gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/மகாபாரதப் பெரும்போர்

மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? எத்தனை பேர் போருக்குப் பின் உயிருடன் இருந்தனர்?

போர்! போர்! மஹாபாரதப் பெரும்போர்!

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கு இடையே நடந்த பெரும் போர் அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையிலே நடந்த பெரும் யுத்தம்.

கௌரவர் பக்கம் பதினொரு அக்ஷௌஹிணி சேனை இருந்தது.

பாண்டவர்களிடமோ ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டுமே இருந்தது.

ஒரு அக்ஷௌஹிணி சேனை என்றால் என்ன அர்த்தம்?

21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 காலாட்படையினர் கொண்டது ஒரு அக்ஷௌஹிணி.

அப்படியெனில், கௌரவரிடம் இருந்தது 2,40,570 ரதங்கள், 2,40,570 யானைகள், 7,21,710 குதிரைகள், 7,65,450 காலாட்படை  வீரர்கள் இருந்தனர்.

பாண்டவரிடமோ 1,53,090 ரதங்கள், 1,53,090 யானைகள், 4,59,270 குதிரைகள், 7,65,450 காலாட்படை வீரர்கள் இருந்தனர்.

உக்கிரமான போர் பதினெட்டு நாட்கள் நடந்தது.

இரு தரப்பிலும் ஏராளமானோர் இறந்தனர்.

போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஸ்தீரி பர்வம் விவரிக்கிறது.

அதன் படி நூற்றறுபத்தைந்து கோடியே இருபதினாயிரவர் இந்தப் போரில் கொல்லப்பட்டனர்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இருபத்திநாலாயிரத்து நூற்றறுபத்தி ஐந்து பேர்கள்.




இப்படி மிகச் சரியாக கணக்கைச் சொல்ல முடிகிறதென்றால் போர் முடிந்தவுடன் அன்றன்று எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேரைக் காணோம் என்பதைக் கணக்கிட ஒரு துல்லியமான முறை மஹாபாரத காலத்தில் இருந்தது என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.

போர் முடிந்தவுடன் கௌரவர் பக்கம்  மீதி இருந்தவர்கள், கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகிய மூவர் மட்டுமே.

பாண்டவர் பக்கம் போரில் மீதி இருந்தது பஞ்ச பாண்டவர்கள் ஐவர், கிருஷ்ணர், சாத்யகி ஆகிய ஏழு பேர்கள் மட்டுமே.

இப்படி ஒரு போரில் பெரிய சேனை கொண்டிருந்த கௌரவர் ஏன் ஜெயிக்க முடியவில்லை?

அவர்கள் பக்கம் வயதிலே முதிர்ந்த பீஷ்மாசாரியர், வில் வித்தையைக் கற்றுக் கொடுத்த ஆசாரிய துரோணர்,  கிருபர், அஸ்வத்தாமா, பெரும்போர் வீரனான கர்ணன், ஆயிரம் யானை பலத்தைக் கொண்ட துரியோதனன், அவனது சகோதரர்கள் இன்னும் ஏராளமான வீரர்கள் இருந்தனர்.

பாண்டவர்களிடம் பஞ்ச பாண்டவர் ஐவர், சாத்யகி,அபிமன்யு உள்ளிட்ட பெரும் வீரகள் இருந்தனர். இவர்களுடன் கிருஷ்ணர் ஆயுதம் எடுக்காமல் அர்ஜுனனின் சாரதியாக மட்டுமே இருந்தார்.

இருந்தும் கூட பாண்டவர் வென்றது எப்படி?

ஏனெனில் நடந்த போர் அறத்திற்கும் மறத்திற்குமான போர். தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர்.

இதில் யதோ தர்ம: ததோ கிருஷ்ண:

எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கே கிருஷ்ணர்.

யதோ கிருஷ்ண; ததோ ஜய:

எங்கு கிருஷ்ணரோ அங்கேயே வெற்றி.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத |

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ச்ருஜாம்யஹம் ||

எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு விளைவிக்கப்படுகிறதோ, எப்போதெல்லாம் அதர்மம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

இது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கீதையில் கூறும் வாக்கு.

இதற்கிணங்க அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி, தீயோரை அழித்து நல்லோரைக் காக்க எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

புல்லரிக்க வைக்கும் போர் நிகழ்ச்சிகள் மிக விவரமாக மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.




குருக்ஷேத்திரத்தில் நடந்த இந்தப் போரில், போர் வீரர்களின் அணிவகுப்பிற்கும், சண்டைக்கும் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு யுத்த களத்திற்கென இருந்திருக்க வேண்டும்.

அஸ்திர சஸ்திர பிரயோகங்கள், போர் வியூகங்கள், மகா ரதர்கள், அதி ரதர்கள் உள்ளிட்ட வியத்தகு விவரங்கள் நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளதை மஹாபாரத்தில் காணலாம்.

உலக இலக்கியங்களில் போர் நிகழ்ச்சிகளை இவ்வளவு துல்லியமாக, அதிக விவரங்களுடன் தந்த நூல் மஹாபாரதத்தை அன்றி வேறொன்றில்லை என்பது மெய்.

தர்மத்தின் வெற்றியை எடுத்துரைப்பதால் இதற்கு ஜயம் என்ற பெயர் உண்டு.

இதை மாலையில் படித்தால் பகலில் மனத்தாலும் இந்திரியங்களாலும் செய்த பாவம் அகலும்.

இதைக் காலையில் படித்தால் இரவில் செய்த பாவங்கள் அகலும்.

ஜயம் என்னும் இதைப் படிக்கும் இடத்தில் ஸ்ரீயும், கீர்த்தியும், வித்தையும் எப்போதும் சந்தோஷமும் இருக்கும்!

இப்படி மஹாபாரதம் படிப்பதன் பயனை இந்த நூலே அறுதிட்டு உறுதியுடன் கூறுவதைக் காணலாம்.

பாரதம் படிப்போம்; அறவழியில் நிற்போம்!




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!