Entertainment lifestyles News

சரக்கு லாரி ஓட்டுனர் + யூடியூபர்.. இணையத்தை கலக்கும் கேரள பெண் ஜலேஜா..

பெண்கள் என்றாலே வங்கி பணி, ஆசிரியர் பணி போன்றவை தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சமூகத்தில் நிலவி வரும் பழைய சிந்தனைகளை இந்த காலத்து பெண்கள் தூள்தூளாக உடைத்து வருகிறார்கள்.   ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். அப்படி சரக்கு லாரி ஓட்டுநராகி இந்தியாவையே கலக்கி வருகிறார் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர்.

சாகசங்கள் நிறைந்த வாழ்க்கை: பெண்கள் பல துறைகளில் களமிறங்கிவிட்டாலும், மாநிலங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்துக்கு உதவும் சரக்கு லாரி ஓட்டுநர்களாக பெண்களை காண்பது அரிது தான். சொந்த ஊருக்குள் அல்லது மாநிலத்திற்குள் பெண்கள் லாரிகள் ஓட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் கேரளாவை சேர்ந்த ஜலேஜா ரதீஷ் ஒரு படி மேலே சென்று இந்தியா முழுவதும் சரக்கு லாரி ஓட்டி சென்று பெண்களுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளார்.




தினம் , தினம் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். லாரி ஓட்டுநரானது எப்படி?:

42 வயதான ஜலேஜா ரத்தீஷ், கேரள மாநிலத்தை சேர்ந்தவர். கோட்டயத்தை சேர்ந்த ரத்தீஷை திருமணம் செய்த போது இவருக்கு இரு சக்கர வாகனம் கூட ஓட்டத்தெரியாது. ரத்தீஷ் சரக்கு லாரி ஓட்டுநராக பணியாற்றுபவர். 2003ஆம் ஆண்டு வங்கி கடன் வாங்கி ஒரு சரக்கு லாரி வாங்கியுள்ளார்.

மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை கொண்டு செல்வது தான் இவரது பணி. ஒரு நாள் ஜலேஜா வேடிக்கையாக நானும் உங்களுடன் வேலைக்கு வருகிறேன் என கூற, அதற்கு ரதீஷ் லாரி ஓட்டினால் தான் நீ என்னுடன் வர முடியும் என பதில் அளித்துள்ளார். இது தான் ஜலேஜாவை லாரி ஓட்டுநராக்கியுள்ளது.

இருசக்கர வாகனம் முதல் லாரி வரை: ஜலேஜா தனது கணவரின் உதவியோடு முதலில் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார். சிறிது காலத்தில் கார் ஓட்ட கற்றுக் கொண்ட அவர் படிப்படியாக 2018ஆம் ஆண்டு சரக்கு லாரிகளை இயக்க கற்றுக் கொண்டு உரிமமும் பெற்றுக் கொண்டார். அன்று தொடங்கிய பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

கணவன் – மனைவியாக இருவருமே சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். “என் குடும்பமே எனக்கு பக்கபலம்” பள்ளத்தாக்குகள், மலைப்பாதைகள் என ஆபத்தான சாலைகளில் எல்லாம் லாரிகளை இயக்க பழகி கொண்டுவிட்டார் ஜலேஜா.

சரக்கு எடுத்து கொண்டு ஊரை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு வருவதற்கு 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும். கூட்டு குடும்பத்தில் வசிப்பதால் குழந்தைகளை குடும்பத்தினர் பார்த்து கொள்கின்றனர் எனவே நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முடிகிறது என்கிறார் ஜலேஜா.

புத்தேட்டு டிராவல் விளாக் (Puthettu Travel Vlog): ஒரு முறை ஜலேஜாவும் கணவர் ரத்தீஷும் காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற போது தங்கள் பயண அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது பெரிய ஹிட்டானதால் புத்தேட்டு டிராவல் விளாக் என்ற பெயரில் தாங்கள் செல்லும் இடங்கள் அங்கே கிடைக்கும் உணவு, சந்திக்கும் மக்கள் ஆகியவற்றை எல்லாம் தொகுத்து வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். இதற்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.




பெண் ஓட்டுநராக சந்திக்கும் சவால்கள்: ஓட்டுநர் பணியை பொறுத்தவரை காலையில் லாரி எடுத்தால் 10 மணி நேரங்களுக்கு மேல் லாரியை இயக்க வேண்டி இருக்கும்.ஆர்வம் இருப்பதால் பணி சலிப்பு தட்டாது என கூறுகிறார். இருப்பினும் லாரி இயக்கி செல்லும் வழிகளில் தூய்மையான கழிப்பறைகளை கண்டறிவது தான் சவாலாக இருக்கும் என்கிறார்.தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் இந்த பிரச்னை அதிகம் என்றும் கூறுகிறார்.

ஒரு லாரியில் தொடங்கி 27 லாரிகள் இயக்கம்:

தற்போது கேரளாவில் இவர்களின் புத்தேட்டு டிரான்ஸ்போர்ட்டில் 27 லாரிகள் இயங்குகின்றன. ஒரு லாரியில் தொடங்கி தற்போது 27 லாரிகளுடன் பலருக்கும் பணி வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளனர். இதுவரை ஜலேஜாவும் அவரது கணவரும் நேபாளம், காஷ்மீர், போர்பந்தர், ஒரிசா, கொல்கத்தா, மேகாலயா, மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்றுள்ளனர். எத்தனை சவால்கள் வந்தாலும் , சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கமும் ஜலேஜாவை இன்னும் பல மைல் தூரத்திற்கு அழைத்து செல்ல போகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!