Serial Stories

சதி வளையம்-19

19 அரெஸ்ட்!

“டு சம்மரைஸ் …” என்று நிறுத்தினாள் தன்யா.

“இந்த சம்மர் ரைஸ், வெஜிடபிள் ரைஸெல்லாம் இருக்கட்டும். ஆள் யாருன்னு அழகு தமிழில் சொல்லுங்க தன்யா” என்றார் போஸ். 

தன்யா லேசாகப் புன்னகைத்து விட்டுத் தொடர்ந்தாள். “இப்போ வட்டம் ரொம்பச் சுருங்கிப் போச்சு இன்ஸ்பெக்டர். டாக்டர் சொல்றது உண்மைன்னு வெச்சுக்கிட்டா, இதை எடுத்திருக்கக் கூடியவங்க மூணே மூணு பேரு தான். – விஜய், சதானந்தன், சுஜாதா.”

“சுஜாதாவைத் தான் ஏற்கெனவே எலிமினேட் பண்ணிட்டோமே” என்றார் இன்ஸ்பெக்டர். அவர் கண்கள் சதானந்த ….னைத் … தாண்டி விஜய் மேல் லயித்தது.

தன்யா அவர் பார்வையைத் தொடர்ந்தாள். விஜய் உடல் நடுங்க ஆரம்பித்தான்.

“எப்போதுமே சிம்ப்பிள் சொல்யூஷன் தான் கரெக்டா இருக்கும். விஜய் தான்னு ஆரம்பத்திலேர்ந்தே நினைச்சோம். நாம நினைக்கிறது பெரும்பாலும் கரெக்டா இருக்கும் சஸ்பென்ஸ் முடிவு தான் வரணும்னு எதிர்பார்க்கறதுக்கு இது … கதையல்ல நிஜம்” என்றார் போஸ் நாடகத்தனமாக.

“சதானந்தன் சார் இல்ல, விஜய் தான்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க இன்ஸ்பெக்டர்?” என்று கேட்டான் தர்மா.

“தெள்ளத் தெளிவா தெரியுதே பிரதர். அவங்க அப்பா சாட்சியம் ஒண்ணு மட்டுமே போதுமே, இவன் தான் மோதிரத்தை எடுத்திருக்கான்னு ப்ரூவ் பண்ண” என்றார் இன்ஸ்பெக்டர்.

“நோ! நம்ப வெச்சுக் கழுத்தறுத்துட்டீங்க. என் பிள்ளை இதைப் பண்ணலைன்னு சொன்னீங்களே” என்று சதானந்தன் அழமாட்டாக்குறையாகக் கேட்டார்.

“ஹைனஸ், பொறுமையா நான் சொல்றதைக் கேளுங்க. உங்க பிள்ளை குவாட்டருக்காகக் குடும்பத்தையே விக்கக் கூடியவன்னு நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும். நாங்க விஜய்யைச் சந்தேகப்பட முக்கியமான காரணம், ஹேமாவுக்குப் பக்கத்தில் கிடந்த லாக்கர் சாவி. அது உங்க சாவி தான், அதை எடுத்து வந்தது விஜய்யாகத்தான் இருக்கணும். மோதிரத்தை அரக்கில் குடும்பத்திற்குப் பாஸ் பண்ண அந்த லாக்கரை ஒரு சானலாகப் பயன்படுத்தத் திட்டம்னு நாங்க ஊகிக்கறோம். உன்னிமுகுந்தன் கைக்கு மோதிரம் போகாததற்கும் இது தான் காரணம். இப்போதைக்குச் சந்தேக வட்டத்திலிருந்து தப்பிச்சுட்டு அப்புறம் சாவகாசமா அந்த மோதிரத்தை எடுத்துக்கலாமே! சென்னையில் விஜய்யை உன்னி சந்திச்சதா நாங்க நிரூபிக்கவே முடியாது. ஆனா சந்திக்காமலே அவங்க டீலிங் முடிஞ்சிரும். சரிதானே விஜய் சார்?” என்று நீளமாகப் பேசி நிறுத்தினார் இன்ஸ்பெக்டர்.

“நல்ல கற்பனை. எந்தச் சினிமாலேர்ந்து சுட்டீங்க சார்?” என்றாலும் விஜய்யின் விரல்கள் நடுங்கின.

“என் பிள்ளைக்கடுத்தது நான் ரூமுக்குள்ளே போனேன், அப்போ மோதிரத்தைப் பார்த்தேன்னு அஃபீஷியலா ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கேன்” என்றார் சதானந்தன் மூச்சிரைக்க.

“அப்போ நீங்கதான் மாட்டுவீங்க சார். திருட்டு மட்டுமில்ல, கொலைக் கேஸிலேயும்” என்றார் போஸ்.

சதானந்தன் அதிர்ந்தார். சமாளித்துக் கொண்டு, “பரவாயில்லை, இம்மீடியட்டா என்னைக் கைது பண்ணுங்க. ரெண்டு குற்றங்களையும் ஒப்புக்கறேன்” என்றார் கண்ணீரோடு.

“அச்சா! வேணாம் அச்சா! எனக்கு வேண்டி நீங்க …” என்று அலறினான் விஜய்.

“சும்மா இரு விஜய். நான் உண்மையை …”

“நான் சொல்றேன். சார், நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான். என்னை அரெஸ்ட் பண்ணுங்க” என்றான் விஜய்.




இன்ஸ்பெக்டர் தன்யாவைப் பார்த்தார்.

தன்யா நிதானமாக நடந்து சதானந்தன் முன்னால் வந்து நின்றாள். “ஹைனஸ், நீங்க ராஜ பரம்பரையில வந்தவங்க. உங்க குடும்பக் கலாச்சாரத்தையும் பெருமையையும் ஞாபகப்படுத்திக்கிட்டு இந்த ஒரே ஒரு கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லுங்க. என்னை நம்பிச் சொல்லுங்க. நீங்க பாஸ்கர் அறைக்குப் போன போது அங்கே டேபிள் மேல மோதிரம் இருந்ததா, இல்லையா?”

சதானந்தன் அமைதியாகச் சொன்னார். “உன்னை நம்பறேன் தன்யா. உண்மையைச் சொல்றேன். அங்கே மோதிரம் இல்லை.”

“விஜய்?”

“நாந்தான் கவனிக்கலைன்னு சொல்லிட்டேனே!” என்றான் விஜய் வெறுப்பாய்.

“எல்லாத்தையும் கவனிக்கணும் யங்மேன். நாளைக்கு நீ ஜெயிலுக்குப் போனேன்னா இதை நினைச்சுக்கோ” என்றாள் தன்யா.

விஜய் கண்ணில் நீர்மல்கியது.

“வெரிகுட். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிஞ்சிடுச்சு. ஹேமா பார்த்தது விஜய் மோதிரத்தை எடுத்ததைத்தான். அவனை நெருங்கி இதைச் சொல்ல முயற்சி பண்ணியிருக்கா. ஆனா, அவளை விரட்டிட்டான். அதனால பூடகமாகச் சொல்லியிருக்கா. விஜய் புரிஞ்சிக்கிட்டு, அவளைத் தீர்த்துட்டான். அப்போ நடந்த போராட்டத்தில் லாக்கர் சாவி கீழ விழுந்திருக்கு. வெல்டன், தன்யா அண்ட் தர்ஷினி!” என்றார் இன்ஸ்பெக்டர் உற்சாகமாய். 

“இன்னும் ரெண்டு கேள்வி இருக்கே, இன்ஸ்பெக்டர்!” என்றாள் தன்யா, மெதுவாய்.

பாலாய்ப் பொங்கிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரின் உற்சாகம் சற்று அடங்கியது. “வாட் டூ யூ மீன்?” என்றார்.

“கேள்வி ஒன்று. முதல் கேள்வி. ‘மோதிரம் இப்போ எங்கே?‘”




What’s your Reaction?
+1
4
+1
5
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!