Entertainment lifestyles News Uncategorized

சாலைகளில் புத்தகம் விற்பனை செய்தவர், இன்று துபாய் கோடீஸ்வரர்களில் ஒருவர்

தொலைத்த இடத்தில் தேடினால் தான் பொருள் கிடைக்கும் என்று சொல்வார்கள் அது நம்ம வாழ்க்கைக்கும் பொருந்தும். இன்று துபாயில் இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான ரிஸ்வான் சஜனின் வெற்றிகரமான வாழ்க்கை அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

வளைகுடா போர் காரணமாக குவைத்தில் இருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று சொந்த ஊருக்கு திரும்பிய அவர் மீண்டும் அங்கு சென்று சிறிய வர்த்தக நிறுவனத்தை தொடங்கி இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.




மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ரிஸ்வான் சஜன். குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் தெருக்களில் புத்தகங்கள் மற்றும் பட்டாசுகளை விற்பனை செய்தார். அந்த வருமானமும் குடும்பத்துக்கு போதாத காரணத்தால் பால் விநியோக பணியிலும் ஈடுபட்டார். ரிஸ்வான் சஜன் 16 வயதாக இருந்தபோது அவரது தந்தை காலமானார். இது ரிஸ்வான் சஜன் குடும்பத்துக்கு பெரிய அடியாக அமைந்தது.

இதனையடுத்து 1981ல் குவைத்தில் உள்ள தனது மாமாவின் கட்டிட பொருட்கள் கடையில் வேலைக்கு சேர்ந்தார். விற்பனையாளராக சேர்ந்து தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு வர்த்தகத்தில் வேகமாக முன்னேற தொடங்கினார். இருப்பினும், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காதே, 1990ல் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் குவைத் மீது படையெடுத்து, நகரத்தை அழித்தார்.

இதனையடுத்து தொடங்கிய வளைகுடா போர் அவரை மும்பைக்கு திரும்ப செய்தது. இருப்பினும் தனது வாழ்க்கை போராட்டத்துக்கு மத்தியில் தனது வாழ்க்கை துணையையும் அவர் கண்டுபிடித்தார், அதாங்க திருமணம் செய்து கொண்டார். வளைகுடா போர் முடிந்தபிறகு மீண்டும் குவைத்துக்கு சென்று வேலை தேடினார். கட்டுமான பொருட்களுக்கான தரகு தொழில் செய்யும் வேலை கிடைத்தது.




ஒரு நாள் அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்குவோம் என்ற ஆவல் எழுந்தது. இதனையடுத்து அந்த வேலையை விட்டு விட்டு 1993ல் டானூப் குழுமத்தை தொடங்கினார். அப்போது கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் சிறிய வர்த்தக நிறுவனமாக தொடங்கிய இந்த குழுமம் இப்போது, கட்டுமான பொருட்கள், வீட்டு அலங்காரம் மற்றும் ரியல் எஸ்டேட் டெவல்ப்மெண்ட் உள்பட பல்வேறு வர்த்தகங்களில் வெற்றி நடைபோடும் பெரிய குழுமமாக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பக்ரைன், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் இந்தியா உள்பட உலகளவில் பல்வகைப்பட்ட கிளைகளை கொண்ட மிகப்பெரிய கட்டுமானப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றாகும். டானூப் குழுமம் இன்று ஒரு பில்லியன் டாலர் குழுமாக வளர்ச்சி கண்டுள்ளது. இவரது குடும்பத்தில் இவர்தான் முதல் தலைமுறை தொழில்முனைவோர். 2019ம் ஆண்டு நிலவரப்படி, டானூப் குழுமத்தின வருவாய் சுமார் ரூ.9,500 கோடியாகும். தற்போது 55 வயதாகும் ரிஸ்வான் சஜனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.18,000 கோடியாக உள்ளது. தற்போது இவரது வாரிசுகள் குழும நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.




What’s your Reaction?
+1
0
+1
7
+1
1
+1
3
+1
2
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!