தோட்டக் கலை

சுவரில் கூட செடிகள் வளர்க்கலாம்.. எப்படி?

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு தோட்டம் அல்லது செடி, கொடிகளாவது இருக்கும். ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. சிறிய அளவில் இடம் இருந்தால் அங்குக்கூட வீட்டையோ, சிறு அறைகளையோ கட்டிவிடுகிறார்கள். அதனால் வீடுகளில் தோட்டங்கள் வைப்பதே இன்று குறைந்து விட்டது. குறிப்பாகச் சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி கலாச்சாரம் வந்த பிறகு தோட்டங்களுக்கு வேலையே இல்லை. தனி வீடு வைத்திருப்பவர்கள் தோட்டம் வைக்க விருப்பப்பட்டாலும், அதற்கு இடம் இருப்பதில்லை. பசுமை விரும்பிகள் மாடித் தோட்டத்தோடு ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தோட்டம் பற்றிக் கவலைப்படுவோருக்கு வெர்ட்டிகல் கார்டன், கிரீன் வால் எனப்படும் பசுமை சுவர் தாவரங்கள் வந்துவிட்டன.




முறைகள்

  • இந்த முறையில் தோட்டம் வைக்க இடம் இல்லையே என்ற கவலையே வேண்டாம். வீட்டுச் சுவர்களிலேயே செடி, கொடிகளைப் படரவிட்டு வளர்க்கலாம். சுவர்களில் மணி பிளாண்ட் போன்ற செடிகளைத் தொங்கவிட்டு வளார்க்கலாம். பசுமைச் சுவர் தாவர முறைக்கு மேலை நாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. இப்போது நம் நாட்டிலும் வரவேற்பு கூடியிருக்கிறது. சுவர்களில் மட்டுமல்ல, முழு அடுக்கு மாடியிலும்கூட இப்படி விதவிதமான செடிகளை வளர்க்கலாம். வீட்டுத் தூண்களில் அலங்காரக் கொடிகளைப் படரவிடலாம் எனச் சொல்கிறார்கள் கட்டுமானப் பொறியாளர்கள்.




  • இப்படிப் பசுமைச் சுவர்களை எழுப்பத் திட்டம் இருந்தால், இதுபற்றி முன்கூட்டியே கட்டிடப் பொறியாளரிடம் தெரிவித்துவிட வேண்டும். அப்படிச் சொல்லிவிட்டால் வெர்ட்டிகல் கார்டன், கிரீன் வால் அமைக்கக் கட்டுமானத்தின் போதே வசதி செய்துவிடுவார்கள். இத்தகைய பசுமைச் சுவர் தாவரங்களை அமைப்பது மிகவும் எளிமையான கட்டுமான முறையாகும்.

  • சரி, சுவரில் செடி, கொடிகளை எப்படி வளர்க்க முடியும் என்று உங்களுக்குச் சந்தேகம் ஏற்படலாம். இதற்காக ரொம்பவும் மெனக்கெடத் தேவையில்லை. வீட்டின் கட்டுமானப் பணியின்போது சாதாரணச் சுவர்களுடன் சேர்த்து மணல் நிரப்பும் வகையிலான கட்டுமானங்களை அமைத்தாலே போதும். பின்னர் அவற்றில் மணலை நிரப்பிச் செடிகளை நட்டு வளர்க்கலாம்.




  • கட்டி முடித்த வீட்டிலும் பசுமைச் சுவர் தாவரங்கள் வைக்க வழி இருக்கிறது. கட்டி முடித்த வீட்டில் பந்தல் அல்லது கொடி மாதிரியான அமைப்பை உருவாக்கி, வேர்கள் திறந்த வெளியில் வளரும் வகையில் பசுமைச் சுவர் தாவரங்களை உருவாக்கலாம். சில செடிகளின் வேர்கள் நீரில் இருந்தாலே வளரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • பசுமைத் தாவரங்களை உள்ளடக்கிய சுவர் இன்று அலங்காரப் பொருளாகவும் பார்க்கப்படுகிறது. இது வெப்பத்தின் தாக்கத்தை உணர முடியாத அளவுக்குப் பசுமை கலந்த சூழலை உருவாக்கவும் செய்கிறது. இதனால் நல்ல காற்றோட்ட வசதியும் கிடைக்கும். இதுபோன்ற பசுமைச் சுவர் தாவரங்களை உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களிலும் அமைக்கலாம். வெளிப்புறச் சுவர்களில் அமைக்கப்படும் பசுமைச் சுவர் தாவரங்கள் கோடை காலத்தில் உஷ்ணத்தை உள்வாங்கி வீட்டில் வசிப்பவர்களுக்குக் குளிர்ச்சியான சூழ்நிலையை அளிப்பது சிறப்பாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!