Cinema Entertainment Uncategorized

’மதிமாறன்’ திரைப்பட விமர்சனம்

வளர்ச்சி குறைபாடுள்ள நாயகன் வெங்கட் செங்குட்டுவன், அப்படிப்பட்ட மனிதர்கள் வழக்கமாக எதிர்கொள்ளும் கேலி கிண்டல்கள் மற்றும் அவமானங்களை எதிர்கொண்டாலும், அவற்றை புறம் தள்ளிவிட்டு தனது புத்திசாலித்தனத்தால் காவல்துறை கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்ற பின்னணியையும், குற்றவாளியையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை.

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், பெண்கள் காணாமல் போவதும் தொடர்கிறது. இந்த கொலைகளை ஒரே நபர் தான் செய்கிறார், என்பதை போலீஸ் கண்டுபிடித்தாலும், வழக்கு பற்றிய செய்திகளை வெளியிடாமல், ரகசியமாக விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வருகிறது. இதற்கிடையே, வீட்டில் இருந்து வெளியேறிய தனது அக்காவை தேடி திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் நாயகன் வெங்கட் செங்குட்டுவன், காணாமல் போன ஒரு பெண்ணின் பெற்றோரை சந்திக்கிறார். அவர்களது கவலையை அறிந்து காணாமல் போன அவர்களின் பெண்ணை கண்டுபிடிக்க, தனது கல்லூரி தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதியின் உதவியோடு களத்தில் இறங்குகிறார். பிறகு என்ன நடந்தது?, மர்ம கொலைகளின் பின்னணி என்ன?, வீட்டில் இருந்து வெளியேறிய நாயகனின் சகோதரி என்ன ஆனார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், முதல் படம் போல் அல்லாமல் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். தன்னை பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு தனது வளர்ச்சி குறைபாட்டை கோடீட்டு காட்டும் போதும், தன் தாய், தந்தை இறக்கும் போதும் உணர்ச்சிகரமாக நடித்திருப்பவர், உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்தையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.




’லவ் டுடே’ போன்ற ஒரு படத்தின் மூலம் இளசுகளை கவர்ந்த இவானா, இப்படி ஒரு வேடத்தில் நடித்தது ஆச்சரியம் தான். இளம் நடிகைகள் நிராகரிக்கும் ஒரு வேடத்தில் நடித்த அவரது தைரியத்தை பாராட்டினாலும், அவருடைய கதாபாத்திரத்திற்கு முதல் பாதியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால் அவரும் அவருடைய நடிப்பும் மனதில் நிற்கவில்லை.

வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்திருக்கும் ஆராத்யா அழகிலும், அளவான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். வெங்கட் செங்குட்டுவனின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆடுகளம் நரேன், பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார்.இ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, அதனுடன் ஒரு கிரைம் திரில்லர் கதையை சேர்த்து சொல்லிய விதம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.




வளர்ச்சி குறைபாடுள்ள நாயகன் வெங்கட் செங்குட்டுவன், கதையின் நாயகனாக நடித்திருப்பதால், அவருடைய குறைபாட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அவர் எதிர்கொள்ளும் அவமானங்கள், அவருடைய திறமை, வலிமை, அறிவாற்றல்  மற்றும் காதல் என முழுக்க முழுக்க கதை வெங்கட் செங்குட்டுவனின் வாழ்வியலை சுற்றியே பயணிப்பதால், படத்தின் மையக்கதையான மர்ம கொலைகளும், அதன் பின்னணியும் ரசிகர்களிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அஞ்சல்துறையை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இயக்குநர் சொல்லும் யோசனை சபாஷ் சொல்ல வைத்தாலும், அரசு ஊழியர்கள் வேகமாக பயணிப்பார்களா? என்பது கேள்விக்குறிதான்.  ”சாதித்தவர்களை சாதனையாளர்களாக பார்க்கும் இந்த உலகம், மாற்றுத்திறனாளிகள் சாதித்தால் தான் அவர்களை சக மனிதர்களாகவே பார்க்கிறது” போன்ற வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.

படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் கொலை சம்பவங்கள் கதையோடு நம்மை ஒன்றிவிட செய்வது போல், வெங்கட் செங்குட்டுவனின் வாழ்க்கை மற்றும் அவருடைய புலன் விசாரணை முறை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தினாலும், கொலைக்கான பின்னணி மற்றும் கிளைமாக்ஸ் முடிந்த பிறகு மேலும் ஒரு சம்பவத்தோடு படத்தை முடித்திருப்பது தேவையில்லாத ஒன்றாக இருப்பதோடு, பழைய சினிமாத்தனமாகவும் இருக்கிறது.

மொத்தத்தில், வழக்கமான பாதையில் பயணித்தாலும், நெடுமாறனுக்காகவும், அவருடைய மதி செய்யும் வேலைகளுக்காகவும் இந்த ‘மதிமாறன்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!