Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே-13

13

 

 நாராயணனும் , கோமதியும் ஒருவரையொருவர் காதலித்தது கோமதியின் அப்பாவிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை . தன் மகளுக்கு பெரிய இடத்திலிருந்து ராஜகுமாரன் வருவான் என்ற நினைப்பு அவருக்கு . அதனால் இவர்கள் காதலை எதிர்க்க , நாராயணன் தனது செல்வ நிலையை உயர்த்திக் காட்டும் கட்டாயத்திற்கு ஆளானான். அதனால் அதிக கடன் வாங்கி ஆடம்பரமாக  கல்யாணம் முடித்து சடையப்பனின் மன திருப்தியை பெற முயல , அப்போது அங்கே வந்த ஆயிரம் காளி நாராயணனின் கடன் நிலையை போட்டு உடைக்க , சடையப்பன் திருமணத்தை நிறுத்திவிட்டான்.

 

கடன்காரனுக்கு என் மகளை தரமாட்டேன் என்ற அவனது வாதம் எல்லோருக்கும் ஏற்புடையதாய் இருக்க யாராலும் அவனுடன் பேச முடியவில்லை .அன்று அந்த திருமணம் நின்று போனது .

 

” இப்படி நடக்குமென எதிர் பார்க்காமல் நான் வருத்தத்தோடு வீட்டிற்கு வந்துவிட்டேன் .அன்று இரவு என் வீடு தேடி வந்த நாராயணன் … மனைவி , பிள்ளையென  வாழ இருந்த  அவன் வாழ்க்கையை நான் அழித்து விட்டதாக என் மேல் பழி சுமத்தினான் .  அவன் வாங்கிய பணத்தின் கணக்குகளை எடுத்து வைத்திருக்குமாறும் ஐந்து வருடங்களில் திரும்ப வந்து பணத்தை பைசா பாக்கியில்லாமல் கொடுத்து விடுவேனென்றும் கோபமாக சொல்லிவிட்டு ஊரை விட்டு போய்விட்டான் …,”

 

” ஒரு வாரம் கழித்து கோமதி என்னை பார்க்க வந்தாள் .நாராயணனின் கோபத்தில் அவளிடம் சிறிதும் குறைவில்லை .தான் நாராயணனின் குழந்தையை சுமந்து கொண்டிருப்பதாகவும் , அதனாலேயே திருமணத்தை அவசரம் அவசரமாக வைத்ததாகவும் சொன்னாள் .இந்த விபரம் எனக்கு தெரியாது. முன்பே தெரிந்திருந்தால் இந்த கல்யாணத்தை என்ன செய்தாவது நடத்தியிருப்பேன். நான் கோமதியை சமாதானப்படுத்த முயன்றேன். அவள் என் பேச்சை கேட்கவே இல்லை. வயிற்றில் பிள்ளையோடு இந்த ஊர் முன் அவமானப்பட முடியாது. நான் ஊரை விட்டு போகிறேனென சொல்லிவிட்டு , கை நிறைய , வாய் வழிய என் குடும்பத்திற்கு சாபங்களை அளித்து விட்டு போய்விட்டாள் “

 

” நாராயணனும் , கோமதியும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் .இப்படி அவர்கள் வாழ்க்கை சிதைந்து போக நானும் ஒரு காரணமாகி விட்டேனே என இருபது வருடங்களாக நானும் மனதிற்குள்ளாகவே மருகிக் கொண்டிருந்தேன் .இத்தனை வருடங்கள் கழித்து என் மன துயரத்திற்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. இதோ …நாராயணன் – கோமதியின் மகள். இவளை நான் என் பேரனுக்கு இன்றே …அடுத்து வரும் முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைக்க போகிறேன். “

 

பாட்டி பேசி முடித்ததும் அந்த இடமே அமைதியாக இருக்க , கோமதி பாட்டியை நம்ப முடியாமல் பார்க்க , சஷ்டியோ திடுமென உச்சந்தலை மேல் பாரம் ஏறியவள் போல் தடுமாறி நின்றிருந்தாள் . அவளது கை அழுத்தமாக அந்த ஆயிரம் காளியால் பற்றப்பட்டிருந்தது .தப்பி விட முடியாதடி என்ற சேதி அதில் இருந்தது .

 

முதலில் ஒற்றையாய் ஒரு கை தட்டல் ஒலி கேட்க தொடர்ந்து படபடவென பல  கைகளின் ஓசைகள் கேட்டன. ராயர் குடும்பத்தின் புகழ் மக்களிடையே உயர்வாக பேசப்பட்டது .எங்கள் ராசா குடும்பம். நீதி , நேர்மைக்கு பெயர் போனதென மக்கள் கொண்டாடினர். இப்போது …இங்கே …இந்த சூழ்நிலையில் சஷ்டி இந்த திருமணம் வேண்டாமென மறுத்தாளானால் ஊர் மக்கள் அனைவருமாக சேர்ந்து அவள் கை கால்களை கட்டி மண மேடை ஏற்றி அவர்கள் ராயருக்கு திருமணம் முடிக்காமல் விட மாட்டார்கள் .

 

தன் தாய் தந்தையின் திருமணத்தை நிறுத்தி அவர்கள் வாழ்க்கையையே தடம் மாற்றிய பாட்டியின் குடும்பத்து திருமணத்தை நிறுத்தி அவர்கள் குடும்ப தடத்தை மாற்றும் லட்சியத்துடன் வந்த சஷ்டி இங்கே நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளில் திகைத்து நின்றாள் .

 


பட்டும் , வைரமுமாய் உயர் குடிப் பெண்ணின் தோற்றத்துடன் கண்ணாடியில் தெரிந்த தன் இப்போதைய    தோற்றத்திலும் நம்ப முடியாத திகைப்புதான் அவளுக்கு. அவள் நினைத்து வந்தது என்ன …இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன …? எங்கேயாவது …எந்த இடத்திலாவது அவள் தவறுதல் செய்தாளா …?

 

” ஏய் ஏன்டி மூஞ்சியை இப்படி வச்சிக்கிட்டு இருக்கிறாய் …? நன்றாக சிரித்தாற் போல் வைத்துக் கொள் .நீ என் அண்ணனை கல்யாணம் செய்து கொள்ள போகிறாயடி .இந்த ஊர் ராயரை கல்யாணம் செய்து கொண்டு ராயரம்மாவாக மாறப் போகிறாய் ” சொப்னாவின் குரலில் சஷ்டியின் மனம் அதிர்ந்தது .

 

” ராயரம்மா “

 

சற்று முன் சந்திராம்பிகையை தூண்டி விட அவள் உபயோகித்த வார்த்தை. இப்போது இவளுக்கானதாகிறது. இது…இந்த பதவி  அவளுக்கு நல்லதா …கெட்டதா …?

 

அறைக்கதவை திறந்து கொண்டு கோமதியும் , அவள் தங்கை செந்தாமரையும் வந்தனர். மகளின் மணக்கோலம் பெற்றவளின் கண்களில் நீர் வர வைத்தது .

 

” அழகாக இருக்கிறாயடா செல்லம் ” மகளை உச்சி மோந்தாள் கோமதி. 

 

” அக்கா …நம்ம பொண்ணு ராயரம்மாக்கா …” செந்தாமரையின் குரலிலும் பெருமிதம் .

 

சஷ்டிக்கு முட் கிரீடமாக தோன்றியது இந்த ராயரம்மா. தாய் , சித்தியின் மகிழ்வை குலைக்க விரும்பாது முயன்று புன்னகை பூத்தாள். 

 

” எல்லோரும் என்ன செய்கிறீர்கள் …? இன்னமுமா என் மருமகள் தயாராகவில்லை …” கேட்டபடி வந்தாள் பேச்சியம்மா .

 

அவள் முகத்தில் பெண் மாறியதற்கான கவலை ஏதுமில்லை . கோடி கோடியாக சீர் கொண்டு வரும் பெண்ணும் ,  வைக்க சீரின்றி  விழித்து நிற்கும் பெண்ணும் இவர்களுக்கு ஒன்றுதானா ….? சஷ்டி நெகிழ்வோடு பேச்சியம்மாவை பார்த்தாள் .

 

இவரது மன எண்ணம்… தான் , தன் மகனின் தாய் எனபது மட்டுமதான் போலும் .தன் மகன் , மகனின் நல் வாழ்வு போன்றவற்றை தவிர இவருக்கு வேறெந்த நினைவும் இருக்காது போலும் .இதுவும் ஒரு வித அடிமைத்தனம் எனும் எண்ணம் வரும் போதே , ஏனோ சஷ்டிக்கு பேச்சியம்மாவின்  கேரெக்டர் மிகவும் பிடித்து விட , அன்போடு பேச்சியம்மாவின் கையை பற்றிக் கொண்டாள் .

 

” அடியே நீ பொழைச்சுக்குவடி .மாமியாரை இப்பவே காக்கா பிடிக்க ஆரம்மித்துட்டியே …” சொன்ன சொப்னா தலையில் தாயிடம் கொட்டு வாங்கினாள் .

 

” என்னடி மரியாதையில்லாமல் பேசுகிறாய் …? அண்ணின்னு கூப்பிடு. வாங்க போங்கன்னு பேசு “

 

” அடக்கடவுளே இது வேறா ..? ” சொப்னா மிகவும் நொந்து போனாள் .

 

” சீக்கிரம் என் மருமகளை கூட்டிக் கொண்டு வா ” பெரியவர்கள் வெளியேற , சொப்னா தோழியை பரிதாபமாக பார்த்தாள் .

 

” உன்னை அண்ணின்னுதான் கூப்பிடனுமா …? “

 

” ஏய் அப்படியெல்லாம் இல்லடி .நீ எப்பவும் போல பெயர் சொல்லியே கூப்பிடு .நாம் எப்பவும் ப்ரெண்ட்ஸ்தான் ….”

 

” ஷ் …அப்பா …பிழைத்தேன் போ .சரி வா போகலாம் ” இருவருமாக அறைக்கதவை திறந்து வெளியே வரும் போது , சரியாக எதிர் அறைக்கதவை திறந்து திருமலைராயன் வந்தான் . .

 

மணமகள் அலங்காரத்துடன் எதிரே நின்ற சஷ்டியை விழியகற்றி ஒரு முழு நிமிடம் பார்த்தபடி நின்றான் .பிறகு ஒற்றை விரல் நீட்டி அவள் மூக்கு நுனியை தொட்டான் .

 

” மூக்குத்தி போட்டு விட வில்லையா சொப்னா …? ” கேள்வியை தங்கைக்கும் , பார்வையை சஷ்டிக்கும் கொடுத்தான் .

 

” சஷ்டி மூக்கு குத்தவில்லை அண்ணா .எப்படி மூக்குத்தி போட முடியும் …? “

 

” மூக்கு குத்தவில்லை …? ஏன் …? ” மூக்கு நுனியை தொட்டிருந்த அவன் விரல் இப்போது மூக்கின் பக்கவாட்டில் நகர்ந்து மூக்கில் துளை இருக்கிறதா …என ஆராய்ந்தது .

 


சஷ்டி உடல் முழுவதும் கூச்ச அலையடிக்க அவன் விரல் நுனியிலிருந்து தன் தலையை நகர்த்திக் கொண்டாள் .” எனக்கு மூக்கு குத்த பிடிக்காது ” முணுமுணுத்தாள் .

 

அதற்குள் கீழிருந்து  ” சொப்னா சீக்கிரம் வாங்க. முகூர்த்தம் நெருங்கிடுச்சு ” என்ற பாட்டியின் குரல் கேட்க , ” வாங்க போகலாம் ” சொப்னா சஷ்டியின் கை பிடித்து முன்னால் நடந்தாள் .

 

” எனக்கு பிடிக்கும் ” மெல்ல கிசுகிசுத்தான் திருமலைராயன் அவர்கள் பின்னால் நடந்து வந்தபடி .

 

உனக்கு பிடித்தால் …நீயே குத்திக்கோ …துடுக்காய் வரத் துடித்த பதிலை கஷ்டப்பட்டு வாய்க்குள் அழுத்தினாள் சஷ்டி .

 

அடுத்த அரை மணியில் மந்திரங்கள் முழங்க சாஸ்திர ரீதியாக திருமலைராயனின் மனைவி ஆனாள் சஷ்டிமலர் .

 

” சரிகை அழகாக தெரியும்படி ஒழுங்காக கட்டி விட வேண்டும் ” திருமண சடங்குகளில் ஒன்றாக மணமகனுக்கு தலைப்பாகை கட்டி விடும் நிகழ்வின் போது , திருமலைராயன் அவளிடம் ரகசியமாக பேச , பட்டுத் துண்டினை அழகாக மடித்தபடி , இதெல்லாம் முன்பே எவ்வளவு அழகாக ப்ளான் செய்திருக்கிறான் …சஷ்டிக்கு இன்னமும் பிரமிப்புதான் .

 

கையுயர்த்தி தலைப்பாகையை மடிப்பாக  அவன் தலையை சுற்றி கட்டி, பட்டையான சரிகை நுனி அவனது தலையோரம் அழகாக வழிந்து வருமாறு அமைத்து முடித்து , திருப்தியாகி கையை இறக்கிக் கொண்டு  அவனை பார்த்தபோது , அவன் கண் சிமிட்டினான் .

 

” சூப்பர் ” என்றான் .

 

இவன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்…? யாரோ தெருவில் போகும் பெண்ணை கூப்பிடுவது போல் அடிக்கடி இப்படி கண்ணடிக்கிறானே …எதற்கு …? ஊர் பெரிய மனிதன் போலா நடந்து கொள்கிறான் .பக்கா ரவுடி போல் செயல்கள் செய்கிறான் .சஷ்டி அதிருப்தியுடன் தலையை குனிந்து கொண்டாள் .

 

உன் நினைப்பு பிழையில்லை பெண்ணே. நான் நீ நினைத்தது போன்றவன் தான் …என அன்றிரவு தனிமையின் போது அவளுக்கு நிரூபித்தான் திருமலைராயன் .

 


What’s your Reaction?
+1
20
+1
16
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!