gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/மடப்புரம் பத்திரகாளியம்மன்

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது மடப்புரம். வைகை கரையோரத்தில் இங்குதான் பிரபலமான பத்திரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிப் பார்த்த முகமாக தனது வலது கையில் திரிசூலத்தை கீழ்நோக்கிப் பற்றியபடி கம்பீரமாக காட்சியளிக்கிறாள் அன்னை பத்திரகாளி.

ஆன்மீகம்: மடப்புரம் , பத்திரகாளி.




மதுரையை மீனாட்சி ஆட்சி செய்த போது, ஒரு பிரளய காலத்தில் மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அளவுக்கு அதிகமான தண்ணீர் கரைபுரண்டோடிய போது ஊரின் எல்லையை காக்க வேண்டி அன்னை மீனாட்சி மனமுருகி சிவபெருமானை வேண்டினார்.அப்போது ஆதிசிவன் பாம்பு வடிவில் படமெடுத்து தோன்றி மதுரையின் நான்கு புறத்தையும் தன் உடலால் வளைத்துக் காட்டினார். ஆதிசிவன் படமெடுத்து காட்டியபோது கிழக்கே இந்த படப்புரம் என்ற இடம் அமைந்தது. பாம்பின் படமும் வாலும் ஒன்றாக இணைந்து நின்றதால் இதற்கு படப்புரம் என்று பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி மடப்புரமாக ஆனது.

ஒருமுறை மனைவி பார்வதியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பிய சிவபெருமான் இங்கு வந்து நிலையில் பார்வதியை இளைப்பாற ஒரு இடத்தில் இருக்கச் சொல்லி இருக்கிறார். தான் மட்டும் வேட்டையாடிவிட்டு வருவதாக சிவபெருமான் பார்வதியிடம் சொன்னாராம். அப்போது பார்வதி, தனியாக இந்த காட்டுப் பகுதியில் தான் மட்டும் எப்படி இருப்பது என கேட்டிருக்கிறார். அப்போது பாதுகாப்புக்காக அய்யனாரையும் விட்டு சென்ற நிலையில் அந்த இடத்தை சிறப்பிக்க அங்கேயே காளி வடிவில் தங்கினார் சக்தி என்பது தல வரலாறு.




காளி திறந்தவெளியில் குதிரையின் நிழலில் காட்சி தருவதுடன், காளியின் இடப்புறம் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்ற அய்யனார், அடைக்கலம் காத்த அய்யனாராகக் காட்சி தருகிறார். வலதுபுறம் விநாயகர் பெருமானும் காளியின் எதிரே பழமை மாறா எண்ணெய்யினால் ஆன அணையா விளக்கும் உள்ளது. அதன் பின்னே தியான மண்டபமும், காளியின் எதிரே உள்ள வாய்களைத் தாண்டி பலிபீடமும் உள்ளது.

பத்திரகாளிக்கு எலுமிச்சை மாலையே பிரதானமாகச் சாத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள் அம்மனை வேண்டி 108, 1008 என்கிற எண்ணிக்கையில் எலுமிச்சை மாலையை சாற்றுகின்றனர். மாதந்தோறும் பெளர்ணமி அன்று மாலை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மதிய வேளையில் நடைபெறும் உச்சிக்காலப் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.

உச்சிகாலப் பூஜையின்போது மாவிளக்கு, எலுமிச்சை விளக்கு, அகல் விளக்கு ஏற்றி அன்னையை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்கிழமை அன்று வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அனைத்து நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்திருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!