gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/கருமாத்தூர் மூணுசாமி கோயில்!

முன்னொரு காலத்தில், வடக்கில் இருந்து சிவா, விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தென் நாட்டின் இயற்கை எழில்கொஞ்சும் கருமாத்தூரின் அழகில் மயங்கி, அங்கே குடியிருக்க ஆவல் கொண்டனர். முதலில் பிரம்மாவின் தங்கையான பார்வதி தேவி பேச்சி அம்மனாக அவதரித்து இங்குவந்து கோயில்கொண்டாள். மும்மூர்த்திகளில் பிரம்மாவின் அம்சம் விருமன் என்பார்கள். விருமன் ஆறாம்பிலிக்கோட்டை எனும் பகுதிக்குச் சென்று தங்கிவிட, சிவனாரின் அம்சமான சிதம்பர ஐயன், விஷ்ணுவின் அம்சமான ஆங்காள ஐயன் ஆகியோரும் அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்கள்.




ஆனால் அங்கே ஏற்கெனவே ஆட்சி செய்துவருகிற பேய்க்காமனுக்குத் தன் சொந்த இடத்தை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. கடும் கோபம் கொண்டு பேச்சி அம்மனை விரட்டினான். ஆக்ரோஷமான பேய்க்காமனிடம் தன்னால் சண்டையிட முடியாது என்பதை உணர்ந்த பேச்சி, செய்வதறியாது ஆறாம்பிலிக்கோட்டையில் இருக்கிற தன் சகோதரனான விருமாண்டியிடம் ஓடிச் சென்று தன் பிரச்னையைக் கூறி முறையிட்டாள். அங்கே, அந்த ஊர்மக்கள் விருமனுக்குப் படையலிட்டு வழிபட்டு வருவதைக் கண்டாள். விவரத்தைச் சொல்லி, ‘இதேபோல், தினமும் உனக்குப் படையல் போடுகிறேன், வா அங்கே!’ என்று சொல்லி அவனை அங்கே அழைத்து வந்தாள்.

விருமனும் சகோதரிக்காக அங்கே வந்தார். பேய்க்காமனுக்கும் விருமாண்டிக்கும் சண்டை நடைபெற்றது. இருபெரும் சக்திகள் சண்டையிட்டால் இந்த உலகம் தாங்குமா… கருப்பசாமி கோயிலில் சமரசம் செய்யப்பட்டது. இருவருக்கும் இடையில் போட்டி ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டது. தொட்டப்ப நாயக்கனூரை ஒரு எல்லையாகவும், மதுரை மொட்டைக் கோபுரத்தை ஒரு எல்லையாகவும் வைத்துப் போட்டி நடத்துவது என்று முடிவானது.




சிதம்பர ஐயன்

யார் முதலில் அந்த இடத்தை அடைகிறாரோ, அவரே ஜெயித்தவர் என்று நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், பேய்க்காமனோ அதிலும் சூழ்ச்சி செய்தான். தனக்கு நல்ல குதிரையும் விருமனுக்கு நொண்டிக்குதிரையையும் வழங்குமாறு செய்தான். ஆனால் வீராதி வீரனான விருமன், அந்த நொண்டிக்குதிரையிலும் பயணித்து தொட்டப்பநாயக்கனூர் எல்லையையும் மதுரை மொட்டைக் கோபுரத்தையும் முதலில் தொட்டு, வெற்றி பெற்றான். ஊர்மக்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர். இதையடுத்து, மூவருமே அங்கு கோயில்கொண்டு அருள்பாலிக்கத் தொடங்கினர்.

பேச்சியம்மனும் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில், தினமும் அண்ணனுக்கு மாமிசப் படையலிட்டாள். ஆனால், தினமும் படையலிட சிரமப்பட்டவள். இதிலிருந்து தப்பிக்க ஒரு சூழ்ச்சி செய்தாள். அருகில் உள்ள கிணற்றில் தன் மோதிரத்தைக் கழற்றிப் போட்டுவிட்டு, ‘அண்ணா, மோதிரம் கிணற்றில் விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தாங்கள்’ என்று கேட்டாள். தங்கையின் விருப்பத்தை நிறைவேற்ற விருமனும் கிணற்றில் இறங்கினான். உடனே பேச்சி, பெரிய பாறையைக் கொண்டு கிணற்றை மூடினாள். பிறகு கிணற்றுக்கு வெளியே இருந்து கண்ணீர் விட்டு வேண்டினாள்.




“அண்ணா, என்னை மன்னித்துவிடு. தினமும் என்னால் படையல்போட முடியவில்லை. வருடத்துக்கு ஒரு முறை இனி உனக்குப் படையல் போடுகிறேன். அப்போது, சூல் கொண்ட ஆடும் மூன்று கிடாக்களும் தானமாக உனக்குத் தருகிறேன்’ என்று சொல்லி வேண்டிக்கொண்டாள். தங்கையின் சிரமத்தைப் புரிந்துகொண்ட விருமனும் கோபம் கொள்ளாமல் அதை ஏற்றுக் கொண்டார்.

அன்று முதல் விருமன் முதலான மூன்று சாமிகளும் அங்கே அருள்புரிந்து வருகின்றனர் என்கிறது ஸ்தல புராணம். கருமாத்தூரில் உள்ள இந்தக் கோயிலைத்தான், மூணுசாமி கோயில் என்றே அழைக்கின்றனர் மக்கள்.

சிவ அம்சமான காசி கலியுக சிதம்பர ஐயன், ஸ்ரீபிரம்மாவின் அம்சமான விருமன் மற்றும் அவன் தங்கை பேச்சி, ஸ்ரீவிஷ்ணுவின் அம்சமான ஆங்காள ஐயன் ஆகிய மூவரும் தனித்தனிக் கோயிலில்தரிசனம் தருகின்றனர். மகாசிவராத்திரி நாளில், விமர்சையாக இங்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுமார் ஒன்றரை லட்சம்பேர் வரை கலந்துகொண்டு, கிடா வெட்டு, சேவல் காணிக்கை, பொங்கல் படையல் என அமர்க்களப்படும் இந்தத் திருவிழா இந்த மண்ணின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்கிறது.

மூணுசாமி கோயில்

இங்கு எந்த உருவுமின்றி பீடமாக மட்டுமே காட்சி தரும் சிதம்பர ஐயன் கோயில், தனித்தனிச் சந்நிதிகளில் விருமன், பேச்சி ஆகியோர் அருள்புரியும் ஆலயம் மற்றும் கண்ணாயி, பூங்கனி சமேதராக ஆங்காள ஐயனும் காட்சி தரும் தலம் என மூன்று கோயில்களும் அற்புதமாக அமைந்துள்ளன.




கிராம கோயில்களுக்கே உரிய பெரிய, பெரிய சிலை அமைப்புகளுடன் தீபம் ஏற்றுவதற்கான உயரிய கம்பங்களும் இங்கு உள்ளன. ஆடி கடைசி வெள்ளியில் இங்கு பிரமாண்டமாகத் திருவிழா நடைபெறும்.

விருமனைக் கிணற்றில் புதைத்த இடத்தில், இன்றைக்கு மிகப்பெரிய விளக்குத்தூண் வைக்கப்பட்டுள்ளது. உச்சிகால பூஜையை விருமன் ஏற்றுக் கொண்ட அடையாளமாக, இந்த விளக்குத் தூண் லேசாக ஆடி, அசைந்துவிட்டு நிற்கும் எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், ஊர்க்காரர்கள்!

இங்குவந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் மூணுசாமிகளும் நம் வாழ்வில் முன்னேற்றத்தை அருள்வார்கள் என்பது நம்பிக்கை. மனபயம் விலகும். துஷ்ட சக்திகள் நம்மை அணுகாது என்பது ஐதிகம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்களாக விளங்கும் இந்த மூணுசாமிகளையும் வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று வணங்கி வாருங்கள். வாழ்வில் நலமும் வளமும் சூழும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!