gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள் – 95 | திருக்குளந்தை வேங்கட வாணன் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் (திருக்குளந்தை) வேங்கட வாணன் கோயில், 95-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

தல வரலாறு: தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருக்குளந்தை என்று அழைக்கப்படும், சிற்றூரில் வேதசாரர் என்ற அந்தணர் வசித்து வந்தார். அவரது பெண் கமலாவதி, தீவிர திருமால் பக்தராக இருந்தார். இவர் இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டார். திருமாலும் இவரது தவத்தில் மகிழ்ந்து, இவருக்கு காட்சி கொடுத்து, மணம் புரிந்து கொண்டார். பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.




ஒருசமயம் சோரன் என்ற அரக்கன் வந்து வேதசாரரின் மனைவி குமுதவதையை கவர்ந்து செல்கிறான். செய்வதறியாது தவித்த வேதசாரர், தான் வணங்கும் ஸ்ரீநிவாசனிடம் இதுகுறித்து விண்ணப்பிக்கிறார்.

பக்தரின் குரலுக்கு ஓடோடி வந்த திருமால் அவனை வீழ்த்தி, அவன் மேல் நாட்டியமாடி அழித்தார். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாயக்கூத்தன் என்ற திருநாமத்தை ஏற்றார். சோர நாட்டியன் என்றும் பெருமாள் அழைக்கப்படுகிறார். கருடாழ்வார் இத்தல பெருமாளுடன் அருகே உற்சவராக எழுந்தருளியுள்ளார்.

நவத்திருப்பதிகளுள் ஒன்றாகக் கருதப்படும், இத்தலம் சனி பகவானுக்கு உரிய தலமாகக் கருதப்படுகிறது. நவத்திருப்பதித் தலங்களுள் பெருமாளே நவக்கிரகமாக செயல்படுவதால், நவகிரகங்களுக்கு என தனியே சந்நிதிகள் அமைக்கப்படுவதில்லை. அவரவர் கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால், கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.




கோயில் அமைப்பும் சிறப்பும்: ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் வேங்கட வாணன் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் மேல் வர்ணம் பூசப்பட்டுள்ளது. அருகிலேயே வேதசாரரும் அவரது மனைவி குமுதவதையும் கைகூப்பி நிற்கின்றனர். அருகே பிரகஸ்பதியும் உள்ளார்.

கோயில் வாயில் அருகே உள்ள பந்தல் மண்டபத்தில் திருமஞ்சனக் குறடு உள்ளது. கோயிலுக்குள் கழுநீர்த் துறையான் சந்நிதி, கொடி மடம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உள்ள உற்சவரே மாயக்கூத்தர் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு இருபுறத்திலும் அலர்மேல் மங்கைத் தாயாரும், குளந்தைவல்லித் தாயாரும் உள்ளனர்.

திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலிக்கு கிழக்கே 25 மைல் தொலைவில் உள்ளது இத்தலம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!