Cinema Entertainment விமர்சனம்

’ஆலகாலம்’ திரைப்பட விமர்சனம்

கிராமத்து ஏழைத்தாயின் ஒரே மகனான நாயகன் ஜெயகிருஷ்ணா சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். தனது மகன் பெரிய கல்லூரியில், பெரிய படிப்பு படிப்பதால், அவரது படிப்பு முடிந்ததும் தங்களது நிலை மாறிவிடும், என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயகிருஷ்னாவின் தாய் ஈஸ்வரி ராவ்.

இதற்கிடையே, ஜெயகிருஷ்ணாவின் ஒழுக்கம், படிப்பு திறன் ஆகியவற்றால் ஈர்க்கப்படும் சக மாணவி சாந்தினிக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், இந்த காதலால் ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால், ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் எப்படி சிதைக்கப்படுகிறது, என்பதை சொல்வது தான் ‘ஆலகாலம்’.

கொடிய விஷம் என்று தெரியாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பலர் தங்களது வாழ்க்கையை எப்படி சீரழித்துக் கொள்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் இந்த திரைப்படம் தற்போதைய காலக்கட்டத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.




கல்லூரி மாணவராக வெள்ளந்தியான சிரிப்போடு  இயல்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் நடிகர் ஜெயகிருஷ்ணா, இரண்டாம் பாதியில் மது பழக்கத்திற்கு அடிமையான மனிதராக வெளிப்படுத்திய நடிப்பு அசுரத்தனமாக இருப்பதோடு, ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டவும் வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, கல்லூரி மாணவி மற்றும் மனைவி என இரண்டுவிதமான வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவதோடு, இரண்டு வேடங்களிலும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், “சாமியே கேட்டாலும் நான் மதுவை வைத்து படையல் போட மாட்டேன்” என்று பேசிவிட்டு, தனது மகனின் நிலையை பார்த்து அவருக்காக மதுக்கடையில் மது வாங்கும் காட்சி படம் பார்ப்பவர்களை நிச்சயம் கலங்க வைக்கும்.

தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

கா.சத்தியராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கதையின் கனத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறது.

அழுத்தமான கதைக்கு பொருத்தமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.




படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன், எந்த காட்சியை வேகமாக நகர்த்த வேண்டும், எந்த காட்சியை விரிவாக சொல்ல வேண்டும் என்பதை மிக சரியாக செய்து, நாயகனின் நடிப்பும், அதன் மூலம் சொல்ல வேண்டிய கருத்தையும் ரசிகர்கள் எளிதியில் புரிந்துக்கொள்ளும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

கதையின் நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என்று முதல் படத்திலேயே மூன்று பணிகளை மேற்கொண்டிருக்கும் ஜெயகிருஷ்ணா, மூன்றிலும் முத்திரை பதித்திருப்பதோடு, தனது முதல் படத்தின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை மதுப்பழக்கத்தால் எப்படி சீரழிகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயகிருஷ்ணா, ஒரு மனிதனை மது பழக்கம் எப்படி எல்லாம் ஆட்கொள்கிறது என்பதை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

படிக்க வேண்டிய காலத்தில், மற்ற விசயங்கள் மீது கவனம் செலுத்தினால் வாழ்க்கை எப்படி திசைமாறும் என்பதை நோக்கி பயணிக்கும் கதை, திடீரென்று மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஒரு மனிதனைப் பற்றிய கதையாக மாறுவது டாக்குமெண்டரி போல் இருந்தாலும், விளையாட்டாக தொடங்கும் மதுப்பழக்கம் எப்படி ஒருவரது வாழ்க்கையை விபரீதமாக்குகிறது என்பதை சொல்லியிருக்கும் இந்த படம் நிச்சயம் தேவையான ஒன்று.

மொத்தத்தில், கொடிய விஷம் எது? என்பதை புரிய வைத்திருக்கும் இந்த ‘ஆலகாலம்’ படத்தை அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!