Cinema Entertainment

முதல் மனைவி இறந்ததும் தற்கொலைக்கு முயன்ற எம்.ஜி.ஆர்

ஒரு நாள் எம்.ஜி.ஆர் வீட்டுக்குள் நுழைந்தபோது மீன் குழம்பின் அபாரமான வாசனை அவரை வரவேற்கவே வீட்டுக்குள் நுழைந்த அடுத்த பத்தாவது நிமிடம் சாப்பிட உட்கார்ந்தார்.என்றைக்கும் இல்லாமல் அன்று கொஞ்சம் அதிகமாக அவர் சாப்பிட்டதும் “இன்னிக்கு கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு விட்டாய் போலிருக்கிறது”என்று அன்னை சத்யபாமா கேட்க “ஆமாம்.அதற்குக் காரணம் அந்த மீன் குழம்புதான் . என்ன ருசி என்ன ருசி” என்று எம்.ஜி.ஆர் பதில் சொன்னார். அவர் அப்படி சொன்னவுடன் “இத்தனை நாள் இந்த வீட்டில் நீயும் நானும் சமைத்து என்ன பலன்” என்று தனது மூத்த மருமகள் தங்கத்தைப் பார்த்து கிண்டலாகக் கேட்டார் சத்யபாமா அம்மையார்.




மீன் குழம்பு நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு தனது தாயாரும் அண்ணியும் ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறார்கள் என்று புரியாமல் குழம்பிய எம்.ஜி.ஆர் “நான் என்ன சொல்லிவிட்டேன் என்று நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் “என்று சற்று ஆத்திரத்துடன் தனது தாயாரைப் பார்த்து கேட்டபோது அவரது தாயாரும் அண்ணியும் சிரிக்கத் தொடங்கினார்கள்.

“என்ன ருசி, என்ன ருசின்னு பாராட்டிகிட்டே நீ சாப்பிட்டியே. அது யார் வைத்த மீன் குழம்பு தெரியுமா? உன் மனைவி பார்கவி வைத்த குழம்பு” என்று அவர்கள் சொன்னதும்“ஏம்மா கிண்டல் செய்றீங்க? பார்கவி மீனைப் பார்த்த உடனே பின் கட்டுக்கு இல்லே ஓடிவிடுவாள்.அவளாவது மீன் குழம்பு வைப்பதாவது.நீங்க இரண்டு பெரும் சேர்ந்து என்னை கேலி செய்யாதீங்க” என்றார் எம்.ஜி.ஆர்.




எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணியின்...மகன் எம்சி சந்திரன் ... கொரோனாவுக்கு உயிரிழப்பு!! | MGR's brother M. G. Chakrapani's son MC Chandran died for corona - Tamil Oneindia

“நாங்க விளையாட்டுக்கு சொல்லலைடா.இது உண்மையிலேயே பார்கவி வைத்த மீன் குழம்புதான். இந்தப் பொண்ணை கல்யாணம் செய்து கொள்ள அவ்வளவு யோசனை செஞ்சியே.இப்போ அந்த பொண்ணைப் பார்த்தியா. தனக்குப் பிடிக்காத போதும் தன்னுடைய கணவனுக்குப் பிடிக்கும் என்பதற்காக மீன் குழம்பு வைத்திருக்கிறார் ”என்று பெருமிதத்தோடு சொன்னார் சத்யபாமா அம்மையார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் தாயார் அடைந்த பெருமிதத்தைக் காட்டிலும் அதிகமாக பெருமிதம் அடைந்தார் எம்.ஜி.ஆர்..

கணவனின் திருப்திக்காக தனக்குப் கொஞ்சமும் பிடிக்காத அசைவஉணவு வகைகளை சமைத்த தனது மனைவியைப் பற்றி நினைக்க நினைக்க பார்கவியை மனைவியாக அடைய தான் உண்மையிலேயே பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரிடம் மேலோங்கி நின்றது.

எம்.ஜி.ஆர் , பார்கவி ஆகியோரின் இல்லற வாழ்க்கை இனிதாக இருந்த போதிலும் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய சிக்கலை எம்.ஜி.ஆர் அப்போது சந்தித்துக் கொண்டிருந்தார் .




எம்.ஜி.ஆர் அந்த நாடகத்துல மட்டும் நடிச்சிருந்தார்ன்னா சிவாஜியோட பெயரே மாறியிருக்கும்… என்னப்பா சொல்றீங்க!! - CineReporters

முறையான வருமானம் இல்லாததால் மனைவியை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த உலகப் போரை காரணம் காட்டி “எப்போதும் சென்னையில் குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பதால் நீங்கள் அனைவரும் பாலக்காட்டிற்கு சென்று விடுங்கள். போர் முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பி வரலாம்”என்று தன்னுடைய குடும்பத்தினரிடம் கூறினார்.

“எனக்கு எந்த பயமும் இல்லை.அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். உங்களுடைய மனைவிகளை வேண்டுமானால் ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று ராமச்சந்திரனிடமும் அவரது அண்ணனான சக்ரபாணியிடமும் அன்னை சத்யபாமா சொல்ல “உங்க அம்ம்மாவுக்கே பயம் இல்லேங்கி றாங்க. அப்படியிருக்க நாங்க மட்டும் எதற்கு போகணும் “என்று கேட்ட தங்கத்தையும், பார்கவியையும் சமாதானப்படுத்தி ஊருக்கு கிளம்ப அவர்களை சம்மதிக்க வைப்பதற்குள் சக்ரபாணிக்கும்,எம்.ஜி.ஆருக்கும் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

தனித்தனி ரிக்ஷாவில் தங்களது மனைவிகளை அழைத்துக் கொண்டு அவர்கள் கிளம்பியபோது பார்கவி எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து அழுதபடியே வந்தார்.எம்.ஜி.ஆரால் அவரை தேற்றவே முடியவில்லை. “போர் எப்படியும் இரண்டு மாதத்திற்குள் முடிந்துவிடும்.அதற்குப் பிறகு உன்னை திரும்ப அழைத்துக் கொண்டு வர நானே வருகிறேன்”என்று ஆறுதல் கூறி எம்.ஜி.ஆர் அவரை ரயிலில் ஏற்றிவிட்டார்.

மனைவி ஊருக்குப் போன பிறகு பொருளாதார ரீதியாக நிலைமை இன்னும் மோசமாகவே பட்டாளத்தில் ஜமேதார் வேலையில் சேர்ந்துவிடுவது என்ற முடிவை எம்.ஜி.ஆர் எடுத்தார். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள். முதல் காரணம் அந்த வேலைக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப் பட்டிருந்ததோ அவைகளில் பெரும்பலான தகுதிகள் தன்னிடம் இருப்பதாக அவர் நினைத்தது.




M.G.-Chakrapani-with-his-wife-Meenakshi - Cinemapluz
இரண்டாவது காரணம் அந்த ஜமேதார் வேலைக்கான சம்பளம் 125ரூபாய் என்பது. இன்றைக்கு வேண்டுமானால் 125 ரூபாய் மிகச் சாதாரணமாக இருக்கலாம்.ஆனால் ஒரு அரிசி மூட்டையின் விலை ஏழரை ரூபாயாகவும்,ஒரு சவரன் விலை பதிமூன்றரை ரூபாயாகவும் இருந்த அந்த கால கட்டத்தில் அது மிகப் பெரிய தொகை. ஆகவே அந்த 125 ரூபாய் என்பது தனது மொத்த குடும்பத்துக்கும் போதுமானதாக இருக்கும் என்று எம்.ஜி. ஆர் கணக்குப் போட்டார் .

அப்படி பட்டாளத்துக்குப் போவதற்காக எம்.ஜி.ஆர் தன்னை முழு மூச்சாகத் தயார் செய்துகொண்டிருந்தபோதுதான் “சாயா” என்ற படத்திலே முதன் முதலாக கதாநாயகனாக நடிக்கக் கூடிய வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.

இனி பணக் கஷ்டத்தில் இருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கவே ” ஒரு மாதத்தில் ஊருக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன் என்று தனது மனைவிக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பாலக்காட்டிற்குப் புறப்பட்டார். காலையில் போத்தனூரில் இறங்கி தன்னுடைய அண்ணியாரைப் பார்த்துவிட்டு பாலக்காடு செல்லத் திட்டமிட்டிருந்த அவர் அண்ணியின் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அங்கே இருந்த சூழ்நிலையைக் கண்டு மிகப் பெரிய பதட்டத்துக்கு ஆளானார்.




அந்த வீட்டில் இருந்த பெரியவர்கள் அனைவரும் அழுதபடி இருக்க அவரது அண்ணி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறியதைப் பார்த்தவுடன் பைத்தியமே பிடித்துவிடும் ஒரு நிலைக்கு எம்.ஜி.ஆர் ஆளானார்.

இதற்கிடையில் அங்கிருந்த ஒருவர்”நீங்க தந்தியைப் பார்த்து விட்டுத்தான் புறப்பட்டீர்களா” என்று அவரைப் பார்த்து கேள்வி கேட்க “எனக்கு எந்த தந்தியும் வரவில்லையே “என்று எம்.ஜி.ஆர் சொல்லிக் கொண்டிருந்த போதே “பார்கவிக்கு உடல்நலம் சரியில்லன்னு சொன்னாங்க. எங்களுக்கும் சரியா எந்தத் தகவலும் வரலே.ஆனால் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்கப்பா”என்று எம்.ஜி.ஆரின் அண்ணி சொன்னபோது “உலக்கையால் அடித்தால் கூட அவளுக்கு ஒன்றும் ஆகாது.நான் நேராகப் போய் அவளைப் பார்த்துக் கொள்கிறேன்”என்று அவர்களிடம் சொல்லி விட்டு எம்.ஜி.ஆர் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி புறப்பட்டார்.

தனது மனைவி பார்கவிக்கு நிச்சயமாக எதுவும் ஆகியிருக்காது என்று அசாத்திய நம்பிக்கையுடன் பாலக்காடு போய் சேர்ந்த எம்.ஜி.ஆர் ஜட்கா வண்டியில் விட்டுக்கு சென்ற போது அவரையும் அறியாமல் ஒரு விதமான மன பயத்துக்கு ஆளாகி வேகமாக வண்டியை ஓட்டும்படி குதிரை வண்டிக்காரனிடம் கூறினார்.

தனது அண்ணியின் தாய்மாமன் வீட்டிலே அவர் இறங்கிய போது “ராமச்சந்திரா,பார்கவி நம்மை ஏமாத்திட்டாடா“என்று கண்ணீர் மல்க கதறினார் அவரது தாய் மாமா.

அடுத்த ஒரு மணி நேரம் அங்கே என்ன நடந்தது என்று எம்.ஜி.ஆருக்கு தெரியாது. அந்த அளவிற்கு அவர் தன் நிலை இழந்தார்.




முதல் நாள் இரவு குளித்து முடித்து தன்னுடைய அன்புக் கணவனின் படத்தை வணங்கிவிட்டு எல்லோரிடமும் சிரித்து பேசிக் கொண்டிருந்த பார்கவி திடீரென நெஞ்சுவலி காரணமாக இறந்துவிட்டார் என்ற செய்தியை நம்ப முடியாமல் எம்.ஜி.ஆர் தவித்தார். கடைசியாக பார்க்கவியின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் செய்து விட்டார்களே என்ற அவரது ஏக்கம் பார்கவியின் இறப்பினால் ஏற்பட்ட சோகத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

“நிச்சயமாக பார்கவி செத்திருக்க மாட்டா.யாரை கேட்டு நீங்க அவளை அடக்கம் செஞ்சீங்க. அவளைப் புதைத்த இடத்தை நான் தொண்டிப் பார்த்தே ஆகணும்”என்று அடக்க முடியாத ஆத்திரத்துடன் சத்தம் போட்ட எம்.ஜி.ஆரின் சோகத்தை அடக்க வழி தெரியாமல் அங்கிருந்த உறவினர்கள் தவித்தனர்.

MGR Flashback: எம்.ஜி.ஆர் உயிரையே வைத்திருந்த முதல் மனைவி பார்கவி; ஆவியுடன் பேச நடந்த முயற்சி
மனம் சிறிது அமைதி அடைந்தவுடன் பார்கவியின் வீடு நோக்கிப் போனார் எம்.ஜி.ஆர் .அங்கே தங்கமணியின் படுக்கை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.அதைப் பார்த்தவுடன் அந்தப் படுக்கையில் உட்கார்ந்து தங்களது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பார்கவியோடு பேசிக் கொண்டிருந்தது எல்லாம் அவரது நினைவிற்கு வந்தது.




இரவு சாப்பிட மனமின்றி படுத்த எம்.ஜி.ஆருக்கு தூக்கம் வரவில்லை.
காலையில் எழுந்த போது இறந்து போன மனைவியை எப்படி சந்திப்பது என்பதில் எம்.ஜி.ஆருக்கு எந்த குழப்பமும் ஏற்படவில்லை. அவள் சாவை சந்தித்தது போல தானும் சாவை சந்தித்து விட்டால் அவளை சந்தித்து விடலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு போத்தனூருக்கு புறப்பட்ட எம்.ஜி.ஆர் அங்கே கதறி அழுதபடி இருந்த அண்ணன் சக்ரபாணியை “நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்”என்று சொல்லி சமாதானம் செய்தபோது அங்கிருந்த எல்லோர் முகத்திலும் ஒரு நிம்மதி பிறந்தது. மனைவியை இழந்த துக்கத்திலிருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணினார்கள். பகல் உணவை வேண்டாம் என்று சொல்லாமல் எம்.ஜி.ஆர் நன்றாக சாப்பிட்டது அவர்களது அந்த நினைப்பை உறுதி செய்தது.

இருட்டத் தொடங்கியதும் தனது திட்டப்படி வீட்டைவிட்டு கிளம்பி ரயில் பெட்டிகள் ஷண்டிங் செல்லும் இடம் நோக்கி நடந்த எம்.ஜி.ஆருக்கு தனக்குப் பின்னாலே தன்னுடைய அண்ணன் நடந்து வந்து கொண்டிருந்தது தெரியாது.தன்னுடைய உள்ளுணர்வு ஏதோ சொல்லவே திடீரென்று திரும்பிப் பார்த்த அவர் திகைப்படைந்தார்.

“நீங்க எங்கே இந்தப் பக்கம்?”என்று எம்.ஜி.ஆர் கேட்டபோது“இந்த மாதிரி நேரத்தில யாராவது கூட இருந்தாத்தான் நம்ம மனசில இருப்பதை எல்லாம் அவங்ககிட்ட சொல்லி ஆறதல் பெற முடியும். அதனாலதான் நான் உன் பின்னாலேயே வந்தேன்”என்றார் சக்ரபாணி.




“நான்தான் என்னை திடப்படுத்திக்கிட்டேனே”என்று எம்.ஜி.ஆர் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட அவர் ‘இந்த ராமச்சந்திரன் என்ன பேசுவான், எங்கே போவான் என்பதெல்லாம், உன்னைவிட எனக்கு நல்லா தெரியும். அதனால நீ என்ன சொன்னாலும் சரி நான் உன் கூடத்தான் இருப்பேன்” என்று அவர் தீர்மானமாகச் சொன்னார்.

சிறிது நேர மவுனத்திற்குப் பின்னர்” ஒருவரோட சாவிற்கு பரிகாரம் இன்னொருவர் சாவு இல்லே.அதை முதலில் தெரிஞ்சிக்க”என்ற அவர் “பார்கவிக்கு தாய், தந்தை, உலகம் புரியாத வயசில ஒரு தம்பி எல்லோரும் இருக்காங்க. நீ நன்றாக சம்பாதிக்கத் தொடங்கி அவங்களுக்கெல்லாம் உதவி பண்ணு.அதுதான் நீ பார்கவிக்கு செய்யற கடமையாக இருக்க முடியும் அதை விட்டுட்டு உயிரை விட்டா எல்லாம் சரியாகப் போய்விடுமா?

நம்ம அப்பாவும் அக்காவும் இறந்தபோது நம்ம அம்மா அப்டி ஒரு முடிவை எடுத்து இருந்தாங்க என்றால் நம்ம நிலைமை என்ன ஆகியிருக்கும்னு கொஞ்சம் யோசி “என்று சரியான நேரத்தில் மிகச் சரியான அறிவுரைகளைக் கூறி ஒரு விபரீத முடிவை எடுக்க விடாமல் எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்தியவர் சக்ரபாணிதான்.

எம்.ஜி.ஆரின் வளர்ச்சியில் அவருடைய பங்கு அசாத்தியமானது.ஆனால் வெளி உலகம் அவ்வளவாக அறியாத உண்மை அது.

THANK YOU
அண்ணாதுரை துரைசாமி.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!