gowri panchangam Sprituality

108 திவ்ய தேச தலங்கள் – 80 | திருவல்லவாழ் திருவாழ்மார்பன் கோயில்

108 திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லவாழ் திருவாழ்மார்பன் கோயில் 80-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருவல்லா என்றும், ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தைப் பற்றி கருட புராணம், மத்ஸ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளன.




தல வரலாறு: 

கேரள மாநிலம் சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்களத்தம்மாள் என்பவர் வசித்து வந்தார். ஏகாதசி தினத்தில் விரதமிருந்து, திருவல்லவாழ் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார். மறுநாள் துவாதசி தினத்தில், இக்கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்.

ஒருசமயம் இவர், காட்டின் வழியே வரும்போது, தோலாகாசுரன் என்ற அசுரன், இவரை கோயிலுக்கு செல்லவிடாமல் இன்னல்கள் விளைவித்தான். இதுதொடர்பாக அம்மையார், திருமாலிடம் முறையிட்டார். மற்றொரு நாள் இதுபோல் காட்டுவழியே அம்மையார் வரும்போது, ஓர் இளைஞன், அசுர சக்திகளுடன் போர் புரிவதைக் காண்கிறார். சற்று நேரத்தில் போர் சப்தம் அடங்கியது. அந்த இளைஞரையும் காணவில்லை. கோயிலுக்கு வந்த அம்மையார், அங்கு பெருமாள் அமரும் இடத்தில், காட்டில் போர் புரிந்த இளைஞர் அமர்ந்திருப்பதைக் காண்கிறார். தனக்காக பெருமாள் இளைஞர் அசுர சக்தியுடன் போரிட்டதை அம்மையார் உணர்ந்து கொண்டார்.

பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. அதேபோல் இத்தல பெருமாளும் அங்கவஸ்திரம் அணியாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் திருமகள் நிரந்தரமாகக் குடியிருப்பதால், இத்தல பெருமாள் ’திருவாழ்மார்பன்’ என்று அழைக்கப்படுகிறார். மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனத்துக்கு தனிச்சிறப்பு என்றால், இத்தல பெருமாளின் மார்பு தரிசனத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.




கோயிலின் அமைப்பும் சிறப்பும்: சதுரங்க கோல விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் திருவாழ்மார்பன் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள கருடாழ்வார் 50 அடி உயரத்தில் உள்ள தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். கருடாழ்வாருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வேண்டுவோர், வேண்டியவுடன் அவரை அழைத்துச் செல்ல தயார் நிலையில், கருடாழ்வார் இருப்பதாக கூறப்படுகிறது.

பெருமாள் பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்வதால், சுவாமி தரிசனம் செய்ய பெண்களுக்கு அனுமதி இல்லை. மார்கழி திருவாதிரை, சித்திரை வருடப் பிறப்பு தினங்களில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

உப்பு மாங்காய் நைவேத்தியம்: சங்கரமங்களத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு உணவளிக்கும்போது, பெருமாளும் அந்த வரிசையில் அமர்ந்து உணவைப் பெற்று உண்டார். அப்போது, அம்மையார் தான் விரதம் முடித்தவுடன் உண்பதற்கு வைத்திருந்த உப்பு மாங்காயை தனக்கு அளிக்கும்படி கேட்டார் பெருமாள். அதை பாக்கு மர இலையில் வைத்து பெருமாளிடம் அளித்தார் அம்மையார். அன்றைய தினம் முதல் சுவாமிக்கு நைவேத்தியமாக பாக்கு இலையில் அன்னமும், உப்பு மாங்காயும் வைக்கப்படுகிறது.




திருவிழாக்கள்: மாசி மாதம் பூச நட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் 10 நாள் ஆராட்டு விழா தொடங்கும். திருவிழா முடிந்த மறுநாள் அர்ச்சனை மட்டுமே நடைபெறும். அன்று இதர பூஜைகள் நடைபெறாது.

மார்கழி திருவாதிரையில் சிவபெருமான், திருமாலின் கோலத்தைக் காண வந்ததால், இத்தலத்தில் சந்தனத்துடன் விபூதியும் கொடுப்பது வழக்கம்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள், கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில் உள்ள நடனக் குழு மூலம் நேர்ச்சையாக நடத்துகிறார்கள். இந்த நடன குழுவுக்கு ‘கலாக்ஷேத்ரா’ என்று பெயர்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!