gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/அய்யனார் சுவாமி

அய்யனார் என்ற தெய்வம் கிராமங்களில் உள்ள கடவுளாவார்.. இவர் காவல் தெய்வம் என்றும், கிராம தேவன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு சாத்தன்( Chaathan) மற்றும் சாஸ்தா ஆகிய பெயர்களும் உள்ளன. நகரங்களிலும் இவருக்கு கோவில்கள் உண்டு. காரணம், இன்றுள்ள நகரங்களும் ஒருகாலத்தில் கிராமங்களாக இருந்தவையே.

‘ அய்யனார் என்ற சொல், ‘ அய்யன்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ‘ அய்யன்’ என்ற சொல்லுக்கு ‘ தலைவர்’ , ‘வணக்கத்திற்குரியவர்’ மற்றும் ‘ மரியாதைக்குரியவர்’ என்று பொருள்.




நமது தமிழ்நாட்டில் அநேகமாக எல்லா ஊர்களிலும் அய்யனார் கோவில்கள் உள்ளன. இவர் காவல் தெய்வம் ஆதலால் ஊர் எல்லையில் கோவில் கொண்டிருப்பார். இவர் ஊருக்குள் விரோதிகள், கள்வர்கள், கொடிய விலங்குகள், தொற்று வியாதிகள் வராமல் பாதுகாப்பார். வயல்களில் விளையும் பயிர்களை காப்பவரும் இவரே. இவருக்கு பாவாடை ராயன், கருப்பணசாமி, வீரபத்திரன், இடும்பன் மற்றும் வீரன் ஆகிய துணைவர்கள் உண்டு. இவர்களும் அய்யனார் கோவிலில் வீற்றிருப்பர். பிடாரி என்று அழைக்கப்படும் பீடாபகாரி என்ற தேவதையையும் இவரது கோவிலில் காணலாம்.

நீங்கள் கிராமத்திலுள்ள அய்யனார் கோவிலுக்கு சென்றால், கோவிலின் வெளியே, திறந்த வெளியில் பெரிய அளவிலான, பல வண்ணங்கள் தீட்டப்பட்ட அய்யனார் சிலையைக் காணலாம். இச்சிலை சுதை வேலையினால் செய்யப்பட்டதாகும். இவர் குதிரையின் மேல் சவாரி செய்வது போல் இருப்பார். குதிரையின் முன் கால்கள் தூக்கியபடி கம்பீரமாக இருக்கும்.




யானை மீது அமர்ந்த அய்யனாரும் உண்டு. சில ஊர்களில் இவர் காணப்படுகிறார்.

சில ஊர்களில் பெரிய அளவில் செய்யப்பட்ட அய்யனார் சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த அய்யனார், கிரீடம் அணிந்து பெரிய மீசையுடன் காட்சி தருவார். நெற்றியில் திருநீறு அணிந்திருப்பார். வலது கையில் செங்கோல் அல்லது தண்டம் வைத்திருப்பார். செண்டு(சாட்டை), அரிவாள், வில், அம்பு ஆகியவற்றையும் வைத்திருப்பார். இடது காலை மடித்து வைத்துக்கொண்டு, வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார்.

கோவிலின் கருவறையில் உள்ள அய்யனார் தமது மனைவியர்களான பூர்ணா, புஷ்கலா ஆகியோருடன் காட்சி தருகிறார். இவர் ஶ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.




சில கோவில்களில் அய்யனார் துணைவியர்கள் இன்றி தனித்துக் காணப்படுகிறார். இவர் பால அய்யனார் (Bala Ayyanaar) என்று அழைக்கப்படுகிறார்.

நம் தமிழ்நாட்டில் சங்க காலம் முதலே அய்யனார் வழிபாடு வழக்கத்தில் உள்ளது.அக்காலத்தில் அவர் சாத்தன் (Chaathan)) அல்லது சாத்தனார் என்று அழைக்கப்பட்டார். சங்க காலத்தில் சீத்தலை சாத்தனார் என்ற ஒரு புலவர் இருந்ததாக கேள்விப்பட்டிருப்பீர்கள். இவருடைய குலதெய்வம் சாத்தன் ஆவார்.ஆகையால் இப்புலவர் சாத்தனார் என்று பெயரிடப்பட்டார்.

அய்யனார் வரலாறு பற்றி புராணம் எதுவும் இயற்றப்படவில்லை. வேறு புராணங்களிலும் இவரது வரலாறு இல்லை. இவர் சிவபெருமானின் மகன் என்றும், கிராமங்களில் வாழும் எளிய மக்களைக் காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில், சாத்தன்( அய்யனார்) கோவில்கள் தமிழ்நாட்டில் நிறைய இருந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் பெருமான் தனது திருப்பயற்றூர் பதிகத்தில் சிவபெருமானைப்பற்றிக் குறிப்பிடும்போது

“பார்த்தனுக் கருளும் வைத்தார்

பாம்பரை யாட. வைத்தார்

சாத்தனை மகனா வைத்தார் “

என்று எழுதியுள்ளார் ( திருமுறை 4:32:4) இதிலிருந்து சாத்தன்(அய்யனார்) சிவபெருமானின் புதல்வர் என்று தெரிகிறது.




கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் ” மகாசாத்தன் படலம்” என்ற பிரிவு உள்ளது. அதில் அய்யனார் தன்னுடைய தளபதியான மகாகாலனை, சூரபதுமனிடமிருந்து இந்திராணியை மீட்க அனுப்பினார் என்றும், மகாகாலன் சூரபதுமனுடைய தங்கை அஜமுகியின் கைகளைக் கொய்தான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் சபரிமலையில் உள்ள ஐயப்பனும், இந்த அய்யனாரும் ஒருவரா என்ற ஐயம் பலருக்கு எழும். சபரிமலை ஸ்தல புராணத்தில், ஐயப்பசுவாமி அய்யனாரின் அவதாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அய்யனாருக்கு இரு துணைவியர் உள்ளனர். ஆனால் ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. இந்த வித்தியாசத்தை நாம் உணரவேண்டும்.

அய்யனார் கோவில்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, ஶ்ரீலங்கா, அந்தமான் ஆகிய பகுதிகளிலும் உள்ளன. இக்கோவில்கள் நல்ல முறையில் ஊர்மக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!