Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே-15

15

  

” உன் கையால் செய்த ” வாடா ” சாப்பிட்டு எவ்வளவு நாடகளாயிற்று கோமு …? ” பாட்டியம்மாள் அடுப்படியில் ஒரு மர நாற்காலியில் கால் மேல் கால் போட்டு  அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார் .

 

” அண்ணி ” வாடா ”  நல்லா செய்வாங்களா அத்தை …? ” பேச்சியம்மாள் ஒரு ஸ்டூலில் அருகேயே அமர்ந்திருந்தாள் .

 

”  ரொம்ப நல்லா செய்வாள் பேச்சி .மொறு மொறுன்னு வாயில் போட்டதும் கரையும்  . சீக்கிரம் கொண்டா கோமு …”

 

” இதோ வந்துட்டேன்  பாட்டி .தாமரை வெங்காயத்தை வெட்டிட்டியா …?”  கோமதி கேட்க , தரையில் அமர்ந்து பொடியாக நறுக்கிய  ஙெங்காயங்களை செந்தாமரை எழுந்து வந்து  அக்காவிடம் கொடுத்தாள். அந்த வெங்காயங்களுடன் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தான் பிசைந்து கொண்டிருந்த மாவில் போட்ட கோமதி , எல்ராவற்றையும் நன்கு கலந்து , வட்டமாக தட்டி நடுவில் குழி பதித்து சிவக்கும் எண்ணெயில் போட்டாள் .ஒரே நிமிடத்தில் அது வெந்து எண்ணெயில் மேலே வர அடுப்படியை ” வாடா ” வாசம் நிறைத்தது .

 

” ஆஹா வாசனையே நாக்கு ஊறுதே …” பேச்சியம்மாள் சப்பு கொட்ட , இரண்டாவது நிமிடம் அவர்கள் இருவர் கையிலும் சூடான வாடாக்கள் நிரம்பிய தட்டை கொடுத்தாள் கோமதி .

 

” சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்  அண்ணி “

 

” ம் …பிரமாதம் …” பேச்சியம்மாள் நிறைந்த வாயோடு பாராட்டினாள் .

 

” நாங்கள் இருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் கதீஜான்னு ஒரு அக்கா இருந்தாங்க .இந்த பலகாரம் பக்குவம் அவுங்கதான் எனக்கு சொல்லி தந்தாங்க …”

 

” இது எப்படி அண்ணி செய்வீங்க ..? “

 

” தேங்காயை துருவி சோம்பு , உப்பு , மஞ்சள்தூள் போட்டு மையாக அரைத்து வைத்துக் கொண்டு , அரிசி மாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கிளறி அத்தோடு இந்த தேங்காய் விழுதையும் முதல்நாளே  கலந்து வைத்து ,மறுநாள் புளித்ததும் …”

 

சஷ்டியால் இதற்கு மேலும் அடுப்படி வாசலிலேயே இருக்க முடியவில்லை .” அம்மா …” என்ற வேக அழைப்புடன் உள்ளே வந்தாள் .

 

” சஷ்டி வாம்மா …” அம்மாவின் முக மலர்வை பார்த்தபடி வந்தவளை கை நீட்டி அழைத்து தன்னருகே அமர்த்திக் கொண்டாள் பேச்சியம்மாள். 

 

” எழுந்தாச்சாம்மா …? குளிச்சிட்டியா …? ” மருமகளின் ஈரத் தலையை வருடிய பேச்சியம்மாவின் விழிகளின் ஆராய்தலுக்கு உடல் கூச வேகமாக  முகம் திருப்பிக் கொண்டாள் சஷ்டி . இப்போது எதற்கு இப்படி பார்க்கிறார்கள் …?

 


” கோமு உன் மகளுக்கு காபி கலந்து கொடு. பாவம் ரொம்ப அசதியாக தெரிகிறாள் ” பாட்டி குரல் கொடுக்க அங்கிருந்த எல்லா பெண்களும் அர்த்த புன்னகை பூத்தனர் .

 

சஷ்டிக்கு எரிச்சல் வந்தது .” அம்மா நீங்க தள்ளுங்க. காபி நான் போடுகிறேன் ” அம்மாவை அடுப்பை விட்டு நகர்த்த முயன்றாள் .

 

” எதுக்கும்மா …நீ டயர்டாக இருப்பாய் .அப்படியே உட்காரு .நானே காபி போடுகிறேன். அப்படியே அரை மணியில் டிபனும் ரெடி செய்து விடுவேன் .இரு …” கோமதி பரபரப்பாக இயங்க தொடங்க …நீங்கள் என் அம்மாவா…இந்த வீட்டு வேலைக்காரியா …என்ற கேள்வி சஷ்டியின் வாயில் துடித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு இங்கே அனைவருமாக சேர்ந்து தன் அம்மாவை , சித்தியை வீட்டு வேலைக்காரியாக்கியது போலொரு உணர்வு .

 

ஆனால் அவர்கள் இருவருக்கும் அந்த மாதிரி எண்ணமெதுவும் இல்லை. இருவரும் தங்கள் சொந்த வீட்டில் வேலை பார்க்கும் உரிமை உணர்வுடன் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

” இந்தாம்மா இந்த காபியை கொண்டு போய் மாப்பிள்ளைக்கு கொடு …” கோமதி சிறு ப்ளாஸ்கில் காபியை ஊற்றி ,கப்புடன் சஷ்டியிடம் கொடுக்க , அவளுக்கு திக்கென்றது. அவள் இப்போது அவனுக்கு காபி கொண்டு போய் கொடுக்க வேண்டுமா …? அதற்கு அவனது அறைக்குள் அல்லவா போக வேண்டும் …? அவனது அறைக்குள் நுழையக் கூடாதென அவள் முன்தனம் இரவு எடுத்த முடிவை நினைத்து பார்த்தபடி , கால்கள் தடுமாற மாடிப்படி ஏறினாள் .

 

முதல் நாள் இரவு அவள் அறைக்குள் வந்து கதவை பூட்டிக் கொண்ட பத்து நிமிடங்களிலேயே அறைக்கதவு தட்டப்பட்டது. 

 

” சஷ்டி …சஷ்டி …” மெல்லிய பதட்டத்துடன் வெளியே திருமலைராயனின் குரல் கேட்க …

 

” நான் இங்கேதான் இருக்கிறேன் ” குரல் கொடுத்தாள்.

 

” உள்ளே என்ன செய்கிறாய் …? வெளியே வா “

 

” நான் வரவில்லை. இங்கேதான் தூங்க போகிறேன் “

 

வெளியே சில நொடி அமைதி. பிறகு ” ஏன் …? ” அவன் குரல் மெல்ல கேட்டது .

 

” எனக்கு பிடிக்கவில்லை “

 

” என்ன பிடிக்கவில்லை …? “

 

” எல்லாமே …எதையுமே …பிடிக்கவில்லை “

 

இப்போது மீண்டும் அமைதி. பிறகு லேசான தொண்டை செருமலுக்கு பிறகு அவன் பேசினான் .

 

” சரி வெளியே வா .நாம் கொஞ்சம் பேசலாம் …”

 

” முடியாது …” அவன் பேச்சு முடியும் முன்பே மறுத்தாள் .

 

” நான் வரமாட்டேன். எனக்கு பிடிக்கவில்லை.ப்ளீஸ் இங்கிருந்து போங்க …” கிட்டதட்ட கத்தலாய் வந்து விட்ட தன் குரலை அவள் உணர்ந்த போது அறையின் வெளிப்புறம் அரவமற்ற  அமைதியிலிருந்தது .

 

நிம்மதியான பெருமூச்சொன்றுடன், இனம் புரியாத ஏக்க இழையொன்றும் மனதோடு பிணைந்து பரவ, இரவு முழுவதும் இமைகளிணையாமல் தவித்தபடி கிடந்தாள் சஷ்டி .நேற்றிரவு அவன் முகத்தை கூட பார்க்காமல் விரட்டி விட்டு இன்று காலையிலேயே அவன் அறை வாசலில் நின்றால் அவன் என்ன நினைப்பான் …? அவன் அறையை நெருங்கியதும் அவள் கால்கள்  தயங்கின .

 

அறை வாசலை ஒட்டிப் போடப் பட்டிருந்த டேபிளில் முன்தினம் இரவு அவள் வைத்து விட்டு போயிருந்த பால் சொம்பு இருந்தது .அப்படியே …தொடப்படாமல் கெட்டியாகி பிரிந்து கெட்டுப் போயிருந்தது .அதனை பார்த்ததும் ஏனோ அவள் மனம் பதட்டமடைந்தது . ஐயோ …பால் கெட்டுப் போய்விட்டதே. இது கெட்ட சகுனமல்லவா …?

 

இந்தக் காபியையாவது குடிக்க வைக்கலாம் …வேஸ்ட் செய்ய வேண்டாம் …அறைக்கதவை தொட அது திறந்து கொண்டது .சஷ்டி தயக்கத்துடன் உள்ளே நுழைந்து மெல்ல அறை முழுவதும் அளக்க , அறைக்குள் யாருமில்லை. அறையோடு இணைந்திருந்த பாத்ரூமில் சத்தம் கேட்க , சஷ்டி நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஹப்பாடா குளிக்கிறான் போலும். வந்து குடிக்கட்டும் , ப்ளாஸ்கை டேபிளில் வைத்து விட்டு போக நிறைத்தவளுக்கு அந்த சந்தேகம் வந்தது .

 

இவன் பாலை போல் காபியையும் குடிக்காமல் வைத்து விட்டானானால், இதுவும் கெட்டல்லவா போய்விடும் ….?தயங்கி அங்கேயே நின்றாள். அவள் பார்வை கட்டிலுக்கு போனது. கட்டில் விரிப்பு சிறு கசங்கலின்றி நேராக இருந்தது. இவன் நேற்று இரவு படுத்தானா …இல்லையா …? ஏதோ ஓர் தவிப்பு சஷ்டியுனுள் உண்டானது. அங்கே கட்டில் மேல் அந்த துண்டு கிடந்தது. முதல் நாள் அவள் திருமணத்தின் போது  அவனுக்கு தலையில் கட்டி விட்ட பட்டு துண்டு .இப்போது கசங்கி குவியலாக கட்டில் மேல் கிடந்தது .

 

இதை ஏன் இப்படி போட்டு வைத்திருக்கிறான் …? சஷ்டி அந்த துண்டினை எடுத்து உதறி கட்டில் மேலேயே விரித்து சுருக்கம் போக தேய்த்து மடிக்க  ஆரம்பித்தாள் .

 


” இங்கே என்ன செய்கிறாய் …? ” திடுமென திருமலைராயனின் குரல் பின்னிருந்து வர, திடுக்கிட்டு திரும்பினாள் .அவன் பாதரூம் வாசலில் நின்றிருந்தான் . அறைக்குள் சத்தம் கேட்கவும் ஷவருக்கடியில் இருந்து இடுப்பில் துண்டை மட்டும் சுற்றிக் கொண்டு வந்திருப்பான் போல , தலை , உடல் முழுவதும் நீர் சொட்டிக் கொண்டிருந்தது .

 

ஈரம் சொட்ட நிற்கும் தேக்கு மரத்தை அவன் அவ்வமயம் நினைவூட்ட , சஷ்டி பார்வையை அவனை விட்டு அவசரமாக விலக்கினாள் .” இ …இது கசங்கி கிடந்தது. கல்யாணம் சம்பந்தட்ட பொருட்கள் …பத்திரமாக வைக்க வேண்டுமென்று ….” கோர்வை வராமல் , பேச  தடுமாறினாள் .

 

” கல்யாணம் சம்பந்தப்பட்ட முக்கியமான பொருட்களை விட்டு விட்டு வெறும் துண்டினை பாதுகாப்பாயா …? “

 

வேறு என்ன முக்கிய பொருட்கள் …? நேற்று அணிந்நிருந்த சேலை , நகைகளை கூட அவள் பூப்போல் பாவித்து சுழட்டி மென்மையாக கையாண்டு பத்திரப்படுத்தியிருந்தாள் .இவனை போல் இப்படி கசக்கி வீசவில்லை. மனதில் இருக்கும் வெறுப்பின் அடையாளமோ …இந்த கல்யாண துண்டின் கசங்கல் …?

 

” நேற்றிரவு ஒரு கோபத்தில் நான்தான் அந்த துண்டை கசக்கி வீசினேன் …” தன்னைத் தானே ஒத்துக் கொண்டவன் , மெல்ல அவளை நோக்கி நடந்து வந்தான் .

 

” கோபம் வந்தால் கல்யாண பொருட்களையா சேதப்படுத்துவீர்கள் …? ” சஷ்டியின் மனது வலித்தது .இவனுக்கு இந்த கல்யாணத்தின் மீதுள்ள வெறுப்பையல்லவா இது காட்டுகிறது.

 

” சரிதான் கோபத்தை அதில் காட்டயிருக்க கூடாது. இங்கே காட்டியிருக்க வேண்டும் …” சொன்னபடி அவளருகே வந்தவன் திடுமென அவளை இறுக அணைத்தான் .

 

” என் கோபத்தை இங்கே இப்படித்தான் காட்டியிருக்க வேண்டும் …” அவன் கையில் சிக்கிய துண்டின் நிலையே அப்போது சஷ்டிக்கும் ஏற்பட்டது .

 

அவள் மூச்சு முட்ட திணறுவதை பார்த்தும் அவன் தன் வேகத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அணைப்பை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டே போக , சஷ்டி அவனுள் நசுங்கினாள் .

 

‘ இதோ …இப்படித்தான் அந்த துண்டை நேற்று கசக்கினேன் …” அவளை அணைத்து நொறுக்கியபடி அவள் காதுக்குள் முணுமுணுத்தான் .

 

” எதற்கு இந்த வெறி….? ” அவனணைப்பில் கசங்கியபடி திணறலாய் கேட்டாள் .

 

” வெறியா …? அப்படியே வைத்துக் கொள். என் கல்யாணத்தை நிறுத்த வந்தவள் தானே நீ …? ” அவனது வேகம் கூடியது .

 

ஓ ..இது இவனது வாழ்க்கையில் தலையிட்டதற்கு …அந்த சந்திராம்பிகையுடனான இவனது திருமணத்தை நிறுத்த முயன்றதற்கான தண்டனையா ….மனம் நைய  அவனிடமிருந்து விடுபட செய்து கொண்டிருந்த முயற்சியை நிறுத்தினாள். அவன் பிடிக்குள் தொய்ந்தாள் .

 

அவளது எதிர்ப்பின்மையை உணர்ந்து முதலில் கூடிய திருமலைராயனின் அணைப்பு பிறகு மெல்ல நிதானமானது .

 

” ஹேய் …என்னடி …? ” அவள் காது மடலில் இதழால் உரசியபடி கிசுகிசுத்தான் .

 

” என் தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராகிறேன் ….”

 

ஒரு நிமிடம் அசைவின்றி நின்றவன் , பிறகு அவளை தன்னிடமிருந்து விலக்கி தள்ளி உதறினான் .படாரென்ற அந்த உதறலில் தடுமாறி விழ இருந்தவளை தோளை பற்றி தள்ள வேறு செய்தான் .எவ்வளவோ முயன்றும் காலூன்ற முடியாமல் தளர்ந்து விழுந்தவள் , அவனை நம்ப முடியாமல் பார்க்க , அவனது பார்வை போன போக்கில் முகம் சிவந்தாள் .

 

இதென்ன இப்படி பார்க்கிறான் …? அப்போதுதான் தன்னை தாங்கியிருந்த மென்மையை உணர்ந்தவள் , தான் கட்டிலில் கிடப்பதை அறிந்தாள். கீழே விழப் போனவளை கட்டில் மேல் திருப்பியிருக்கிறான்.  தளர்வாய் கட்டிலில் கிடந்தவள் அவனது பார்வையில் மிரண்டாள். அவன் தள்ளிய வேகத்தில் அலைய குலைய விழுந்திருந்தவளின் கலைந்த தேகத்தில் அப்பியிருந்தது அவன் பார்வை. சஷ்டி வேகமாக எழுந்து தன்னை சரி செய்து கொண்டாள் .

 

திருமலைராயனின் கை நீண்டு தன் தேகம் நோக்கி வந்த வேகத்தில் அலறி கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவனது கை அவள் கழுத்து மாங்கல்யத்தை பற்றியது. சேலைக்குள்ளிருந்து வெளியே எடுத்து அவள் முகத்திற்கு முன் காட்டியது .

 

” தாலி கட்டியிருக்கிறேன்டி. உன் புருசன் நான் …” உரிமையாய் சொன்னது .

 

அவன் உரிமையை சொன்ன விதம் சஷ்டிக்கு வேறொன்றை நினைவுறுத்த , ” ஆமாம் செய்த தப்பிற்கு தண்டனையாக இந்த தாலி …” என்றாள் .

 

வேதனை நிறைந்த அவள் குரலை உறுத்தவன் ” எந்த தப்பிற்கு …? ” என்றான் .

 

” என் அப்பா , அம்மா செய்த தப்பிற்கு .நான் பலி வாங்க வந்த தப்பிற்கு எனக்கு கிடைத்த தண்டனை. உங்கள் வீட்டு கடனை தீர்த்த பின்புதான் இந்த தாலிக்கொரு அர்த்தம் வரும் “

 

” எந்த கடனை …? “

 

” என் அப்பா உங்கள் பாட்டியிடம் வாங்கிய கடனை .அதனை அடைத்த பிறகுதானே எனக்கும் , என் அம்மா , சித்திக்கும் இங்கிருந்து விடுதலை கிடைக்கும். அதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன். விரைவில் அடைத்து விடுவேன். அப்பாவின் கடனை தீர்க்க கடமைபட்டவள் மகள்தான். என் கடமையிலிருந்து மாற மாட்டேன் நான் ” உறுதியாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் . புருவங்கள் நெரிய அவளை பார்த்தபடி நின்றான் திருமலைராயன் .

 

” என் அப்பா உங்களிடம் வாங்கிய கடன் எவ்வளவு பாட்டி …? ” கேட்டபடி தன் முன் வந்து நின்ற சஷ்டியை ஏறிட்டு பார்த்தார் பாட்டியம்மா .

 

” என்னடி திரும்ப குளித்தாயா …? ,” கிண்டலாக கேட்டார் பாட்டியம்மா .

 

சஷ்டி அவசரமாக தன்னை குனிந்து பார்க்க , ஈரம் சொட்ட சொட்ட வந்து அவளை அணைத்திருந்த திருமலைராயனின் உடல் ஈரம் முழுக்க அவள் உடலில் பரவி , உடைகளெல்லாம் நனைய நின்றிருந்தாள் அவள். 

 

தன்மானம் உந்தி தள்ள வேகத்துடன் வந்து நின்ற தனது கோப  கனல் ஈரம் பட்டு ஆவியாவதாக உணர்ந்தாள் சஷ்டி .

  

 


What’s your Reaction?
+1
17
+1
18
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!