Serial Stories

நீ தந்த மாங்கல்யம்-22

( 22 )

“உன் மனதில் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? ” கோபம் தெரிந்தது யதுநந்தனின் குரலில் .

” உன்னைத்தான்டா …” என்று நாக்கு நுனி வரை வந்து விட்ட வார்த்தைகளை அவசரமாக அமுக்கினாள் முகிலினி .தனது படுக்கை விரிப்பை கவனமாக சரி செய்ய துவங்கினாள் .

” உன்னைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் .வாயை திறந்து பேசு ” இப்போது குரல் உயர்ந்திருந்தது .இப்போது பேசினால் ….வேண்டாம் அது சரி வராது .இதழ்களை இறுக்கிக் கொண்டாள் முகிலினி .

” ஏய் ” வேகத்துடன் அவள் கைகளை பற்றி இழுத்தான் .இதனை எதிர்பாராத முகிலினி வந்து விழுந்த இடம் யதுநந்தனின் மடியாக இருந்தது .பூமாலையாக தன் மடியில் தவழ்ந்த மனைவியை பார்த்ததும் கோபம் ஆவியாகி போனது அவனுக்கு .

” முகில் ” என தாகத்துடன் அழைத்தபடி அவளை தழுவியபடி குனிய ” என் மனக்குழப்பங்கள் தெளிவதற்கு பதிலாக மேலும் மேலும் குழம்பத்தான் செய்கிறது ” மெல்லிய குரலில் என்றாலும் தெளிவாக உரைத்தாள் முகிலினி .

இப்போது முகிலினியை பற்றிய யதுநந்தனின் கரங்களின் வேகத்தில் வலியால் முகம் சுழித்தாள் அவள் .” என்னதாண்டி குழப்பம் உனக்கு ” அவளை உலுக்கினான் .

சொல்வதற்கில்லை என்பதாக முகம் திருப்புக் கொண்டாள் முகிலினி .

” சை ..ராட்சசி ..போடி ” அவளை முரட்டுத்தனமாக தள்ளினான் .அந்த வேகத்தில் அவள் கட்டிலில் போய் விழுந்தாள் முகிலினி .திமிர் பிடித்தவள் என்பது போல் முணுமுணுத்து விட்டு பால்கனிக்கு போய் நின்று கொண்டான் யதுநந்தன் .

போர்வையை மூடிக்கொண்டு சத்தமின்றி முதுகு குலுங்கினாள் முகிலினி .

மறுநாள் காலை அவள் எழும்போது யதுநந்தன் அங்கு இல்லை .அன்று மட்டுமன்றி தொடர்ந்தார் போல் ஒரு வாரம் போல் யதுநந்தன் அவள் கண்ணிலேயே படவில்லை .அவள் படுத்த பின் வருவதும் , எழும் முன் போய் விடுவதுமாக இருந்தான.

கணவனும் மனைவியுமாக எப்போதும் அவ்வளவாக கொஞ்சிக் கொள்வதில்லை என்றாலும் அவ்வப்போது வருடும் அவன் பார்வைகளும் , வசதி வாய்க்கும் போது கிடைக்கும் அவன் தீண்டல்களுமின்றி வாழ்க்கை கசந்தது முகிலினிக்கு .

சௌம்யாவிடம் அவள் கணவனை பற்றி கேட்ட நாளுக்கு மறுநாள் அவளே முகிலினியிடம் வந்தாள் .

” முகிலினி என் கணவரை பற்றி கேட்டாய் .நீ கேட்பதற்கு முன்பே நானாகவே கூறியிருக்க வேண்டும் .ஏனோ எனக்கு அப்போது தோணவில்லை ” என்றவள் சற்று தன்னையே நிதான படுத்திக்கொண்டாள் .மீண்டும் ஆரம்பித்த போது அவள் குரல் வெகுவாக கலங்கியிருந்தது .




” எங்கள் திருமணம் காதல் திருமணம். அவர் குணமாறன் நம் எஸ்டேட்டில் மேனேஜராக இருந்தார் .நான் அங்கே போன போது எங்கள் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்தோம் .

இந்த காதல் இருக்கிறதே அது ஒரு கொடும் வியாதி முகிலினி .பெற்றோர் , பெரியோர் என அனைவரையும் மறக்க வைத்துவிடும் .என் அம்மா , அப்பா எனக்கு எவ்வளவோ எடுத்து சொன்னார்கள் .நம் அந்தஸ்திற்கும் அவருக்கும் ஒத்து வராது என்று எவ்வளவோ சொன்னார்கள் .

அப்போதிருந்த காதல் வேகத்தில் நான் அவர்களை அலட்சியப்படுத்தினேன் .நீங்களாக கல்யாணம் பண்ணி வைக்கிறீர்களா ? நாங்களாக வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கவா ? என கேட்டேன் .இவ்வளவு நடந்த பின் நாம் ஒன்றும் செய்ய முடியாது என கூறி என் அப்பாவையும் , அம்மாவையும் நந்துவும் , பாட்டியும் சமாதானப்படுத்தி எங்கள் திருமணத்தை முடித்து வைத்தனர் .

அப்போது எங்கள் அத்தையும் ,மாமாவும் …அதுதான் நந்துவின் அம்மா , அப்பா .அவர்களும் எங்களுக்கு ரொம்ப சப்போர்ட் .அவர்களிருவரும் குணாவுக்கு ஒரு புதிய தொழிலே உருவாக்கி கொடுக்க தயாராக இருக்க , குணாவோ இருந்த வேலையையும் உதறினார் .

இதுவரை சரி .உறவென்று ஆன பின்னாலே இங்கேயே வேலை பார்ப்பது சரியாக இருக்காது என்றார் .மாமா வைத்து தருவதாக சொன்ன தொழிலையும் அது போன்று ஏதோ காரணம் சொல்லி ஒதுக்கினார் .

நம் காலில் நாம் நிற்கலாம் எனக் கூறி என்னை அழைத்துக் கொண்டு மும்பை பறந்தார் .அங்கே ஆறு மாதம் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தார் .பிறகு தொழில் ஆரம்பிப்பதாக கூறி இரண்டு பார்ட்னர்களை சேர்த்துக் கொண்டு ஏதோ தொழில் தொடங்கினார் .

அன்று ஆரம்பித்தது என் வாழ்வில் வினை .அவர் பார்ட்னர்கள் சரியில்லை .இவரை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று நன்றாக எனக்கு தெரிந்தது .இவரிடம் சொன்னால் அவர் நம்புவதில்லை .இவரிடமிருந்து பணத்தை சிறிது சிறிதாக கையாடல் பண்ணியது மட்டுமின்றி இவருக்கு குடிப்பழக்கத்தை வேறு அறிமுகப்படுத்தி விட்டனர் .

குணா அதன் பிறகு ஆளே மாறிவிட்டார் .எந்நேரமும் குடிதான் .நான் ஏதாவது கேட்டால் என்னை அடித்து உதைக்கவும் ஆரம்பித்தார் .சமயத்தில் சூடு கூட .இதோ பார”் என்ற சௌம்யா தன் சேலையை உயர்த்திக் காட்டினாள் .

முழங்காலில் ஆழமான தீக்காயம் .”அவர் செய்ததுதான் .அவர் அசந்திருந்த போது ஆளை விட்டால் போதுமென்று இங்கு ஓடி வந்து விட்டேன் . இப்போதும் போனில் அழைத்துக் கொண்டே இருக்கிறார் .ஆனால் மீண்டும் அவருடன் வாழ்வதை என்னால் கற்பனை பண்ண கூட முடியவில்லை ” மெல்லிய விசும்பலுடன் தன் கதையை சொல்லி முடித்தாள் சௌம்யா .

முகிலினிக்கு சௌம்யாவின் கதை பரிதாபமாக இருந்தது .” சாரி அன்று உங்களிடம கொஞ்சம் கோபமாக பேசிவிட்டேன் .” மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் . கண்களை துடைத்தபடி அகன்றாள் சௌம்யா .

மறுநாள் கோவிலில் சௌம்யாவுக்காகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டாள் முகிலினி .இப்போது கீர்த்திவாசன் கோவிலுக்கு வருவதில்லை .எனவே முகிலினியால் சுதந்திரமாக மூச்சு விட முடிந்தது .

அன்று மரக்கிளையிலிருந்து அவன் தன்னை காப்பாற்றியதையும் , விபத்திற்கு தன் குடும்பம் காரணமில்லை என்றும் கீர்த்திவாசன் சொன்னதையும் யோசித்து பார்த்தபடி வீட்டினுள் நுழைந்தாள் .

” வணக்கம் அண்ணி ” என்ற ரகசிய குரலுடன் கை கூப்பியபடி அவர்கள் வீட்டு வரவேற்பறை சோபாவிலிருந்து எழுந்தான் கீர்த்திவாசன் .

கண்களை விரித்து பார்த்தாள் முகிலினி .சிறிது கண்களை தேய்த்து விட்டுக் கொண்டாள் .இல்லை கனவில்லை .நிஜம்தான் .இதோ அவர்கள் குடும்ப எதிரி அவர்கள் வீட்டு கூடத்தில்தான் இருக்கிறான் .

” சிங்கத்தை  சந்திக்க தைரியமாக குகைக்கே  வந்து விட்டேன் பார்த்தீர்களா ? ” பெருமையுடன் அணிந்திருந்த டிஷர்ட்டில் இல்லாத காலரை உயர்த்திக் கொண்டான் .

” எப்படி இவனால் இந்த வீட்டினுள் வர முடிந்தது ? ” ஆச்சரியத்துடன் பார்த்தாள் .இயல்பாக அவன் அமர்ந்திருப்பது போல் தோன்றினாலும்  தீவிர கண்காணிப்பில் இருக்கிறானென நன்கு தெரிந்தது .சுற்றிலும் ஆங்காங்கே இல்லாத வேலையை பார்ப்பது போல் நின்றபடி நான்கு பேர் இருந்தனர் .

அந்த ஹாலின் மூலையில் அமர்ந்தபடி லேப்டாப்பை உருட்டியபடி ஒரு கண்ணை இவன் மேல் பதித்திருந்தாள் காருண்யா .

” என்னப்பா என்ன குடிக்கிறாய் ? காபியா ? கூல்ட்ரிங்ஸா ? ” என்றபடி உள்ளே நுழைந்தார் பாட்டியம்மா .முகிலினி கீர்த்திவாசனுடன் பேசியபடி நிற்பதை யோசனையுடன் பார்த்தார் .

” அண்ணன் எங்கே என கேட்டார் பாட்டி ?” பெரியவரின் பார்வைக்கு பதிலளித்தாள் முகிலினி .

” என்ன பாட்டி வெறும் காப்பியா ? நான் சாப்பிட்டு விட்டு போகலாமென்றல்லவா நினைத்திருக்கிறேன் .” பெரிதாக நீட்டி முழங்கினான் கீர்த்திவாசன் .

” முதலில் என் பேரன் முன்  நின்று நாலு வார்த்தை சேர்ந்தாற் போல் பேச முடிகிறதா ? என்று பார் .அப்புறம் சாப்பாட்டை பார்க்கலாம் ” பாட்டியம்மாவின் குரலில் கேலி இருந்தது .

சட்டென இறங்கி விட்ட குரலில் ” பாட்டி நானே கை நடுக்கத்தை குறைக்க இதோ பாக்கெட்டினுள் கையை விட்டுக் கொண்டிருக்கிறேன் .நீங்கள் வேறு ஏன் பாட்டி பீதியை கிளப்பி விடுகிறீர்கள் ” என்றவனின் குரலில் உண்மையாகவே பயம் இருந்தது .

இவன் கொஞ்சம் முன்னால் கெத்தாக காலரை உயர்த்தியது என்ன ? இப்போது நடுங்குவது என்ன ? கிண்டலாக அவனை பார்த்தாள் முகிலினி .மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் யதுநந்தன் . இவனை பார்த்தால் பயமுறுத்துவது போலவா இருக்கிறது .கணவனின் கம்பீரத்தை  கண்களில் பெருமையுடன் ரசித்தாள் முகிலினி .

” ஆனால் அண்ணனை இப்படி தூரமாக பார்த்தால் பயமுறுத்துவது போல் தோன்றவில்லையே பாட்டி .மிடுக்கான அரசனை போல் நடந்து வருகிறார் .அட… அட …என்ன நடை பாருங்களேன் .” என்றான் கீர்த்திவாசன் .




“வேண்டுமானால் இது விபரம் உன் அண்ணனிடமே கேட்டு சொல்கிறேனே ” என்றார் பாட்டியம்மா .

” பாட்டீ ….உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி ?” பற்களை கடித்தான் கீர்த்திவாசன் .

” என்ன உனக்கு உபசாரமெல்லாம் முடிந்து விட்டதல்லவா ?  வந்தாயானால் பேசிவிடலாம் என்றபடி ஆபீஸ் அறையை நோக்கி நடந்தான் யதுநந்தன் .

அப்போதுதான் முத்தரசி கொண்டு வந்து வைத்த காபியை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றான் கீர்த்திவாசன் .

” என்ன ? ” ஆபீஸ் அறை கைபிடியில் கை வைத்தபடி திரும்பி பார்த்த யதுநந்தனின் குரலில் கோபம் இருந்தது .

” இ..இதோ வந்து விட்டேன் அண்ணா ” விழுந்தடித்து பதில் கொடுத்தான் கீர்த்திவாசன் .யதுநந்தன் உள்ளே. சென்றதும் ..” பாட்டி நானும் உங்களுக்கு பேரன்தானே , அதனால் நீங்களும் என்னுடன் வருவீர்களாம் “, என்று பாட்டியம்மாவின் கையை பிடித்து இழுத்தான் .

“ஏய் என்னை விடுடா .நீதான் ரொம்ப தைரியசாலி ஆச்சே .நீயே உன் அண்ணனுடன் போய் பேசு ” என்று பிகு பண்ணிக் கொண்டிருந்தார் பாட்டி .

வாயை கைகளால் மூடிக் கொண்டு தன் சிரிப்பை மறைத்துக் கொண்டிருந்த முகிலினியை கண்டதும் , அவளையும் இழுத்துக் கொண்டு உள்ளே செல்லலாமா என கீர்த்திவாசன் யோசிப்பது தெளிவாக தெரிந்தது .

அவன் ” அண்ணி ….” என ஆரம்பிக்கவும் , ” எனக்கு ஒரு வேலை இருக்கிறதே ” என்றுவிட்டு அவசரமாக உள்ளே திரும்பி நடந்தாள் முகிலினி .

உள்ளே மாடிப்படி வளைவில் நின்றபடி கீழே நடப்பதை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் சௌம்யா .

முகிலினியிடம் ” முகிலினி என்ன நடக்கிறது இங்கே ? நம் குடும்பம் அழிவதற்கு காரணமே இவனும் , இவன் குடும்பமும் தானே .இவனால்தானே எங்கள் அப்பாவை இழந்து , அம்மா கண் பார்வையை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .அவனை உள்ளே அழைத்து வந்து உபச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்களே ” ஆரம்பிக்கும் போது கோபமாக ஆரம்பித்தாலும் முடிக்கும் போது அழுகையில் முடித்தாள் சௌம்யா .

அவளை பரிதாபத்துடன் நோக்கினாள் முகிலினி .




What’s your Reaction?
+1
26
+1
13
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!