Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 7

7

 

 

” நம்ம தோப்பில் கொட்டை எடுத்த பழமெல்லாம் வீணாக போகுதே அப்பா .என்ன செய்யலாம் …? ” மொறு மொறுப்பாக சௌதாமினி சுட்டு போட்ட தோசையை சாப்பிட்டபடி அப்பாவிடம் கேட்டாள் ஜீவிதா .

” என்னம்மா செய்ய …? அதனை சேமித்து பக்குவப்படுத்தினால் நிறைய உதவும் .ஆனால் அதற்கான வசதிகள் நம்மிடம் இல்லை .மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்கு கொடுக்கலாமென்றால் இங்கே பக்கத்தில் எதுவும் இல்லை .தூரமாக அவற்றை பாதுகாத்து கொண்டு போய் சேர்த்து விட்டு வரும் செலவிற்கு  அதில் வரும் லாபம் மிக குறைவாகிருக்கிறது .அதனால் அதனை அப்படியே விட்டு விட்டேன் ….”

” அதற்காக நிறைய மருந்துகளுக்கு உதவும் இந்த முந்திரி பழங்களை வேஸ்ட் பண்ணலாமா அப்பா …? நாமே அதை பக்குவப்படுத்தி உபயோகிக்கும் வகையில் ஒரு பாக்டரி ஆரம.பித்தாள் என்ன …? “




இப்போது ஜீவிதாவின் தட்டுக்கு வந்த தோசையில் உற்சாகம் மிகுந்திருந்த்து . நிமிர்ந்து பார்த்த போது சௌதாமினியின் முகமும் உற்சாகமாயிருந்த்து .இது போல் கணவனும் , மகளும் தொழில் பேசியபடி அமர்ந்து உணவுண்பதை அவள் மிக விரும்புகிறாளென்பதை உணர்ந்த ஜீவிதாவிற்கு உடனே அந்த உற்சாகத்தை உடைக்க வேண்டும் போலிருந்த்து .இப்படி தன் கணவன் , தன் குடும்பமென்ற சிறு வட்டத்திற்குள் சுழன்றுதானே சொந்தங்களையெல்லாம் விரட்டிவிட்டு இவ்வளவு பெரிய வீட்டில் குரங்கு போல் தனியாக உட்கார்ந்திருக்கிறாள் .இதனை உடனே அன்னைக்கு விளக்க வேண்டிமென தோன்றியது .

” ம் ஆரம்பிக்கலாம் .யார் பார்ப்பது …? இப்போது இன்னொரு புது தொழிலை ஆரம்பித்து கவனிக்கும் நிலைமையில் நான் இல்லை பாப்பு …” சோர்வுடன் ஒலித்தது சபாபதியின் குரல் .

தந்தையின் மனச்சோர்வை புரிந்து கொண்டவள் ” சிவ …சிவா நானென்னவோ உங்களை பழங்களை கூடையில் அள்ளி தலையில் சுமந்து விற்க சொல்வது போல்ல்லவா சலித்து கொள்கிறீர்கள் அப்பா …? ” கிண்டலாக அப்பாவை தேற்ற முனைந்தாள் .

” இல்லைடா …என்னால் முடியுமென்று தோன்றவில்லை “

” என்னப்பா இது கம்பு ஊன்றி நடக்கும் கூனக்கிழவன் போல் பேசுகிறீர்கள் .நீங்கள் மிகுந்த உடல் ஆரோக்யத்தோடு இருக்கிறீர்கள் .அது எனக்கு தெரியும் .இந்த சிறிய தொழில்ஆரம்பிப்பது  நமக்கு பெரிய விசயம் இல்லை .நீங்கள் தொடங்குங்கள் .நானும் சேர்ந்து பார்த்துக் கொள்கறேன் “

” வேண்டாம்டா ….ஏற்கெனவே உனக்கு அதிக வேலை . காலை ஒன்பது மணிக்கு க்ளினிக் போனால் மாலை ஏழு மணியாகிறது வீட்டுக்கு வருவதற்கு .இங்கேயும் அவசரமென்று பேஷன்ட்ஸ் வருகிறார்கள் ்இதில் கிடைக்கிற கொஞ்ச ஓய்வு  நேரத்திலும் மற்ற தொழில்களையும் பார்க்க ஓடினால் …உடம்பு என்னத்துக்காகும் ? “

” டாக்டரிடமேவாப்பா …என் உடம்பை நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா …? “

” ப்ச் …இந்த முந்திரிப்பழ பக்குவமெல்லாம் முன்பே செய்ய வேண்டுமென நான் யோசித்து வைத்திருந்த தொழில்தான் . இப்போது …தம்பி செய்து கொண்டிருக்கிறான் …”

சபாபதியின் சலிப்பின் காரணம் இப்போது புரிந்த்து .தனது தொழில்களை சிவபாலன் மூலமாக வளர்க்க திட்டமிட்டிருந்திருக்கிறார் .இப்போது அவன் சேதுபதி பக்கம் போகவும் இது போல் வெறுத்து பேசுகிறாஈர் .பெண்குழந்தைகள் மட்டுமே உள்ள தொழிலதிபர்களுக்கெல்லாம் இப்படித்தான் தங்கள் தொழில்களில் ஒரு விரக்தி ஏற்பட்டு விடும் போல .




” சித்தப்பா என்ன செய்கிறார் அப்பா …? “

” தொலும்பு ( பச்சை கொட்டை ) எண்ணெயை மருந்து கம்பெனி அனுப்பிட்டிருக்கிறான் .முந்திரி இலைகளை  பக்கவப்படுத்தி ஏதோ  காய்ச்சல் மருந்தாமே அது தயாரிக்க ஒரு பாரின் கம்பெனி கூட ஒப்பந்தம் போட்டிருக்கிறானாம் .அப்புறம் ஒரு கோவா ஜின் கம்பெனி கூட பழச்சாறு தயாரிக்க பேச்சு நடத்திட்டிருக்கானாம் …”

இவையெல்லாம் ஜீவிதா முன்பே அறிந்த விபரங்கள்தான் .அரை குறையாக …சிவபாலன் முன்பு சொன்னவை . தொலும்பு எண்ணெயை பிசின் , பீனைல் தயாரிக்கவும் , இலைகளை இருமல் , சுகர் , காய்ச்சல் மருந்து தயாரிக்கவும் , முந்திரி பழ சாற்றை ஒயின் தயாரிக்கவும் உபயோகப்படுத்த போவதாக சௌந்தரத்திடம் , சபாபதியிடம் சொல்லியிருக்கிறான் .அவனது டாக்டர் படிப்பு மறுக்கப்பட்ட உடனேயே அவன் கவனத்தை தொழில்களின் புறம் திருப்பிவிட்டான் .எதையாவது செய்து தனது திறமையை நிரூபிக்க துடிப்பாய் இருந்தான் .

  .அந்த ஊரில் இருக்கும் முந்திரி தோப்புகளில் எண்பது சதவிகிதம் அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமானதுதான் .அவ்வளவு பெரிய உற்பத்தியை மையமாக வைத்து முன்பு அவன் போட்ட திட்டங்கள் சரியாக இருந்தன. இப்போதோ சகோதர்ர்கள் சண்டையிட்டு சொத்துக்களை பிரித்துக் கொண்டனர் .பாதியாகி விட்ட தனது முந்திரி உற்பத்தியை வைத்து இது போல் புது தொழில்களை ஆரம்பிக்க எப்படி திட்டமிடுகிறான் …ஜீவிதா யோசித்தாள் .

” நமது ஊரில் தோப்பு வைத்திருப்பவர்கள் எல்லோரும் அவனுக்கு பழங்கள் , இலைகள் தர ஒப்பந்தம் போட்டு விட்டார்கள் …”

ஆனாலும் …சரியாக வருமா …அவனுக்காக யோசித்தபடி ” அப்போது நாமும் ஊரோடு ஒத்து போக வேண்டியதுதான்….” விளையாட்டாக கூறினாள் .

” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ்அங்கெல்லாம் போக கூடாது ” பதறியபடி வந்து நின்றாள் சௌதாமினி .

அசூசையுடன் தாயை ஏறிட்டவள் …” ஆமாம் நாம் மூவரும் இப்படியே ஆளுக்கு ஒரு திசையில் திரும்பி உட்கார்ந்து கொண்டே இருப்போம் .ஒற்றைக் குரங்கு போல …” உடனே பதிலடி கொடுத்தாள் .




” எதையோ பார்த்து எதுவோ குலைக்குதுன்னு பேசாமல் இரு பாப்பு …” சபாபதி நிதானமாக தட்டில் கை கழுவியபடி சொல்ல சௌதாமினி முகம் சோர்ந்து உள்ளே போனாள் ்ஆனாலும் ஜீவிதாவின் ஆத்திரம் தீரவில்லை .

” இப்போதுதான் நாமும் அங்கே போய் சேர்ந்து கொண்டாலென்ன என்று ரொம்பவும் தோன்றுகிறதுப்பா …” எனக் கூறி திரும்ப சௌதாமினியை அதிர வைத்துவிட்டு களம்பினாள் .

————–

” என்னென்ன கெட்ட பழக்கம் வைத்திருக்கிறீர்கள் ஐயா …? ” தன் முன்னால் உட்கார்ந்திருந்த அந்த வயதானவரை அதட்டியபடி அவரது நாடித்துடிப்பை சோதித்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா .

” எப்பவாவது சுருட்டு குடிப்பேனுங்க டாக்டரம்மா …” நாணிக் கோணிக் கொண்டிருந்தார் அவர் .

” அங்க கதவை திறந்துட்டு வரும் போது இங்க சுருட்டு வாடை அடிக்குது .எப்பவாவதுன்னு பொய் சொல்றீங்களே ….வேறு என்ன பழக்கம் இருக்குது …? “

” கொஞ்சமா புகையிலை போடுவேன் .விசேச நாளில் கள்ளு குடிப்பேன் …” அடுக்கிக் கொண்டே போக …

” சரிதான் அத்தனை கெட்ட பழக்கங்களையும் ஒட்டு மொத்தமா பழகி வச்சுக்கிட்டு இங்கே வந்து மூச்சு திணறுது , நெஞ்சு அடைக்குது , வயிறு எரியுதுன்னு சொன்னால் என்ன அர்த்தம் .நாங்க டாக்டருங்க ஐயா .தெய்வங்கள் இல்லை . மந்திரம் போட்டு உங்கள் வலியை எல்லாம் ஒரு நாளில் போக்கடிக்க .உங்கள் உடம்மை நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் …” மருந்தை சீட்டில் எழுத தொடங்கினாள் .

கதவை திறந்து உள்ளே வந்த ஜெய்ந்தியிடம் மருந்தின் பெயரை சொல்லி இன்ஞெக்சன் போடச் சொன்னாள் .சிரிஞ்சை கைநிலெடுத்த ஜெயந்தி அவளருகில் குனிந்து ” சார் வந்திருக்கிறார் அக்கா .உங்களை பார்க்க வேண்டுமாம் ….”

” எந்த சார் ….? ” புரியாமல் கேட்க …

” உங்க சார்தான் ….” என்றுவிட்டு நாக்கை கடித்து நிறுத்தி ” சாரிக்கா சிவபாலன் சார் …” என்றாள் .

அந்த உங்கள் சார் ஏக்கங்களை கிளறி எரிச்சலூட்ட ” இப்போது பார்க்க முடியாது .பேஷன்ட்ஸ் நிறைய வெயிட் பண்ணிட்டிருக்காங்க .ஈவினிங் வரச் சொல் …” சொல்லி அனுப்ப , உள்ளிருந்த நோயாளி வெளியே கால் வைத்த அடுத்த நொடி கதவை தள்ளிக் கொண்டு அவன் உள்ளே வந்தான் .திடுமென்ற அவன் வரவில் அதிர்ச்சியுற்று …




” உங்களை வெளியே வெயிட் பண்ண சொன்னேன் …” கத்தினாள் .

” ஜெய்ந்தி வெளியே போ ….” பின்னால் வந்தவளை விரட்டினா்ன் .

” ஏய் போகாதே நில்லு …” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே …” அந்த ட்ரிப்ஸ் போட்ட பேஷன்டை பார்க்கனும் அக்கா …” ஜெயந்தி ஓடி விட்டிருந்தாள் .

” படித்திருக்கிறீர்கள் தானே .டீசன்சி தெரியாது உங்களுக்கு …? ” 
” வெளியே பெஞ்சில் காத்திருக்கும் உன் பேஷன்ட்ஸ்தான் நீங்கள் முதலில் உள்ளே போங்கள்னு என்னை அனுப்பிட்டாங்க .நான் என்ன செய்ய …? “

இருக்கலாம் .இங்கே வருபவர்ர்களில் பாதி பேருக்கு மேல் இவன்  தொழிற்சாலையிலும் ,  தோப்பிலும் வேலை செய்பவர்கள்தான் .முதலாளியை முதலில் உள்ளே அனுப்பியிருப்பார்கள் …உண்மை உறைக்க மௌனமானாள் .

” என்ன விசயம் …? “

” முந்தரி பழங்கள் விற்பதற்காக கடலூர் வரை போனாயா …? “

அடப் பார்றா ..அதிகாரத்தை .

” ஆமாம் …போனேன் …” நிமிர்வாய் அறிவித்தாள் .

” லட்சக்கணக்கில் முதல் போட்டு இங்கே பாக்டரி ஆரம்பித்து கொண்டிருக்கிறேனே .என்னை பார்த்தால் இளிச்சவாய் போல் தெரிகிறதா …? “

” என்னைக் கேட்டா முதல் போட்டீர்கள …? உங்கள் பொண்டாட்டியை கேட்டு போட்டிருப்பீர்கள் . அதற் கு நான் எப்படி பிணையாக முடியும் …? “

” உளறாதே …நான் உங்கள் தோப்புகளையும் சேர்த்துதான் இந்த பாக்டரிக்கு ப்ளான் பண்ணி வைத்திருக்கிறேன் …”

” அதெப்படி எங்களை கேட்காமல் ப்ளான் பண்ணுவீர்கள் ..? “

” உஷ் .. கத்தாதே .நம் ஏரியாவில் விளையும் பழங்கள் எல்லாமே என் பாக்டரிக்கு வேண்டும் …”

” முடியாது .என் பழங்களை நான் கடலூருக்குத்தான் அனுப்புவேன் …”

” ஏய்  லூசு …” திடுமென குரல் தாழ்த்திய அவன் பேச்சில் காரணம் புரியாமல் உடல் சிலிர்க்க நிமிர்ந்து அவனை முறைத்தாள் .




” கடலூர் வரை கொண்டு போகும் வரை பழங்கள் தாங்குமா .முந்திரிபழம் சீக்கிரம் அழுக கூடியதுன்னு தெரியாதா உனக்கு ..?  அதனால்தானே இது நாள் வரை பழங்களை ஆடு , மாடுகளுக்கு போட்டும் வீணாக குப்பையில் போட்டும் வேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தோம் .அதையெல்லாம் சரி பண்ண நம் ஊரிலேயே பேக்டரி ஆரம்பிக்கலாமென நினைத்தால் …மட்டி போல் தலையாட்டிக் கொண்டிருக்கிறாய் …   அது எந்த அறிவாளி உன்னிடம் இங்கிருந்து பழங்களை வாங்கிக. கொள்வதாக சொன்னவன் …ம் ..? “

உனக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்தவன் யார் என்ற ரீதியில் இருந்த அவன் பேச்சு , பட்டவர்த்தனமாக ஜீவிதாவை முட்டாளாக்கியது .லூசு…மட்டி …இவன் என்னை என்ன நினைத்தான் …? கோபமேற ஜீவிதாவின் கைகள் டேபிள் வெயிட்டை எடுத்துக் கொண்டது .

பின்விளைவு எதுவானாலும் பரவாயில்லை …இதனால் இவன் மண்டையை உடைத்து விட வேண்டியதுதான் என்ற முடிவோடு வீச உயர்ந்த அவள் கையை அழுத்தி பிடித்தான் சிவபாலன் .

” இதோ ..இப்படியே லெப்ட் ஹேன்டில் இந்த கதவை திறந்து விட்டேன் வையி .வெளியே உட்கார்ந்திருக்கற உன் பேஷன்ட்ஸ் எல்லாம் உன்னோட இந்த கோலத்தை பார்த்து ரொம்ப மகிழ்வாங்க .செய்யட்டுமா …? ” சேரோடு பின்னால் சரிந்து இடது கையை கதவிற்கு கொண்டு போனான் .

கொஞ்சம் முன்பு மறைமுகமாக சொன்னதை இப்போது கொஞ்சம் நேரடியாகவே கேட டுவிட்டான் .நீயெல்லாம் டாக்டரா …என்று .விழித்தபடி கதவையும் , அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவளின் கையை டேபிள் வெயிட்டோடு இறக்கி திரும்ப டேபிள் மீதே வைத்தான் .

” மண்டையை உடைத்து விட்டு கொட்டும் ரத்தத்தற்கு மருந்தும் நீயே போடலாமென நினைத்தாயோ …? ” அவனது கேள்வி ரத்தம் வழியும் அவன் நெற்றியை மனக்கண்ணில் கொண்டு வர ..தன்னையறியாமல் ” சிவ …சிவா ..” என்றாள் .

” ம் …” என்றபடி அவளை கூர்ந்து பார்த்தவனின் பார்வையில் முகம் சிவந்தாள் .சை இவன் முன்னாலேயேவா சொல்லி வைப்பேன் …சிவபாலனுக்கு அவளது சிவ …சிவாவை மிகவும் பிடிக்கும் .அதை அவள் வாயால் கேட்பதற்காகவே அடிக்கடி அவளை ஏதாவது சீண்டிக் கொண்டிருப்பான் .இப்போது கூட அப்படித்தான் சீண்டினானோ …? சிவபாலனின் ரசிப்பு அவன் முகத்தில் வெளிப்படையாக தெரிய , திடுமென தன் பாதங்களுக்கு கீழ் சுழலொன்று உருவாவதை போல் உணர்ந்தாள் ஜீவிதா .

” நீங்க கிளம்புங்க …” தலை குனிந்து முணுமுணுத்தாள் .

” அடுத்த வாரத்திலிருந்து பழங்களை சேமித்து வைக்க ஆரம்பிங்க .நான் ஆளனுப்பி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை லோட் எடுத்துக் கொள்கிறேன் ….” வந்த வேலை முடிந்த்து .அவன் எழுந்துவிட்டான் .




” இதெல்லாம் நீங்கள் அப்பாவிடம்தான் பேசவேண்டும் …”

” உன்னை சமாளிப்பதுதான் எனக்கு கஷ்டம் ்உன் அப்பாவை எளிதாக சமாளித்து விடுவேன் ….” எவ்வளவு அலட்சியம் .அந்த அளவு இவனுக்கு அப்பா இடம் கொடுத்து வைத்ழிருக்கிறார் .அம்மாவுக்கு மட்டும் தெரிந்தால் அவ்வளவுதான் .ஜீவிதாவிறகு இப்போது சௌதாமினியை பற்றிய கவலை வந்த்து .

” கவலைப்படாதே ஜீவா .நான் பார்த்துக் கொள்கிறேன.” எழுந்து நின்று டேபிளில் இரு கைகளையும் ஊன்றி அவளை பார்த்துக் கொண்டு சொன்னான் .ஜீவிதா கண்களை மூடிக்கொண டாள் . ஜீவா …எத்தனை நாட்களாயிற்று இந்த பெயரை கேட்டு

” எப்படி இருக்கிறது …? ” அவன் கேள்வியில் கண் திறந்தாள் ….சிவபாலனின் பார்வை அவள் மார்பு மேல் கிடந்த ஸ்டெதஸ்கோப்பில் இருந்த்து .

” லிட்மேன் கம்பெனி …லேட்டஸ்ட் மாடல் ்பெஸ்ட் பார் ஸ்டெதஸ்கோப் …இஸ் திஸ் ஓ.கே பார் யு …? ” அன்று சொன்ன மறுநாளே இந்த ஸ்டெதஸ்கோப்பை வாங்கி கொடுத்து விட்டு விட்டான் . அதனை யூஸ் பண்ண ஆரம்பித்ததுமே வித்தியாசம் உணர்ந்து விட்டாள் ஜீவிதா .இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது ….?

அவனது கூர்மையான பார்வையில் கூசி தனது கழுத்து ஸ்டெதஸ்கோப்பை சுழட்டி டேபிளில் வைத்தாள் .இப்போது சிவபாலனின் பார்வை அவள் கண்களுக்கு மாறியது .

What’s your Reaction?
+1
10
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
ஆயிஷா. கே
ஆயிஷா. கே
3 years ago

அருமையான நகர்வு.. போடுறதுன்னு முடிவு பண்ணிட்டீங்கோ, அதை ஒரு நாளைக்கு இரண்டு இரண்டா போடப்படாதோ தாயீ…

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!