Serial Stories

சதி வளையம்-18

18 கலைடோஸ்கோப் – டாக்டர் திலீப்

“இப்போ நாம பார்க்கப் போறது … டாக்டர் திலீப்.”

டாக்டர் தீலீப்பின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தாள். “இவரைக் கன்சிடர் பண்ணுவதற்கு முன்னால் இன்னொரு காரெக்டரைப் பார்த்துடலாம். அய்யாக்கண்ணு. அய்யாக்கண்ணுவின் நேர்மை பற்றியும், விலைபோகாத தன்மையைப் பற்றியும் பல பேர் நமக்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டாங்க. அதைக் கொஸ்டின் பண்றதுக்கே இல்லை. ஆனா வேற ஒரு தப்பு அய்யாக்கண்ணு மேல இருக்கு.”

“அம்மா, நான் விசுவாசிதான். ஆனா விசுவாசத்துக்காக நான் கொலை பண்ணறவன் இல்லேம்மா” என்று அலறினான் அய்யாக்கண்ணு. “ஏமா இப்படி உண்மையை மறைச்சுப் பணம் சம்பாதிக்க நினைச்சிருக்கான்னும் நான் நினைச்சே பார்க்கலைம்மா” மூசுமூசுவென்று அழுதான்.

“அழாதே அய்யாக்கண்ணு. உன் தப்புன்னு நான் சொன்னது, நீ எங்ககிட்டச் சொன்னதில் பல விஷயம் அவ்வளவு தெளிவில்லாம இருந்தது தான். இப்போ அதையெல்லாம் தெளிவு படுத்திக்கப் போறோம்.”

அய்யாக்கண்ணு விழித்தான்.

தர்ஷினி தன் டேப்லட்டை ஆன் செய்தாள். “அய்யாக்கண்ணு, நீ எங்க கிட்டச் சொன்னதைப் படிக்கிறேன் கேளு – நான் பொண்ணு வீட்டுக்காரங்களை அளைச்சுக்கிட்டுப் புல்வெளில கொண்டு விட்டுட்டு வரும்போது, சுசாதாம்மா கிட்டத்தட்ட என் பின்னாடியே வந்தாங்க. நான் கேட்டுக்குப் போயிட்டேன். அவங்க ராசா ரூமுக்குப் போனாங்க. உடனே வந்துட்டாங்க. அப்புறம் கொஞ்சம் காருங்க வரிசையா வந்திருச்சு, நான் கேட்டைத் திறந்து மூடவே நேரம் சரியா இருந்தது. கொஞ்ச நேரங்கழிச்சு மேசரய்யா வெளியில வந்ததைப் பார்த்தேன். அப்புறம் டாக்டரய்யா. இது சரி தானே?”

“சரி தாம்மா.”

“இப்போ பதில் சொல்லு பார்க்கலாம். மேஜர் வெளியே வந்ததுக்கப்புறம் டாக்டர் உள்ளே போனாரா, இல்ல வெளியில் வந்தாரா?”

அய்யாக்கண்ணு அதிர்ந்தான். தலையை உதறி விட்டுக் கொண்டான். பிறகு, “வெளியே வந்தாரும்மா” என்றான்.

“தேர் யூ ஆர்” என்றாள் தர்ஷினி, வெற்றிச் சிரிப்போடு.

“கங்க்ராட்ஸ், தர்ஷினி! இந்தப் பாயிண்டை நானோ தர்மாவோ கவனிக்கல” என்றாள் தன்யா.

“இது என்ன பாயிண்ட்னு எனக்குப் புரியவே இல்ல” என்றார் டாக்டர் திலீப்.

அய்யாக்கண்ணுவும் “என்னம்மா, உள்ளே போனாதானேம்மா வெளியே வர முடியும்?” என்றான் குழப்பத்தோடு.

“அது சரி, அவர் உள்ளே போறதை நீ பார்த்தியா? அதுவும் மேஜர் வெளியே வந்தவுடன் உள்ளே போறதை?”

அய்யாக்கண்ணு தலையைச் சொறிந்து கொண்டு யோசித்தான். பிறகு “இவர் உள்ளே போனதை நான் பாக்கலம்மா” என்றான் தீர்மானமாக.

“ஸோ? இதிலிருந்து என்ன கண்டுபிடிச்சீங்கன்னும் சொல்லிடுங்க தர்ஷினி!” என்று கேலியாகச் சிரித்துச் சொன்னார் திலீப்.

“ரொம்ப சிம்ப்பிள் டாக்டர். எல்லாருக்கும் புரியறதுக்காகப் பாய்ண்ட் பாயிண்டாச் சொல்றேன். 1. சுமார் ஏழரை மணியிலிருந்து, அதாவது சுஜாதா பாஸ்கர் அறைக்கு வந்து போன பின்னால், அய்யாக்கண்ணு ரொம்ப பிஸியா இருந்திருக்கான். நிறைய கார்கள் அந்த நேரத்தில்தான் கேட்டுக்கு வந்திருக்கு. 2. அதற்குப் பிறகு, ஒரு ஏழு நாற்பது மணிக்கு மேஜர் கமல் உள்ளே போயிருக்கார். அதை அய்யாக்கண்ணு பார்த்திருக்கான். 3. சிறிது நேரத்தில் மேஜர் கமல் வெளியில் வந்திருக்கார். அதை அய்யாக்கண்ணு பார்த்திருக்கான். 4. இதன் பிறகு டாக்டர் வெளியில் வந்திருக்கார், அதையும் பார்த்திருக்கான்.

“அதாவது, மேஜர் கமல் வெளியில் வந்த பிறகு, வேறு யாராவது உள்ளே போயிருந்தால், அதை அய்யாக்கண்ணு நிச்சயம் கவனிச்சு இருப்பான். 

“ஆக, டாக்டர் பாஸ்கரோட அறைக்கு, மேஜர் வெளியில் வருவதற்கு முன்னாலேயே, இன்னும் தெளிவா சொல்லப்போனா, மேஜர் உள்ளே போகறதுக்கு முன்னாலேயே, போயிருக்கணும். அதாவது அய்யாக்கண்ணு பிஸியா இருந்த நேரம்! இவ்வளவுதான் என் பாயிண்ட்.”

தர்ஷினி முடித்தாள்.




ஒரு சின்ன மௌனம். டாக்டர் என்ன பதில் சொல்ல என்று புரியாமல் விழிப்பதைப்போல் பட்டது.

“அய்யாக்கண்ணு ஒரு வேளை என்னை…” என்று டாக்டர் ஆரம்பிப்பதற்குள் மேஜர் கமல் டாக்டரை நெருங்கினார்.

“சத்யம் பறையு திலீபா. அது நீயல்லே? எந்தா நோக்குன்னு? அன்னு ஸ்டேர்கேஸ்க்குப் புறகே மறஞ்சிருந்தது நீயல்லே? சத்யம் பறையு!” என்ற அதட்டலில் டாக்டர் வெலவெலத்தார்.

“சொல்லிடறேன். வந்து, நான் பாஸ்கர் ரூமுக்குப் போனேன். அவன் கையில் மோதிரம் இல்லைன்னு கவனிச்சிருந்தேன். அது அவன் ரூமுல இருக்கான்னு பார்க்கத்தான் போனேன். சத்தியமாச் சொல்றேன், அது அங்கே இல்ல. அப்புறம் கம்ப்யூட்டர் டேபிள் மேல இருக்கான்னு பார்க்கப் போனேன். யாரோ க்ளாஸ் டோரைத் திறக்கற அரவம் கேட்டது. அதனால உடனே படிக்கட்டில ஒளிஞ்சிக்கிட்டேன்” என்று திலீப் சொல்லி முடிப்பதற்குள் வியர்த்துப் போயிருந்தார்.

“நீங்க மோதிரத்தை எடுக்க வேண்டிய, ஐ அம் சாரி, திருட வேண்டிய அவசியம் என்ன டாக்டர்?” என்று கேட்டாள் தன்யா அமைதியாய்.

“வந்து, உன்னி முகுந்தன் என்னை ஒரு முறை வந்து பார்த்தார். அவரை விரட்டி அனுப்பிட்டேன். ஆனா பார்ட்டியன்னிக்கு ஒரு சபலம் தட்டுச்சு …”

பாஸ்கர் பிரமித்துப் போய் டாக்டரையே பார்த்தான். “யாரு, திலீபண்ணாவா? நீயா பணத்துக்கு விலை போயிட்டதா சொல்லற? அய்யோ, எனக்கு யாரை நம்பறதுன்னே புரியலையே” என்று புலம்பினான் பாஸ்கர்.

டாக்டர் திலீப் தலைகுனிந்து நின்றார்.




What’s your Reaction?
+1
7
+1
6
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!