gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/கோழிப் பரமாயி

புதுக்குடி கிராமத்தில் இருந்த அக்கா, தங்கை இருவர் திருமணமாகி அவரவர் கணவர் வீட்டில் வசித்து வந்தனர். வெளியூரில் திருமணமாகி இருந்த அக்கா, ஒருநாள் தங்கையைப் பார்க்க வந்திருந்தாள். தங்கைக்குக் குழந்தைகள் மொத்தம் பத்து. அக்காவுக்கோ குழந்தைகள் இல்லை. கல்யாணம் ஆன பின்பு அப்போதுதான் அக்கா முதல் முறையாகத் தங்கையைப் பார்க்க வருவதால், அவளுக்குக் குழந்தைகள் பிறந்த விஷயம் தெரியாது.

தங்கையிடம் பேசிய ஊர்க்காரர்கள், “உன் அக்காவுக்குக் குழந்தைகள் இல்லை. உன் குழந்தைகளைப் பார்த்தால், அவள் வருத்தப்பட்டு அதனால் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகலாம். அதனால் உனக்குக் குழந்தைகள் பிறந்த விஷயத்தை மறைத்துவிடு” என்று உசுப்பிவிட்டனர். அவர்கள் பேச்சைக் கேட்ட தங்கை, தன் பத்துக் குழந்தைகளையும் பெரிய கூடைகளில் மறைத்து வைத்தாள்.




அக்கா வந்து தங்கையைச் சந்தித்தாள். குடும்ப விவகாரங்கள் எல்லாம் பேசிவிட்டு, அவள் தன் தங்கையிடம் “உனக்குக் குழந்தைகள் எத்தனை?” என்று கேட்க, தங்கையோ “எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை” என்று சொல்லிவிட்டாள்.

ஊருக்குத் திரும்புவதற்காக அக்கா கிளம்பிய சமயம், கவிழ்த்து வைத்திருந்த கூடைகளிலிருந்து கீச்மூச்சென்று சத்தம் வருவதைக் கவனித்தாள். “என்ன கூடைக்குள்?” என்று தங்கையிடம் கேட்க, அவளோ “அது நான் வளர்க்கும் கோழிக் குஞ்சுகள்” என்றாள். மேலே எதுவும் பேசாமல் அக்கா ஊருக்குக் கிளம்பினாள்.

வழியனுப்பிவிட்டு வந்த தங்கை கூடையைத் திறக்க, குழந்தைகள் எல்லாம் கோழிக் குஞ்சுகளாக மாறியிருந்தன. பதறிப்போன தங்கை, உடனே அக்காவிடம் ஓடிப்போய் மன்னிப்புக் கேட்டாள். தன்னிடமிருந்த கோழிக்குஞ்சுகளில் ஆறைத் தன்னிடம் வைத்துக் கொண்டு நான்கைத் தன் அக்காவிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னாள்.

அந்தத் தங்கைதான் எங்கள் குலதெய்வம் கோழிப்பரமாயி. அவள் அக்கா சுந்தரபாண்டி.

தங்கை தெய்வமாக வணங்கப்படும் கோழிப்பரமாயி கோயிலில், அவள் விக்கிரகத்துடன் அருகில் அவள் ஆறு குழந்தைகளும் விக்கிரகங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

அக்கா சுந்தரபாண்டி கோயிலில் அவள் விக்கிரகமாகவும், அவள் வளர்த்த நான்கு கோழிக்குஞ்சுகள் கற்களாகவும் குறிக்கப்பட்டு இன்றும் பூஜிக்கப்படுகின்றன.




இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது – இக்கதையின் உண்மைத் தன்மை பற்றியதல்ல. ஆனால், இதன் வாழ்வியல் பற்றி!

குலதெய்வத்தைப் பற்றியும் அதன் “பெருமை”களைப் பற்றியும் அறிந்த என் குடும்பத்தினர் மொத்தமாக ஒரு 30 பேர் வருடாவருடம் அங்கு கோயிலுக்குச் சென்று வருவோம். அவ்வாறு செல்லும்போது, அக்கோயிலின் பராமரிப்புக்கென்று எங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்துவோம். மேலும் எங்களைப் போல வேறு சிலருக்கும் குலதெய்வமாக இந்தத் தெய்வம் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்தச் சுற்றுப்புறத்தின் கிராமப் பொருளாதாரம் (local economy) அழியாமல் இருக்க வாய்ப்புண்டு. இப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைச் சார்ந்தனவோ, அதே அளவுக்கு சமூக சிந்தனையும் யதார்த்தத்தையும் சார்ந்தது!

உங்கள் குலதெய்வக் கோயிலுக்கு வருடாவருடம் செல்லுங்கள் – அதுவும் எவ்வளவு சொந்தபந்தங்களைக் கூட்டிக்கொண்டு செல்லமுடியுமோ செல்லுங்கள். எவ்வளவோ சுற்றுலா நாம் செல்லும் போதும், இதைச் செய்யும்போது கிடைக்கும் மனநிறைவுக்கு அளவே இல்லை!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!