Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-6

6

காய்ந்த சருகுகள் கனத்த உருவம் ஒன்றால் மிதிபடும் ஓசை மிக அருகில் நாராசமாய்க் காதில் விழ, பயந்து போன கோதை கிருபாவின் பரந்த முதுகின் பின்னே பதுங்கியபடி ஓசை வந்த திசை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினாள். உள்ளூர அச்சம் நெருடினாலும் வெளிக்காட்டாது கிருபாவும் தன் பார்வையைக் கூர்மையாக்க… எதிரே வந்து நின்றது‌… 

ஒரு கம்பீரமான  மலைமாடு.

அதன் கூர்நோக்கும் சிலிர்த்து நிற்கும் திமிலும் எப்பேர்ப்பட்ட தைரியசாலிகளையும் அச்சப்பட வைக்கும் அதன் ஹூங்காரமும் கிருபாவையும் கோதையையும் நடுநடுங்க வைத்தது.

“க்ருபா! இத்தனாம் பெரிய மாடு நம்மள ஃபாலோ பண்ணிகிட்டு வந்திருக்கு பாரேன். ஐயோ! எத்தனை கூர்மையான கொம்பு! இது கிட்ட இருந்து  நாம எப்படி தப்பிக்கறது‌? வழிமறிச்சு நிக்குதே… இதத் தாண்டி நாம ரிஸார்ட்டுக்கு உயிரோட  போய்ச் சேருவோமா?”  பீதியில் குழறினாள் கோதை.

“அச்சப்படாதீங்க தாயி!” – பின்னாலிருந்து குரல் கேட்க, திரும்பிப் பார்த்தார்கள். அங்கே தலையில் சும்மாடு கூட்டி ஒரு பெரிய பலாப்பழத்தைச் சுமந்து கொண்டு, தோளில் மூலிகைப் பச்சிலைகள் நிரம்பிய ஒரு மூங்கில் கூடையை கயிறு கட்டித் தொங்க விட்டுக் கொண்டு காட்சியளித்தது சாட்சாத் எழில்மாறனுக்கு வழிகாட்டி உதவிய முத்துவேலுதான். பெருத்த, கறுத்த உருவமென்றாலும் அவன் சிரித்த முகம் க்ருபாவுக்கும், கோதைக்கும் கொஞ்சம் ஆறுதலைத் தந்தது.

“இது இங்கனயே இருக்கற மலைமாடு கண்ணுகளா! செம்மண்ணு நிறத்துல இருக்குறதால செங்காளின்னு கூப்புடுவோம்.. நல்ல மனசுக்காரங்களுக்கு இவனால ஒரு கெடுதியும் வராது. இதே கெட்ட புத்தியோட யாராச்சும் மலையேறினா அம்புட்டுதேன். அவுகவுக செஞ்ச தப்புக்கு தக்கன தண்டனையக் குடுத்துருவான்.ஏதோ அமானுஷ்ய சக்தி உத்தரவுப்படிதான் செங்காளி நடந்துக்கறதா இந்த மலை சனங்க நம்பறாங்க. நீங்க அச்சப்படாத போங்க. உங்களை எதுவும் செய்ய மாட்டான் செங்காளி. அதோட பார்வையைப் பாத்தீகளா! எம்புட்டு கரிசனமா பாக்குது உங்கள!” முத்து ஒரு லெக்சர் அடித்து நிறுத்தினான்.

“அட ஆமாம்ல! நம்மள எப்படி அஃபெக்ஷனாப் பாக்குது!” – உற்சாகமான இருவரும் செங்காளைக்கு ஃப்ளையிங் கிஸ்களை அன்போடு பறக்க விட, இவர்களின் அன்பு முத்தங்களை ஏற்றுக் கொள்வது போல அதுவும் தலையை ஆட்டியது.  

முத்துவேலுக்கு நன்றி சொல்லிக் கிளம்பியவர்கள் “இந்தக் காலத்தில்கூட அமானுஷ்யம், பழி வாங்கறது இப்படியெல்லாம் நடக்குமா? சினிமாலதான் பாத்திருக்கோம்” என்றெல்லாம் தங்களுக்குள் விவாதித்தபடியே அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 

******

பனையோலைக் கூடையில் பூக்களை நிறைத்து எடுத்து வந்த மீனாவிடம் எரிந்து விழுந்தார் சந்தானபாண்டியன். “நாம் என்ன இப்ப ஆன்மீகச் சுற்றுலாவா வந்திருக்கோம்? உன்னோட பூஜை புனஸ்காரம் இதையெல்லாம் வீட்லயே விட்டுட்டு வான்னு எத்தனை தடவ சொல்றது? உங்கிட்ட எனக்குப் புடிக்காத விஷயம் இதுதான். எங்கெங்க எப்படியெப்படி நடந்துக்கணும்னு இன்னும் உனக்குத் தெரியல!” மனைவியிடம் பேசினாலும் அவர் மனதில் “மணி எங்கே போயிருப்பான்… அவன் மொபைலும் ஸ்விட்ச்ட் ஆஃப். ஒரே குழப்பமாக இருக்கு. இதுல இவ வேற இடம், பொருள், ஏவல்னு எதுவும் பொருட்படுத்தாம பூப்பறிக்க போய் என்னை டென்ஷன்படுத்திகிட்டு இருக்கா” என்று எண்ணங்கள் நிறைந்திருந்தன. அவருக்கு மணியின் மீதிருந்த கவலையும், கவனமும் கொஞ்சமும் குறையவில்லை. 

பெண்கள் விஷயத்தில் சந்தான பாண்டியன் கொஞ்சம்… கொஞ்சமென்ன ரொம்பவே  அப்படி இப்படித்தான். ஆனால் உள்ளூரில்‌ அவர் இமேஜ் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதில் கில்லாடி. அவருடைய உறவு, நட்பு வட்டங்களில் யாரை வேண்டுமானலும் கேட்டுப் பாருங்கள். சந்தானபாண்டியனைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று பாராட்டுவார்கள். அத்தனை ஏன்? அவருடைய சரிபாதியான முத்துமீனாவுக்கோ அவரது மகனுக்கோ சந்தானபாண்டியனின் மறுபக்கத்தைப் பற்றிய உண்மைகள் தெரியாதவாறு படுகவனமாக இருந்தார். 

ஆனால்… 

மணிக்கு அவரைப் பற்றிய அத்தனை ரகசியங்களும் தெரியும். வெளிப்பார்வைக்குத்தான் அவன் டிரைவர், ஆனால் சந்தான பாண்டியனுடைய நிழல் விஷயங்களுக்கு  சாட்சி…. சந்தான பாண்டியனின் மனசாட்சிக்குப் பிறகு மணிதான்.  

அப்படிப்பட்டவன் என்னவானான்‌, எங்கே போனான் என்ற டென்ஷனில் பி.பி ஏகத்துக்கும் எகிறிப் போக, மனைவியிடம் அத்தனை கோபத்தையும் இறக்கினார். 




*****

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆதித்யா கட்டளையிட்டதன் பேரில் அவரும் மணியும் இந்த அரண்மனையைப் பார்த்து விட்டு மலை இறங்குகையில், மலைச்சரிவில் கந்தர்வக்கன்னியைப் போன்ற ஒரு பேரழகியைக் கண்டு சித்தம் கலங்கிப் போனார்.

“மணி! காரை நிறுத்துடா” என்று கத்த, கிறீச்சென்ற சத்தத்துடன் கார் நின்றது.  காரை விட்டிறங்கி அந்தப் பெண் நின்றிருந்த திசையை நோக்க அங்கே அவளைக் காணவில்லை. அவளுக்குப் பதில் புள்ளிமானொன்று புல் மேய்ந்து கொண்டிருந்தது. சந்தானபாண்டியனின் முகம் ஏமாற்றத்தில் சுருங்க…

“வண்டிய அரண்மனைக்கே திருப்பட்டுங்களா ஐயா” என்றான் மணி பவ்யமாக. எஜமானின் உள்ளும் புறமும் அறிந்த அணுக்கத் தொண்டனாயிற்றே!

அவருக்கும் அந்த யோசனை உதிக்காமல் இல்லை. ஆனால் ஆதித்யா உடனே கிளம்பி வரும்படி மெஸேஜ் அனுப்பி விட்டானே…. போகவில்லை என்றால் துளைத்தெடுத்து விடுவான்.

“இல்ல மணி. நாளைக்குக் காலைல முக்கியமான மீட்டிங் இருக்குனு ஆதி மெஸேஜ் அனுப்பி இருக்கான். பெரியவரைக் கூட சமாளிச்சிடலாம்‌. அதென்னவோ இந்த அரண்மனை  ப்ராஜக்ட் ஆரம்பிச்சதில் இருந்தே ஆதியோட நடவடிக்கைகள் புரிபடவே மாட்டேங்குது. எப்ப அம்பியா இருக்கான்… எப்ப அன்னியனா மாறுவான்னு சொல்லவே முடியல.”

“நீங்கதான் ரிடையர் ஆகப் போறீங்களே! அப்புறம் எதுக்குங்க அவுங்களுக்கு பயந்துகிட்டு?”




“எனக்கு வர வேண்டிய தொகை எல்லாம் எந்த வில்லங்கமும் இல்லாம வந்து சேரணும். அதுவரை அவங்க தயவு வேண்டி இருக்கே… பாப்போம்… எனக்கென்னவோ இந்த ஆதித்யா கிட்ட தொடர்ந்து வேலை செய்ய முடியும் னு தோணல.”

“ஆமாங்கையா… நானுமே வேலையை விட்டுடறதாதான் இருக்கேன். சின்னவரோட தடாலடி போக்கு எனக்கெல்லாம் சரிப்பட்டு வராதுங்கையா. உங்களுக்காகத்தான் வேலைக்கே வர்றேன்” என்ற மணியைப் பாசத்தோடு பார்த்தார்.

“அவசரப்படாத மணி. வேற  நல்ல வேலை கிடக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு.”

“இல்லைங்க ஐயா,  சொந்தமா கார் வாங்கணும்கிறது என்னோட வாழ்நாள் லட்சியம். அதுக்கான நாள் நெருங்கிடுச்சுன்னு நம்பறேன்.”

“வெரி குட். இப்படித்தான் இருக்கணும். ம்ம்… அந்தப் பொண்ணு எப்படி அவ்வளவு சீக்கிரம் மறைஞ்சு போயிருப்பா. மின்னல் மாதிரி கண்ணுல பட்டு மறஞ்சிட்டாளே” மோவாயைச் சொறிந்து கொண்டு ஆதங்கப்பட்டவரைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட மணி, “அது மலைசாதிப் பொண்ணுங்க முதலாளி‌. மூலிகைக் காத்தும் தேனும் தினைமாவும் – முகத்துலயும் உடம்புலயும் திகுதிகுன்னு அப்படி ஒரு வனப்புக் கொடுத்திருக்கு. எங்க போயிடப் போறா… அடுத்த வாட்டி வரும்போது கவனிச்சிடலாமுங்க” என்று ஆறுதலளித்தான்.

சந்தானபாண்டியன் தரும் கணிசமான அன்பளிப்புத் தொகையில் வீடு கட்டி முடித்து விட்டான். அடுத்து சொந்தமாக ஒரு கார் வாங்கி விட வேண்டுமென்ற உள்நோக்கத்தில் இருந்தான். அதற்காக அவன் போட்ட ஒரு திட்டம்தான், கூடிய சீக்கிரம் சந்தான பாண்டியனுக்குப் பிடித்தமான  பெண்ணை அவருக்கு அர்ப்பணித்து, அதற்கு காணிக்கையாக ஒரு பெரும் தொகையை அவரிடமிருந்து கறந்து விட  வேண்டுமென்பது. அதற்கான வாய்ப்பை ஆதித்யாவே ஏற்படுத்திக் கொடுத்து விட்டது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையானது. 

***** 

படு குஷியாகக் கிளம்பிய இருவருமே மீனா உடன்வருவாள் என்ற ஒரு திருப்பத்தை எதிபார்த்திருக்க மாட்டார்கள். உண்மையில் சந்தானபாண்டியனுக்கு மனைவியை இங்கு அழைத்து வர விருப்பமில்லைதான். என்ன செய்வது… சஷ்டியப்த பூர்த்திக்கு கம்பெனியின் அன்பளிப்பு என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள். அப்பாவி மனைவியை ஏமாற்றிவிடுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் மகனும், மருமகளும் வருவது போதாதென்று… கட்டுச் சோற்றில் பெருச்சாளியை கட்டி வந்த கதையாகக் கூடவே யாரோ ஆனந்தனாம், அவன் வேறு. இத்தனைபேரை வைத்துக் கொண்டு அந்த வனதேவதையை தேடிக் கண்டுபிடிப்பதென்ன சாதாரண விஷயமா? மனசுக்குள் எரிமலை ஒன்று கொந்தளித்துக் கொண்டிருக்க, முகமும் தகதகவெனக் கனன்று கொண்டிருந்தது.

பாவம் முத்துமீனா… கணவனின் கோபத்துக்கு காரணம் புரியாமல்‌, கொண்டு வந்த பூக்கூடையை ட்ரஸ்ஸிங் டேபிளின் மேல் வைத்துவிட்டுக் கையோடு கொண்டு வந்திருந்த சிறிய ஸ்வாமி சிலைகளைப் பெட்டியிலிருந்து எடுத்து டேபிளின் மேல் வைத்துப் பூக்களால் அலங்கரிக்கத் துவங்கினாள்‌.

“ஏய் மீனா! நாம இங்க நம்ம ஹாலிடேஸை என்ஜாய் பண்ண வந்திருக்கோம்கறதே உனக்கு மறந்து போச்சா? சீக்கிரமா ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சிட்டு, மலைக்காட்டுக்குள்ள ஒரு ரவுண்டு அடிச்சிட்டு, .ஃப்ரஷ்ஷா மூலிகைக் காத்தை  நுரையீரல் முழுக்க நிரப்பிட்டு வரலாம்னு பாத்தா… திரும்பப் பூஜையை ஆரம்பிக்கிற! இத்தனை நேரமாகத் தொண்டைத் தண்ணி வத்தக் கத்தற என்னை என்ன லூஸுன்னு நினைச்சிட்டியா?” – உரக்கக் கத்தினார் சந்தானபாண்டியன்.

“அஞ்சே நிமிஷம்… நீங்க குளிச்சு ரெடியாகறதுக்குள்ள தீபாராதனை காமிச்சுட்டா நானும் ரெடிதான்.” – கணவனிடம் கெ(கொ)ஞ்சலாக பதிலளித்துவிட்டு மீனா திரும்புவதற்குள் பூக்கூடையிலிருந்து ஒரு பூநாகம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இறங்கி ட்ரஸ்ஸிங் டேபிளின் அடியில் தன்னை மறைத்துக் கொண்டது.

“மகனும் மருமகளும் வர்றதுக்குள்ள அந்த ஆனந்தன் வந்துடுவானாம். நம்ம கெஸ்ட்டா அவனைக் கவனிச்சுக்கணுமாம். இந்த சிங்கிள் பெட்ரூமை அவனுக்கு அலாட் பண்ணிடலாம். இதுலயும் சகல வசதிகளும் இருக்கே”  என்று அந்த சிங்கிள் பெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே தன் பார்வையைச் சுழலவிட்ட ச.பாண்டியனின் பார்வையில் படாமல் சுவரோரமாக அந்த அறையினுள் புகுந்தது பூநாகம்.




*****

அரைமணி நேரத்தில் அரண்மனையிலிருந்து கிளம்பினார்கள் மீனாவும் சந்தனபாண்டியனும்.  மஞ்சள் பூக்களின் வசீகரிக்கும் அழகில் மீனா தன்னை முற்றிலும் தொலைக்க… சந்தனபாண்டியனின் அலைபாயும் கண்கள் அந்த வனதேவதையைத் தேடிக் கொண்டிருந்தது. 

மனமோ மணி… மணி என்று அரற்றிக் கொண்டிருந்தது.

ஆமாம்… மணி எங்கேதான் போனான்..?

***** 

தண்ணீர் கொண்டு வரச் சுனையருகில் போன மணியை யாரோ பின்னாலிருந்து தள்ளி விட… தடாலென்று குப்புற விழுந்த மணியின் தலை அங்கிருந்த பெரிய பாறாங்கல்லில் மோதியது.  இரத்தம் வெள்ளமாகப் பெருக்கெடுக்க அப்படியே மயங்கி விழுந்தான்.

அரண்மனையைப் பற்றிய அமானுஷ்ய விஷயங்களை ஆதி நம்பாவிட்டாலும், எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு  நால்வர் குழுவை சந்தான பாண்டியன் அறியாமல் அவரைத் தொடர்ந்து கவனிக்க அனுப்பி வைத்த அதே டீம்தான் மணியையும் தேடி அலைந்து, மயங்கிக் கிடந்த மணியைக் கண்டுபிடித்து, சென்னையின் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளது. உயர்தரச் சிகிச்சையளித்தும் இன்னும் கண் திறக்காமல் மணி கோமாவில் கிடந்தான்.  

மணியைப் பற்றிய விவரம் சந்தான பாண்டியன்,  மீனாவுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் ஆதி உறுதியாக இருந்தான். மீனா மூலமாக அந்த விஷயம் ஸ்வேதா காதுகளில் விழுந்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். 

மணி தானாக விழுந்து அடிபட்டுக் கொண்ட விஷயத்தை அமானுஷ்யம், சாபம், அது, இதுவெனக் கண், காது, மூக்கு வைத்து ஊதிப் பெரிதாக்கி விடுவார்கள் என்பது ஆதியின் கணிப்பு‌.. 

ஆனால் அவன் கணிப்பு தவறானது என அவனுக்குத் தெரிய வரும்போது என்னவாகும் அவன் நிலைப்பாடு…?




What’s your Reaction?
+1
4
+1
10
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!