Uncategorized

மயங்கினேன் மன்னன் இங்கே-14

14

 

” ஏய் இந்தப் பக்கம் உனக்கென்னடி வேலை …நீ சின்ன பொண்ணு …அங்கிட்டு போ …” பேச்சியம்மாள் சொப்னாவை விரட்ட , அவள் பொறுமலோடு நியாயம் தேடி சஷ்டியிடம் வந்தாள் .

 

” ஏன்டி உனக்கும் எனக்கும் ஒரே வயதுதானேடி .எப்படி நான் மட்டும் சின்ன பொண்ணு ஆனேன் …? “

 

சஷ்டி விழித்தாள். அவளே இவர்களது முதலிரவு அலங்காரங்களில் , குதிரைகள் ஓடும் குருதி ஓட்டத்துடன் தொண்டை காய அந்தப் பக்கமே போகாமல் இங்கே தள்ளி வந்து உட்காரந்து கொண்டிருக்கிறாள் .இதில் இவள் வேறு …தோழிக்கு பதில் சொல்லாமல் தலையில் கை வைத்து குனிந்து கொண்டாள் .

 

” ஓஹோ …எனக்கு பதில் சொல்லக் கூட உனக்கு முடியலை இல்லை …? தாலி கழுத்தில் ஏறவும் நீங்க ராயரம்மா ஆகிட்டீங்களே …அப்படித்தான் இருப்பீங்க .போடி இவளே …” கை நீட்டி தன்னை வைதபடி போனவளை பதட்டத்துடன் பார்த்தாள் சஷ்டி மலர். கோபித்நுக் கொண்டு போகிறாளா ?

 

” சொப்னா, நான் வேறு யோசனையில் இருந்தேன்டி. அதுதான் உன்னை கவனிக்கவில்லை. சாரிடி …என்ன கேட்டாய்? “சமாதானமாய் பேசியவளின் மனதிற்குள் கடற்கரை மணலாய் நெறுநெறுத்தது அந்த “ராயரம்மா ” 

 

மாடியேறிய சொப்னா நின்று கண் சிமிட்டினாள்.அந்த சிமிட்டல் சஷ்டிக்கு திருமலைராயனை நினைவிற்கு கொண்டு வர , திடுமென அவள் உச்சியில் ஓர் ஆகரோச அருவிப் பாய்ச்சலை உணர்ந்தாள்.  

” ஹேய் சும்மாடி. நேற்றே ” கீதம் கோவிந்தம் “டவுன்லோட் பண்ணி வச்சுட்டேன். நான் போய் விஜய் தேவர கொண்டாவை பார்க்க போகிறேன். நீ போய் உன் ஹீரோவை பாரு …” தோழியின் உரிமையோடு கிண்டல் பேசி விட்டு படபடவென படியேறி போய்விட்டாள் சொப்னா .

 

சஷ்டி முகம் சிவக்க , தன் தடுமாற்றத்தை மறைக்க  இலக்கில்லாமல் தன் போனை எடுத்து நோண்டியபடி இருக்க, அவளுக்கு போனில் அழைப்பு வந்தது. தெரியாத நம்பராக இருக்க, யோசனையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் .

 

” ஹலோ …”

 

” யாருங்க …? ராயரம்மாவா பேசுறது …? ” நக்கலோடு எதிர்புறம் கேட்டது ஒரு குரல் .

 

” நல்லாயிருக்கீங்களாம்மா…? ”  நக்கலுடன் தொடர்ந்த குரலை சிறு தடுமாற்றத்தின் பின் அடையாளம் புரிந்து கொண்டாள்  சஷ்டி .

 

” சந்திராம்பிகை …? “

 

” அட …என்னை தெரியுதுங்களா உங்களுக்கு …? ரொம்ப புத்திசாலிங்க நீங்க …”

 

தொடர் நக்கலில் எரிச்சல் ஏற்பட ” என்ன வேண்டும் உங்களுக்கு …?” என்றாள் பட்டென .

 

” ஐயோங்க கோபமுங்களா …உங்களை மாதிரி ராச குலமெல்லாம் என்னை மாதிரி சாதாரணப்பட்ட ஜனங்க மேல கோவிச்சுக்கிட்டா …நாங்க எங்கேங்க போவோம் ? “

 

” சந்திராம்பிகை கொஞ்சம் ஒழுங்காக பேசுங்கள் .அடிப்படை நாகரீகம் தெரியாதா உங்களுக்கு ..? “

 

” அடிங் …யாருக்குடி அடிப்படை நாகரீகம் இல்லை …? என் வாழ்க்கையை கெடுத்து , என் இடத்தில் நீ உட்கார்ந்து கொண்டு எனக்கு நாகரீகம் சொல்லித் தருகிறாயா …? ,”

 

” நான் ஒன்றும் உங்கள் வாழ்க்கையை கெடுக்கவில்லை. எல்லாம் தற்செயலாக நடந்தவை …” இதனை சொல்லும் போது சஷ்டியின் குரல் வெகுவாக இறங்கிவிட்டது .

 

” இல்லை …இதில் எங்கேயோ உன் பங்கு இருக்கிறது .என் உள் மனது அப்படித்தான் சொல்கிறது .” சந்திராம்பிகையின் உறுதியில் சஷ்டிக்கு திக்கென்றது .

 

” ஏய் உன் மனதை தொட்டு சொல்லு. இப்போது நீ இருக்கும் இடம் உனக்கு உரியதா …அதற்கு நீ தகுதியானவள் தானா …? ” சந்திராம்பிகையின் கேள்வியில் அழுகை கோடு போட ஆரம்மித்திருக்க சஷ்டியின் நியாயமான மனட்சாட்சி அவளை குத்த தொடங்கியது .

 

நான் செய்தது தப்புதானே …?

 

” இந்த  , ஊர் , ஊர் மக்கள் இவர்களுக்காக ஆத்மார்த்தமாக காதலித்துக் கொண்டிருந்த எங்கள் காதல் பலியாக வேண்டுமா ..? “




 

காதல். திருமலைராயனும் , சந்திராம்பிகையும் காதலித்தனரா …அவள் மனக் கேள்விக்கு விடையாக, அன்று சந்திராம்பிகை வீட்டில் அணைத்தபடி நின்றிருந்த அவர்கள் தோற்றம் அவள் நினைவில் ஓடியது .

 

அம்பிகாபதி – அமராவதி காதலை அறிந்து கொள்ள சோழ மன்னன் ஒரு தந்திரம் செய்தானாம். தன் மகளின் உடல் முழுவதும் சந்தனம் பூச வைத்து விட்டு , அவளை தனித்திருக்க செய்துவிட்டு , அவளிடம் சிறு வேலை ஒன்று சொல்லி   அம்பிகாபதியை அனுப்பி வைத்தானாம். திரும்பி வந்த அம்பிகாபதி உடல் முழுவதும் தீற்றியிருந்த சந்தனமும் , கமழும் சந்தன வாசமுமாக இருந்தானாம். தங்களுக்கு கிடைத்த மிக சிறு சந்தர்ப்பத்தையும் தவற விடாது, காதலர்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி பிரிந்த நிலையை  மன்னனுக்கு தெரியப்படுத்த , தன் மகளின் காதலை உணர்ந்த மன்னன் அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதித்தானாம் .

 

அரண்மனையில்  எப்போதும் கழுத்தில் கத்தி பாயலாமென்ற சூழ்நிலையிலும் ,    மன்னன் மகளாக இருந்த போதிலும் கிடைத்த  சிறு இடைவெளியிலும் கட்டி அணைக்க தூண்டிய அம்பிகாபதியின் ஆழ்ந்த காதலை போன்றதோ இவர்களுடைய காதல். ஆபீஸ் அறையிலும் தொழில் பேச்சுக்களின் போதும் திடுமென ஒருவரையொருவர் அணைத்து நின்றனரே …?

 

எப்போதோ படித்த கதையின் சம்பவம் இப்போது அசந்தர்ப்பமாய் சஷ்டியின் நினைவில் வந்து தொலைக்க , அவள் மனம் அதிக குற்றவுணர்வில் தத்தளித்தது .

 

” அ …அவர் காதலித்தாரா …? ” வார்த்தைகள் முடிந்த பின்பே அதனை தான் வாய் விட்டு கேட்டு விட்டதை உணர்ந்தாள் .

 

” ஆமாம் .ரொம்ப காதலித்தார் .என் அப்பாவின் தொழில் வெறிக்கும் , ராயரின் ஊர் பாசத்திற்குமிடையே எங்கள் காதல் சிதைந்து போய்விட்டது ” சந்திராம்பிகை இப்போது அழவே ஆரம்பித்து விட்டாள். 

 

சஷ்டி அதிர்ந்து போய் சோபாவில் அமர்ந்து விட்டாள். இரு காதல் நெஞ்சங்களை அவள் பிரித்து விட்டாளா …? குற்றவாளி என அவளை நோக்கி மானசீகமாக நீண்டது ஒரு விரல். அவ் விரலின் நுனியில் சிறு குத்தூசியும் இருந்தது .

 

” கொஞ்ச நாட்கள் பிரச்சனைகளை ஆறப் போட்டால் எல்லாம் சரியாகி விடும். என் அப்பாவையோ , ராயரையோ எப்படியாவது சமாதானம் செய்து விடலாம். பிறகு திருமணம் செய்து கொள்ளலாமென்ற நப்பாசையோடுதான் இன்று அங்கிருந்து வெளியே வந்தேன். ஆனால் எப்போதடா இவள் வெளியே போவாள்  எனக் காத்திருந்து , கொஞ்சம் அகன்றதும் என் இடத்தில் நீ ஏறி உட்கார்ந்து கொண்டாயே …இது நியாயமா …? அந்த தாலியை தலை குனிந்து வாங்கிக் கொள்ளும் போது உனக்கு கொஞ்சம் கூட உறுத்தவில்லையா ..? “

 

சந்திராம்பிகையின் ஒவ்வொரு வார்த்தையிலும் குத்தூசி இருந்தது. அது இலக்கு மாறாமல் சஷ்டியின் நடு நெஞ்சை தைத்தபடி இருந்தது .

 

” இரண்டு நாட்கள் கழித்து நானே மெதுவாக பேசி ராயரை சமாளித்திருப்பேன். அரை மணி நேரம் போதும் எனக்கு அவரை சமாதானப்படுத்த. ஆனால் இப்போது நீ எங்கள் இருவருக்கிடையே இப்படி பிசாசு போல் வந்து நிற்கிறாயே …? நான் என்ன செய்வேன் …? ” சந்திராம்பிகையின் குரல் ஆதங்கமும் , அழகையுமாக கூடிக் கொண்டே போனது .

 

வீடே தன்னை சுற்றி தட்டாமலையாக சுற்றுவதை போன்ற உணர்வில் இடிந்து போய் சேபாவில் சரிந்து கிடந்தாள் சஷ்டி .திடுமென அவள் முன் மங்கலாக உயரமாக ஒரு உருவம் தெரிந்தது. அந்த உருவம் கையசைத்து சாடையாக போனில் யாரென்று கேட்டது. தன் கண்ணை சிமிட்டி அகல விரித்து எதிரேயிருந்த உருவத்தை திருமலைராயன் என உணர்ந்து கொண்ட சஷ்டி மலங்க மலங்க விழித்தாள். இவன் ஏன் இங்கே வந்தான் …?

 


” என் காதல் வாழ்க்கையை கெடுத்த நீ நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து விடுவாயா …? சொல்கிறேன் கேட்டுக் கொள். உனக்கு நிம்மதியான வாழ்க்கை ஒரு போதும் அமையாது …” அழுகை குறைந்து ஆவேசம் வந்து போனில் சந்திராம்பிகை சாபமிட்டுக் கொண்டிருந்தாள் .

 

விநாடிக்கு விநாடி வெளுத்துக் கொண்டே போன சஷ்டியின் முகத்தை பார்த்த திருமலைராயன், கொடு நான் பேசுகிறேன் கை சாடை காட்டியபடி அவள் கை போனை வாங்க முயன்றான். அரை மணி நேரம் போதும் எனக்கு அவரை சமாதானப்படுத்த …சற்று முன் சந்திராம்பிகை காதலும் , ஆவேசமுமாக சொன்ன வார்த்தைகள் நினைவு வர , சஷ்டி தன் கை போனை காதோடு ஒட்டிக் கொண்டு இறுக்கி பிடித்தாள் .இவர்கள் இருவரையும் பேச விடுவதா …? அவளது அழுகையையும் , ஆசையையும் இவனுக்கு காட்டுவதா …?

 

” ம்ஹூம் …” தலையசைத்து மறுத்தவளை விநோதமாக பார்த்தவன் , ” பயந்தாற் போல் தெரிகிறாயே …அதனால்தான் …கொடும்மா …” மென் குரலில் கேட்டபடி போனை வாங்க முயல , பட்டென அவன் கையை தட்டியவள் போனை கட் செய்தாள் .

 

” எனக்கென்று ஒரு பிரைவசி இருக்காதா …? எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்ல வேண்டுமா …? நான் என்ன உங்கள் அடிமையா …? தாலி கட்டி விட்டதால் மட்டும் உங்கள் சொல்படி ஆட ஆரம்பித்து விடுவேன்  என்று நினைக்காதீர்களா . எனக்கென்று ஒரு பாதை இருக்கிறது .அதில் நான் மட்டுமதான் . கண்டவர்களுக்கும் இடமில்லை ….” என்ன சொல்கிறோமென்ற பிரக்ஞையேயின்றி வாய்க்கு வந்ததை உளறி கொட்டியவள் படபடவென மாடியேறி போய்விட்டாள் .
குழப்பமான பாவனையுடன் அவளை பார்த்த படியே நின்றான் திருமலைராயன் .

 

சிறிது நேரத்தில் கையில் பால் நிறைந்த வெள்ளி சொம்புடன் திருமலைராயனின் அறைக்குள் போகும்படி அவள் பணிக்கபட்டபோது, அவள் மனதில் திதும் திதுமென மத்தளங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. லேசான இம்மலாக சாத்தி வைக்கப்பட்டிருந்த கதவை தள்ளி திறந்தபடி அறைக்குள் அவள் நுழைந்த போது , திழுமலைராயன் பால்கனியில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தான் .

 

”  ம் …சரிதான். அவள் சீர் தட்டு வைக்க கூட முடியாத அளவு இல்லாத வீட்டு பெண்தான். அப்போது அந்த சூழ்நிலையில் நான் அதையெல்லாம் யோசிக்கவே இல்லையே. அப்போது என் மனதில் இருந்ததெல்லாம் …” திருமலைராயனின் பேச்சை முழுவதுமாக கேட்காமல் அறையை விட்டு வெளியேறி விட்டாள் சஷ்டி .

 

அப்போது அவனுடைய யோசனையெல்லாம் அவனது ஊரும் , ஊர் மக்களும்தான். அதற்காக ஒரு இல்லாத வீட்டு பெண்ணை , அடித்தாலும், மிதித்தாலும் ஏனென்று கேட்க ஆளில்லாத ஒரு குடும்பத்து பெண்ணை அதட்டி ,மிரட்டி கல்யாணம் செய்தாயிற்று. ஊருக்காக , உறவுக்காக என அவளோடு சேர்ந்து வாழவும் முடிவு செய்தாயிற்று ….சஷ்டியின் உடல் ஆவேசத்தில் நடுங்கியது .

 

கொஞ்ச நேரம் முன்பு இருவரையும் பேச விடாது அவள் பாதுகாத்து என்ன பயன் …? இதோ கண் முன்னாலேயே முதலிரவு அறை என்ற எண்ணமின்றி  இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவளால் தடுக்க முடிந்ததா …?

 

சஷ்டி கையிலிருந்த பால் சொம்பை அங்கே சுவரை ஒட்டி போடப்பட்டிருந்த சிறு மேசையில் வைத்தாள். நடந்து போய் இரண்டு அறை தள்ளியிருந்த விருந்தினர் அறை ஒன்றுக்குள் நுழைந்து கதவை உட்புறமாக இறுக தாழிட்டுக் கொண்டாள் .




What’s your Reaction?
+1
16
+1
19
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!