Cinema Entertainment

சூப்பர் ஸ்டாரை தெரியும்…சிவாஜி கெய்க்வாட்டின் சிறு வயது துயரங்கள் தெரியுமா?

ரஜினியின் மூத்த அண்ணன் சத்யநாராயணராவ் கெய்க்வாடைத் தான் பலருக்கும் தெரியும். இளைய அண்ணன் நாகேஷ்வரராவ் கெய்க்வாடை பலருக்கும் தெரியாது. படத்தில் ரஜினியின் தோளில் கை வைத்திருப்பவர் தான் நாகேஸ்வரராவ்.




சாதனை மன்னன் ரஜினி - ரஜினியின் முதல் படம் 'அபூர்வராகங்கள்' 100வது நாள் வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய முதலமைச்சர் ...

சிவாஜிராவ்வுக்கு ஆறு வயதிருக்கும் போதே அவரின் தாய் இறந்துவிட்டார். தந்தை ராமோஜிராவ் ஒரு போலீஸ்காரர். அதோடு பயங்கர சிடுமூஞ்சி. மூன்று மகன்கள், ஒரு மகளைப்பெற்ற ராமோஜிராவுக்கு வாங்கும் சம்பளம் எல்லாம் படுத்த படுக்கையாகி விட்ட மனைவியின் உடல்நிலை சரியாக்கவே போய்விடுகிறது. அதன் எரிச்சல், ஆற்றாமை எல்லாவற்றையும் குழந்தைகள் மீது தான் காட்டுவார். சிவாஜி என்கிற சிறு குழந்தை மீது பாசம் எதையும் அவர் காட்டிவிடவில்லை.

சிவாஜிக்கு உற்ற துணை அக்கா அஸ்வத் தான். அவர் தான் சிவாஜியை தூக்கிக்கொண்டு ஊர்சுற்றுவார். சிவாஜியின் தாய் இறந்த நாள் அன்று அஸ்வத் சிவாஜியை அழைத்து ‘அம்மா நம்மை விட்டு போயிட்டாங்கடா சிவாஜி’ என அழுத போது சிவாஜிக்கு இறப்பு என்பதைப்பற்றி அறியும் வயதில்லை. அவர் கவனம் வாசலில் நிற்கும் சைக்கிள் மீதே இருந்தது. ஓடிப்போய் வந்திருந்த ஒரு ஆளின் சைக்கிளை எடுத்து தள்ளிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார். வெளியே ஓடி வந்த அஸ்வத் சிவாஜியை தூக்கி மடியில் வைத்து “இனி நம்மை யாருடா பார்த்துக்கொள்வார்?” என கதறியபோது சிவாஜிக்கு கண்கள் பலரின் சைக்கிள் மீது தான் இருந்தது.




மனைவி இறந்ததும் ராமோஜிராவின் ஆற்றாமை அதிகமானது. அவரே குழந்தைகளுக்கு சமையல் செய்துவிட்டு போவார். மற்ற மூன்று குழந்தைகளும் பள்ளிக்குப்போய்விட்டால் வீட்டில் சிவாஜிராவ் மட்டும் தான். ராமோஜி பாத்திரங்களை கழுவச்சொல்லி விட்டு போவார். தந்தை அந்தப்பக்கம் போனதும் சிவாஜி விளையாட சிட்டாக பறந்து விடுவார். ராமோஜி ராவ் திரும்ப வந்து பார்த்த போது பாத்திரங்கள் அப்படியே இருக்க சிவாஜியை பின்னி எடுத்து விட்டார். அடி தாங்க முடியாமல் சிவாஜி கதறும் போது அக்கா அஸ்வத் தூக்கிக்கொள்வார். அண்ணன் சத்யநாராயணா அழும் சிவாஜியை வெளியே தூக்கிக்கொண்டு வந்து வேடிக்கை காட்டி சமாதானப்படுத்துவார்.

ரராமோஜிராவின் கொடூரம் தினம் தினம் அதிகமாகத்தொடங்கியது. காரணம் சிவாஜியின் குறும்புப்போக்கும், ஊர் வம்பும். அடிதாங்க முடியாமல் சிவாஜி கதறும் போது சத்யநாராயணாவவின் பின்னால் ஒளிந்து கொள்வார். ஒரு கட்டத்தில் சத்யநாராயணா தந்தையை எதிர்த்து கேள்வி கேட்கத் தொடங்கினார்.




“உங்களுக்கு சமைத்துப்போட என்னால் முடியாது. நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. உன் தம்பிகளை வளர்த்துக்கோ” என ராமோஜிராவ் சொன்ன போது சத்யநாராயணாவுக்கு வயது பதினேழு.

படிப்பை துறந்து வேலைக்கு போக ஆரம்பித்த சத்யநாராயணா திருமணத்துக்கு சம்மதித்தார். ஆனால் வரும் பெண் வீட்டாரிடம் அவர் ஒரே ஒரு கன்டிஷன் தான் போடுவதால் சிக்கல் ஏற்பட்டது. “வரும் பெண் என் தம்பிகளை நல்ல படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்காக தான் நான் திருமணம் செய்து கொள்கிறேன்” .

கடைசியாக ஒரு பெண் சம்மதித்து திருமணம் நடந்தது. சிவாஜிக்கு அண்ணியிடம் தாய்பாசம் கிடைத்தது. ஆனால் ஊர்வம்பு இழுப்பதால் சிறு வயதிலேயே ஆஸ்ரம பள்ளியில் படிக்க வைத்தார்கள்.




காலம் இளைஞனான சிவாஜியை ஒரு வீம்புக்காரனாகவே வளர்த்தது. தெருச்சண்டை, மோதல் என ஆக்ரோஷம் சிவாஜி என்கிற இளைஞனுக்கு தோன்றியதில் சிறுவயது கசப்பு வாழ்க்கையே காரணம். பெங்களூருவில் நாராயணன் என்கிற பெரிய ரௌடி இருந்தான். நாராயணனை கண்டாலே மார்க்கெட்டே நடுங்கும். ஏதோ வாய்ப்பேச்சில் சிவாஜியின் இரண்டாவது அண்ணன் நாகேஷ்வரராவை நாராயணன் அடித்து வாயில் ரத்தம் வரவைத்து விடுகிறான். “நாராயணன் என்னை அடிச்சிட்டான்டா சிவாஜி” என நாகேஷ்வர் அழுததும் சிவாஜி நேரே கடையில் போய் மில்லியை ஏற்றிக்கொண்டு மார்க்கெட்டுக்கே தனி ஆளாக சைக்கிள் செயினோடு போய் விட்டான். நண்பர்களோடு பேசிக்கொண்டு அமர்ந்திருந்த நாராயணனிடம் “எங்க அண்ணனையாடா அடிச்சே” என சைக்கிள் செயினால் ஓட ஓட அடித்திருக்கிறான் சிவாஜி.

எந்தக்குடும்பம் சிவாஜியை காத்ததோ அதே குடும்பத்தைக்காப்பாற்ற சிவாஜி இறங்கியதோடு பின்னாளில் நடிகனாகி லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் தன் குடும்பத்தை காப்பவனாக மாறியது ஆச்சர்யம்.

காலம் நாகேஷ்வரராவ் என்கிற இளைய அண்ணனை 80களிலேயே பறித்துக்கொண்டது. நன்றாக சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்த போது ரஜினி தந்தைக்கு புதிய உடை, வாட்ச் எல்லாம் வாங்கிக்கொடுத்து, பணத்தையும் கொடுத்து “போய் கிராமத்தின் பழைய நண்பர்களை பார்த்துட்டு வாங்க” என அனுப்பி இருக்கிறார். அவரும் பழைய ஊருக்கு போய்விட்டு வந்து கதைகளாக சொல்லி சொல்லி சிலாகிப்பதை ரஜினி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஒருவன் தலையெடுத்தால் அந்தக்குடும்பமே மேலே வந்துவிடும். அந்தக்குடும்பம் அவனை ஆதரிக்க வேண்டும். ரஜினி கண்டக்டர் வேலையை விட்டு விட்டு நடிகனாக நினைத்த போது குடும்பம் ஆதரிக்கவில்லை. ஆனால் நட்புகளால் சாதித்த போது குடும்பம் வந்து நின்றது.

எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்பதே ரஜினியின் நல்ல உள்ளம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!