Cinema Entertainment Uncategorized

நடிகை பானுமதி-4

கலைகளில் ஏதேனும் ஒரு துறையில் ஜெயிப்பதும் சாதிப்பதுமே வியந்து பார்க்கப்படுகிறது. அந்தத் துறைக்குள் இருக்கிற சகல நிலைகளுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு, வெற்றிக் கொடி நாட்டுவது என்பது அசாதாரணம். அவர்களைத்தான் ‘சகலகலாவல்லவர்’ என்கிறோம். ‘சகலகலாவல்லி’ என்கிறோம். தமிழ்த் திரையுலகில் அப்படியொரு சகலகலாவல்லியாக, அஷ்டாவதனி என்று சொல்லப்படுகிற எட்டு விஷயங்களையும் அநாயசமாகச் செய்து அசத்தியவர் நடிகை பானுமதி.

பூர்விகம் ஆந்திர மாநிலம். சிறு வயதிலேயே பாடுவதில் கெட்டிக்காரர் என்று பேரெடுத்தார். முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டார். பாட்டும் ராகமும் இவர் குரலில் இருந்து வெளிப்பட்டபோது, தனி பாணியாக இருந்தது. புதுச்சுவையுடன் திகழ்ந்தது. இவரின் பாடும் திறனைக் கண்டறிந்தபோதுதான், இவரின் முகமும் கண்களும் சட்சட்டென்று மாறி பாவனைகள் செய்வதைக் கண்டு எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். முதல் பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்ததுடன் பாடவும் செய்தார். தெலுங்கில் வரிசையாகப் படங்கள் வந்தவண்ணம் இருந்தன.




அப்போதெல்லாம் தென்னிந்திய மொழிப் படங்கள் சென்னையில்தான் படமாக்கப்பட்டு வந்தன. அப்படி1943-ல் ‘கிருஷ்ண ப்ரேமா’ எனும் தெலுங்குப் படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்தார் பானுமதி.

உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பி.எஸ்.ராமகிருஷ்ண ராவைச் சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டார்கள். சினிமா குறித்தும் தங்களின் விருப்பங்கள் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசினார்கள். அந்தப் பேச்சில் அன்பு படர்ந்திர்ந்தது. அந்த அன்பு காதலாக உருவெடுத்தது.




சினிமாவில் உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில், காதலும் உயர்ந்தபடி இருக்க, ஒருகட்டத்தில், தன் காதலை வீட்டில் சொன்னார் பானுமதி. கொந்தளித்தது வீடு. கடும் எதிர்ப்பைக் காட்டியது. என்ன செய்வது என்று தெரியாமல், வெளியே சிரித்துக்கொண்டும் உள்ளே அழுதுகொண்டுமாக நிஜவாழ்க்கையில் நடித்தபடி, சினிமாவிலும் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராமையாவுக்கும் அவரின் மனைவி கண்ணாமணிக்கும் விஷயம் தெரிந்தது. இவர்களும் இன்னும் சில நண்பர்களுமாகச் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர்.

கல்யாணம் பண்ணிக்கொண்டதும் பானுமதி எடுத்த முதல் முடிவு… ‘இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை’ என்பதுதான்! ‘உன் விருப்பம் என்னவோ அதைச் செய்’ என்று கணவர் ராமகிருஷ்ணாவும் சொல்ல, ‘கிருஷ்ண ப்ரேமா’வை நடித்துக் கொடுத்துவிட்டு, அமைதியாக, ஆனந்தமாக இல்லறத்தில் ஈடுபட்டார் பானுமதி.

’என்னப்பா இது… பானுமதி தொடர்ந்து நடிச்சிட்டிருந்தால், அவர் மிகப்பெரிய உயரத்துக்குப் போயிருப்பாரேப்பா’ என்று தெலுங்குத் திரையுலகமே அலுத்துக்கொண்டது.

இந்த நிலையில்தான் ஆந்திரத் திரையுலகில் பல வெற்றிகளைச் சுவைத்த பி.என்.ரெட்டி, ஒருநாள் ராமகிருஷ்ணாவின் வீட்டுக்கு வந்தார். வந்தவர், பானுமதியையும் ராமகிருஷ்ணாவையும் உட்காரச் சொல்லி, தான் எடுக்க இருக்கும் படத்தின் கதை மொத்தத்தையும் சொன்னார்.




‘இதுல பானு நடிச்சாத்தான் நல்லாருக்கும். அவர் திரும்பவும் நடிக்க வரணும். ஒருவேளை அவர் நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டா, நான் இந்தப் படத்தையே ‘ட்ராப்’ பண்ணிருவேன்’ என்றார்.

பானுமதியும் ராமகிருஷ்ணாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். ‘அவ்ளோ பெரிய மனுஷன் கேக்கறார். இந்த ஒரு படத்துல மட்டும் நடிச்சிரு’ என்றார் ராமகிருஷ்ணா. ’ஸ்வர்க்க சீமா’ எனும் அந்தப் படத்தில் திருமணத்துக்குப் பிறகு, ஒரு இடைவெளிக்குப் பின்னர் நடித்தார் பானுமதி. அவ்வளவுதான். அந்தப் படம் அடைந்த பிரம்மாண்ட வெற்றியால், அந்தத் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெரும் லாபம் கிடைத்தது. லாபம் ஒருபக்கம் இருக்கட்டும்… பானுமதி எனும் திறமையான நடிகை திரையுலகுக்கு மீண்டும் கிடைத்தார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!