Entertainment lifestyles News

32 வயதில் 10 பிரைவேட் ஜெட்களை சொந்தமாக்கிய இந்திய பெண் -யார் இவர்?

பொதுவாகவே இந்தியர்களிடம் புதிய விஷயங்களைச் சட்டெனச் செய்து பார்க்கக்கூடிய ஒரு மனநிலை குறைவுதான்.

எம்பிஏ படித்த எத்தனை பேர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்ற விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் ஹெச் டி எஃப் டி, எம் ஆர் எஃப், சிட்டி பேங்க் போன்ற பழமையான பாரம்பரிய நிறுவனங்களில் பாதுகாப்பாக நல்ல சம்பளத்துக்கு பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்டால் அதிகப்படியான மாணவர்கள் பாரம்பரிய நிறுவனங்களின் பக்கம் திரும்புவதைப் பார்க்க முடியும்.




மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுப் படிப்பது, பெற்றோர்களை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், விரைவில் திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும், குறைந்தபட்ச வியாபார அனுபவமாவது பெற வேண்டும்… எனப் பலவற்றை இதற்குக் காரணமாகக் கூறலாம்.

ஒருவேளை வியாபாரம் செய்யத் தீர்மானித்தால் கூட, இதுவரை இந்தியாவில் தலை எடுக்காத ஒரு புதிய வியாபாரத்தைச் செய்து பார்க்க விரும்புகிறீர்களா அல்லது பழக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட், ஐடி நிறுவனம், ஐடி சார் சேவைகளை வழங்கும் நிறுவனம்… போன்றவற்றைச் செய்கிறீர்களா என்று கேட்டால் இரண்டாவது ஆப்ஷனை தான் அதிகப்படியான மக்கள் தேர்வு செய்வர்.

Kanika Tekriwal

குறைந்த ரிஸ்கில் ஓரளவுக்கு நல்ல காசு பார்க்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை சிந்தனையாக இருப்பது தான் இது போன்ற முடிவுகளுக்கு ஒரு முக்கிய காரணமாகத் திகழ்கிறது.




இதற்கெல்லாம் மாறாக 22 வயது இளம் பெண் ஒருவர் இந்தியாவிலேயே மிக மிகச் சிக்கலான, மிகக் குறைந்த லாபத்தில் இயங்கும் ஏவியேஷன் துறையில் தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அந்த இளைஞரின் பெயர் கனிகா தேக்ரிவால். ஜெட் செட் கோ (Jet Set Go) தான் அவரது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர்.

ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் எப்படி தன் பெயரில் ஒரு சொந்த ஆட்டோ அல்லது கார் வைத்திருக்காமல் மாபெரும் அக்ரிகேட்டார் டாக்ஸி நிறுவனமாக வலம் வருகிறதோ, அப்படி இந்தியாவிலுள்ள பல பிரைவேட் ஜெட்டுகள், சார்டர்ட் பிளேன்கள், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி ஒரு விமான டாக்ஸி அக்ரிகேட்டார் போல செயல்பட்டு வருகிறது ஜெட் செட் கோ (Jet set go).

இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 32 வயதாகும் கனிகாவிடம் சொந்தமாக 10 பிரைவேட் ஜெட்கள் இருக்கின்றன. பிரைவேட் ஜெட்டையை சொந்தமாக வைத்திருக்கிறார் என்றால் பாரம்பரியமாகப் பெரிய பணக்காரராகத் தான் இருப்பார். இவர் எல்லாம் இந்த தொழிலைத் தொடங்கி வெற்றி பெறுவது அத்தனை பெரிய விஷயம் இல்லை நண்பா என்கிறீர்களா.

அதுதான் இல்லை. மிக இளம் வயதிலேயே மரணத்தோடு போராடி வென்று தன் நிறுவனத்தை இன்று வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு பிரைவேட் ஜெட், சார்ட்டர்ட் விமானங்கள் பிரைவேட் ஹெலிகாப்டர் போன்ற பயண சேவைகளை பரவலாக்குவது, வெளிப்படைத் தன்மையோடு இயக்குவது, பொருளாதார ரீதியில் பலரும் பிரைவேட் ஜெட்களைப் பயன்படுத்தும் வகையில் விலையைக் குறைப்பது என்கிற நோக்கத்தோடு ஜெட் செட் கோ நிறுவனத்தை தொடங்கினார்.

ஜெட் செட் கோவுக்கான யோசனைகளை அசைபோட்டு ஆலோசித்து அதற்கு ஒரு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தபோதே கனகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெட் செட் கோ கனவுகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு சுமார் ஓராண்டுக் காலத்திற்குப் புற்றுநோய்க்காகச் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அதிர்ஷ்டவசமாக நான் புற்றுநோய் சிகிச்சையை நிறைவு செய்து என் தொழிலுக்குத் திரும்பும் வரை, யாரும் என்னைப் போலச் சிந்திக்கவில்லை அல்லது என் யோசனையைச் செயல்படுத்தவில்லை என வேடிக்கையாக இந்தியா டைம்ஸ் பத்திரிக்கையில் கூறியுள்ளார் கனிகா தேக்ரிவால்.




ஏன் இந்த யோசனை

பிரைவேட் ஜெட் விமானங்கள் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டுமெனில், பணக்காரர்கள் சந்தையில் இருக்கும் தரகர்களைத்தான் மிகப்பெரிய அளவில் நம்பி இருக்க வேண்டி இருந்தது.

தரகர்கள், தங்களுக்கு அதிக கமிஷன் கொடுக்கும் நிறுவனங்களின் சேவைகளையே தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைத்து வந்தனர். அது போக நேரம் தவறாமை போன்ற விஷயங்களில் சார்ட்டர்ட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பெரிய அளவில் சொதப்பின.

இது கால நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களை விரக்தி அடையச் செய்தது. உலகம் தொழில்நுட்பத்தின் உச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் போதும் பிரைவேட் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர்கள் விவகாரத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாமல் அந்தத் துறையே தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தது கனிகாவின் கண்ணில்பட்டது.

தேவையில்லாத தரகர் கமிஷன் போன்ற விஷயங்களால் பிரைவேட் விமான சேவை விலை மிக அதிகமாக இருந்ததால், அந்த சேவையை மிக மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்தது.

இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்கிற நோக்கில் தான் ஜெட் செட் கோவை தொடங்கினார் கனிகா. இன்று ஓரளவுக்குப் பெரிய பணக்காரர்கள் கூட ஜெட் செட் கோ வலைத்தளத்தில் தங்களுக்கான பிரைவேட் விமான சேவைகளை முன்பதிவு செய்து பயணங்களை மேற்கொள்கிறார்கள்.




தொழில்நுட்பம்

ஹெலிகாப்டர் போன்ற வெகு சில விமானங்கள் தான் செங்குத்தாக டேக் ஆஃப் செய்யவும் லேண்டிங் செய்யவும் முடியும். அதை மாற்ற எலக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆஃப் அண்ட் லேண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக ஜெட் செட் கோ நிறுவனமே தனியாகப் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

போயிங், ஏர்பஸ் போன்ற உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்கள் பலதும் எலக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆஃப் அண்ட் லேண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில விமானங்களை உற்பத்தி செய்துள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தொழில்நுட்பத்தினால் விமானத்தின் நிகர பறக்கும் நேரம் (Air Time) அதிகரிக்கும், தரையில் நிறுத்தப்பட்டிருக்கும் நேரம் குறைவாக இருக்கும். அதுபோக இதற்கான பராமரிப்புச் செலவுகளும் குறைவு. ஒட்டுமொத்தத்தில் இந்த தொழில்நுட்பத்தால் விமான நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் விமான பயணத்தை ஜனநாயகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என்கிறார் கனிகா தேக்ரிவால்.

ஒரு பாரம்பரிய மார்வாரி குடும்பத்தில் பிறந்த கனிகா தேக்ரிவாலின் தந்தை ரியல் எஸ்டேட் வியாபாரத்தையும் ரசாயண வியாபாரத்தையும் செய்து வருகிறார். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பும், முதுகலை வணிக மேலாண்மை படிப்பையும் நிறைவு செய்தவர். தன் நண்பர் மற்றும் துணை நிறுவனர் சுதீர் பெர்லா உடன் இணைந்து ஜெட் செட் கோ நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சமுகத்தில் இருக்கும் ஒரு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்படும் எந்த தொழிலும் நிச்சயம் வெற்றி பெரும் என்பது இளம் தொழிலதிபர்களுக்கு கொடுக்கப்படும் அடிப்படையான அட்வைஸ். இதனை மிகச் சரியாக செயல்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார் கனிகா. வாழ்த்துக்கள் கனிகா💐




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!