Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-8

8

சூரியன் மலையோடு சரசமாடப் பச்சைப் பசுமையெல்லாம் ஒளியான கரு தாங்கிப் பேரழகோடு தோன்ற அதை ரசிக்கத் தான் அங்கு யாருக்கும் மனசே இல்லை. 

பின்னே? அங்கங்கே நிற்கும் காக்கி நிற உடுப்புகள் வந்தவர்களின் மனநிலையை உல்லாசத்தில் இருந்து உளைச்சலுக்குக் கொண்டு வந்து விட்டிருந்தது. அங்கிருந்து காக்கியில்லா ஒரு ஜோடி பிரிந்து அவர்களை நெருங்கிற்று.

“ஹாய்! ஐ அம் ஹரி.. ப்ரைவேட் டிடெக்டிவ். இவங்க என் ‘ணி.. ‘! அதாவது ஹரி ‘ணி'” அவன் கை குலுக்கினான் ஆதியுடன்.

“வாங்க ஹரி. நீங்க டிடெக்டிவ்ன்னு இங்கு யாருக்கும் தெரிய வேணாம். முதலில் போலீஸை அவங்க வேலையை முடிச்சுட்டுக் கிளம்பச் சொல்லுங்க. வளர்ந்து வரும் ஒரு கம்பெனியின் புகழைக் குலைக்க நடந்த சதி இது. எங்கள் எதிரி அனுப்பிய ஆள்தான் ஹரி அவன்!”

“அவன் என்றால்?” ஹரிணி கொக்கி இட்டாள்.

“அவன்… ஆனந்தன்! அதோ போலீஸ் அவனைச் சுற்றி வரைந்த வரைகோட்டுப் படம்.”

“எப்படிச் செத்தான்?”

“ஆறாம் கட்டு அமானுஷ்யம் அவனைச் சாய்த்து விட்டது. ” மெல்லிய குரலில்  சொன்னான் ஆதித்யா.

“அமானுஷ்யமா? யூ மீன் பேய்? பின் ஏன் இங்கு ரிசார்ட் கட்டினீங்க?  ஏன் இப்படி அறைகளில் மற்றவரைத் தங்க அனுமதிச்சீங்க மிஸ்டர் ஆதி?” ஹரிணி கண்களை இடுக்கிக் கொண்டு கேட்டாள்.

“வேண்டுதல் தான் மேடம்!”

“யாருக்கு? ரணபத்ரகாளிக்கா? உங்கம்மா நேத்து பொங்கல் வைச்சாங்க! நீங்க இன்னிக்கு இங்க பூ சுத்துறீங்களா? உங்க போட்டிக் கம்பெனி ஆனந்தனை அனுப்பறத தெரிஞ்சுக்கிட்டு அவனுக்குப் பாய்சன் குடுத்ததே நீங்கன்னு நான் சொல்றேன். ஹரி விசாரிச்சு முடிவு செய்வோம்ன்னு சொல்றாரு. என்ன ஹரி! நீங்க சொல்லுங்க!”

“ஹான்? யெஸ் ஆதி.. கொலைக்கான மோட்டிவ் யோசிச்சா அதில் ஸ்ட்ராங்கா உங்க பேர் முதலில் நிக்குது. ஆக.. உங்களை முதலில் தீவிரமா விசாரிக்கணும்.”

“ப்ளீஸ் மிஸ்டர் ஹரி. ஐ அம் நாட் அன் அக்யூஸ்ட். என் ரிசார்ட்டில்  ஒரு மரணம் நடந்திருக்கு. அதுக்குப் பொறுப்பேத்துப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கு. அதற்காக நான் தான் கொலை பண்ணினேன்னு சொன்னால் எப்படி?” – பொரிந்தான் ஆதி.

போலீஸ் அதற்குள் தன் கடமைகளை முடித்திருந்தனர். அதிகாலையில் முகம் முழுவதும் தேனீக்களால் கொட்டப் பட்ட நிலையில் ஆறாம்கட்டின் வெளிப்புறம் இறந்து கிடந்த ஆனந்தனை போஸ்ட்மார்ட்டத்துக்குக் கொண்டு சென்றனர். 

ஹரியும் ஹரிணியும்  இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசி விட்டு வர, அவரும் தலையாட்டி விடைபெற்றார். பார்த்துக் கொண்டே இருந்த ஆதித்யா “ஹரி.. உங்களை நான் தான் அழைச்சேன். இங்குள்ள பிரச்சனைகளை நல்லபடியா முடித்துத் தந்தால் எஸ்டேட்டின் ஷேர்ஸ் சில தருகிறேன்…”

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஹரிணி எகிறினாள். “தூண்டில் போடறார் மிஸ்டர் ஆதி. சிக்காதீங்க ஹரி. கொலை பண்றதுக்குச் சமமானது கொலையாளிக்குத் துணைபோறது.” ஐந்தடி உயரத்திலும் எம்பி எம்பிக் குதித்தாள். முகம் கோபத்தில் ரத்தமெனச் சிவந்திருந்தது.

அவள் குதிப்பதைப் பார்த்த ஹரி காதோடு சொன்னான். “ஷ்! குட்டச்சி! ரொம்ப குதிக்காத! நாம போலீஸ் இல்லை. உள்ளே நுழைஞ்ச உடனே க்ளையண்ட்டைப் பகைச்சுக்கற? அதோடு நமக்கு யார் மேல சந்தேகம்னு கேஸ் தெளிகிறவரை ஓப்பனா சொல்லலாமா? எப்போ மெச்சுரிட்டி வரப் போகுது உனக்கு? அதுசரி, அஞ்சடி அழகி ஆறடி தேவதையா என்னிக்கும் ஆக முடியாது. என்னைக்கு இருந்தாலும் என் முகத்தை நீ  நெருங்க வேண்டுமென்றால்  ஸ்டூல் தான் போட வேண்டி வரும். அன்பிலேயும் சரி, அறிவிலேயும் சரி. ம்ஹும்..என் கவலை எனக்கு.”




“போ… டா!” சிவந்த முகத்துடன் வாயசைத்தாள் ஹரிணி.

இவர்கள் இப்படி வழக்காடிக் கொண்டிருக்க, சந்தான பாண்டியன், எழில் மாறன், புரபசர் மூவரும் கூட்டணி போட்டிருந்தனர். சற்றுத் தள்ளி வின்செண்ட் அப்போதுதான் வந்திருந்த முத்துவேலுடன் பேசிக் கொண்டிருந்தான். 

முத்துவேலின் பார்வை சந்தான பாண்டியனின் மீது கூர்மையாகப் பதிந்திருந்தது.  பெண்ணாசை தான் ஆனந்தனின் கொலைக்குக் காரணமோ? இந்த சந்தானபாண்டியன்கூட அவனைக் கொன்றிருக்கலாம். அப்படி நினைக்கலாம் இல்லையா? இப்படிப் போனது அவன் எண்ணம். 

“என்ன யோசிக்கிறீங்க முத்துவேல்? தொடர்ந்து இங்க தங்கலாமான்னு எங்க டைரக்டர் யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு. இடம் நல்லாருக்குன்னு லொகேஷன் பார்க்க வந்தா கொலை, கிலைன்னு  நாங்க எடுக்கற சினிமாவ விடத் தூக்கலா இருக்கு. ஆமா, ஆனந்தனை அடிச்சது ஆறாம்கட்டு ஆவின்னு பேசிக்கறாங்களே… அப்படியா முத்துவேல்?” 

“ஆறாம்கட்டு ஆவியா? ஹக்! அதுல ஆவி இருக்குன்னு நீங்க பார்த்தீங்களா? படிச்சவங்க நீங்களே ஆவி கீவின்னா? படிக்காத எங்களுக்கு எல்லாமே அந்தக் காளி தான். அவ இருக்கா இங்க. அவ கண்பார்வையில் கெட்டது நினைச்சா கெட்டது நடக்கும். நல்லது நினைச்சா நல்லதே நடக்கும்.  அம்புட்டுத் தான்.”

“அப்ப… ஆனந்தனை யார் கொன்னா?”

“ஏன், நீங்களாக் கூட இருக்கலாம்!” 

முகம் கறுத்தது வின்செண்ட்க்கு.

இத்தனை களேபரத்திலும் நல்ல தூக்கம் தூங்கினது யாரென்றால் நான்காம் கட்டில் தங்கி இருக்கும் அந்த பாட்டனி மாணவக் கோஷ்டி தான்.

அவர்களின் ஜன்னல் கூட திறக்கப்படவில்லை. சுற்றும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த ஹரிணிக்கு அந்தக் கட்டு திறக்கப்படாதது வியப்பைத் தந்தது. 

“மிஸ்டர் ஆதி.. அதோ அந்தக் கட்டிலும் ஆவி குடியிருப்பா? மனித நடமாட்டமே இல்லையே?”

“இல்லையே.. கிருபாசங்கர், கோதையுடன் இன்னும் சிலர் இருந்தாங்களே! சீக்கிரமே எழுந்து வெளியே சென்றிருப்பாங்க. ஆராய்ச்சிக்கு வந்தவங்களாச்சே!”

“ஏன் அவர்கள் இந்தக் கொலையைச் செய்து விட்டுத் தப்பி இருக்கக் கூடாது? அவங்க போன் நம்பர் இருக்கா? உடனே போன் செஞ்சு வரச் சொல்லுங்க!”

“ஹேய்… அஞ்சடி ஆரணங்கே! கொலை செஞ்சவன் அவனா இருந்தா நீ போன் பண்ணினதும் வந்து நிப்பானா? இதுக்குத் தான் யோசிக்கக் கொஞ்சம் கிட்னி வேணும்ங்கறது” ஹரி காதைக் கடித்தான்.

“சரி, நீயே சொல்லு அப்போ!” ஹரிணி பல்லை நறநறத்தாள்.

கிருஷ்ண பரமாத்மா போல் “எல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்று புன்னகைத்த ஹரி ஆதித்ய ராமிடம் “ஆறாம் கட்டைத் திறங்க ஆதி. அங்கு நானும் ஹரிணியும் தங்கப் போகிறோம்!” கட்டளையிட்டான்.

“ஹரி… அங்க… ஆவி!”

“இருக்கட்டும்! உங்களுக்குக் கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிக்கணுமா வேண்டாமா?”

“வேணும்!”

“உங்க அரண்மனையில் இருக்கற ஆறாம்கட்டுல எந்த ஆவியும் இல்லேன்னு நிரூபிச்சிட்டா உங்க ப்ராப்ளம் எல்லாம் சால்வ் ஆகிடும் இல்லையா? பின்ன ரிசார்ட்டா டெவலப் பண்றதுல எந்தப் பிரச்சனையும் இருக்காதுல்ல! அதான் தங்கிப் பார்க்கறோம்!” புன்னகைத்தான் ஹரி.

“உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா…?”

“ஆவியுடன் போன ஆவின்னு தலைப்பு கொடுத்து எங்க ரெண்டு பேர் போட்டோவையும் கொஞ்சம் அழகா பெரிய சைஸ்ல பேப்பரோட முன்பக்கத்துல போட்டுருங்க. சிம்பிள்!” 

“ஹா! ஹா! வாங்க ஹரி, அந்த ஆவியுடன் பழகிப் பார்க்கலாம்!” என்ற ஹரிணி ஆதியின் பின்னால் தன் குதிகால் செருப்பு சத்தமிட நடந்தாள்.

வழியில் நின்றிருந்த சந்தான பாண்டியன் கூட்டணி அவர்களை வழி மறித்தார்கள். “வீ ஆர் வொர்ரிட் மிஸ்டர் ஆதி. வந்த சில நாளில் இப்படி ஒரு சம்பவம். நாங்க வீட்டுக்குப் போகலாம்ன்னு இருக்கோம்” என்றார் சந்தான பாண்டியன். எழில்மாறனும், புரபசரும் ஒத்து ஊதினர்.

“ஏன் கிளம்பணும்? இப்ப என்னாச்சி?” ஹரி கேட்டான்.

“என்னாச்சா? என்னை நம்பி என் மகன் அவன் ப்ரெண்ட் ஆனந்தனை அனுப்பினான். நேத்து இரவு வந்தவன் இன்று அதிகாலை கொல்லப் பட்டிருக்கான்னா என்ன மோட்டிவ்? கொலையாளி இதுக்குன்னே இங்கு வந்து காத்துக்கிட்டு இருந்தானா? என் மகனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? நல்லவேளை என் மகனும், மருமகளும் வந்துட்டு உடனே கிளம்பிப் போயிட்டாங்க அவங்க குழந்தையை மாமியார் கிட்ட விட்டுட்டு வந்ததால. இனி இங்க வராதன்னு சொல்லணும். நாங்க தான் மாட்டிக்கிட்டோம்னா, அவங்களுமா?”

“உங்க மகனும் மருமகளும் வீட்டிலிருந்து கிளம்பிட்டதா எங்களுக்குச் செய்தி வந்திருக்கு, உங்களுக்கு இன்னும் வரலையாக்கும்? ஆனந்தன் கொலைன்னு உங்களுக்கு யாரு சொன்னது? அது மாஸிவ் ஹார்ட் அட்டாக்காய் கூட இருக்கலாம். அதிகாலை வாக்கிங் போயிருக்கார் மிஸ்டர் ஆனந்தன். அப்போது அவருக்கு சடன் ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. சட்டென அங்கு இருந்த மரத்தைப் பிடித்து அமர்ந்திருக்கிறார். மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் அவர் முகத்தைப் பதம் பார்த்திருக்கு… இப்படியும் இருக்கலாம் இல்லையா? அது கொலைன்னு நீங்களா முடிவு பண்ணிக்கக் கூடாது!” என்றான் ஹரி.




“முப்பத்தி நாலு வயசுப் பையனுக்கு ஹார்ட்-அட்டாக்கா? இதைச் சொல்ல நீங்க யாரு சார், டாக்டரா?”

“நானா? நானும் உங்களை மாதிரி இங்கு தங்க வந்திருப்பவன். நம் ஹாலிடேஸ் இந்த மாதிரி வதந்திகளால் பாதிக்கப்படறதை நான் விரும்பல.”

“இங்குதான் எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்காங்களே! நீங்க எங்க தங்குவீங்க?” கேள்வியைக் கேட்டுத் தாடையைத் தேய்த்தார் எழில்மாறன்.

“ஆறாம் கட்டு! அது இன்னும் திறக்கப் படவே இல்லை இல்லையா? ” ஹரி கண்சிமிட்டினான்.

“ஆறாம் கட்டா? அது… அதில்..” தடுமாறிய சந்தான பாண்டியனிடம், “அதில் நாங்க தான் சார் தங்கப் போறோம்! நான் ஹரி.. இவள் என்னுடைய ‘ணி’.. ஹரிணி!” என்று சொல்லிச் சிரித்தபடி  ஆதியைப் பின் தொடர்ந்தான் ஹரி.

முகம் மாறிய சந்தான பாண்டியன் சற்றுத் தள்ளி நின்று யாருக்கோ போன் செய்தார். அத்தனை நிகழ்வையும் ஓரத்தில் நின்று புரபசர் ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தார்.

போன ஹரி சற்றுப் பின்னால் வந்து திரும்பி வந்தான். 

“ஒன் மோர் நியூஸ். ஆனந்தன் மரணம் இயற்கையோ, கொலையோ போலீஸின் பார்வை வட்டத்தில் நாம் இருப்பதால் இங்கிருந்து அவர்கள் சொன்னால் மட்டுமே செல்ல முடியும்.  இப்போதைக்கு வீட்டுக்கு செல்லணும்ங்கறதை மறந்துடுங்க!” 

சென்று விட்டான்.

“சே! எந்த நேரத்தில கிளம்பினோமோ? இப்படி மாட்டிக்கிட்டோமேடா!” எழில்மாறன் அருகில் வந்த வின்செண்ட்டிடம் முணுமுணுத்தார்.

தலைக்குக் குளித்து முடியைக் காய வைத்தபடி வந்த ஸ்வேதா, காயத்ரியிடம் “என்ன அத்தை! ஏன் எல்லோரும் வெளியே நிற்கறாங்க?” என்று கேட்டாள்.

“புதுசா இன்னும் இரண்டு பேர் தங்க வந்திருக்காங்க ஸ்வேதா. அதுக்கான வரவேற்பாய் இருக்கும்!”

அவர்களுக்குத் தெரியவில்லை ஒரு மரணம் நடந்திருப்பது.. ஆதியும் சொல்லவில்லை.

******




ஆறாம்கட்டுக்குச் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள் ஹரியும், ஹரிணியும். அவர்களுடன் ஆதியும், முத்துவேலும்.

“சரி, சொல்லுங்க ஆதி. இங்கு இருப்பது மொத்தம் ஆறு கட்டுகள். எதில் எதில் யாரார் இருக்காங்க?”

“ம்ம்… முதல் கட்டில் டைரக்டர் எழில்மாறன் வின்செண்டுடன் இருக்கார். !*

“ஓகே!”

“இரண்டாவதில் சந்தானபாண்டியன் சார் அவர் மனைவி முத்து மீனாட்சியுடன் இருக்கார். அங்குதான் ஆனந்தனும் தங்கி இருந்தது”

“ஓ.கே! ஒரு கட்டு என்பது எத்தனை அறைகள் கொண்டது?”

“நடுவில் ஹாலும் அதைச் சுற்றிப் பதினாறு அறைகளும் கொண்டது ஒரு கட்டு”

“ஓஹோ… விஸ்தாரமா கட்டி இருக்காங்க! ஒவ்வொரு கட்டும் இதே மாடல் தானா?”

“ஆமா, இந்த அறுங்கோண அமைப்பின் நடுவே தர்பார் மண்டபம், சமையல் கூடம் சாப்பாட்டுக் கூடம்!”

“ஃபண்டாஸ்டிக்! மேலே சொல்லுங்க! மற்ற கட்டுகளில்?”

“மூன்றாம் கட்டில்தான் நான் இருக்கிறேன். என் மனைவி ஸ்வேதா, என் அம்மா காயத்ரி என்னுடன் இருக்காங்க.”

“வெல்! நான்கில் அந்த பாட்டனி ஸ்டூடண்ட்ஸ். வெளியில் போயிருக்காங்க. தென் ..ஐந்தில்?”

“ஐந்தில்… வாசலில் பார்த்தோமே ஒரு தொளதொள ஜிப்பாவும், மூக்குக் கண்ணாடியுமாய் ஒருவர் –  அவர் புரபசர் ராமாமிர்தம், சரித்திர ஆராய்ச்சியாளர் – அவர் இருக்கிறார்.”

“ஆறைத் திறக்க நாங்கள் வந்தாச்சு. குட்! உள்ளிருந்து அனைவர் அறையையும் இணைக்கும் மையப் புள்ளியாக சமையல் மற்றும் சாப்பாட்டுக் கூடங்கள் இருக்கிறதோ?”

“ஆமா.. அனைவர் கட்டுக்கும் முன்வாசல் வெளிப்புறம்ன்னா உள்சென்று முடியும் கதவு சமையல் சாப்பாடுக் கூடம் தான்.”

“தவிர மலைப் பகுதி என்பதால் சுற்றியும் சுவற்றை உசத்திக் கட்டி இருக்கீங்க. வெளியாள்… அதாவது மலைப்பகுதி ஜனங்க சட்டுன்னு உள்ள வர முடியாத அளவுக்கு” ஹரிணி தன் பங்குக்குப் பேசினாள்.

“ம்ம்.. இதெல்லாம் பக்காவா ப்ளான் பண்ணிக் ரீமாடல் செஞ்சது மேடம்! காற்று மட்டும் தான் எங்களைக் கேட்காம உள்ள வர முடியும்!” என்ற ஆதித்யராம் “முத்துவேல்! இந்தா சாவி! போய் ஆறாம் கட்டின் கதவைத் திற!” என்று கட்டளையிட்டான்.

“ஐயா! ரெண்டு நிமிஷங்கய்யா! எத்தினி நாளுக்கப்புறம் திறக்கற கதவு? ஒரு சின்ன பூஜை பண்ணிட்டுத் திறப்போம் ஐயா!”

கதவுக்கு முன் ஒரு மண்வெட்டியால் கீறி அதன் மேல் கைக்குள் பொதிந்து வைத்திருந்த இரண்டு எலுமிச்சம் பழங்களை வைத்து ஏதோ முணுமுணுத்தான். பின் அதை வெட்டிக் குங்குமம் அப்பி நாலா திசைகளிலும் விட்டெறிந்தவன் கதவிலும் குங்குமத்தை அப்பி விட்டான்.  

“ஜெய் மா காளி! ” என்று கதவின் பூட்டுக்கு ஆதி தந்த பாட்டில் எண்ணெயை விட்டவன்.. சாவியை இரண்டு மூன்று முறை அழுத்தி உள்ளே சுழட்ட, க்ளிக் என்ற சத்தத்தோடு திறந்து கொண்டது கதவு.

உள்ளே… தரையில்… 

வரிவரியாய் ரத்தக் கோடுகள்!

ஆவிக்கும் எடுக்குமோ தாகம்?




What’s your Reaction?
+1
10
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!