Serial Stories

சதி வளையம்-21

21 கலைடோஸ்கோப் – அய்யாக்கண்ணு

இன்ஸ்பெக்டர் சோர்ந்து போனவராக நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தார்.

“கூல் இன்ஸ்பெக்டர். கடைசிக் கட்டத்துக்கு வந்துட்டோம்” என்றாள் தன்யா.

இன்ஸ்பெக்டர் சற்றே உற்சாகமானார்.

“ஆக, இன்னும் அந்த முக்கியமான கேள்விக்கு, ஒரு சாதாரணத் திருட்டு வழக்காக இருந்ததைக் கொலைக் குற்றமாக மாற்றிய அந்த வெரி இம்பார்ட்டண்ட் கொஸ்டின் – அதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை” என்று சொல்லிப் புரொஜக்டரை இயக்கினாள் தன்யா. சுவரில் கேள்வி ஒளிர்ந்தது.

“ஹேமா அன்று எதை, எப்போது பார்த்தாள்?”

அறையில் இப்போது ஒரு இறுக்கம் தோன்றியிருந்தது.

“இதற்கு முன் கொடுத்த விளக்கங்களிலிருந்து உங்களுக்கு ஒன்று புலப்பட்டிருக்கும். அதாவது ஹேமா என்ன பார்த்தாள் என்பதை விட அவள் அதை எப்போது பார்த்தாள் என்பது முக்கியம்!” என்றாள் தன்யா. எல்லோரும் அவளையே உற்றுப் பார்த்தார்கள்.

“ஆறேகால் மணிக்குப் பாஸ்கர் வெளியில் சென்றார். அதிலிருந்து ஹேமா வீட்டிற்குக் கிளம்பிய ஏழு பத்து மணிக்குள் தான் அவள் இந்தக் குற்றம் நிகழ்வதைப் பார்த்திருக்க வேண்டும். இதை வைத்து யோசித்தால் நாம் முன் செய்த அஸ்ஸம்ப்ஷன்ஸ் எல்லாமே தவறாகிறது.

“அடுத்து, ஹேமா அங்கு யாரைப் பார்த்தாள் என்பது. ஹேமா நிச்சயம் இந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் யாரையோ தான் பார்த்திருக்க வேண்டும்.”

“என்ன சொல்றீங்க? அவர்கள் எல்லோருமே பார்ட்டிக்காகப் புல்வெளிக்கு வந்துவிட்டார்கள். மீண்டும் உள்ளே போயிருந்தால் நிச்சயம் அய்யாக்கண்ணுவின் கண்ணில் படாமல் போக முடியாது. அப்படின்னா…” இன்ஸ்பெக்டர் மெதுவாய் அய்யாக்கண்ணுவை நோக்கித் திரும்பினார்.

“அய்யா! நான் இல்லைய்யா! நான் திருடலைய்யா! நான் ஏமாவைச் சத்தியமாக் கொல்லலைய்யா!” என்று அலறினான் அய்யாக்கண்ணு.

இன்ஸ்பெக்டர் உறுதியான அடிகள் வைத்து மெதுவாய் அய்யாக்கண்ணுவை நெருங்கினார். அய்யாக்கண்ணு பயந்து குறுகினான்.

தன்யா அவர்கள் இருவருக்கும் இடையில் நின்று கொண்டாள். “இன்ஸ்பெக்டர், ஒரு நிமிஷம். நான் சில சந்தேகங்கள் அய்யாக்கண்ணு கிட்ட கேட்கலாமா? உங்களுக்கு இன்னும் க்ளியர் பிக்சர் கிடைக்கும்.”

இன்ஸ்பெக்டர் கையை வீசி அனுமதி வழங்கிவிட்டுச் சற்று விலகி நின்றார்.

தன்யா அய்யாக்கண்ணுவை ஏறிட்டாள். “இங்கே பார் அய்யாக்கண்ணு. பயப்படாதே. என்னைக் கவனி. இப்போ இந்தக் கேள்விகளுக்கு யாருக்கும் பயப்படாம, ஆனா நல்லா யோசிச்சு, சரியான உண்மையான பதில் சொல், பார்க்கலாம்.”

“சரிம்மா” கண்ணைத் துடைத்துக் கொண்டு, தலையை ஆட்டினான் அய்யாக்கண்ணு.

“அன்னிக்கு வீட்டிலிருந்தவங்க எல்லாரும் எப்போ வெளியில புல்வெளிக்குப் போனாங்க, உனக்குத் தெரியுமா?”

“தெரியும்மா. என்னைப் பெரிய ராசா இண்டர்காமில கூப்பிட்டு ஏதோ பூவெல்லாம் அழகா பண்ணியிருக்குமே, பொகே, அது ரெண்டு கொடுத்து, கொண்டு வெளியே வைக்கச் சொன்னார். அப்போ மணி ஆறு கிட்ட இருக்கும். நான் கொண்டு வச்சிட்டு, வெச்சாச்சுன்னு சொன்னேன். உடனே பெரிய ராசாவும், சின்ன ராசாவும் புல்வெளிக்குப் போயிட்டாங்க. அவங்க போனதும் முன் கதவு பூட்டினாங்க. நான் கேட்டுக்குப் போயிட்டேன்.”




“அன்னிக்கு முன்வாசற்கதவை எப்போ பூட்டினாங்க?”

“ஆறு மணிக்கும்மா.”

“யார் பூட்டினது?”

“சுசாதாம்மா.”

“பூட்டிட்டு வெளியே போயிட்டாங்களா?”

ஆம் என்று தலையாட்டப் போன அய்யாக்கண்ணு தயங்கினான். இந்தச் சாதாரண கேள்விக்கு வெகு நேரம் யோசித்தான்.

“அம்மா, அவங்க பூட்டை உள்பக்கமாத் தாம்மா பூட்டினாங்க” என்றான் மெதுவாக.

“அப்போ, அவங்க எப்போ, எப்படி வெளியில் போனாங்க?” என்று கேட்டாள் தன்யா.

அய்யாக்கண்ணு விழித்தான்.

“நீ மறுபடி எப்பவாவது புல்வெளிக்குப் போனியா?”

அய்யாக்கண்ணு பதில் சொல்வதற்குள் பாஸ்கர் இடைவெட்டினான். “ஆமாம். அன்னிக்குப் பார்ட்டியில் கட் பண்றதுக்காக ஒரு பெரிய கேக் ஆர்டர் பண்ணியிருந்தது. அதை அய்யாக்கண்ணுவைத்தான் கேர்ஃபுல்லா கொண்டு வரச் சொல்லிட்டு நான் முன்னாடி போயிட்டேன். அவன் பின்னாடி வந்தான்” என்றான்.




“ரூமுக்கு உள்ளே வந்து கேக்கை எடுத்தாராக்கும் அய்யாக்கண்ணு சார்?” என்று கிண்டலாகக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“டோண்ட் பி ஸில்லி. அதை நான் அவனுக்கு வாசலில் வைத்துத்தான் கொடுத்தேன். என் கை கேக்குக்கு அடியில் இருந்ததால அவன் மோதிரம் இருக்கா இல்லையான்னு பார்க்கக்கூடச் சான்ஸ் இல்ல.”

“இதையெல்லாம் கவனிக்கப் பல மணி நேரமா வேணும்? சில விநாடிகள் போதுமே. உங்க கையில மோதிரம் இல்லைன்னு நோட்டிஸ் பண்ணியிருக்கான். உடனே ரூமுக்கு வந்து தேடியிருக்கான். கிடைச்சிருக்கு. அதை உங்க கிட்டக் கொடுத்திடலாம்னுகூட அவன் எடுத்து வச்சிருக்கலாம். அப்புறம் தான் சபலம் தட்டியிருக்கு, தானே வெச்சுக்கிட்டான். இதை அவன் தான் எடுத்தான்னு யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சான், ஆனா அவன் மனைவியே அதைப் பார்த்திருக்கா. அதனால அவளைத் தீர்த்துட்டான்.”

“ஓ” என்று அழ ஆரம்பித்தான் அய்யாக்கண்ணு.

“சூப்பர் இன்ஸ்பெக்டர்” என்றாள் தன்யா. குரலில் மெல்லிய கேலி இழையோடியது. “ஒரு கேள்வி.”

“கேள்வி கேட்டே என்னைக் கொன்னுடுங்க! என்ன கேள்வி?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அய்யாக்கண்ணுதான் திருடன்னா, ஹேமா இதைப் பற்றி அவனோடு எப்ப வேணா நேரடியா டிஸ்கஸ் பண்ணலாமே! திருட்டு நடந்து மூணு நாள் கழிச்சு, மறைமுகமாகச் செய்தி சொல்லவேண்டிய அவசியம் என்ன?”

இன்ஸ்பெக்டர் நொறுங்கிப் போனார். “இப்போ என்னதான் சொல்ல வரீங்க? நல்ல கேஸ் வந்ததுய்யா, இடியாப்பச் சிக்கல் மாதிரி!” என்று அங்கலாய்த்தார்.

“அதான் சிக்கலைப் பிரிச்சிட்டிருக்கோமே! பதிலைக்கூட உங்க கையில் கொடுத்தாச்சு. நீங்கதான் அதைக் கவனிக்காம ரூட் மாறிட்டீங்க!” என்றாள் தன்யா, புன்னகையுடன்.

“என்ன சொல்றீங்க?” என்று வியப்புடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“இனி கலைடோஸ்கோப்பின் கடைசி ரொடேஷன். நிஜம்” என்றாள் தன்யா.




What’s your Reaction?
+1
7
+1
5
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!