா.. படுபாவிங்களா’ என்று பிக் பாஸ் உள்ளுக்குள் கதறியிருப்பார். இத்தனை ரணகளத்திற்கு நடுவிலும் மணி – ரவீனா – நிக்சன் என்கிற ரொமான்டிக் டிரையாங்கிள் டிராக், பொசசிவ் புகைச்சலுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.




‘கேப்டன் யுகேந்திரன் போட்டியில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும்’ என்று பிக் பாஸ் அறிவித்து விட்டார். எந்த வீட்டின் சார்பாக அவர் ஆடவிருக்கிறார் என்பதை யுகேந்திரன் முடிவு செய்து கொள்ளலாம். கேப்டன் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் யுகேந்திரனோ, பெரிய வீட்டுக்குத்தான் முழு விசுவாசமாக இருந்தார். எனவே ‘விஷ்ணுவிற்குப் பதிலாக நான் ஆடுகிறேன்’ என்று அவர் எடுத்தது புத்திசாலித்தனமான மூவ்.

சண்டைக்கோழியாக இருக்கிற விஷ்ணுவைச் சமாளிப்பது பெரிய வீட்டிற்கு சவாலாக இருக்கும் என்பதால் விஷ்ணுவை ஓரங்கட்டி அமர வைக்க முடிவு செய்தார் யுகேந்திரன். “இது சரியில்ல கேப்டன். அக்ஷயா கைல கல்லு இருக்கு. அவளால சரியா விளையாட முடியாது. அவங்களுக்குப் பதிலா ஆடறதுதான் நேர்மையா இருக்கும்’ என்று சின்ன வீடு லாஜிக்கலாக மடக்கியதும் ‘சரி’ என்று வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார், யுகேந்திரன

போட்டி துவங்கியது. கார்டன் ஏரியாவில் 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டத்தின் நடுவில் வைக்கப்பட்டிருந்தன. சுற்றிலும் போட்டியாளர்கள் நின்று ‘ஆ’வென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸர் அடித்ததும், தானியம் தூவப்பட்டதும் பாய்ந்து ஓடி வருகின்ற பறவைகள் மாதிரி சிலிண்டர் மீது பாய்ந்தார்கள். கைக்கு கிடைத்ததைத் தூக்கிக்கொண்டு வெவ்வேறு திசைகளில் பறந்தார்கள். ஆனால் சிலர் மட்டும் சிறகொடிந்த பறவைகள் மாதிரி அங்கேயே இணைபிரியாமல் கட்டியணைத்து உருண்டு கொண்டிருந்தார்கள். விஜய் போட்ட உடும்புப்பிடியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் விஷ்ணு.



சிலிண்டர்களை எடுத்துச் சென்ற போட்டியாளர்கள் அதை வெவ்வேறு இடங்களில் பதுக்க ஆரம்பிக்க “கீழே வைக்கக்கூடாது. கையில்தான் வைத்திருக்கணும்” என்று பிக் பாஸ் அறிவிக்க, ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக வேடிக்கை பார்க்கும் சுரேஷ், ‘இது என்ன பயங்கரமான கேமே இருக்கே’ என்று மிரண்டார். இந்த முறை அவரது ‘ஸ்ரீகாந்த்’ கமெண்ட்ரி தொந்தரவு இல்லை.

சிலிண்டர்களை எடுத்துச் சென்ற சின்ன வீட்டார் கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொள்ள, ஹீரோ மாதிரி ஓடி வந்த நிக்சன் அதன் மீது மோதியதில் கதவு சுக்கல் சுக்கலாக உடைந்தது. ‘பீப்’ ஒலியால் மூடப்பட்ட வசையில் நிக்சனைத் திட்டினார் பிரதீப். கண்ணாடிக்கான செலவைக் கணக்கிட்டபடியே எரிச்சலான பிக் பாஸ், ‘இந்த ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார். (இவனுகளுக்கு மூணு வேளை சோறு போட்டு இந்த கேமை நான் நடத்தி முடித்தறதுக்குள்ள!. முடியல!).

‘இந்த விஜய் என் கழுத்தை உடைச்சிட்டாம்ப்பா’ என்று பரிதாபமாகப் புலம்பினார் விஷ்ணு. ‘கண்ணாடியாடா உடைக்கறீங்க?!. இருக்குடா. உங்களுக்கு!’ என்று கறுவிக் கொண்ட பிக் பாஸ், ‘இந்தப் போட்டி மீண்டும் முதலில் இருந்து நடைபெறும்’ என்று டெரராக அறிவித்தார்.




மணி – ரவீனா – நிக்சன் – தொடரும் பரமபத ஆட்டம்

இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக, ரவீனா விஷயம் நிக்சனின் மண்டையை தொடர்ந்து குடாய்கிறதுபோல. எனவே ரவீனாவை தனியாக அழைத்து ‘முதல் வாரம் சின்ன வீட்டுல நீ இருந்த போது எல்லோர் கூடயும் பேசின. எப்ப பெரிய வீட்டுக்கு வந்தியோ, மணி எத்தனைன்னு கூட பார்க்காம இருபத்து நான்கு மணி நேரமும் மணியோடதான் இருக்கே. இந்த கேம் தப்பு’ என்று உபதேசம் செய்ய ‘அப்படியா சொல்ற?” என்று அப்பாவித்தனமான பாவனையுடன் கேட்டுக் கொண்டார் ரவீனா. ‘தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்து’ என்கிற விளையாட்டை ரவீனா திறமையாகவே ஆடுகிறார்.

மீண்டும் சிலிண்டர் ஆட்டம் ஆரம்பித்தது. பறவைகள் தானியங்களைக் கொத்திக் கொண்டு வெவ்வேறு திசைகளில் பறந்தன. கொடி காத்த குமரன் போல சிலிண்டர்களைக் கட்டியணைத்துக் கொண்டு போராடினார் ஐஷூ. எந்தப் பக்கம் விளையாடுகிறார் என்பதே தெரியாமல் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தார் யுகேந்திரன். படுக்கையை உதறிப் போடுவது போல, தன்னுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த பிரதீப்பை தூக்கி அப்படியே கீழே போட்டார் விஜய். சற்று நேரம் மூச்சுத் திணறிய பிரதீப், உடனே சுதாரித்துக் கொண்டு எழுந்து ஓடினார். ரவீனாவின் கால்களை விக்ரம் சுரண்ட, அந்தச் சமயத்திலும் குக்கர் விசில் மாதிரி சிரித்துக் கொண்டேயிருந்தார் ரவீனா.




சிலிண்டர்களை தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்குள் மணி மறைய, கதவுக்கு அருகில் ஒரு கலவரம் நடந்தது. வாயிற்காப்பானாக விஜய் மற்றவர்களை தடுத்து நிற்க, யுகேந்திரனின் இடுப்பில் கிச்சு மூச்சு மூட்டி விலக்க முயன்றார் நிக்சன். பூர்ணிமாவின் கையைப் பிடித்து ரவீனா இழுக்க.., மணியின் கையைப் பிடித்து பூர்ணிமா இழுக்க. இந்த கைகலப்பு போராட்டம் கலகலப்பாக நடந்தது.

இந்தக் களேபரத்தில் ரவீனா கீழே விழ, ‘நீதான் தள்ளிட்டே’ என்று பூர்ணிமாவை குற்றம் சாட்டினார் மணி. “நான் ரவீனா கைய பிடிச்சிட்டு இருந்தேன். நீ என்னைத் தள்ளியதால சேர்ந்து விழுந்தோம்” என்று பதிலுக்கு மணியைக் குற்றம் சாட்டினார் பூர்ணிமா. இந்த ‘நீதான் தள்ளினே’ பஞ்சாயத்து நெடும் நேரமாக அவ்வப்போது புகைந்து கொண்டிருந்தது. (குறும்படம் போடாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது!).




உடைந்த கண்ணாடிக் கதவு, சிதறிய இரும்பு கேட்

ஒருவழியாக இந்த ஆட்டத்தின் முதல் சற்று முடிந்தது. அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது பெரிய வீடு. எனவே அடுத்த வார கேப்டன் போட்டிக்கு அங்கிருந்து இரண்டு பேர் தகுதியாவார்கள். கல்லாகும் சாபம் பெற்ற அகலிகை போல, கல்லைச் சுமந்து கொண்டிருக்கும் அகலிகையாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் அக்ஷயா. கடந்த ரவுண்டில் கண்ணாடிக் கதவு உடைந்தது போல, இந்தச் சுற்றில் சின்ன வீட்டின் கேட்டு உடைந்தது. (அப்ப எல்லாமே செட்அப்பா கோப்பால்! நேசமணிதான் பிக் பாஸ் வீட்டை கட்டிய காண்டிராக்கட்டர் போலிருக்கிறது!).

இவர்கள் லூட்டியை பார்த்து  ‘என்னாலயே முடியலைடா டேய்” என்று நொந்த பிக் பாஸ், அன்றைய எபிசோடை சட்டென்று முடித்து விட்டார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!