Cinema Entertainment

விஜயகாந்திற்க்கு சிகிச்சை முறையாக இருந்ததா? எஸ்.ஏ.சிக்கு வந்த சந்தேகம்

அறுவை சிகிச்சைக்குப் பின் விஜயகாந்த்துக்கு முறையாகச் சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார் அவரது ஆஸ்தான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்த்தை வைத்து 17 படங்கள் இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அந்தக் கூட்டணி சினிமா வட்டாரத்தில் வெற்றிக் கூட்டணியாகக் கொண்டாடப்பட்டது. ஆகவே மற்ற இயக்குநர்களைவிட எஸ்.ஏ.சந்திரசேகருக்குத் தனி மரியாதை அளித்துவந்தார் விஜயகாந்த்.

அவரது மறைவு அன்று எஸ்.ஏ.சந்திரசேகர் துபாயிலிருந்தார். அங்கிருந்தே அவர் தனது இரங்கல் செய்தியைப் பகிர்ந்துகொண்டிருந்தார். ‘சில ஆண்டுகளாக அவரைச் சந்திக்க நேரம் கேட்டுவந்ததாகவும், ஆனால் அவரது குடும்பத்தார் அதற்கு இணங்கவில்லை என்றும்’ கூறி இருந்தார். இப்போது சென்னை திரும்பு உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்த் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார். மேலும் விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.




“எனக்கும் விஜயகாந்த்துக்குமான உறவு என்பது சாதாரணமானதல்ல. ஒரு நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே உள்ள உறவைத் தாண்டியது அது. என்னுடைய தம்பியாகத்தான் நான் அவரை உபசரித்திருக்கிறேன். இன்றைய காலத்துக்கு ஏற்றமாதிரி சொல்லவேண்டும் என்றால் ஒரு நண்பனாக அவரை நான் நேசித்திருக்கிறேன்.

ஆனால், அவர் என்ன உயர்ந்த இடத்தில் வைத்திருந்தார். ‘குரு’ ஸ்தானத்தில் என்னை மட்டும்தான் அவர் வைத்திருந்தார். அவர் வேறு யாரையும் குரு என்று சொன்னதில்லை.

அப்படி அவர் சொல்லி நான் யாரையும் கேட்டதில்லை. எங்கள் இயக்குநர் என்றுதான் சொல்வார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் மட்டும்தான் அவர் எனக்கு நடிகனாக இருந்தார். நான் அவருக்கு இயக்குநராக இருந்தேன். என்னை மாதிரியான கோபக்காரனிடம் அவர் பிரியத்துடன் வேலை செய்திருக்கிறார். அப்போதே அவர் எந்தளவுக்கு என்னைப் புரிந்துவைத்திருந்தார் என்பது விளங்கிவிடும்.




அந்தளவுக்கு என்னைப் புரிந்து வைத்திருந்தால்தான் அவ்வளவு படங்களை என் இயக்கத்தில் நடித்தார். 17 படங்களில் நடித்தார். அவற்றுக்கு எல்லாம் அவர் தேதி கொடுத்ததில்லை. என்னைத்தான் கேட்பார். ‘நம்ம படம் எப்ப ஆரம்பிக்கிறது சார்’ என்று கேட்பார். ‘இல்லை விஜி, நீங்கள் தேதி சொல்லுங்கள்’ என்று சொன்னால் கூட அதை அவர் ஏற்கமாட்டார். என்னிடம் தான் கேட்பார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன் அவரைப் போய் வீட்டில் சந்தித்தேன். அவரால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. அப்படி இருந்து கட்டியணைக்கக் கஷ்டப்பட்டு எழ முயற்சி செய்தார். நான் அவரை விடவில்லை. குனிந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். அவரை நினைக்கும்போது எல்லாம் ஒரே ஆதங்கம்தான் மனதில் வரும். 2005இல் அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அரசியலில் அவர் மிகப் பெரிய இடத்திற்குச் செல்வார் என நான் கணக்குப் போட்டேன்.




அவர் போட்டிப் போட்ட முதல் தேர்தலிலிருந்து 3வது தேர்தல் வரும்போது நான் அவரை முதல்வராக வந்துவிடுவார் என நம்பினேன். 2016 என நினைக்கிறேன். மிகப்பெரிய ஒரு அறுவை சிகிச்சை முடிந்தது. அதற்குப் பின்னால் போஸ்ட் ஆபரேஷன் கேர் என்று ஒன்றுள்ளது. ஒரு படம் நன்றாக வரவேண்டும் என்றால், அதற்கு போஸ்ட் புரடெக்‌ஷன், ப்ரீ புரடெக்‌ஷன் இந்த இரண்டும்தான் முக்கியம். இவற்றின் மூலம்தான் ஒரு படம் நன்றாகவரும். ஷுடிங் செய்வதால் ஒரு படம் நன்றாக வந்துவிடாது?

படப்பிடில் என்ன தப்பி நடந்தாலும் போஸ்ட் புரடெக்‌ஷனில் தான் சரி செய்வோம். அதுபோல்தான் வாழ்க்கையும். ஆகவே ஆபரேஷனுக்குப் பிறகு அவரது சிகிச்சை முறையாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அவ்வளவு எளிதாகத் தளர்ந்துவிடும் உடம்பு அல்ல அவர் உடல்.

அவருக்கு நெருக்கமானவர்களை எல்லாம் அவர் அடிக்கடி சந்தித்து வந்திருந்தாலே அவர் இன்னும் பல காலம் வாழ்ந்திருப்பார். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நடக்கவேண்டியது. மிகச் சீக்கிரமாக நடந்துவிட்டது. அதை நினைக்கும்போது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. கஷ்டமாக உள்ளது. பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றது. என்னால் அதை எல்லாம் சொல்லவே முடியவில்லை. மனம் அடித்துக் கொள்கிறது” என்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!