gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள் – 88 | திருவண்பரிசாரம் திருவாழ்மார்பன் கோயில்

108 திவ்ய தேசங்களில், கன்னியாகுமரி மாவட்டம் திருவண்பரிசாரம் திருவாழ்மார்பன் கோயில், 88-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தல வரலாறு: சப்தரிஷிகள் ஞானாரண்யம் என்று அழைக்கப்படும் சுசீந்திரத்தில் தவமிருந்தபோது, இறைவன் சிவபெருமானாக வந்து காட்சி அளித்தார். அப்போது முனிவர்கள் திருமாலின் வடிவில் இறைவனைக் காண வேண்டும் என்று சோம தீர்த்தக் கட்டத்தில் தவம் இருந்தனர். இறைவனும் திருமால் உருவில் முனிவர்களுக்கு காட்சி அருளினார்.




அதே உருவில் இத்தலத்தில் தங்கியருள வேண்டும் என்று முனிவர்கள் விண்ணப்பம் வைக்க, அதையேற்று மகாவிஷ்ணு கோலத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார்.

நம்மாழ்வார் அவதாரம்: நம்மாழ்வாரின் தாயார் பிறந்த தலம் என்ற பெருமையைக் கொண்டது இத்தலம். குறுநாட்டு காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டு திருப்பதிசாரத்தைச் சேர்ந்த திருவாழிமார்ப பிள்ளையின் மகள் உதயநங்கைக்கும் திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக இத்தம்பதிக்கு பிள்ளைப் பேறு கிட்டவில்லை.

கலங்கிய மனதுடன், இத்தம்பதி மகேந்திர மலையடிவாரத்தில் உள்ள திருக்குறுங்குடி சென்று, அங்கு ஓடும் நதியில் நீராடி, பெருமாளை (நம்பி) வழிபட்டனர். பெருமாளும் அவர்களின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி, “விரைவில் உங்கள் எண்ணம் ஈடேறும். நானே உங்களுக்கு மகனாக அவதரித்து, சிறு வயதிலேயே அனைத்துக் கீர்த்திகளையும் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவேன். பிறக்கும் குழந்தையை திருநகரியில் உள்ள புளியமரத்துக்கு எடுத்துச் செல்லவும்” என்று கூறி அவ்விடத்தைவிட்டு மறைந்தார்.




சில நாட்கள் கழித்து உதயநங்கை கருவுற்றார். மகப்பேற்றுக்காக பிறந்த வீடு வந்த உதயநங்கைக்கு வைகாசி விசாக தினத்தில் பௌர்ணமி நாளில் ஆண்குழந்தை பிறந்தது. அவருக்கு நம்மாழ்வார் என்று பெயர் சூட்டப்பட்டது.

குறுங்குடி பெருமாள் கூறியபடி, குழந்தையை ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்தருகே பொன் தொட்டிலில் இட்டனர். குழந்தை தவழ்ந்து புளியமரப் பொந்துள் ஏறி தெற்கு நோக்கி அமர்ந்து கொண்டது. பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவாறு ஆதிநாதப் பெருமாளைநோக்கி தவம் இருந்தது. இப்படியே 16 ஆண்டுகள் இறை தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். திருப்பதி சாரம் நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற தலமாகவும் விளங்குகின்றன.




கோயில் அமைப்பும் சிறப்பும்: திருவாழ் மார்பன் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஒற்றைக் கல் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. இந்திர கல்யாண விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி, அபய ஹஸ்தத்துடன், வலது காலை மடக்கியும் இடது காலை தொங்கவிட்டும்கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாரின் உருவம் பொறித்த பதக்கத்துடன் உள்ள தங்கமாலையை அணிந்துள்ளார்.

திருவிழாக்கள்: ஆடி சுவாதி திருநாள் (திருமால் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்ற நாள்), சித்திரைத் திருவிழா (10 நாள்), புரட்டாசி சனிக்கிழமை, ஆவணி திருவோண தினங்களில் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.

திருமணத் தடை நீங்க, கல்வி கேள்விகளில் செழிப்புடன் விளங்க, செல்வம் பெருக இத்தல பெருமாள் அருள்பாலிப்பார்.

அமைவிடம்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் 2 மைல் தூரத்தில் உள்ளது இத்தலம்.




 

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!