Cinema Entertainment விமர்சனம்

’பிரேமலு’ திரைப்பட விமர்சனம்

நாயகன் நஸ்லென் கல்லூரியில் படிக்கும் போது சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அந்த காதல் தோல்வியில் முடிய, அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். அதுவும் தோல்வியில் முடிகிறது. இதனால், தனது நண்பருடன் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு ஒரு திருமண நிகழ்வில் நாயகி மமீதா பைஜுவை சந்திக்க அவர் மீதும் நஸ்லெனுக்கு காதல் பிறக்கிறது. அதனால் சென்னைக்கு போக நினைத்த நாயகன், காதலுக்காக ஐதராபாத்திலேயே தங்கி விடுகிறார்.




Premalu Movie Review

தனது காதலை நாயகியின் தோழியிடம் நஸ்லென் தெரிவிக்க, அவரோ ”மமீதா பைஜு எதிர்ப்பார்க்கும் எந்த தகுதியும் உன்னிடம் இல்லை, அதனால் உன் காதலை அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்”, என்பதோடு, அலுவலக நண்பரான ஷ்யாம் மோகனும், மமீதாவும் உறவில் இருப்பதாகவும் சொல்கிறார். இதனை கேட்ட பிறகும் மமீதா பைஜு மீது காதல் கொண்டு அவருடன் பயணிக்கும் நஸ்லெனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்வது தான் ‘பிரேமலு’.

மலையாளப் படம் என்றாலும், கதை ஐதராபாத்தில் நடப்பதால் ‘பிரேமலு’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஐதராபாத்தில் கதை நடந்தாலும், அது தென்னிந்தியா முழுவதும் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை, மலையாளத் திரைப்படத்தின் அடையாளத்தை மறைத்திருப்பதோடு, வழக்கமான காதல் கதை என்பதை மறந்து, ரசிகர்கள் சிரித்து ரசிக்கும்படியும் செய்திருக்கிறது.




சில படங்களில் நாயகனின் நண்பராக நடித்த நஸ்லென், தற்போது நாயகனாக நடித்து வரவேற்பு பெற்றிருக்கிறார். கண்டதும் காதல் கொள்வதும், அந்த காதலுக்காக உருகுவதும், பிறகு காதல் தோல்வியால் வாடுவதும் என்று சோக கீதம் வாசிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அத்தனை இடங்களிலும் ரசிகர்களை சிரிக்க வைத்து குஷிப்படுத்தும் நஸ்லென், காதல் தோல்வியில் கதறி அழுதால் கூட ரசிகர்களுக்கு  அவர் மீது எந்தவித பரிதாபமும் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு வெள்ளந்தியாக நடித்து தனது வேடத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜு, வசன உச்சரிப்பு, உடல்மொழி, எந்த விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்வது, நஸ்லென் உடனான நட்பை கையாள்வது மற்றும் அவரது காதலை எதிர்கொள்வது என்று அத்தனை உணர்வுகளையும் அசால்டாக வெளிப்படுத்தி காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார். தன்னை சுற்றி எத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும், தனது நடிப்பு மூலம் அத்தனை பேரையும் ஓரம் கட்டிவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்தும் திறன் கொண்ட மமீதா பைஜு நிச்சயம் இந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருவார்.

நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், தனது டைமிங் காமெடி மூலம் கவனம் ஈர்க்கிறார். நாயகனின் காதலுக்கு வில்லனாக வந்தாலும் ஷ்யாம் மோகனின் வில்லத்தனம் குழந்தைத்தனமாக இருப்பதோடு, குலுங்கி குலுங்கி சிரிக்கவும் வைக்கிறது. நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அலுவலக தோழர்களாக நடித்திருக்கும் சமீர் கான், அல்தாப் சலீம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

விளக்குகளில் ஜொலிக்கும் சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களையும், இயற்கையில் ஜொலிக்கும் கேரளா மற்றும் ஆந்திர கிராமப் பகுதிகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு, இளைஞர்களின் மகிழ்ச்சியான தருணங்களை கலர்புல்லாக காட்சிப்படுத்தி, அவர்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் தனது கேமரா மூலமாக கடத்தியிருக்கிறார்.




விஷ்னு விஜயின் இசையில் பாடல்கள் மாண்டேஜாக இருந்தாலும், நம்மை தட்டி எழுப்பி ஆட்டம் போட வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரமாகவே வலம் வந்து நம்மை சிரிக்கவும், மகிழ்விக்கவும் செய்கிறது.

சாதாரண காதல் கதை தான் என்றாலும், சலிப்பு ஏற்படாமல் காட்சிக்கு காட்சிக்கு ரசிக்கும்படி படத்தை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் பாராட்டுக்குரியவர்.

கிரண் ஜோஷியுடன் இணைந்து கதை திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் கிரிஷ் ஏ.டி, திருப்பங்கள் இல்லாமல் மிக சாதாரணமாக கதையை நகர்த்தி சென்றாலும், சச்சின் மற்றும் ரீனு என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான காதல் படத்தை கொடுத்திருக்கிறார்.

காதல் தோல்வியால் துவண்டு போகாமல், அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதே சரி, நமக்கான காதல் நிச்சயம் நம்மை தேடி வரும், என்ற மெசஜை மேலோட்டமாக சொல்லியிருக்கும் இயக்குநர் கிரிஷ் ஏ.டி, நாம் ஏற்கனவே பார்த்து பழகிய காதல் வழக்கமான கதையாக இருந்தாலும், காதல் படங்களுக்கே உரித்தான சோக பாடல்கள் உள்ளிட்ட வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு, காட்சிகள் அனைத்தையும் ஜாலியாகவும், நாகரீகமாகவும் வடிவமைத்து இளைஞர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைத்திருப்பதோடு, அவர்களின் பழைய நினைவுகளையும் தட்டி எழுப்பி விட்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘பிரேமலு’ கலகலப்பான காதல் பயணம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!