Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-7

(7)

சிந்தனை ஆற்றால் அடித்து செல்லப்பட்டு ஞாபகக் கடலில் கலந்துவிட்ட வீரமணியை அவருடைய கைபேசி அழைத்தது. 

திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தவர் கைபேசியை எடுத்தார். சரவணன். ஊர்காரப் பையன். அவரை சிரத்தை எடுத்துக் கொண்டு இங்கு வந்து சேர்த்துவிட்டுப் போனவன். அவன் அவரை இங்கு அழைத்து வந்து சேர்த்தபோது இங்கிருந்த அனைவரும் அவனை அவருடைய மகன் என்றே நினைத்தனர். பெற்ற தகப்பனை பார்த்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கிறான் என்றே அவனை கேவலமாகப் பார்த்தனர். அவரும் அவன் என் மகன் இல்லை என்று யாரிடமும் சொல்லவில்லை. 

அவரைப் பொறுத்தவரை அவனும் ஒரு மகன் போல்தான். பெற்றால்தான் பிள்ளையா?

“சொல்லுப்பா”

“எப்படியிருக்கீங்கய்யா?” 

“நல்லாயிருக்கேம்ப்பா”

“இடம் பழக்கப்பட்டுப் போச்சா? அங்க இருக்கறவங்களெல்லாம் நல்லா பழகறாங்களா?”

“ம்…எல்லாரும் ஒரே மாதிரி சிந்தனையோடதான் இருக்காங்க. ஒரே மாதிரியான வேதனை. ஊர் நெனப்பாவே இருக்கு. பழசெல்லாம் ஞாபகம் வருது. அது போகட்டும். நீ வீடு நிலம் இதையெல்லாம் விற்க ஏற்பாடு செய்தியா?”

“இன்னும் இல்லைய்யா? ஏன்னா… எனக்கு அதுல உடன்பாடு இல்லை.”

“ஏம்பா”

“ஒரு காலத்துல ஊரோட முக்கால்வாசி சொத்தே உங்க குடும்பத்தோடதா இருந்ததுன்னு பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. “

:  “அதெல்லாம் பழையக் கதைப்பா.”  

“இப்ப இருக்கறது அந்த வீடும், கொஞ்ச நிலமும்தான். அதை வித்துட்டா ஊர்ல நீங்க இருந்த சுவடே இல்லாமப் போயிடும். திடீர்ன்னு உமாபதி ஒரு நாள் ஊருக்கு வந்தான்னா அவனுக்கு அதிர்ச்சியா இருக்காதா?”

அவனுடைய கேள்விக்கு அவர் பதில் சொல்ல வாயெடுத்த அதே சமயம்  மாதவி வந்தாள்.

“அப்பா..”

வீரமணி சரவணனிடம் பிறகு பேசுவதாக கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டு அவள் பக்கம் திரும்பினார்.

“சொல்லும்மா…”

“அப்பா… எல்லாரும் வாக்கிங் போற நேரம் இது. எல்லாரும் போயிட்டாங்க. நீங்க மட்டும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். அதான் வந்தேன்.”

வீரமணி சிரித்தார். “அவங்களெல்லாம் சிட்டியில இருந்தவங்க. வாக்கிங் போறதை ஒரு உடற் பயிற்சியா நினைச்சுப் போறாங்க. கிராமத்துல நாங்க வாழ்க்கையையே உடற்பயிற்ச்சியா மாத்திக்கிட்டவங்க. இப்படி வாங்கிங் போகனும்னு அவசியம் இல்லை.” அவர் சொல்ல மாதவி கலகலவென சிரித்தாள்.

“நீங்க இன்னும் கிராமத்துல இருக்கற மாதிரிதான் நினைச்சுக்கிட்டிருக்கீங்க. கிராமத்துல இருந்த வரைக்கும் எல்லாம் சரிதான். ஆனா… இப்ப நாள் முழுவதும் அறைக்குள்ளேயே அடைஞ்சுக்கிடக்கறிங்க. கொஞ்ச நேரம் வெளியில காலாற நடக்கனும். வாங்க… ரொம்ப தூரம் போக வேண்டாம். பக்கத்துல இருக்கற பார்க்குக்குப் போகலாம். வாங்கப்பா…” வலுக்கட்டாயமாக அவரை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த பூங்காவிற்கு வந்தாள் மாதவி.

கலகலவென பேசி சிர்த்தபடி அவருடன் நடந்தாள். மாதவி அவருக்குள் மறுபடியும் தாக்கத்தை ஏற்படுத்தினாள். ‘என் பெண் குழந்தைகள் சாகமால் இருந்திருந்தால் இந்நேரம் இவள் வயதில்தானே இருப்பார்கள். அப்பா… அப்பா என கவனித்துக் கொள்வார்கள்? அப்பா அப்பா என அன்பாக, அக்கறையாக அழைப்பார்கள்.?’

“என்னப்பா பலத்த சிந்தனை?”

“ஓன்னுமில்லைம்மா…” பூங்காவில் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த பெரும்பான்மையானவர்கள் அங்குதான் நடப்பதும், உட்கார்ந்து பேசி சிரிப்பதும், அங்கே விளையாட வந்த குழந்தைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதுமாக நேரத்தை உற்சாகமாக கழித்துக் கொண்டிருந்தனர்.

“அப்பா…”

“சொல்லும்மா”

“போன்ல யார்க்கிட்ட பேசிக்கிட்டிருந்திங்க? உங்களை இங்க கொண்டுவந்து சேர்த்துட்டுப் போனாரே அவர்க்கிட்டயா?’

“ஆமா…”

“அன்னைக்கு அவரை உங்க மகன்னு சொன்னிங்களே. ஆனா… அவர் உங்க மகன் இல்லைங்கறதும், அவர் உங்க ஊர்க்காரர்ங்கறதும் எனக்கு தெரிஞ்சது. உங்களுக்கு சொந்த புள்ளை இல்லையா?”

அவள் அதிரடியாய் கேட்கவும் அவரால்  எதையாவது சொல்லி சமாளிக்க முடியவில்லை.

“இருக்கான்”




“பொதுவா இங்க இருக்கறவங்களை அவங்களோட புள்ளைங்கதான் கொண்டுவந்து சேர்த்துட்டுப் போவாங்க. உங்க விசயத்துல அது கூட நடக்கலை. ஊர்காரர் ஒருவர் பாவப்பட்டு சேர்த்துட்டு போற அளவுக்கு உங்க புள்ளை உங்களை புறக்கணிச்சுட்டாரா?” தான் கேட்ட இந்த கேள்வியால் அவர் உடைந்துப் போய்விடக் கூடாதென அவருடைய கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.

அவர் எதுவும் பேசாமல் நடந்தார். உள்ளே நிகழும் போராட்டத்தை அவருடைய முகமே காட்டியது.

“நான் இதையெல்லாம் கேட்கறதுக்காக நீங்க வருத்தப்படக் கூடாது. என்னால முடிஞ்ச உதவியை செய்யத்தான் கேட்டேன்”

அவளை அலட்சியமாக பார்த்து சிரித்தார் வீரமணி. “நீ… என்ன உதவி செய்துட முடியும்?” அவருடைய வார்த்தைகளில் ஒருவித இளக்காரம் இருந்தது.

“நான் இங்க சம்பளத்துக்கு வேலைப் பார்க்கறவதான். ஆனா… நான் எல்லாரையும் உரிமையா அம்மா அப்பான்னு கூப்பிடறது வெறும் வார்த்தை இல்லை. அவங்களோட கதையை தெரிஞ்சு வச்சுக்கிட்டா அவங்களுக்கு  பக்க பலமாயிருக்கலாம்கற உணர்வுதான். உங்களுக்கு பிள்ளைகளே  இல்லையா? இல்லை… இருந்து உங்களைப் புறக்கணிச்சுட்டாங்களா?”

வீரமணி சோர்வாக அங்கிருந்த சிமென்ட் பலகையில் அமர்ந்தார். நடந்ததால் ஏற்பட்ட சோர்வல்ல. வாழ்க்கையில் நடந்த விசயங்களால் ஏற்பட்ட சோர்வு.

மாதவியும் அவரருகே அமர்ந்தாள்.

“என்பிள்ளை என்னை என்னைப் புறக்கணிக்கலை. என்னால்… என் குடும்பத்தால்தான் புறக்கணிக்கப் பட்டான். நான்.. பாவி.. பாவி….”சட்டென்று தலையில் அடித்துக் கொண்டு அழத்தொடங்கினார். அதிர்ந்துப் போனாள் மாதவி.

அந்த முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் அனைவரும் என்னதான் பிள்ளைகளின் மேல் பாசம் வைத்திருந்தாலும் ஏதாவது ஒரு நேரத்தில் மனம் உடைந்து பிள்ளைகள் தங்களை அனாதையாக்கியதற்காக அவர்களைப் பற்றி குறை சொல்வார்கள். திட்டி திட்டி தங்களின் ஆற்றாமையை தீர்த்துக் கொள்வர். ஆனால்…தன்னை பிள்ளை புறக்கணிக்கவில்லை, தான்தான் பிள்ளையைப் புறக்கணித்துவிட்டேன் என அழும் அவரை பாவமாகவும், அதிசயமாகவும் பார்த்தாள்.

இதுவரை தான் இப்படி ஒரு மனிதரை சந்திக்காததால் அவரைப்பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள ஆவலாகயிருந்தது,

“நீங்க உங்க புள்ளையை புறக்கணிச்சிங்களா? காதல் பிரச்சனையா? உங்க புள்ளையோட காதலை நீங்க ஏத்துக்கலையா? வீட்டைவிட்டுப் போகச் சொல்லிட்டிங்களா?”

“காதல் பிரச்சனை இல்லை. அவனே பிரச்சனைதான். வீட்டைவிட்டுப் போய்ட்டான்.”

“இப்ப எங்கயிருக்கார்?”

“இருக்கான். எங்கயோ இருக்கான். ஆனா… சந்தோசமா அவன் தன் அம்மாக் கூட இருக்கான். நான் நான்தான் தன்னந்தனியா.. பொண்டாட்டி இல்லாம, புள்ளை இல்லாம இங்க வந்து இப்படிக்கிடக்கேன்….”

உடைந்துவிட்டார். குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினார்.

எத்தனையோ முதியவர்களின் கண்ணீரை துடைத்திருக்கிறாள். ஆனால் இப்பொழுதோ செய்வதறியாது தவித்தாள். 

‘பாவம்… மனைவியையும் பிரிந்திருக்கிறார். பிள்ளையும், மனைவியும் இவரை விட்டுப் போயிருக்கிறார்கள்.

‘இவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ. பெண் பித்துக் கொண்டவரோ? முதியவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எல்லோர் மீதும் பாவப்பட முடிவதில்லை. சில பேருடைய பழைய வாழ்க்கைப் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் பல பக்கங்களில் பல பெண்கள் வந்து போயிருப்பர். அப்படி ஒரு மனிதரோ? அதனால்தான் மனைவியும், பிள்ளையும் பிரிந்துவிட்டனரோ?

கிராமத்தில் பண்ணையார் நிலையில் வாழந்தவர். பணம் காசுக்கு பஞ்சமில்லை என்றாலே மனம் பல பாதைகளிலும் போகத்தானே செய்யும். மது, மாது என சுற்றிவிட்டு கடைசிகாலத்தில் மனைவியின் மடிதேடி வந்து நின்றால் வா என்று சொல்லி வாரி அணைத்துக் கொள்ள  இது ஒன்றும் கண்ணகி காலம் இல்லையே? கழற்றிவிடத்தானே செய்வார்கள்?  கண்கெட்ட பிறகு சூரிய நம்ஸ்காரம் செய்கிராரோ.’

“கடவுள் சில பேரை நல்லா ஆசிர்வதிச்சிருப்பார். ஆனா… அந்த ஆசிர்வாதத்தை நாம புரிஞ்சுக்கறதில்லை. எனக்கு கிடைச்ச ஆசிர்வாதங்கள் நிறைய. அதையெல்லாம் நான் அலட்சியப்படுத்திட்டேன். கொஞ்சம் அறிவோட செயல்பட்டிருந்தா நான்… என் ரெண்டு பெண் குழந்தைகளையும் இழந்திருக்க மாட்டேன். என்னோட உமாபதியையும் இழந்திருக்க மாட்டேன். உமா…உமாபதி… இப்ப எங்க இருக்கான்னே தெரியலை.”

உமாபதியைப் பற்றி சொல்லத் தொடங்கினார். 




What’s your Reaction?
+1
10
+1
11
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!