Serial Stories

சதி வளையம்-20

20 கலைடோஸ்கோப் – ஹேமா

இன்ஸ்பெக்டர் சற்றுத் திணறினாலும் சமாளித்துக் கொண்டார். “ரைட், ரைட். உங்களுக்கு அது முக்கியம். இவனை அரெஸ்ட் பண்ணி இறுக்கற இறுக்கில் அதைக் கக்க வெச்சுடறேன். பிராமிஸ்! அடுத்த கேள்வி?” என்றார்.

“ஹேமா! அவள் என்ன பார்த்தாள்னு சொன்னீங்க. எப்போ பார்த்தாள்?” என்றாள் தன்யா.

இன்ஸ்பெக்டர் விழித்தார். “புரியலயே” என்றார்.

“கவனிங்க இன்ஸ்பெக்டர். இந்தக் கேஸில் நம்மைக் குழப்பியதற்கான சகல க்ரெடிட்டும் திருவாளர் அய்யாக்கண்ணு அவர்களுக்கே போகிறது. அவன் சொன்னதில் இருந்த ஓட்டைகளை எல்லாம் தர்ஷினி கவனிச்சிருக்காட்டா இந்தக் கேஸை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கவே முடியாது” என்றாள் தன்யா, தர்ஷினியைப் பெருமையுடன் பார்த்தவாறே.

“கண்டிப்பாக. டாக்டரை ஒரு வழி பண்ணிட்டீங்களே!” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அது மட்டுமில்லை சார். இன்னும் ஒண்ணு இருக்கு. அய்யாக்கண்ணு!” என்று கூப்பிட்டாள் தன்யா.

அய்யாக்கண்ணு தயங்கியவாறு எழுந்து நின்றான்.

“அய்யாக்கண்ணு, எல்லாரும் உள்ளே போன நேரம், வெளியில் வந்த நேரம் எல்லாம் சொன்னே. ஹேமா எப்போ வீட்டுக்கு வெளியில் போனா? சொல்லவே இல்லையே நீ!” என்றாள் தன்யா.

அய்யாக்கண்ணு குழம்பினவனாக தன்யாவைப் பார்த்தான். “அம்மா, என் ஏமா மேல சத்தியம் வெச்சுச் சொல்றேன் (தன்யாவும் தர்ஷினியும் மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டார்கள்!). ஏமா அன்னிக்கு லேட்டாத்தான் வீட்டுக்குப் போனாங்கறதே நீங்க சொல்லித் தாம்மா எனக்குத் தெரியும். அவ வழக்கம் போல ஆறு மணிக்குப் போயிட்டான்னு நினைச்சேன்மா” என்றான் தழுதழுத்த குரலில்.

“தன்யா ஒன் மினிட். நீங்க என்ன சொல்ல வரீங்க? ஹேமா ஏழு இருபது வரை வீட்டில் இருந்திருக்கணும். விஜய்யைப் பாஸ்கர் ரூமில் பார்த்த பின்னாடி கிளம்பியிருக்கணும். அவ்வளவுதானே மேட்டர்?” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அப்படின்னா, அவ அய்யாக்கண்ணு கண்ணிலே பட்டிருப்பாளே சார்?” என்று மடக்கினாள் தன்யா.

இன்ஸ்பெக்டர் தடுமாறினார். பிறகு பிரகாசமடைந்தவராக, “யெஸ் யெஸ். அவ அந்த ஏழரை மணி வாக்கில் இருந்த ரஷ் டயத்தில் வெளியில் போயிருக்கணும், இல்லையா?”

இதற்குத் தன்யாவுக்கு முன் அய்யாக்கண்ணு பதில் சொன்னான் சற்று வேகமாக – “என்னை என்ன கண்ணில்லாத கபோதின்னு நினைச்சீங்களா சார்? என்னதான் ரஷ்னாலும், என்னைத் தாண்டி எனக்குத் தெரியாமல் ஒரு துரும்பு கூட வெளியில் போக முடியாது, உள்ளே வர முடியாது. அதோட ஏமா என்னைப் பார்த்தும் என் கிட்டச் சொல்லிக்காம வீட்டுக்குப் போகவே மாட்டா” என்றான் ஆவேசமாக.

“தேர் யூ ஆர்” என்றாள் தன்யா.

இன்ஸ்பெக்டர் தலையைப் பிய்த்துக் கொள்ள முடியாமல் தொப்பி தடுத்தது.

“புரியும்படியாகவே சொல்றேன். ஹேமா, அய்யாக்கண்ணு கண்ணில் படாமப் போகணும்னா, ஒரே ஒரு நேரத்தில் தான் சாத்தியம். அதாவது அய்யாக்கண்ணு அவுட் ஹவுஸை நோக்கிப் போன நேரம் – ஏழேகால் மணி வாக்கில். இது ஒரு வருந்தத் தக்க தற்செயல் நிகழ்வு. இது நிகழ்ந்திருக்காட்டா ஒரு வேளை ஹேமா தான் பார்த்ததை அய்யாக்கண்ணுவிடம் அப்போதே சொல்லியிருப்பாள். பாவம், இப்போது உயிருடன் இருந்திருப்பாள்.




“இன்னும் விளக்கமாகச் சொல்றேன். அய்யாக்கண்ணு அவுட் ஹவுஸை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்த அந்த ஒரு நேரம்தான் அய்யாக்கண்ணு பாஸ்கர் அறை மற்றும் வீட்டின் முன்வாசல் நோக்கிச் செல்லும் பாதைகளுக்கு முதுகு காட்டிக் கொண்டிருப்பான். அந்த நேரம்தான் ஹேமா, பின்வாசல் வழியாக, வீட்டைச் சுற்றிக் கொண்டு கேட்டுக்கு வந்து சேர்ந்திருக்கணும். அங்கே அய்யாக்கண்ணு இல்லை, அவன் பெண்வீட்டுக் காரங்களோடு போறதைப் பார்த்துட்டு அவனைக் கூப்பிடாமலே அவள் விக்கெட் கேட் வழியா வெளியே போயிருக்கணும்.”

இன்ஸ்பெக்டர் அவள் சொன்னதை யோசித்துப் பார்த்தார். “ஓகே. லாஜிகலாத் தான் இருக்கு. அந்த நேரம் வெளியே இருந்து வேறு யாராவது உள்ளே வந்திருந்தா… ரைட், ரைட், அய்யாக்கண்ணு அவர்கள் கடந்து போகும்போதோ, வீட்டுக்குள் நுழையும்போதோ, அட்லீஸ்ட் வெளியில் வரும்போதாவது பார்த்திருப்பான்.”

இன்னும் சற்றுச் சிந்தித்த இன்ஸ்பெக்டர் எரிச்சலாய்ச் சொன்னார் – “என்ன தன்யா, கேஸோட அடிமடிலயே கையை வெச்சுட்டீங்க! அவ ஏழேகாலுக்கு வெளியே போயிட்டான்னா, ஏழு பத்து வாக்கிலே அவ வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கணும். அப்போ, விஜய்யையோ, அவன் அப்பாவையோ அவள் பார்த்திருக்கச் சான்ஸே இல்லையே!”

“எக் … ஸாக்ட் …லி!” என்றாள் தன்யா அழுத்தமாக.




What’s your Reaction?
+1
7
+1
5
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!