gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள் – 97 | தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் கோயில்

108  திவ்ய தேசங்களில் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மகர நெடுங் குழைக்காதர் கோயில் 97-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. நவதிருப்பதிகளில் இத்தலம் சுக்கிரனுக்கு உரிய தலமாகும்.

தல வரலாறு: ஒருநாள் வைகுண்டத்தில் ஸ்ரீதேவி கவலையுடன் அமர்ந்திருந்தார். திருமால் தன்னைவிட பூமாதேவி மீது அதிக அன்புடன் இருப்பதாக நினைத்து வருந்தினார். தனது வருத்தத்தை துர்வாச முனிவரிடம் ஸ்ரீதேவி தெரிவித்தார். மேலும் தன்னைவிட பூமாதேவி அழகுடன் இருப்பதால் திருமால் இவ்வாறு நடந்து கொள்கிறாரோ என்று தனது சந்தேகத்தையும் அவரிடம் தெரிவித்தார் ஸ்ரீதேவி. தன்னை பூமாதேவி போன்ற வடிவத்தில் மாற்றுமாறும் வேண்டினார்.







இதைத் தொடர்ந்து, ஒருசமயம் பூமாதேவியைக் காண துர்வாச முனிவர் சென்றபோது, பூமாதேவி அவருக்கு சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியவில்லை என்று கூறி, கோபத்துடன் ‘ஸ்ரீதேவி போன்ற உருவத்தைப் பெற வேண்டும்’ என்று பூமாதேவியை சபித்தார். தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரிய பூமாதேவிக்கு, சாப விமோசனம் பெற வழி கூறினார் துர்வாச முனிவர்.

தாமிரபரணி கரையில் அமைந்துள்ள தென்திருப்பேரை தலத்துக்குச் சென்று ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உச்சரிக்க, பூமாதேவிக்கு துர்வாச முனிவர் அறிவுறுத்தினார். அதன்படி பங்குனி பௌர்ணமி தினத்தில் இத்தலத்துக்கு வந்த பூமாதேவி, ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது, இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவிலான காதணிகள்) கிடைக்கப் பெற்றார்.

அந்த நேரத்தில் அவர் முன்னர் திருமால் தோன்ற, அவரிடம் கொடுத்து அணியச் சொன்னார் பூமாதேவி. பெருமாளும் அதை விருப்பமுடன் அணிந்து கொண்டார். அந்த நிமிடமே பூமாதேவி தன் சுய உருவத்தைப் பெற்றார். இத்தலத்தில் பூமாதேவி, திருமகள் (ஸ்ரீதேவி) வடிவத்தில் இருப்பதால் இத்தலம் ‘திருப்பேரை’ என்ற பெயரைப் பெற்றது. இத்தல பெருமாள் மகர குண்டலங்களை அணிந்தபடி இருப்பதால், ‘மகரநெடுங் குழைக்காதன்’ என்று அழைக்கப்படுகிறார்.




கோயில் அமைப்பும் சிறப்பும்: 10-ம் நூற்றாண்டின் மத்தியில் கொடிமரம், மண்டபங்கள், திருத்தேர் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் உரைக்கின்றன. பாண்டிய நாட்டை ஆண்ட சுந்தர பாண்டியன் தனக்கு பிள்ளை வரம் வேண்டி தினப்படி திருமாலுக்கு பூஜைகள் செய்தார். பல தேசங்களில் இருந்து 108 அந்தணர்களை வரவழைத்து பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்தார்.

அவர்களை அழைத்து வரும்போது ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஊர் வந்து சேரும்போது 107 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் மன்னர் வந்து பார்க்கும்போது 108 பேர் இருந்தனர். பெருமாளே 108-வது நபராக வந்து சேர்ந்து கொண்டதால், இத்தல பெருமாள் தங்களுக்குள் ஒருவர் என்று மக்கள் கொண்டாடுகின்றனர்.

திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருக்கோளூரில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!