Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-7

7

யாருடனும்‌ பேசாமல்‌ அறையிலேயே அடைந்து கிடந்தாள்‌ செம்பருத்தி. மகள்‌ பரீட்சைக்கு படிக்கிறாள்‌ என்று கண்டும்‌ காணாமல்‌ விலகி சென்றனர் பெற்றோர்கள்‌. ஆனால்‌ இரண்டூ நாட்களாய்‌ மகள்‌ கண்ணில்‌ படவே இல்லை என்றவுடன்தான்‌ விநாயகத்தின்‌ கவனம்‌ மகள்‌ மேல்‌ திரும்பியது. அன்று சோர்வோடூ வீடு வந்த விநாயகம்‌ கைக்கால்‌ கழுவிக்கொண்டு ஹாலில்‌ வந்தமர்ந்தார்‌. செம்பருத்தியின்‌ அறை விளக்கு எரியாமல்‌ இருண்டிருக்கவே மனைவியிடம்‌ செம்பருத்தி இன்னும்‌ வரலையா? என்று கேட்டார்‌.

“அவ வந்து அரை மணி நேரமாகுது அறையை விட்டு வெளியில்‌ வராம உள்ளேயே கிடக்கிறா? என்ன ஏதுன்னு கேட்டா பதிலே சொல்லல? சரி நீங்க வந்தா விசாரிப்பிங்கன்னு விட்டுட்டேன்‌.”

“என்னடி இப்படி சொல்ற? உடம்பு கிடம்பு சரி இல்லையா? நான்‌ வர்ற வரைக்கும்‌ பாத்துகிட்டு இருந்தியா?” என்று மனைவி மேல்‌ கோபப்பட்டார் விநாயகம்‌.

“அதெல்லாம்‌ ஒன்னும்‌ இல்லைங்க ஆனா முகம்‌ வெளிறிக்கிடந்தது. நெத்தில கை வச்சு பார்த்தேன்‌ ஜுரம்‌ எல்லாம்‌ இல்ல. காலேஜ்ல ஏதாவது பிரச்சனையா இருக்குமோன்னு கொஞ்சம்‌ சந்தேகமா இருக்கு. என்கிட்ட எத சொல்லி இருக்கா இத சொல்ல? நீங்களே போய்‌ உங்க பொண்ணு கிட்ட பேசிக்கோங்க…” என்று சமையலறைக்குள்‌ நுழைந்து கொண்டாள்‌ தேவகி.

மகள்‌ அறையை மெல்லத்‌ தட்டி “அம்மா செம்பருத்தி என்ன பண்ற தூங்குறியாமா?” என்ற தகப்பனின்‌ குரலைக்‌ கேட்ட மறு நிமிடம்‌ அழுகை குமுறிக்‌ கொண்டு வந்தது செம்பருத்திக்கு. அழுகையை கட்டுக்கு கொண்டு வந்தவள்‌ கண்ணாடியில்‌ தன்னை சரி பண்ணிக்கொண்டு கதவைத்‌ திறந்தாள்‌.

“என்னடாமா ஏன்‌ ஒரு மாதிரி இருக்கே?” என்று அப்பாவின்‌ அன்பு குரலுக்கு அவளின்‌ அழுகை துக்கம்‌ எல்லாம்‌ பீறிட்டது. “ஒன்னுமில்லப்பா சும்மாதான்‌ படுத்திருந்தேன்ப்பா‌…”

“இல்லம்மா நீ எதுவும் எங்கிட்ட மறைச்சதில்லை…உன்‌ முகம்‌ வாடியிருக்கே அதுதான்‌ கேட்டேன்‌.?” என்று தகப்பன்‌ சொன்ன மறுநிமிடமே கண்களில்‌ இருந்து இரண்டு சொட்டு கண்ணீர்‌ தரையில் விழுந்தது.

“ஏன்டா அழுவுறே? அழக்கூடாது…” மகளை தன்னோடு அணைத்துக்கொண்டார்‌ விநாயகம்‌.

“அது ஒன்னும்‌ இல்லப்பா சும்மாதான்‌…” என்று எதையோ சொல்ல வந்தவளுக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

“என்னடா உனக்கு ஏதாவது பிரச்சனையா? இந்த பொண்ணு பாக்குற விஷயம் பிடிக்கலையா? உனக்கு பிடிக்கலைன்னா நிறுத்திடலாம்‌. உனக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும்‌ நான்‌ செய்ய மாட்டேன்‌. எதுவா இருந்தாலும்‌ மனசுல வச்சுக்காம சொல்லு…?” என்ற விநாயகம்‌ மகளை தன்னோடு அழைத்து வந்து சோபாவில்‌ அமர வைத்துவிட்டு ஃபேனை போடுடி என்று மனைவியை அதிகார தொணியில்‌ கத்தினார்‌.

“பக்கத்துல தானே பேன்‌ இருக்கு எழுந்திருச்சு போட வேண்டியதுதானே”? என்று கோபப்பட்டாள்‌ தேவகி.

“சரி இந்த கல்யாண விஷயம்‌ உனக்கு பிடிக்கலையோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு ஏன்னா மாலதி சாயந்திரம்‌ போன்‌ பண்ணா… அவ உனக்கு கல்யாணத்துல அவ்வளவு விருப்பம்‌ இல்லைன்னு சொல்றா? அதை நீ என்கிட்டயே சொல்லி இருக்கலாமே? சரி அப்பாகிட்ட சொல்ல தயங்கிகிட்டு அத்தை கிட்ட சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்‌ ஒன்னும்‌ பிரச்சனை இல்ல…”

“ப்பா…உங்களோட ஆசை எதுவோ நீங்க செய்ங்க நான்‌ வேணாம்னு சொல்லமாட்டேன்‌.”




“இல்லம்மா இதுல என்னோட ஆசை ஒன்னும்‌ இல்ல நீ நல்லா இருக்கணும்னுதான்‌ நான்‌ இந்த கல்யாண ஏற்பாட்டையே பண்றேன்‌. நல்ல குடும்பம்‌ வசதியான குடும்பம்‌ பையனும்‌ நல்ல பையன்‌. இந்த மாதிரி ஒரு வரம்‌ அமைவது கஷ்டம்‌. அதனாலதான்‌ இந்த கல்யாணத்தை ரெடி பண்ணினேன்‌. உனக்கு பிடிக்கலைன்னா நான்‌ நாளைக்கே போன்‌ பண்ணி பொண்ணு பார்க்க வரவேண்டான்னு சொல்லிடுறேன்‌.”

ஒரு நிமிடம்‌ யோசித்தாள்‌. நம்முடைய காதல்‌ தான்‌ பொய்யாகிவிட்டதே? இனிமே அத நெனச்சு அழுது என்ன பிரயோஜனம்‌? அப்பா அம்மா ஆசையையாவது நிறைவேற்றலாமே. என்று எண்ணிய செம்பருத்தி,

“அப்படியெல்லாம்‌ எதுவும்‌ இல்லப்பா உங்கள எல்லாம்‌ பிரிஞ்சு போறது ரொம்ப கஷ்டமா இருக்குப்பா…அதனாலதான்‌ இப்போதைக்கு கல்யாணம் வேணான்னு சொன்னேன்‌. மற்றபடி மாப்பிள்ளை பிடிக்கலன்னு சொல்லலப்பா.” தலை தாழ்த்தியபடி பக்‌ என்று சிரித்தார்‌ விநாயகம்‌.

“அட..! இதுக்குத்தான்‌ இப்படி தயங்கினியா? பொண்ணா பொறந்தா ஒரு நாளைக்கு புகுந்த வீட்டுக்கு போய்‌ தானே ஆகணும்‌. இதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்படிம்மா? அதுவும்‌ உன்னை என்ன நாடு விட்டு நாடா அனுப்புறேன்‌.? இங்க இருந்து பத்து கிலோமீட்டர்‌ அரை மணி நேரத்துல உன் புகுந்த விட்டு வாசல்ல வந்து நிக்க போறேன்‌. நீ நெனச்சா கார்ல பத்து

நிமிஷத்துல நம்ம வீட்டுக்கு வந்துடலாம்‌. இதெல்லாம்‌ ஒரு தூரமா? உன்னோட விருப்பம்‌ இருந்தா மட்டுமே இந்த கல்யாணம்‌ நடக்கும்‌. மத்தபடி சின்ன சின்ன காரணத்தையெல்லாம்‌ நெனச்சு மனச போட்டு குழப்பிக்காதே…”மகளின்‌ தலையில்‌ கை வைத்து அசைத்தவர்‌,

“சரி நான்‌ போய்‌ டிரஸ்‌ மாத்திட்டு வரேன்‌ முதல்ல சாப்பிடுவோம்‌. அதுக்கப்புறம்‌ எதுவா இருந்தாலும்‌ காலைல பேசிக்கலாம்‌”.

“அப்பாவும்‌ பிள்ளையும்‌ ரகசியம்‌ பேசிக்கிட்டு இருக்கீங்க எனக்கு கொஞ்சம் சொல்லலாம்‌ இல்ல…” கேட்டபடி தேவகி அங்கே வந்தாள்‌.

“அதெல்லாம்‌ ஒன்னும்‌ இல்ல நம்மள பிரிஞ்சு போறதுக்கு செம்பருத்திக்கு மனசில்லையாம்‌. அதனால தான்‌ கல்யாண பேச்சு எடுத்த உடனே மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு இருந்திருக்காள்‌”.

“அட அதுதான்‌ சேதியா!” என்று கைகளை தட்டி சிரித்தாள்‌ தேவகி. அவளை பொறுத்தவரை எங்கே தன்‌ நாத்தனார்‌ இந்த கல்யாணத்தை நிறுத்திடப் போறாளோ என்ற பயம்‌? மகளிடம்‌ ஏதாவது ஓதி மகள்‌ மனசை கலச்சிட போறாள்‌. என்று புலம்பித்‌ தவித்தவளுக்கு மகளின்‌ இந்த காரணம்‌ மனதிற்கு பெரிய ஆறுதலாய்‌ அமைந்தது.

“என்னங்க அப்புறம்‌ என்ன நம்ம பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம இத்தனை நாளும்‌ புலம்பிக்கிட்டு இருந்தோம்‌. அவ சின்ன குழந்தைங்க அவளுக்கு என்ன தெரியும்‌.? நாமதான்‌ அவளுக்கு எடுத்து சொல்லணும்‌ சரி இப்பயாவது புரிஞ்சுகிட்டோமே இனிமே ஆக வேண்டியது பார்க்க வேண்டியதுதான்‌. மாப்பிள்ளை விட்டுக்காரங்க கிட்ட புதன்கிழமை கன்‌ஃபார்மா வராங்களான்னு கேட்டுடுங்க அப்புறம்‌ நல்ல நாள்‌, கெட்ட நாள்‌

என்று எதையாவது சொல்லி தட்டி கழிக்க போறாங்க ஏன்னா பெரிய இடத்து சம்மந்தம்‌ நம்மள விட்டா ஆயிரம்‌ பேர்‌ கியூவுல நிப்பாங்க நீங்க உடனே கண்ணன்‌ அண்ணனுக்கு கால்‌ பண்ணி மாப்பிள்ளை வீட்ல புதன்கிழமை வர்றதை உறுதியான கேட்டுக்கோங்க நாம்‌ நேரா போன்‌ பண்ணி கேட்டா நல்லா இருக்காது. மனைவியின்‌ முகத்தில்‌ இவ்வளவு பெரிய சந்தோஷத்தை இதுவரை அவர்‌ பார்த்ததே இல்லை. மகள்‌ நல்ல இடத்தில் வாக்கப்பட்டு போகப்‌ போகிறாள்‌ என்று தேவகிக்குதான்‌ எத்தனை ஆசை இருந்திருக்கும்‌ வெளியில்‌ சொல்லாமல்‌ மூடி மறைத்திருக்கிறாள்‌.

கடவுள்‌ புண்ணியத்துல இந்த வரன்‌ நல்லபடியா முடிஞ்சா விழுப்புரம் பக்கத்துல இருக்கிற குலதெய்வம்‌ கோயிலுக்கு மாப்பிள்ளை பொண்ணையும்‌ அழைத்துக்கொண்டு போய்‌ கிடா வெட்டி ஊருக்கு விருந்து வைக்கணும் என்று மனசுக்குள்‌ வேண்டிகொண்டாள்‌.

அன்றிரவு மொட்டை மாடியில்‌ அனைவரும்‌ ஒன்று கூடி கதை பேசினார்கள்‌. எப்பவாவது இது மாதிரி ஒரு சந்தர்ப்பம்‌ அமையும்‌ அப்போது சாப்பிடும்‌ டிபனை கூட தேவகி மொட்டை மாடிக்கு எடுத்துட்டு வந்துடூவாள்‌. நேரம் போவதே தெரியாமல்‌ பனிரெண்டு மணி வரை அரட்டையும்‌, கச்சேரியுமாய் களைகட்டி இருக்கும்‌.

இன்றும்‌ அவர்கள்‌ சந்தோஷத்தில்‌ கலந்து கொண்டாள்‌ செம்பருத்தி. என்னதான்‌ மனசுக்குள்‌ பெரிய பாரம்‌ அடைத்துக்கொண்டு இருந்தாலும்‌ அதை எல்லாம்‌ வெளியில்‌ காட்டி மற்றவர்களின்‌ சந்தோஷத்தை கெடுக்க வேணாமே என்ற எண்ணம்‌ அவளுக்கு. அவள்‌ இயல்பாய்‌ இருப்பதாய் நடித்துக்‌ கொண்டிருந்ததை உண்மை என்று மற்றவர்கள்‌ நம்பி மகிழ்ந்து கொண்டாடினார்கள்‌. பனிரெண்டு மணி வாக்கில்‌ நால்வரும்‌ கீழே இறங்கி வந்தபோது இவள்‌ தன்‌ அறைக்குள்‌ நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டாள்‌.




உடை மாற்றக்கூட மனதில்லாமல்‌ படுக்கையில்‌ சாய்ந்தாள்‌. அவளையும் மீறி அழுகை கரை புரண்டோடியது தலகாணி நனையுமட்டும்‌ அழுது தீர்த்தாள்‌.

ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு நான்‌ ஏன்‌ அழவேண்டும்‌? எனக்கு எந்த குறையும்‌ இல்லை எல்லா வசதிகளும்‌ இருக்கு. அன்பான அப்பா பாசமான அம்மா நேசமுள்ள தங்கை. இப்படி எல்லா உறவுகளும்‌ என்‌ மேல உயிரையே வச்சிருக்காங்க. ஆனா என்னுடைய மனசு வேற மாதிரி இல்ல போயிருந்தது. வேணாம்‌ இனிமே எட்டாத கனி புளிக்கும்னு சொல்லுவாங்க அது மாதிரி தான்‌ நானா ஒரு கற்பனை பண்ணிக்கிட்டு அவன காதலிப்பதா பைத்தியக்காரத்தனமா ஒரு முடிவுக்கு வந்து என் வாழ்க்கையை இத்தனை வருடம்‌ கெடுத்துக்‌ கொண்டிருந்தது மட்டுமல்லாமல் என்னுடைய பெற்றோர்களை ஏமாற்றிக்‌ கொண்டும்‌ இருந்திருக்கிறேன்‌.

போதும்‌ இனிமே இந்த பழைய வாழ்க்கையை பத்தி நான்‌ நினைச்சு கூட பாக்கக்‌ கூடாது. முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாகவே இருக்கட்டும்‌. அப்பா சொல்ற இந்த மாப்பிள்ளையும்‌ நல்லாதான்‌ இருக்கான்‌. ஒரு முறை புகைப்படத்தில்‌ பார்த்தது மனதில்‌ பதியா விட்டாலும்‌ அவன்‌ அளவுக்கு ஸ்டைலாக இல்லை என்றாலும்‌ குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நல்லமாதிரியா தெரியறான்‌. ஓகே இவன்தான்‌ என்‌ வாழ்க்கை துணைன்னு ஆயிடுச்சு அவன் கூட வாழறது தான்‌ எனக்கு நிரந்தரம்‌. இருக்கிறத விட்டுட்டு பறக்கறத பிடிக்கக்‌ கூடாது. இனிமே அந்த வெள்ளை சட்டைக்காரன நான்‌ கனவுல கூட நினைக்க கூடாது. எனக்கென்று பார்த்திருக்கிற மாபிள்ளையை ஏத்துக்கிட்டு அந்த வீட்ல போய்‌ நல்ல பேர்‌ எடுத்து எங்க அப்பா அம்மாவை பெருமைப்படுத்தணும்‌. இது மட்டும்‌ தான்‌ எனக்கு இருக்கிற ஒரே எண்ணம்‌.

அழுது களைத்து பெரும்‌ புயலுக்கு பிறகு கிட்டிய அமைதியாய்‌ அவள்‌ மனம் மாறியது.

காலை விடிந்தவுடன்‌ அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால்‌ தேவகி தீவிர சமையலில்‌ இறங்கியிருந்தாள்‌. மகள்‌ கல்யாணத்துக்கு சம்மதித்த விஷயம்

மனதில்‌ இனித்துக்கொண்டிருந்தது. அதை செலிபிரேட்‌ பண்ண வேண்டும்‌ என்ற தீவிர எண்ணத்தின்‌ சிக்கன்‌ பிரியாணி மட்டன்‌ ஃப்ரை, கேசரி, என்று தடபுடல்‌ பண்ணி விட்டாள்‌ தேவகி. விநாயகம்‌ ஆச்சரியத்தோடு மனைவியை பார்த்தார்‌.

“நமக்கு இருக்கிறது ரெண்டு பிள்ளைங்க அவங்க ரெண்டும்‌ சந்தோஷமாக இருந்தா அதைவிட பெரிய சந்தோஷம்‌ என்னங்க இருக்கப்போகுது? செம்பருத்திக்கு இந்த வரன்‌ அமையனும்னு குலதெய்வம்‌ கோவிலில்‌ வேண்டி இருக்கேன்‌”.

“நானும்‌ வேண்டி இருக்கேன்‌ தேவகி ரெண்டு பேர்‌ மனசும்‌ இந்த விஷயத்துல ஒத்துப்‌ போயிருக்கு பாத்தியா?”  மனைவியை சீண்டினார்‌.

“இதுலயாவது ஒத்துப்‌ போகுதே?” கடைசி வரைக்கும்‌ இப்படியே இருங்க, உங்க தங்கச்சி பேச்ச கேட்டுக்கிட்டு நடுவுல எதாவது குழப்பம்‌ பண்ணி காரியத்தை கெடுத்துற போறீங்க… தொண்டை வரை வந்த வார்த்தைகளைமென்று எப்போதும்போல மென்று விழுங்கினாள்‌ தேவகி.

தீடிரென்று ஞாபகம்‌ வந்தவராய்‌ கண்ணனுக்கு கால்‌ பண்ணி மாப்பிள்ளை விட்டாரை பற்றி விசாரித்தார்‌‌.

“நேத்து அந்த பக்கம்தான்‌ போனேன்‌ அண்ணாச்சி! பார்வதி அக்காதான் இருந்தாங்க அவங்ககிட்ட பேசினேன்‌. அவங்க உறுதியாத்தான்‌ இருக்காங்க அண்ணாச்சி புதன்கிழமை பொண்ணு பார்க்க வர்றது நிச்சயம்தான்‌.”

“ரொம்ப சந்தோஷம்பா…” என்று முகம்‌ மலர்ந்தார்‌ விநாயகம்‌.




What’s your Reaction?
+1
22
+1
14
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!