Serial Stories

மஞ்சள்காடு-5

05

சந்தான பாண்டியனை மொபைலின் ஒலி கிணுகிணுத்து எழுப்பியது. நல்ல உறக்கம். அடித்துப் போட்டாற் போல் தூங்கியவரை நமநமவென விடாது எழுப்பிய மொபைலை எரிச்சலுடன் பார்க்க, மகனின் அழைப்பு.

“என்னடா? காலையிலே கூப்பிட்டிருக்கே?”

“அப்பா! துர்காவும் கூட வரேன்னு அடம் பிடிக்கிறாப்பா.”

“………”

“அப்பா! லைன்ல இருக்கிறிங்களா…”

“ம்…ம்”

“நீங்க அந்தக் கோப்புலே அவளுடைய கையெழுத்தும் வேணும்னு சொன்னீங்களா… அதான் அம்மா வீட்டுக்கு போயிட்டாளே! அவள் வீட்டுக்குப் போக வேண்டியதாச்சு. அவளும் வரேங்கிறா. குழந்தையை அம்மா வீட்டுலே விட்டுட்டு வரேங்கிறா. “

“சரி! சரி! அழைச்சிட்டு வாயேன்.”

“தேங்க்ஸ்ப்பா…! அத்தோடு இன்னொரு விஷயம்ப்பா. என் ஃப்ரெண்டு ஒருந்தன் ஆனந்தன்னு… அவனுக்கு இந்தப் பழையகால அரண்மனை மீதெல்லாம் பிடிப்பு அதிகம். தற்செயலா மீட் பண்ணப்போ உங்களை விசாரிச்சான். அவனிடம் இந்த அரண்மனை ரிசார்ட்டை பத்தி சொல்லவும் ரொம்பவும் இம்ப்ரெஸ் ஆகிட்டான். நானும் அவனுமாத் தான் வரலாம்னு ப்ளான். ஆனா… இப்போ துர்கா வரதுனாலே அவன் தனியே அங்கே வரான்ப்பா. அவனுடைய போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்பிருக்கேன். எனக்கு முன்னே வந்திட்டா அவனை ரிஸீவ் பண்ணிக்கிடுங்கப்பா.”

சந்தான பாண்டியன் “உம்” கொட்டிவிட்டு மேலும் சிலபல விஷயம் பேசிவிட்டு வைத்தார். 

அப்போதுதான் முத்து மீனாக்ஷி கண்ணில் படவில்லை என்பது உறைத்தது. 

மணி எட்டாகியிருந்தது. எங்கே போனாள்.? ஒருவேளை பாத்ரூமிலிருப்பாளோ… அங்குமில்லை. 

அந்த அறை விசாலமானது. பக்கவாட்டில் சிறிய மரத்தடுப்பு உடை மாற்றக் கொள்ள! முன்னால் சிறு திவானுடன் கூடிய வரவேற்பறை போல அமைப்பு. அதையடுத்தே படுக்கை வசதியுடன் கூடிய அறை.  அறைக்குத் தோதாக பெரிய மஞ்சம். சற்றே அமர்ந்து ஆசுவாசம் கொள்ள சோபா.  பூங்குவளை ஏந்திய டீபாய். சுவரையொட்டிய வார்ட்ரோப். மூன்று கண்ணாடி பதித்த டிரஸ்ஸிங் டேபிள்.  சிறு சாண்டலியர்.  கண்ணை உறுத்தாத ஒளிதரும் அறை விதானத்தில் பதித்திருந்த விளக்குகள். ‘ரூம்ம்’ என ரீங்காரமிழைக்கும் ஏ.சி. இப்படிப் பழமையும் புதுமையுமாயிருந்தது அறை.

அறையை விட்டு வெளியே வந்தார். நீண்ட காரிடார். பழங்கால கூம்புவடிவ அலங்காரத்தோடு கூடிய எதிர்ச் சுவர். வண்ணப்பூச்சோடும் காற்றிலாடும்  தொட்டிச் செடிகளோடும் கண்ணுக்கு குளுமை தந்தது. 

எங்கேதான் போனாள் இவள்?

வரும்போது வண்டியை விட்டு இறங்கிய மணி இதுவரை வந்து சேரவில்லை. வழிதவறிப் போய்விட்டானா? யாரிடம் உதவி கேட்பதென்றும் புரியவில்லை. காலங்கார்த்தால இவளை வேறு காணோம். ச்சே!

சீருடை அணிந்த பணியாள் ட்ரே ஒன்றைத் தள்ளியபடி வந்தான். சிறு ப்ளாஸ்க்கும் சிறுசிறு குப்பிகளிரண்டும் நான்கு கப் அண்ட் சாசருமாய் இருந்ததை  அவருடைய அறையில் வைக்க அனுமதி வேண்டினான். அவரும் நகர்ந்து கொள்ள வரவேற்பறையின் சிறு மேஜை மீது வைத்துவிட்டு பணிவோடு நகர்ந்தான். 

“தம்பீ! இது? “

“காபி ஸார். பால் சுகர் எல்லாமே தனித்தனியாயிருக்கு வேறேதும் தேவைன்னா இன்டர்காம்மில் கூப்பிடுங்க. ப்ரேக் பாஸ்ட் ஒன்பது மணி முதல் பத்தரை வரை ஸார். டைனிங்ஹாலும் வரலாம். ரூம்ல சர்வீஸ் பண்றதனாலும் செய்வோம்.”

“ஓ… தேங்க் யூப்பா”

சந்தான பாண்டியன் தலையசைக்க, அவன் சென்றுவிட, அவர் கொதிநிலையை கடக்கத் துவங்குமுன்னே அவர்மனைவி யாருடனோ பேசியபடியே வருவது தெரிந்தது. கையில் – எங்கிருந்து கிடைத்ததோ – ஒரு பனையோலைக்கூடை. அது நிறைய அப்போதுதான் பறித்த புத்தம் புது பூக்கள்…

‘ஆரம்பிச்சுட்டா போலேயே, பூஜை புனஸ்காரத்தை!’




பொய்யான சலிப்பும் அலுப்புமாய் பார்த்துக் கொண்டே நிற்க கையிலிருந்த மொபைல் நோட்டிபிகேஷனை பார்க்கச் சொன்னது. வாட்ஸ்அப்பில் ஒரு இளைஞனின் புகைப்படம் வந்து கண்ணைச் சிமிட்டியது. ஆனந்தன் என்ற பேருடன். 

அதேநேரம் ….

ஆனந்தன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.

“ஆமாம் ஸார். ரிசார்ட்டுக்குத்தான் புறப்படறேன். அங்கே போய்த் தங்க பக்காவா ஏற்பாடு பண்ணிட்டேன்.”

“…………”

“சந்தானபாண்டியனுடைய மகன் என்னுடைய காலேஜ்மேட்.  அவனோடு தங்கறதா ப்ளான். அவன் அங்கே அவனுடைய அப்பாவைப் பார்க்க போறான். நானும் போறேன் கூடவே. நீங்க ரிசார்ட் பற்றிக் கேட்ட அத்தனை தகவலையும் வீடியோவோடு அனுப்பிடுறேன். அப்டேட் பண்ணிட்டே இருப்பேன் ஸார். ம்…ஓக்கே ஸார்.”

“……..”

“தேங்க் யூ… தேங்க் யூ ஸார். ஆதித்யாவும் இப்போ இங்கேதான் வரப்போவதாக ந்யூஸ் கிடைச்சிருக்கு. அதையும் கவனிச்சு உங்களுக்கு செய்தி தரேன். ஓகே ஸார்.”

ஆனந்தன் ஒரு வன்மம் நிறைந்த புன்னகையோடு தன் ட்ராலியை இழுத்துக் கொண்டு வெளியே வந்து தான் புக் செய்த ஊபர் கேப் க்காக காத்திருந்தான். 

*****

“ச்சே! இதுக்குத்தான் நீங்கள்ளாம் வரவேண்டாமின்னு சொல்றது! கேட்டாத்தானே…”

“இப்போ என்னடா! நாங்க வரலைன்னா நீ  என்ன பயில்வான் மாதிரி மரத்தை ஒரே விரலில் தூக்கி அந்தண்டை போட்டுடுவியோ?”

“ம்மா! இரிட்டேட் பண்ணாதிங்க!”

“நீதாண்டா ரொம்ப பண்றே. சுட்ட கத்திரிக்கா மாதிரி மூஞ்சிய வச்சுகிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்றப்போதே நினைச்சேன்.”

“அத்தை! விடுங்க அத்தை. அவரே டென்ஷன்லயிருக்கார்” என்று இடைமறித்தாள் ஸ்வேதா.

பானெட் மீது சாய்ந்து நின்று மொபைலில் எதையோ நோண்டினான்.

“ச்சே! சிக்னல் வேற இல்லை”

அம்மாவும் கீழே இறங்கி சுற்றிலும் பார்வையை ஓட்டினார். ஜல்ஜல் சத்தம் அருகிலெங்கோ கேட்டது.

“ஆதி… யாரோ வராங்க. வேற வழியிருக்கான்னு கேட்போம். வழியில்லாம போகாது.”

வண்டிப்பாதையில்லாது சரிவுப் பாதையில் மரங்களுக்கிடையே ஒரு சிறுமி நடப்பது தெரிந்தது. கூடவே சன்னத்தொனியில் பாட்டிசையும் கேட்டது

பாட்டோடு பிறந்து 

பாட்டோடு வளர்ந்து 

பாட்டிலே முடிகின்ற பிறவியிது….

கட்டை எதுவானாலும்

காட்டைத்தான் சேரும்

கடவுள்  விதித்த விதியிது!

பாட்டு அண்மையில் கேட்க…

“அம்மாடீ… பாப்பா… பாப்பா… உன்னைத்தான் “

ஆதி அம்மா காயத்ரி உரக்கக் கூப்பிட்டாள். 

அந்தச் சிறுமி திரும்பிப் பார்த்துவிட்டு வேக எட்டு வைத்து சரசரவென வந்தாள்.

காயத்ரிவுக்கே அவள் சரிவிலிறங்கிய வேகம் வயிற்றைக் கலக்கியது. தலையில் சுள்ளிக்கட்டைச்  சுமை வேறு.

“என்னங்க… கூப்பிட்டிங்க?”

பச்சைநிற பாவாடைச் சட்டை. அரக்குநிற பார்டர். தலையிலிருந்த சும்மாட்டின் நுனிகள் தோள்வழியே  நெஞ்சாங்கூட்டில் சட்டையோடு இணைந்திருந்தது. திருத்தமான முகம். பிறைநெற்றியும் வட்ட திலகமும் காதில் வெள்ளியில் தொங்கட்டானும் வளைகளும் கழுத்தில் சூலவடிவு டாலர் கோர்த்த சங்கிலியும் கழுத்தையொட்டி வெள்ளிமுத்துக்கள் இணைந்த அட்டிகையும் மூக்கில் நத்து போன்ற நாசிகாபரணமும் …எல்லாமே வெள்ளியில்தானிருந்தது. தலைப்பின்னலில் கொத்து மஞ்சள் நிறப்பூவிருந்தது. விழிகளில் கனிவு தேங்கிக் கிடந்தது. வாயேன்… வந்து என் கனிவையும் வாத்சல்யத்தையும் வாங்கிக் கொள்ளேன் என்பது போல ஒரு பொலிவு. பார்க்கும்போதே அவள் வனதேவதையோ என்று தோன்றியது. அத்தனை வனப்பு ஜாஜ்வல்யமாய் ஜ்வலித்தது. 

“பாப்பா…நாங்க அரண்மனைக்குப் போகனும். வேற வழியிருக்கா? “

“ஆ… முந்தாநாள் பெய்த மழையிலே மரம் விழுந்து போயிடுச்சு போல… வேற வழியிருக்கு, சுத்தி போகனும்.”

“உனக்குத் தெரியுமா ஆதி?”

“தெரியாதும்மா. இந்த வழி ஒன்னுதான் தெரியும்.”

“ம்! பாப்பா நீ எங்களோடு வந்து வழி காட்டுறியா? நீ எங்கே போகனுமோ அங்கேயே இறக்கி விட சொல்றேன்.”

“ஹ்ம்… நான் சேரவேண்டிய இடம் தூரம். அரமனை வரைக்கு வரேன். அப்புறம் நான் போய்க்குவேன்.”

“இல்லைடாம்மா! இப்பவே இருட்டுதே, வீட்டுலே தேடுவாங்களே. என் மகன் உன்னை சேரவேண்டிய இடத்திலே சேர்ப்பான்.”

அந்தக் குழந்தை சிரித்தாள். அதில் என்ன தொக்கி நின்றது…. தெரியாது. ஆனால் அது மயக்கியது. 

“இல்லை சுள்ளிக்கட்டு…”

“ஆதி அதை கார்மேலேயோ டிக்கியிலோ வையேன்டா “




ஆதிக்கு எரிச்சல் கண்டது. 

“லட்சலட்சமா போட்டு வாங்கின வண்டியிலே விறகுக் கட்டான்னு யோசிக்கிறார் போல. இதுதான் ராத்திரிக்கு அடுப்பெரிக்க, சோறாக்க எல்லாத்துக்கும். ஒன்னு செய்ங்க வழி சொல்றேன்.  இப்பிடியே வடக்காலே திரும்பி கொஞ்சம் மேக்காலே போனா தெக்குலே ரெண்டு தடம் பிரியும். அதிலே தண்டு பெருத்த கிழமரமொன்னுயிருக்கும்”

“பாப்பா…. இரும்மா …இந்த கிழக்கு மேற்கு எல்லாம் தெரியாதும்மா. நீ வா. உன் விறகுக் கட்டையும் வரும். ஆதி அதை வாங்கு!”

வண்டியிலேறி அந்தச் சிறுமி அமர்ந்தாள். காலில் தண்டை கலீரிட்டது. ஒரு சுகந்தமான வாசம் காருக்குள் பரவியது. 

“உன் பேரென்னம்மா?”

“என் பேரு வனமங்கை.”

“அழகான பேரு. ஆளும் அழகுதான்.”

சிறுமி புன்னகைத்தாள். 

ஸ்வேதாவை குறுகுறுவென்று பார்க்க ஸ்வேதா சங்கடமாய் நெளிந்தாள்.

“என் மருமகள். பேரு ஸ்வேதா. இவன் ஆதித்யா”

“…………”

“இவன்தான் பெரிய கம்பெனில சிஇஓ வா இருக்கான். அரண்மனையை ரிசார்ட் ஆக்கனும்னு  வேலைமேலே வந்தான். நானும் மருமகளும் பிடிவாதம் பண்ணி கூடவே கிளம்பிட்டோம்.”

“ம்மா. பேசாம வாங்களேன் “

“என்னடா இப்போ ….”

“உங்கமகனுக்கு ரொம்ப பேசுவது பிடிக்காதோ “

“அதுசரி…மனுஷாள்கிட்டே பேசாமலிருக்க முடியுமா.  அவனை விடும்மா.  இங்கே ஒரு காளியம்மா கோயிலிருக்காமே …சக்தி வாய்ந்ததாமே. ரொம்ப தூரமா வனமங்கை “

“மலைக்கோயில் அது. சிரமப்பட்டுதான் போகனும். ரணபத்ரகாளி. வரம் தரும் தெய்வம். வேண்டுதலுக்குப் பதில் தருவாள். அதே சமயம் கெடுமதியோட வந்தா துவம்சமும் செய்வாள்.”

“அங்கே என் மருமகள் கையாலே பொங்கல் வச்சு படைச்சு வேண்டுதல் வைக்கனும். அதை அம்மன் நிறைவேற்றித் தரணும்.”

“கண்டிப்பா நிறைவேறும் பெரியம்மா, கவலைப்படாதீங்க.”

“அம்மாடீ… பாலாதிரிபுரசுந்தரி மாதிரி நல்வாக்கு சொன்னே தாயீ… நன்றிம்மா…” காயத்ரிவிற்கு கண்கலங்கியது. 

*****

அரண்மனை  விளக்கு அலங்காரத்தில் ஜெகஜ்ஜோதியாய் தெரிந்தது. 

“இங்கியே நிறுத்திடுங்க. நான் குறுக்காலே ஒத்தையடிப் பாதையிலே நடந்தே வெரசா போயி சேர்ந்திடுவேன் “

“வனமங்கை! இருட்டுலே எப்படிம்மா?”

கலகலவெனச் சிரித்தாள். “இது என் இடம் எனக்கு என்ன பயம். என்னை நெருங்க நினைப்பவன்தான் யோசிக்கனும்”

வண்டி  நகர்ந்து வேகமெடுக்க, பார்த்துக் கொண்டேயிருந்தவள் முகத்தில் புன்சிரிப்பு உறைந்தது. 

அடுத்தகணம் அவள் அங்கேயில்லை.

வீதி யாருமற்ற அனாதையாய் நீண்டுகிடந்தது.




What’s your Reaction?
+1
9
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!