gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/கருப்பாயி அம்மன் – பாப்பாத்தி அம்மன்

பாப்பாத்தி அம்மன் என்று பல பகுதிகளில் பல வேறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். தேவ கோட்டை பகுதியில் வீரனார் சிலை வைத்து வழிபடும் போது அவரது துணைவி பாப்பாத்தி அம்மன் என்று வழிபடுகிறார்கள்.

மாரியம்மா, மரம்மா, காளியம்மா, கங்கம்மா , சௌடம்மா , பொலிமேரம்மா, கிகிரம்மா, வெங்கலியாம்மா, மரியம்மா, மைசம்மா, ஐடம்மா, பொசம்மா, எல்லம்மா , சீதலதேவம்மா, எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன் என்று பல பெயர்களில் பெண் சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள்.

இதில் இங்கே பாப்பாத்தி அம்மன் மட்டுமல்ல அவரது நெருங்கிய தோழியான கருப்பாயி அம்மன் குறித்து உள்ள ஒரு கதையினை பார்க்க இருக்கிறோம்.




Sri Pappathi Amman Kovil - Vattur ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவில் வட்டூர்

கருப்பாயி அம்மன் – பாப்பாத்தி அம்மன் வரலாறு

பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதைகளை பார்க்கும்போது நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கையில் பிரிவு என்பது மிகக் கொடூரமாக இருப்பதை அறிய முடிகிறது. இன்றைய காலக்கட்டத்திலும் காதல் செய்த பலரை பிரிப்பது சமூகமாகவோ, பொருளாதாரமாகவோ இருக்கிறது. ஆனால் இவர்கள் கொண்ட நட்பை வறுமை பிரிக்கப் பார்க்கிறது. கதையை படியுங்கள், இது மனம் கனக்கும் தோழிமார் கதை.

குடுமியான் மலை. புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம். சில தலைமுறைக்கு முன்னால் ஊரே மழையின்றி காய்ந்து போனது. நிலம் காய்ந்து போனதால், விவசாயத்தையே நம்பி இருந்தவர்களுக்கு ஏழ்மை மட்டுமே எஞ்சியது. எங்கு நோக்கினும் வறுமை தாண்டவம் ஆடியுது.

பஞ்சம் தணியும் எனக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனார்கள். இறுதியாக என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க ஊர்க் கூட்டம் போட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவர் மதுரைக்குப் பக்கம் சென்றால் பிழைப்பு தேட வழியுண்டு என்று சொல்ல. ஊரை விட்டு ஒட்டுமொத்தமாய் வெளியேற முடிவெடுத்தார்கள். ஆனால் காலம்காலமாக பாட்டன், பாட்டனுக்குப் பாட்டன் வசித்த பூமியை எளிதாக விட்டுச் செல்ல முடியவில்லை.

மக்களெல்லாம் மண்ணைப் பிரியும் துக்கத்தில் இருக்க, இரண்டு பெண்கள் மடடும் தாங்கள் பிரியப்போவதை எண்ணி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பாப்பன வீட்டுப் பெண் பாப்பாத்தி, மற்றொருத்தி கருப்பாயி. இருவரும் சிறுவயது முதல் தோழிகள். ஆச்சாரம் என்று பாப்பாத்தியை கருப்பாயியுடன் சேர அனுமதிக்காவிட்டாலும், சாதிய கட்டுப்பாடுகளை தகர்த்து எறிந்துவி்டடு கருப்பாயியுடன் நட்பாக இருந்தாள் பாப்பாத்தி. வெவ்வேறு சாதியை சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒருவர்மேல் ஒருவர் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்கள்.

தொலைதொடர்பு வசதியெல்லாம் இல்லாத காலம் அது. இருவர் பிரிந்து வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தால் மீண்டும் வாழ்க்கையில் சந்திப்பதே கடினம். ஆனால் கருப்பாயி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் முதலில் ஊரைவிட்டு செல்வதென முடிவெடுத்தார்கள். மாட்டு வண்டியில் பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாரானார்கள். “பாப்பாத்தியுடனே இருந்து கொள்கிறேன்” என உறவுகளுடனும், பெற்றவர்களுடனும் செல்ல மறுத்தாள் கருப்பாயி. பாப்பாத்தியோ “அவர்களுடன் நானும் செல்கிறேன். அனுமதிகொடுங்கள்” என்று கெஞ்சினாள்.

இருவரின் சொற்களையும் காதில் போட்டுக்கொள்ளக் கூட யாரும் தயாராய் இல்லை. பாப்பாத்தியை அவர்கள் வீட்டிற்குள் அடைத்துவைத்தார்கள். கருப்பாயை அவளின் சொந்தங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்கள். இருவருக்கும் அழுவது தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை. கருப்பாயி உறவுகள் நெடு நேரம் நடந்து சென்றார்கள். இரவு நெருங்கியதும் ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள். நல்ல இடமாக பார்த்து எல்லோரும் தூங்கத் தொடங்கினார்கள். வண்டிமாடுகள் கூட கண்கள் அசந்தன. ஆனால் கருப்பாயி மட்டும் பாப்பாத்தியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

திடிரென ஒரு முடிவுக்கு வந்தவளாய், வந்த வழியே ஓடத்தொடங்கினாள் கருப்பாயி. அவர்கள் தங்கியிருந்தப் பகுதி அடர்ந்த காடு. தனியாக செல்கிறோமென்ற பயமும் அவளிடம் இல்லை. பாப்பாயியை பார்த்தால் போதும் என சக்தி வந்தவளாய் ஆவேசமாய் ஓடினாள். பாதி வழியில் எதிரே ஒரு உருவம் வருவது தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் அது பாப்பாத்தி. யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தியை தேடி கருப்பாயி ஓடிவந்தது போலவே பாப்பாத்தியும் வந்திருந்தாள்.

கருப்பாயிக்கு என்ன யோசனை தோன்றியதோ, அதுவே பாப்பாத்திக்கும் தோன்றியது. கருப்பாயின் உறவுகள் பாப்பாத்தியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பாப்பாத்தியின் உறவுகள் கருப்பாயியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே “உயிரோடு இருந்தால் தானே பிரிப்பார்கள். ஒன்றாய் இறந்து போனால் என்ன செய்வார்கள் ” என விபரீதமான முடிவை சேர்ந்தே எடுத்தார்கள்.

பொழுது விடிந்ததும் கருப்பாயை காணாமல் ஒரு புறம் அவளின் உறவுகள் தேட, பாப்பாத்தியை காணாமல் மறுபுறம் அவளின் உறவுகள் தேடினார்கள். இந்த இரண்டு கூட்டமும் நடுக்காட்டில் சந்தித்துக் கொள்ள, இருவரையும் சேர்ந்து தேடத் தோடங்கினார்கள். அடர்ந்த காட்டையும், ஊரையும் சல்லடைப் போட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மொட்டைக் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தார்கள், கருப்பாயும், பாப்பாத்தியும்.

வாழ வேண்டிய வயதில் இரண்டு கன்னிப் பெண்களின் சாவைக் கண்டு கதிகலங்கி போனார்கள் இரண்டு கூட்டமும். சாதி பேரைச் சொல்லி இழந்தது போதுன்னு இரண்டு பிணங்களையும் ஒன்னாவே எரித்துவிட்டு, சாதி பார்க்காம இரண்டு பேரையும் வணங்கத் தொடங்கினார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!