Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை -22

22

மேற்கொண்டு நான்கைந்து நாட்கள் ஓசையின்றி நகர்ந்தது. மலர் பெரியம்மாவின் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டாள். வேளா வேளைக்கு உணவு தருவது. இதிகாசங்கள் படித்துக் காட்டுவது என்று நேரம் நன்றாகவே ஓடியது.

அன்றும் அப்படித்தான், மலர் பகவத்கீதைப் புத்தகத்தின் விளக்கவுரை பெரிய எழுத்தாளரின் சொற்களை பெரியம்மாளிற்கென வாசித்துக் கொண்டிருந்தாள்.

நிறைவான வாழ்க்கை ஒன்றிற்கு ஆசிரியர் ஒரு கதையொன்றைக் கூறியிருந்தார். ஒரு அடர்ந்த காடு, பூத்துக் குலுங்கும் சோலையாய் இருந்த அந்த இடம், திடீர்னு ஒரு நாள் அந்த வளங்கள் எல்லாம் குறைய ஆரம்பிச்சிடுச்சு, எல்லா விலங்குகளும், பறவைகளும் அந்த காட்டை விட்டு சென்று விட அந்த ஆலமரத்தின் மீது இருந்த கிளி மட்டும் அங்கேயே இருந்தது.

நாட்கள் நகர்ந்தோடின. இருந்தாலும் அக்கிளி மரத்தை விட்டு அகலவில்லை. அதனுடைய செயலைக் கண்ட இறைவன் அதன் முன் தோன்றி, “கிளியே இந்த வனம் செழித்து இருந்த போது, வாழ்ந்த உயிரினங்கள் எல்லாம் இப்போது இந்த இடத்தை விட்டுப் பிரிந்து சென்று விட்டன. ஆனால் நீ மட்டும் இந்த மரத்தை விட்டு செல்லாமல் இருப்பது ஏன்?” என்று கேட்டார்.

அதற்கு அக்கிளியோ, “பரந்தாமனே! இந்த மரம் பூத்துக் குலுங்கும் போது அதனுடன் இருந்து சகல் இன்பத்தையும் நான் அனுபவித்தேன். அதே போல் இது பாழடைந்த நேரம் இதை விட்டு வேறு இடம் தேடிக் கொண்டால், நான் நன்றி மறந்தவன் ஆகி விட மாட்டேனா? அதனால் தான் என் வாழ்க்கை தொடர்ந்த இந்த இடத்திலேயே என் வாழ்வு முடியட்டும். இது தான் என் நிறைவான வாழ்க்கை.” என்றது.





“இறைவன் அந்தக் கிளியின் பேச்சைக் கேட்டு அகமகிழ்ந்தார். இன்பத்திலும், துன்பத்திலும் பிரியாமல் வாழ்வதே உண்மையான வாழ்க்கையென்று ஐந்தறிவுள்ள கிளிக்கு புரிந்திருக்கிரதே என்று கிளியே, உனக்காக, உன் குணத்திற்காகவே இந்தச் சோலை பழைய படி செழிப்பாகும். நீ ஆயுட்காலம் முடியவும் சொர்க்கம் வந்தடைவாய் என்று சொல்லி மறைந்தார்.

மலர் அக்கதையை கூறி முடிக்கவும், பெரியம்மா புன்னகை பூத்தார். “எத்தனை உயர்ந்த குணம் பார்த்தியாம்மா?” இருந்தால் மன நிறைவோடு இருக்கணும். ஆனா விதி அப்படி யாரையும் விட்டு வைப்பதில்லையே!”

“உண்மைதான் அம்மா, பணம் இருந்தாலும், இல்லாமல் போனாலும், ஏதாவது ஒரு வகையிலே கவலை மனிதனை ஆட்டு விக்கத்தானே செய்கிறது. உங்க மனசிலேயும் அப்படி ஏதாவது கவலை இருக்கிறதாம்மா?”

“இத்தனை நாளா பெரியவனை நினைச்சு வேதனைப் பட்டேன். ஆனா, அவனுடைய வாழ்க்கை இப்போ நிறைஞ்சிடுச்சி, இப்போ சின்னவனை நினைச்சுக் கவலைப் படறேன்.”

“கவலைங்கிறது மனிதன் பிறக்கும் போது ஒட்டிப் பிறந்த நிழல் மாதிரி, ஒரு பெண்ணின் வாழ்க்கை முடியும் வரை எத்தனை விதமான கவலைகளை அடைகிறாள். தன் உணர்வுகள் பற்றி சகோதரனைப் பற்றி, திருமணமான பிறகு, பெற்றோரை, கணவனைப் பற்றி, காலம் போன கடைசியில் குழந்தைகள் பற்றி என வாழ்வின் அதி முக்கிய கட்டங்களில் கூட கவலை வந்து விடுகிறதே!”

மலர் மௌனமாய் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.

“மலர்ம்மா, சின்னவன் ரொம்ப நல்லவன்,ஆனா பிடிவாதம் அதிகம், மனசிலே ஒண்ணை நினைச்சா சுலபத்திலே மறக்கவே மாட்டான். தங்கமான மனசு அவனுக்கு. எங்கிட்ட இது வரையில் அவன் எந்த விஷயத்தையும் மறைச்சதே கிடையாது. அவன் வாழ்க்கையிலேயும் ஒரு நல்லது நடந்திட்டா, நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன்.”

“என்னம்மா பேச்சு இது?’




“இல்லைடா! அவன் வயசுக்கு இந்நேரம் திருமணமாகி குழந்தையிருக்க வேண்டியது. ஆனா விதி ஒன்று விட்ட தங்கை பார்வதியின் ரூபத்தில் வந்து விளையாடிச்சு. சின்ன வயசிலேயே வறுமையிலே வாடினவங்க பார்வதி, ஒரு பெரிய பணக்காரர் காலம் போன காலத்திலே இவளுடைய அழகிலே மயங்கி இவளைக் கல்யாணம் செய்துகிட்டார். அவருடைய சந்தேக புத்தியால இவள் அடைஞ்ச கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை, ஒரு வழியா அவரும் இறந்து விட, திரண்ட சொத்தோடு இவ அனாதையா நின்னா, அப்போ அவளுக்கு 30 வயசு தான் இருக்கும்.”

“தன் குடும்பத்து உறுப்பினர்களோட தங்கியிருந்த அவளுடைய மன நிலையில் நிறைய மாற்றம் ஏற்பட்டு இருந்திருக்க, தங்கைகளை அவர்கள் கணவரோடு சேர விட மாட்டாளாம். இப்படி நிறைய பிரச்சினைகள் வந்த போது தான் நான் ஒரு முறை இந்தியாவிற்கு வந்தேன்.

“பார்வதியை மனநல மருத்துவர் ஒருத்தர்கிட்ட காண்பிச்சோம். இளவயதிலேயே பல கஷ்டங்களை அனுபவிச்சதலா பார்வதியோட மனசு ரொம்பவும் பலகீனப்பட்டு இருக்கு அவங்களை குடும்பச்சூழலில் இருந்து கொஞ்சம் தள்ளி வைய்யுங்கன்னு மருத்துவர் சொன்னார். நானும் அதன் படியே அவளை அந்தமான் கூட்டி வந்தேன்.”

“ஆனா இங்க வந்த பிறகு அவ போக்கில் எந்த மாற்றமும் இல்லை. திருமண பந்ததையே அவ வெறுத்தா. அவ கண் முன்னாடி ஒரு ஆணும், பெண்ணும் சந்தோஷமா பேசிகிட்டு இருந்தா அதை எப்படி குலைக்கணுமின்னு திட்டம் தீட்டிடுவா. இதை என் மருமக ராணிகிட்ட செயல்படுத்தினா.”

“ஆனா ராணி தங்கமான பொண்ணு, ராஜ் மேல பார்வதி இறைச்ச சேற்றையெல்லாம் அவ நம்பவில்லை, ராணிக்கு தன் தங்கையை ஆனந்தனுக்கு தரணுனு கொள்ளை ஆசை, அதற்கான முயற்சியகளையும் அவ செய்தாள்.”

“நிச்சயம் வரை வந்த கல்யாணம் நின்னு போச்சு.”

“ஏன்?” படபடக்கும் இதயத்தோடு கேட்டாள்.

“எங்க தூரத்து உறவான ஒருத்தர் வீட்டு பிறந்த நாள் விழாவிலே ஆனந்தன் எடுத்த போட்டோவை வைச்சு ஆனந்தை தவறா காட்டி, யாரோ மொட்டை கடிதாசி போட்டாங்க, ராணி நாங்க சொல்வதை உண்மைன்னு நம்பினாலும், அவங்க குடும்பத்தில் யாரும் நம்பறதா இல்லை.”

“அதனால இந்தக் கல்யாணம் நின்னு போச்சு. இதெல்லாம் பார்வதியோட வேலைன்னு எங்களுக்கு தெரிய வந்தது. அதுக்கு பிறகு சென்னையிலே சொந்தமா ஒரு வீடு வாங்கி அங்கேயே குடியேறிட்டா பார்வதி.நீயே சொல்லு மலர், நாம ரொம்ப நேசிக்கறவங்க நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தா உயிரை பிடுங்கறா மாதிரி வலிக்கிறது இல்லையா? அதே போல் தான் பார்வதியின் செயலும் இருந்தது. சின்ன வயதிலே இருந்தே வறுமையில் உழண்டு பின்னாளில் வசதியான வாழ்வு கிடைச்சாலும் அதை முழுமையா அனுபவிக்க முடியாமல் அவ பட்ட கஷ்டத்தை உணர்ந்து,அவளுக்கு வெறுமையுணர்வு வரக்கூடாதுன்னு நினைச்சேன். அவ தப்பு செய்தான்னு தெரிஞ்சும், சென்னை பங்களாவிலே தனியா வசிக்க கூடாதுன்னு நாங்க இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் அங்கேதான் தங்குவோம். ஆனா, இரண்டாவது முறையா என் பிள்ளையோட வாழ்க்கைய அவ கெடுத்திட்டா.”

“என்னம்மா சொல்றீங்க?”




“ஆனந்தன் நாலு வருடங்களுக்கு முன்பு ஒரு பொண்ணை விரும்பினானாம். அந்தப் பொண்ணு பார்வதி வீட்டு பக்கத்திலேதான் இருந்தாளாம். ஆனா ஏதோவொரு காரணத்தினால அந்தப் பொண்ணைக் காணாம நாலு வருஷமா திண்டாறான். பாவம்மா அவன் அந்தப் பொண்ணு மேல உயிரையே வைச்சிருக்கான்.

“ஏம்மா அந்தப் பொண்ணை அதுக்குப் பிறகு அவர் பார்க்கவேயில்லையாம்மா?”

“இல்லைன்னு தான் நினைக்கேறேன். பேச்சையெடுத்தாலே அவன் முகம் சுருண்டு போயிடும் அதனால் நான் எதைப் பற்றியும் பேசறதுயில்லை. இருந்தாலும் பெத்த மனசு கிடந்து தவிக்கத்தான் செய்யுது. அந்த இரண்டாவது அலமாரியில் ஒரு புத்தகம் இருக்கும் அதை எடுத்திட்டு வாம்மா.”

அவர் சொன்னபடியே, எடுத்து வந்து தந்தாள் அந்தப் புத்தகத்தின் நடுப்பக்கத்தைப் பிரித்து, சாயம் போன கடிதம் ஒன்றை பிரித்து மலரிடம் நீட்டினார், “இதைப் படிம்மா.”

“என்ன இது?”

“ஆனந்த் நாலு வருடத்திற்கு முன்பு எனக்கு எழுதின கடிதம்.” நடுங்கும் விரல்களினால் அதைப் பிரித்து , பார்வையை ஓட்டினாள். பரஸ்பர நல விசாரிப்பிற்கு பிறகு, ” அம்மா இங்கே நான் ஒரு பெண்ணைச் சந்திதேன் வயசென்று பார்த்தால் பதினெட்டு தான் இருக்கும்.”

“என்னவோ அவளைப் பார்த்ததில் இருந்தே அவள் தான் என்னுடையவள் என்று எண்ணம் உதயமாகி விட்டது. சீக்கிரமே அவளுடைய விருப்பத்தையும் தெரிந்து கொண்டு நான் மறுபடியும் கடிதம் எழுதுகிறேன்.கூடிய விரைவில் உனக்கு சின்ன மருமகள் வரபோகிறாள் சந்தோஷம் தானே.”

இப்படிக்கு
உன் அன்பு மகன்
ஆனந்தன்.

மலரின் கண்களில் நீர் கசிந்தது. ஆனந்தன் நீங்கள் என் மேல் இத்தனை அன்பு கொண்டிருந்திர்களா? பார்வதியின் பேச்சை நம்பி எத்தனை உன்னதமான காதலை நான் உதசீன படுத்தி விட்டேன். நான்கு வருடங்களாக என்னையே எண்ணி கொண்டு இருந்தவரை வார்த்தை சாட்டையாலேயே அடித்து இருக்கிறேனே! அன்பையும் காதலையும் தேக்கியபடி எத்தனை முறை அவரின் விழிகளின் காதல் பார்வையைக் கூட நான் தவறாய் நினைத்து விட்டேனே. இதற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டால் ஆனந்த் என்னை நீங்கள் மன்னிப்பீங்களா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் உங்களைப் பார்ப்பேன் ஆனந்த்.

பெரியம்மாவிற்கு மாத்திரை தந்து தூங்க வைத்து விட்டு, ஆனந்துக்காய் காத்து இருந்தாள். நொடி கூட மணியா நீண்டது. ஆனந்தனின் வருகையின் ஏக்கம் அவளை வாட்டியது.




What’s your Reaction?
+1
13
+1
17
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!