Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-6

(6)

                                      

“இந்தா… வேலையைப் பார்க்காம அங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கே?” கொல்லைப் பக்கம் வந்து இடுப்பில் கையூன்றி கோபமாக குரல் கொடுத்தாள் சுந்தரவள்ளி. 

அவளுக்கு மிகவும் எரிச்சலூட்டும் விசயம் என்னவென்றால்….இப்படி லலிதாவை மல்லிகைப் பந்தலில் பார்ப்பதுதான். 

ஒரு நாளைக்கு நூறு தடவையாவது அந்த இடத்திற்குப் போய்விடுவாள். காலையில் எழுந்து எல்லோரும் முதலில் வாசல் தெளிக்க அவள் மட்டும் முதலில் மல்லிகைப் பந்தலை சுத்தப்படுத்தி, மெழுகி, பளிச்சென கோலமிட்டு, விளக்கேற்றிவிட்டுத்தான் வாசலுக்கு வருவாள். 

காலை சாப்பாடு, மதிய சாப்பாடு, இரவு சாப்பாடு என தட்டில் கொஞ்சமாக கொண்டு வந்து தன் குழந்தைக்கு வைத்து விடுவாள். காத்திருந்ததைப் போல் குருவிக் கூட்டங்கள் வந்து கொத்தி தின்னும் போது தன் குழந்தையே சாப்பிடுவதாய் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாள். 

ஒரு நாளின் பல மணி நேரங்களை அங்கே கழிப்பதுதான் அவளுடைய வழக்கம். இது சுந்தரவள்ளிக்கு சுத்தமாகப் பிடிப்பதில்லை. குழந்தையை புதைத்த இடத்தில் மாங்கன்றோ, கொய்யாச் செடியோ வைத்துவிடத்தான் அவள் உத்தரவிட்டாள். ஆனால் லலிதா அங்கே மண்டபம் எழுப்பி மல்லிகைப் பந்தல் போட வேண்டும் என்று சொன்ன போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

வீரமணியும் “அம்மா… பாவம் அவ குழந்தை இறந்த துக்கத்துல இருக்கா. இந்தநேரத்துல அவளை எதுவும் சொல்லாதே. அவ விருப்படியே செய்வோம்” என்றான்.

அதனால் அவளும் விட்டு விட்டாள். ஆனால் அதன் பிறகு லலிதா அந்த இடமே கதியாகக் கிடப்பதும். என்னமோ குழந்தை எழுந்து உட்கார்ந்து சாப்பிடுவதைப் போல் சாப்பாடு கொண்டு போய் வைப்பதும், அதனால் ஊரிலுள்ள பறவைகளெல்லாம் அங்கே கூடி அவளுடைய மதிய தூக்கத்தை காச் மூச்சென கத்தி கலைப்பதும்,  பூத்துக் குலுங்கும் மலர்களை ஒரு பூஜை நாளின் போது பறிக்க 

தடுப்பதும், முக்கியமான மனிதர்கள் வீட்டிற்கு வரும்போது கூட முகம்கொடுத்துப் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தியான நிலையில் மல்லிகைப் பந்தலில் போய் உட்கார்ந்துக் கொள்வதும்…. பெரும் எரிச்சலைத் தந்தது.

இதோ… இப்பொழுது கூட சிலையாய் அங்கே உட்கார்ந்திருக்கிறாள், இவள் கூப்பிடுவது கூட காதில் விழாமல்…. 

சுற்றி நடப்பது எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. அவளுடைய மனம் சிமென்ட் தளத்தின் கீழே உறங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தது.




 

‘கண்ணே… நீ இறந்தது சாபத்தாலா? பெண் குழந்தையே பிறக்கக் கூடாது என கிழவி கொடுத்த சாபத்தை சாமி நிறைவேற்றி விட்டதா? அதற்கு நீ பலியாகிவிட்டாயா?’

விம்மி வெடித்து அழுதாள். இந்த சாபம், மந்திரம் இதிலெல்லாம் அவளுக்கு நம்பிக்கையில்லைதான். ஆனால்….அவளையும் மீறி இப்பொழுது மனம் ஏனோ அதையேப் பற்றிக் கொண்டுவிட்டது.  மனிதனுக்கு நம்பிக்கையும் நம்பிக்கை இன்மையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தே அமைகிறது’

நேற்று வரை இப்படியெல்லாம் யோசிக்காத மனம் இப்பொழுது எப்படி எப்படியோ யோசிக்கத் தொடங்கியது.

‘சொத்து அழிந்தது என்று ஒரு கிழிவி இப்படியா சாபம் இடுவாள்? குழந்தையைவிட ஒரு சொத்து இருக்கிறதா? காலம் மாறிவிட்டதே. சொத்தை அழிக்கப் பிறந்தவர்கள் பெண்கள் இல்லையே. இன்று சொத்து சம்பாதிக்கும் நிலைக்கு வந்துவிட்டனரே. என் மகளும் வாழ்க்கையில் கல்வி செல்வத்தைப் பெற்று, பெரும் பொருட்செல்வத்தை சம்பாதித்திருப்பாளே. அவளை ராணியாக நான் உருவாக்கியிருப்பேனே. அப்படி செல்வ சீமாட்டியாக தன் திறமைகளை வளர்த்துக் கொண்டு தரணியை ஆள எல்லா வசதியும், வாய்ப்பும் பெண்ணுக்கு உள்ள இந்த காலக்கட்டத்தில் கண்ணே உன்னை வாழவிடாமல் தடுத்தது  எது? அந்த  சாபமா? ஐய்யோ….’

லலிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. 

இரண்டு மூன்று முறை கூப்பிட்டுப் பார்த்துவிட்டு உள்ளே வந்து வீரமணியிடம் கத்தினாள் சுந்தரவள்ளி.

“முதல்ல அந்த மல்லிகைப் பந்தலை இடிச்சு போடு”என்றாள் கடும் கோபமாக.

“ஏம்மா இப்படி சத்தம் போடறே?” அம்மாவின் கோபம் மகனுக்குப் புரிந்தாலும் கேட்டான்.

“உன் பொண்டாட்டிக்கு வேலையே இல்லையா? சதா… அங்கயே போய் உட்கார்ந்துக்கிட்டிருக்கா. நானும் பல தடவை சொல்லிப் பார்த்துட்டேன். என்னமோ..குழந்தை எழுந்து அவக்கிட்ட விளாயடற மாதிரி நினைக்கிறா. முன்னாடி சரி… புள்ளை ஏக்கத்துல அப்படியிருந்தா. இப்பத்தான் இன்னொரு புள்ளையை பெத்துக்கப் போறா இல்லே? இன்னுமா போனதையே நினைச்சுக்கிட்டு ஒருத்தி இருப்பா?”

“எத்தனை குழந்தை பெத்தாத்தான் என்ன? இறந்த குழந்தையை ஒரு தாயால நினைக்காம எப்படிம்மா இருக்க முடியும்?”

“ஓ… பொண்டாட்டியை விட்டுக் கொடுக்க மாட்டியே.”

“அம்மா… ராத்திரியெல்லாம் அவ தூங்கலை. பாவம்… விடேன். டெலிவரி நேரத்துல ஏன் அவளை திட்றே? நல்லபடியா பெத்து பொழைக்கட்டும்” மகனின் கருணை பொழியும் வார்த்தைகளை சகித்துக் கொள்ள முடியாமல் விருட்டென உள்ளே போய்விட்டாள் சுந்தரவள்ளி.

வீரமணி கொல்லைப் பக்கம் வந்தான். கண்ணீரோடு மல்லிகைப் பந்தலில் அமர்ந்திருந்த மனைவியை கைப்பற்றி தூக்கினான்.

படுக்கையறைக்கு அழைத்து வந்தான். படுக்கையில் அவளை சாய்ந்து அமர வைத்தான்.

“காபி ஏதாவது குடிக்கறியா? அம்மாக்கிட்ட கேட்டு வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

“வேண்டாங்க” என்றாள். அவளருகே அமர்ந்து அவளுடைய கையை எடுத்து தன் மடிமேல் வைத்து வருடிக் கொடுத்தவாறே சொன்னான்.

“லலிதா… உனக்கு டெலிவரி நாள் நெருங்கிக்கிட்டிருக்கு. நீ மனசை ரிலாக்ஸா வச்சுக்கனும். சும்மா சும்மா…நீ மல்லிகைப் பந்தலுக்கு இனிமே போகாதே. மனசுல அழுத்தம் வந்தா…உடம்புக்கு நல்லதில்லை. படுத்து ரெஸ்ட் எடு. களத்து மேட்ல கொஞ்சம் வேலையிருக்கு. போய்ட்டு வந்திடறேன்” சொல்லிவிட்டு போய்விட்டான்.

லலிதா சோர்வாக கண்களை மூடினாள். வயிற்றில் குழந்தை உதைத்தது.  ஒவ்வொரு முறையும் இந்த உதைப்பு சுகத்தை கொடுக்கும். 

ஆனால்…. இப்பொழுதோ உதைப்பு பதை பதைப்பை கொடுத்தது. ‘இந்தக் குழந்தையும் பிறந்தால் இறந்துவிடுமோ?’ நினைத்த நொடியிலேயே அடி மேல் அடி விழுந்ததைத் போலிருந்தது. கையிலிருப்பதை இன்னொரு கைக்கு மாற்றுவதைப் போல் அல்லவே வயிற்றில் உள்ளதை வாரிக் கொடுப்பது? கணுக் கணுவாய் சுவை ஊறிய கரும்பைப் போல் அணுஅணுவாய் வளர்ந்த உயிர். பத்து மாதம் சுமந்த பின் பலி கொடுப்பதென்பது எத்தனை பெரிய வலி. பெற்றவள் மட்டுமே உணரும் வலி.உணர்ந்தாகிவிட்டது ஒரு முறை. பலி கொடுத்தாகிவிட்டது. பல முறை கொடுக்க முடியுமா? 

இந்தக் குழந்தை பெண் குழந்தை என்று ஆழ்மனம் நம்புகிறது. இறந்த குழந்தையின் இன்னொரு பிறவி என இதயம் நினைக்கிறது. உதிர்ந்த மலர் மீண்டும் உதிரத்தில் மலர்ந்துவிட்டது என உள்ளம் உறுதியாக உவகைக் கொண்டுவிட்டது.

இன்னும் பிறக்காத குழந்தைக்கு மீனாள் என பெண் பெயர் சூட்டி வாய் பிதற்றிப் பார்க்கிறது.

இந்நிலையில்… பெண் பிறந்தால் சாபம் தன் சாட்டையைத் தூக்கும் என்ற பயம் அவளை அணுஅணுவாக ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

அசையும் குழந்தை அச்சத்தைத் தருகிறது. உதைக்கும் போது மனதை வதைக்கிறது. புரளும் போது உணர்வுகள் மிரள்கின்றன.

பயம் அவளை ஆக்ரமிக்க ஆக்ரமிக்க நடு இரவில் அலறுகிறாள். ‘ஐய்யோ… என் குழந்தை. என் குழந்தை. என் மீனாள்… காப்பாத்துங்க. அவளைக் காப்பாத்துங்க.’

வயிற்றில் குழந்தையை சுமந்துக் கொண்டு காற்றில் கைகளை விரித்து கதறுகிறாள். ‘ என் குழந்தையை என்கிட்டக் கொடுத்துடுங்க. கொடுத்துங்க.’

வீரமணி குற்ற உணர்வில் தவித்தான்.  ‘ச்சே… நான் ஒரு முட்டாள். இந்த சாபத்தைப் பத்தி எதற்கு இவளிடம் சொன்னேன்? எதையாவது சொல்லி மழுப்பியிருக்கலாமே. கர்ப்பிணிப் பெண்ணிற்கு இது எந்தளவிற்கு கலவரத்தைக் கொடுக்கும் என யோசிக்காமல் போய்விட்டேனே. இவள் இப்படி பயந்தால் குழந்தைக்கு வயிற்றிலேயே ஏதாவது ஆகிவிடுமே’ 

நாளுக்கு நாள் லலிதாவின் நிலை மோசமாக அவன் பயந்தான்.

அம்மாவிடம் வந்தான்.” அம்மா… அவளை இந்த டெலிவரிக்கு அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடுவோம்” என்றான்.

அம்மாவின் முகம் மாறியது. “ஏன்டா… உன் பொண்டாட்டியை நான் நல்லா கவனிச்சக்க மாட்டேனா?”

 என்று சீறினாள்.

“அதுக்கில்லை அவ கொஞ்ச நாளாவே ரொம்ப பயந்துப் போயிருக்கா. முதல் குழந்தை மாதிரி இந்தக் குழந்தையும் செத்துடுமோன்னு”

“சாகாதுடா. முதல் குழந்தை பொண்ணாயிருந்ததால அது நம்ம குடும்ப சாபத்தால செத்துடுச்சு. இது ஆண்குழந்தைடா. சாகாது.”

“அம்மா… அவ தன் வயித்துல வளர்றது பெண் குழந்தைன்னு நம்பறா.”




“அவ நம்பினா அப்படியே பொறந்துடுமா? அது ஆண்குழந்தையாத்தான் பொறக்கும். சாமி நம்ம சாபத்துக்கு பயந்துக்கிடக்குடா. போன தடவை ஏதோ ஞாபக மறதியா கொடுத்துடுச்சு. கொடுத்த கையோட பறிச்சுட்டு. இந்த தடவை அப்படி நடக்காது. ஆண் குழந்தைதான் பிறக்கும்.” சாமிக்கே ஞாபக மறதி என பேசும் அம்மாவை நினைச்சு அவனுக்கு அந்நிலையிலும் சிரிப்புத்தான் வந்தது.  

“எது எப்படியோ இப்ப அவளுக்கு நிம்மதி இல்ல. ரொம்ப மனவேதனையில இருக்கற மாதிரி இருக்கா. அவளை அவளோட அம்மா வீட்டுக்கு அனுப்பிடலாம்”

“போதுன்டா. அம்மா வீட்டுக்கு அனுப்பறாங்களாம். அம்மா உயிரோட இருந்தா சரி. அம்மா இல்லாத வீட்ல அவ தங்கச்சிங்க அவளை எப்படி பார்த்துக்க முடியும்? அனுப்பறதாயிருந்தா போன தடவையே அனுப்பியிருக்க மாட்டேனா? அவ இங்கதான் இருக்கனும். வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ”

அம்மா அவனுடைய அக்கறையை அலட்சியப்படுத்திவிட்டாள்.

ஒரு நாள் மாலை மூன்று மணியிருக்கும் லலிதாவிற்கு வலி எடுத்துவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர அவரமாக வீரமணி காரை எடுத்தான். 

விளக்கேற்றி வைத்து மருமகளை பூஜையறைக்கு அழைத்து சென்ற சுந்தரவள்ளி “ ஆம்பளைப் புள்ளையா பொறக்கனும்னு வேண்டிக்க.”என்றாள்.

கைக்கூப்பி கண்களை மூடி வேண்டிக்கொள்ள முனைந்த லலிதாவின் கண்களில் முதல் பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை வந்து போனது. 

‘தாயே என் மீனாளை எனக்கு திருப்பிக் கொடு’ தன்னையும் மறந்து வேண்டிக்கொண்டாள்.

லலிதாவிற்கு அவள் வேண்டிக் கொண்டதைப் போலவே அழகான பெண் குழந்தைப் பிறந்தது. ஆனால்… சரியாக பத்து நாள் கழித்து அந்த அசம்பாவிதம் நடந்தது.




What’s your Reaction?
+1
7
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!