Cinema Entertainment விமர்சனம்

ஜில்லா – திரைப் பார்வை

விஜய் படத்துக்குப் படம் இளமையாகிறார்! என்ன இரகசியமோ தெரியவில்லை. உடலை ட்ரிம் ஆக வைத்துக் கொள்வது எப்படி என்று இவர் கொஞ்சம் மற்ற கலை உலக நண்பர்களுக்கும் சொல்லித் தரலாம்.  நடனம்!! வர்ணிக்க வார்த்தைகளே இல்லை! பேசாம அவர் நடனங்களை மட்டும் தொகுத்து ரிலீஸ் பண்ணியிருக்கலாம். D.இமானின் பாடல்கள் okay ரகமாக இருந்தாலும் படத்தில் விஜயின் நடனத்தோடு சேர்ந்து பார்க்கும் பொழுது பாடலும் அழகாகத் தொனிக்கிறது. விஜயும் ஸ்ரேயா கோஷலும் பாடிய கஞ்ஜா பாடல் அருமை. விரசாப் போகையிலே பாடல் படமாக்கப் பட்ட விதமும் ஷங்கர் பட பீல் இருந்தது.

தளபதி 70க்கு பிளான் போட்ட ஜில்லா பட இயக்குனர்…அப்படி ஒரு கதை எழுதியுள்ளாராம் இயக்குனர் நேசன்!! - Cinemamedai

மோகன் லாலும் விஜயும் நல்ல காம்பிநேஷன். அவர்களுக்குள் ஈகோ இல்லாமல் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பது படம் முழுக்கத் தெரிகிறது. இருவருக்குமே நடிக்கவும் நல்ல வாய்ப்பும் உள்ளது, நன்றாகப் பயன் படுத்தியுள்ளார்கள்.




ஹீரோயின் காஜல் அகர்வால். படத்தின் முதல் தப்பு. துப்பாக்கியையே திரும்பப் பார்ப்பது போலத் தோன்றுவதற்கு ஒரு முக்கியக் காரணம் ஆகிவிட்டார். ஒரே மாதிரி expressions. நடை உடை பாவனையில் போன படத்தில் இருந்து இந்தப் படத்திற்கு மாற்றமே இல்லை. இவ்வளவு தான் நடிக்க வரும் என்று தெரிந்திருந்தால் வேறு நடிகையைப் போட்டிருக்கலாமே, நடிகைகளுக்கு அவ்வளவு பஞ்சமா? மேலும் show piece தானே? ஒரு போலிசுக்கான உடல் மொழி அவரிடம் சிறிதும் இல்லை.

பெண்களை ஏளனப்படுத்தும் வசனங்களும் காஜல் அகர்வாலின் பின்பக்கத்தைத் தட்டும் அந்தக் காட்சியும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஒரு பெண்ணை பலம் உள்ள ஒருவன் வந்து பெண் கேட்டால் பயந்து ஒத்துக் கொள்வார்கள் போலப் பெண்ணின் பெற்றோரைக் காட்டியிருப்பது சமூகத்துக்குத் தவறான செய்தியை அனுப்புகிறது. இன்னும் எத்தனை காலம் தான் இது தொடரும்? மேலும் ஹீரோயின் போலிசாக இருந்தாலும் லூசாகக் காட்டுவது ஏனோ?

கதை! தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவையே அரைப்பதற்கு ஏன் இத்தனை பணத்தையும், நடிகர்கள், இதர தொழில் நுட்ப வல்லுனர்களின் நேரத்தையும் உழைப்பையும் விரயம் செய்ய வேண்டும்? பழைய கதையாக இருந்தாலும் திரைக்கதை சிறப்பாக இருந்தால் பார்ப்பவர்களை வசப்படுத்தும். அதுவோ இங்கே படு மோசம். எப்பவும் போல ஒரு தாதா கதை, வாரிசு, ஹீரோ எனப்படுபவன் பத்துப் பேரை ஒரே அடியில் பீரங்கியால் தாக்கியது போல வீழ்த்திவிடுவான் – அதையும் நம்ப நாம் திரையரங்கில் காதில் ஒரு முழம் பூ சுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்போம்.




என்ன தான் பதவி பணம் இருந்தாலும் போலீசில் சேருவது அவ்வளவு சுலபமா? கதாப்பாத்திரம் படி விஜய் என்ன படித்திருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை அடியாள் ரேஞ்சுக்குக் காட்டிவிட்டு திடீரென்று நிமிஷமாக Assistant Commissioner ஆகிவிட்டார் என்கிறார்கள். அதுக்கும் மேல ஒரே ராத்திரியில் ஆபரேஷன் கிளீன் என்று ஒரு மருத்துவர் இல்லா ஆபரேஷனையும் நடத்துகிறார். முதல்வனில் ஒரு நாள் முதல்வர் செய்ததை ஓர் இரவில் ரவுடி டர்ண்ட் AC செய்கிறார்!

அடிதடி, மணல் கொள்ளை, கிரேனைட் கொள்ளை என்றால் மதுரை தான் ஹெட் குவார்ட்டர்ஸ் என்பது சினிமாவில் தற்போது எழுதப் படாத விதி. மொட்டை மாடி சீன்களில் மதுரை கோவில்களைக் காட்டிவிட்டால் கதைக் களம் மதுரை என்றாகிவிடாது. பேசும் மொழியில் வட்டார வழக்கு இருக்க வேண்டும். இங்கோ மோகன் லால் மலையாள வாடையுடன் பேசுகிறார். விஜய் எப்பவும் போலப் பேசுகிறார். இதுக்கு எதுக்கு மதுர?எத்தனையோ ஓட்டைகள் அதில் இது ஒன்றும் பெரிய ஓட்டை இல்லை என்று விட்டுவிட வேண்டியது தான் seasoned cinema goer ன் கடமை!




டைட்டிலில் காஜல் அகர்வால் பெயருக்கு அடுத்தப் பெயராக சூரியின் பெயர்! நல்ல பிரமோஷன் தான். அனால் இந்தப் படத்தில் காமெடி மிகப் பெரிய டிராஜடி. சூரி சோபிக்கவில்லை. அதுக்குப் பதிலா விஜயின் பல சீன்கள் காமெடியாக இருந்து அதற்கு ஈடு கட்டுகின்றன.

பூர்ணிமா பாக்கியராஜ் தான் அம்மா கம் மோகன்லால் மனைவி. அவர் நடிப்புக் கூட அழுத்தமாக இல்லாதது திரைக்கதை சொதப்பலால் வந்த வினை. சம்பத் ஒரு மந்திரி என்பதே நம்ப முடியாமல் இருக்கும் பொழுது அவர் தான் வில்லன் என்றும் அவருக்கு ஒரு flashback கொடுப்பதும் டார்ச்சரின் உச்சம். நீண்ட/சுருள் சுருள் முடியோடு வரும் அடியாட்கள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டார்களா என்று சந்தேகிக்கும் அளவுக்கு படம் முழுக்க ஸ்டண்ட் பார்ட்டிகள் கும்பல்.

காப்பியடிப்பதிலும் ஒரு நேர்த்தி வேண்டும். வெளிநாட்டுப் படங்களைக் காப்பி அடித்தாலும் சரி நம்முடைய பழையப் படங்களைக் காப்பி அடித்தாலும் சரி பார்க்கிற ரசிகனுக்குப் படம் சுவாரசியமாக இருக்க வேண்டும். இந்த இயக்குனர் நேசன் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. ஒரு messageம் இல்லை.

ஒரு பெரிய நடிகர் இருந்தால் எப்படிப்பட்ட படம் எடுத்தாலும் ஓடிவிடும் என்ற மாயத் தோற்றத்தை நாம் தான் உடைக்க வேண்டும். அதே போல விஜய் போன்ற நல்ல திறமையும், பவரும் உள்ள நடிகர்கள் சிறந்த படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பு. இந்தப் படத்தை எங்கள் வீட்டில் இருந்து மூன்று பேர் போய் பார்த்தோம். 450ரூ செலவு. அதற்குப் பதில் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தேவையான உடை வாங்கிக் கொடுத்திருக்கலாம். விஜயின் டேலன்ட் இப்படி வீணாவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!