gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 40 ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி

அம்மனின் சக்தி பீட வரிசையில், ராமேஸ்வரம் பர்வதவர்ததினி சமேத ராமநாதர் கோயில் சேது சக்தி பீடமாக போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 8-வது தலமாகும்.

இந்திய நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது. 1,212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் 3-ம் பிரகாரம் உலகப் புகழ் பெற்றது.




தல வரலாறு

இலங்கையை ஆண்ட ராவணன் சிறந்த சிவபக்தராக விளங்கினார். ராமபிரான் – ராவண யுத்தத்தில் ராவணனை அழித்ததால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. இந்த தோஷம் நீங்க, ராமபிரான், ராமேஸ்வரம் கடற்கரையில் சிவபூஜை செய்ய எண்ணி, அதற்காக சிவலிங்கத்தை கொண்டுவர ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயர் குறித்த நேரத்தில் சிவலிங்கத்துடன் வராததால், சீதாபிராட்டி கடற்கரை மணலால் சிவலிங்கம் அமைத்தார். அந்த லிங்கத்துக்கு ராமபிரான், ஆராதனைகள் செய்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்ட லிங்கம் என்பதால், ராமநாதசுவாமி என்று இத்தல சிவபெருமானுக்கு பெயர் ஏற்பட்டது. இங்கே சிவபெருமான் சந்நிதியில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

யாத்திரை முறை

காசி, ராமேஸ்வரம் யாத்திரையின்போது, பக்தர்கள் முதலில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தத்துடன் காசிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். கங்கை தீர்த்தத்தில் ராமேஸ்வரம் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்துவந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை முடிக்கவேண்டும்.




22 தீர்த்தங்கள்

தனுஷ்கோடியில் நீராடிய பின்பு, இத்தலத்தில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும். ஒவ்வொரு தீர்த்தத்திலும் நீராடினால் ஒவ்வொரு பலன் உண்டு என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தீர்த்தம் (செல்வ வளம்), சாவித்திரி தீர்த்தம் (பேச்சுத் திறன்), காயத்ரி தீர்த்தம் (உலக நன்மை), சரஸ்வதி தீர்த்தம் (கல்வியில் மேன்மை), சங்கு தீர்த்தம் (வாழ்க்கை வசதி அதிகரிப்பு), சக்கர தீர்த்தம் (மன உறுதி பெறுதல்), சேது மாதவ தீர்த்தம் (அனைத்து விதமான தடைகளும் நீங்கப் பெறுதல்), நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம் (இஷ்ட சித்தி நிறைவேற்றம்), பிரம்மஹத்தி தோஷ விமோசன தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம் (அனைத்துத் துறையிலும் வல்லுநர் ஆகுதல்), சர்வ தீர்த்தம் (எப்பிறவியிலும் செய்த பாவம் நீங்குதல்), சிவ தீர்த்தம் (சகல பீடைகளும் ஒழிதல்), சத்யாமிர்த தீர்த்தம் (ஆயுள் விருத்தி), சந்திர தீர்த்தம் (கலையார்வம் பெருகுதல்), சூரிய தீர்த்தம் (முதன்மை இடம் பெறுதல்), கோடி தீர்த்தம் (முக்தி – மறுபிறவி இல்லாத நிலை). இக்கோயிலுக்கு வெளியேயும் தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் முதலான இடங்களில் 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன.




கோயில் அமைப்பு

ராமநாதசுவாமி கோயில் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கோயில், உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள கோயிலாக விளங்குகிறது. கி.பி 17-ம் நூற்றாண்டின் இறுதியில் சேதுபதி மன்னரின் முதலமைச்சர் முத்திருளப்பிள்ளையால் கிழக்கு கோபுரம் கட்டப்பட்டது. இங்குள்ள பிரகாரங்களின் மொத்த நீளம் 3,850 அடியாகும். வெளிப் பிரகாரத்தில் 1,200 தூண்கள் அமைந்துள்ளன.

முதல் பிரகாரத்தில் சீதாபிராட்டி அமைத்த மணல் லிங்கத்துக்கு ராமபிரான் பூஜை செய்யும் சந்நிதி அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்ந்து அமைக்கப்பட்ட பந்தலில் நடராஜப் பெருமான் அருள்பாலிக்கிறார். நாகவடிவில் பதஞ்சலி முனிவர் அருள்பாலிக்கிறார். யோகக் கலையில் தேர்ச்சிபெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் பதஞ்சலி முனிவரை பக்தர்கள் வணங்குகிறார்கள். இரண்டு லிங்கங்களுக்கும் மத்தியில் சரஸ்வதி தேவி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ரலிங்க சந்நிதிகள் அமைந்துள்ளன.




திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், கார்த்திகை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, மாசி பிரம்மோற்சவம், ஆடித் தபசு தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுவதால், வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து, நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபாடு செய்வது வழக்கம். மாசி மகா சிவராத்திரி விழாவில் சிறப்புப் தேரோட்டம் நடைபெறும்.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!