Big Boss Tamil 7

Bigg Boss Tamil 7 : ‘மஞ்சள் கார்டு வார்னிங்’ மிரட்டிய கமல்

இந்த சீசனின் முதல் எலிமினேஷனில் ஒரு ட்விஸ்ட்டாக ‘அனன்யா’ வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால் ஆக்டிவ்வாக இல்லாத அக்ஷயா, பூர்ணிமா, ஐஷூ போன்றவர்கள் போட்டியில் அப்படியே நீடிக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டு வரலாற்றின் படி, சீனியர் கேரக்ட்டர்களை முதலில் பலி தருவது வழக்கம். வீட்டில் உள்ளவர்களும் ‘பவா செல்லத்துரைதான்’ வெளியேறுவார் என்று பெரும்பான்மையாகக் கணித்தார்கள். அந்தக் கணிப்பு பொய்யாகப் போனது.

கால்பந்து போட்டியின் விதி மாதிரி, வன்முறைப் பேச்சிற்கு எதிராக மஞ்சள் அட்டையை கமல் அறிமுகப்படுத்தியது நல்ல விஷயம். ஆனால் பிக் பாஸ் வீடுதான் மோதலுக்கான சூழலையும் ஏற்படுத்துகிறது. அதுவேதான் வன்முறைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கிறது. ‘இவங்களே பாம் வைப்பாங்களாம், அப்புறம் இவங்களே எடுப்பாங்களாம்’ என்பது மாதிரி.

ஒருவகையில் தேசமும் பிக் பாஸ் வீடு போலத்தான். மக்களுக்குள் மோதலை ஏற்படுத்தி லாபம் அடைய பல பிரிவினைவாத சக்திகளும் அது சார்ந்த அரசியலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். பொது மக்கள்தான் இந்தச் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு சகிப்புத்தன்மையுடன் ஒற்றுமையாக இருந்து ‘எலிமினேட்’ ஆகாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.




பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 7 EP 8)

‘உலக மார்பக புற்றுநோய்’ மாதம் என்பதால் அது சார்ந்த விழிப்புணர்வு சொற்களுடன் மேடைக்கு வந்தார் கமல். “நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சங்கோஜப்படாமல் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு புற்றுநோய் என்றால் அது உளவியல் ரீதியில் வீட்டில் உள்ள அனைவரையும் பாதிக்கும்” என்று சொன்னவர், கல்வி தொடர்பான விவாதத்தில் விடுபட்ட சில விஷயங்களைச் சொன்னார்.

“கல்வியறிவு இல்லாத தலைவர்கள்தான், கல்வி என்பது மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அவசியமான விஷயம் என்பதை உணர்ந்திருந்தார்கள். அதற்காகவே மதிய உணவுத் திட்டம் போன்றவைக் கொண்டு வரப்பட்டன. இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர ஊதியம் தரப்பட வேண்டும் என்று நான் சொன்னபோது கிண்டலடித்தார்கள். ‘எனக்கு படிப்பே வரலைன்னு சொல்றவங்க Skill Set Development’ மூலம் முன்னுக்கு வரலாம். அதுக்கு நானே உதாரணம். கல்வி மாதிரியே கலையும் கஷ்டமான விஷயம்தான். ஈஸி கிடையாது. அது வராதவங்களும் இருக்காங்க. இரண்டுமே முக்கியம். அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேற வேண்டும்” என்கிற முன்னுரைக்குப் பிறகு அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.




எவரும் எழுப்பாத உரிமைக்குரல்

புதிய கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சரவணனுக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு கடந்த வாரத்தில் கேப்டனாகச் செயல்பட்ட விஜய்யின் பங்களிப்பு எப்படி இருந்தது என்று விசாரித்தார். “ஏதாவது செஞ்சு ரெண்டு வீடும் இணையற மாதிரி பண்ணியிருக்கலாம். அந்த வாய்ப்பை கேப்டன் தவற விட்டுட்டார்” என்றார் பிரதீப். (பிக் பாஸ் அப்படியெல்லாம் இணைய விட்டு விடுவாரா? அதுக்காகவா ரூம் போட்டு யோசித்து இவ்வளவு ஐடியாவை யோசித்து வைத்திருப்பது!). “‘நாளைக்கான உணவைப் பத்தி நாளைக்கு பார்த்துக்கலாம். இன்னிக்கு பசியைப் போக்குவோம்’ன்னு தம்பி சொல்லுச்சு… தங்கக் கம்பி” என்று எக்ஸ்ட்ரா சப்பாத்தி கிடைத்த மகிழ்ச்சியில் கேப்டனைப் பாராட்டினார் பவா செல்லத்துரை.

“விஜய் கிட்ட கோபம் ஒரு பிரச்னையா இருக்கு. மாற்றுக்கருத்துக்களை உடனே செயல்படுத்தறதில்லை” என்று மெல்லிய ஆட்சேபத்தை முன்வைத்தார் பூர்ணிமா. மற்றபடி இதர போட்டியாளர்கள் அனைவரும், ‘விஜயகாந்த்தையும் தோனியையும் கலந்து செய்த கேப்டன்தான் எங்கள் கேப்டன்’ என்பது போலப் புகழாரம் சூட்டினார்கள்.

‘வீட்டில் தனக்கோ மற்றவருக்கோ அநீதி ஏற்பட்டதாக உணர்ந்தால் கையுயர்த்தி உரிமைக்குரல் எழுப்பலாம். அதைத் தீர்த்து வைத்த பிறகே நிகழ்ச்சி ஆரம்பிக்கும்’ என்று ஒரு அரிய வாய்ப்பு பிக் பாஸால் தரப்பட்டது. ஆனால் வீட்டில் அத்தனை களேபரம் நடந்தும் யாரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.




இந்த விளையாட்டை சரியா புரிஞ்சுட்டு இருக்கீங்களா?’

“இந்த முறை ரெண்டு வீடு இருக்கு. ரெண்டு பாஸ் இருக்காங்க… இந்த விளையாட்டைப் புரிஞ்சுக்கிட்டீங்களா…” என்று அடுத்த தலைப்பை ஆரம்பித்தார் கமல். ‘சமையல் மெனு பற்றிய கலந்துரையாடல் நடக்கவில்லை’ என்று பிரதீப் ஆரம்பித்து வைத்த குற்றச்சாட்டை கேப்டன் விஜய் மறுத்தார். “இங்க இருந்து அந்த வீட்டுக்கு ரெண்டு பேர் போனாங்க. அது பெரிய வீட்டிற்குப் பாதகமாக அமையும்ன்னு பிக் பாஸ் சொன்னாரு… கேப்டன் அதுக்கு ஏதாவது செய்வாருன்னு பார்த்தேன் செய்யலை. சில விஷயங்களைச் சொன்னா என்னையும் அந்த வீட்டிற்கு அனுப்பிடுவாங்க. அப்படி அனுப்பினா வெச்சு செய்வேன். அனுப்பலைன்னா செய்ய மாட்டேன்” என்று பிரதீப் பேசிய பாணியைப் பார்த்த கமலால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நீங்க அந்த வீட்டிற்குப் போயும் உங்க வேலையைக் காட்டத்தானே போறீங்க” என்று நையாண்டி செய்தாலும் பிரதீப் இந்த ஆட்டத்தை முனைப்போடு ஆடும் பாணி கமலைக் கவர்ந்திருக்கிறது. எனவே “மத்தவங்களும் அப்படித்தான் ஆடணும்னு சொல்வேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று சூசகமான டிப்ஸைத் தந்தார். பிரதீப் சில சமயங்களில் கோக்குமாக்காக நடந்தாலும் ‘இந்தப் பையன் கிட்ட என்னமோ இருக்கு’ என்று பார்வையாளர்களையும் கவர்ந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய்யின் வன்முறைப் பேச்சிற்குத் தரப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை

அடுத்ததாக விஜய்யின் வன்முறைப் பேச்சு காரணமாக அவருக்கு ஒரு மஞ்சள் அட்டையை (Strike 1) தந்து எச்சரித்த கமல், “வன்முறையை எந்த வடிவத்தில் யார் செய்தாலும் அவர்களுக்கு இது பொருந்தும். மூன்று முறை இந்த அட்டையை வாங்கியவர்கள், இங்க மேடைக்கு வந்து ஜாலியா என் கூட பேசிட்டுப் போயிடலாம்” என்றது காமெடியாகச் சொல்லப்பட்ட தீவிரமான வார்னிங். “வெளில என் பசங்க இருக்காங்க. அடிச்சுடுவாங்கன்னுல்லாம் சொல்றீங்க… வெளில வா பார்த்துக்கறேன்ன்னு சொல்றதுக்கு இது என்ன …………ஆ?” என்று கமல் கடைசியில் சொன்ன வார்த்தை வில்லங்கமாக இருந்ததால் முன்ஜாக்கிரதையாக மியூட் செய்தார் பிக் பாஸ். ஆனால் அது அப்படியொன்றும் மோசமான கிண்டல் இல்லை.




பிரதீப்பிற்கு தந்த மிரட்டல் பற்றி விளக்கமளித்த விஜய், சிலவற்றை மறுக்க முயல, “அய்யோ சார்… இங்க குறும்படம்ன்னு ஒண்ணு இருக்கு சார்…” என்று பாவனையான திகைப்புடன் கமல் சொன்னது சுவாரஸ்யமான காட்சி. “கடவுளே வந்து சொன்னாலும் கேட்கமாட்டேன்னு சொல்வறங்களும் மேடைக்கு வந்துடலாம்” என்றது பவாவிற்கு வைக்கப்பட்ட சூசுகமான வார்னிங் போல. கமல் பிரேக் விட்டுச் சென்றதும் “எப்படியும் இங்கதான் வரப்போறோம்… எப்படி இருக்குன்னு பார்த்து வெச்சுப்போம்” என்பது போல் எல்லைத் தாண்டி சின்ன வீட்டிற்குச் சென்று சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார் பிரதீப். (பய புள்ள அடங்க மாட்டார் போல!).

விஜய்க்குத் தரப்பட்ட மஞ்சள் அட்டை வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. “விஜய்க்கு முன்னாடி ரெண்டு பேருக்கு அட்டை தந்திருக்கணும். அவ்வளவு வன்முறையா பேசினாங்க” என்று மாயாவும் பூர்ணிமாவும் பிரேக்கில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இதன் விளைவு சில நிமிடங்களில் தெரிந்தது. பிரேக் முடித்து திரும்பிய கமல், “பிக் பாஸிற்கு பாம்புக் காது. நீங்க பேசினது கேட்டுடுச்சு… என்னன்னு இப்ப சொல்லுங்க” என்று ஜாலியாக விசாரிக்க, வன்முறைப் பேச்சை ஏற்கெனவே பேசிய பிரதீப் மற்றும் விசித்ரா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்.

‘சாவடிக்கறாங்க… சாவடிச்சிடுவேன்.’ – புரியாமல் பேசிய பிரதீப்

இதில் பிரதீப் விவகாரம் புரிந்து கொள்ளக்கூடியது. ‘சாவடிச்சிடுவேன். என்னை சாவடிச்சிடுவாங்க’ என்று அவர் அடிக்கடி சொல்வதெல்லாம் அதன் அர்த்தமில்லாமல் அல்லது வார்த்தையின் கனம் தெரியாமல் உபயோகிக்கும் அலட்சியம். இது மற்றவர்களை நிச்சயம் எரிச்சல்படுத்தலாம். ஆனால் கமல் சொன்னது போல் இது ‘அறியாமையின் பலவீனம்’.




இதற்காக ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத் தொடர்பான ஒரு பழைய சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார் கமல். “வேலை செய்யும் போது ஏற்படும் டென்ஷனில் ‘இதைப் பண்ணலையா… போய் சாவு’ என்பது மாதிரியான வசவை அவர் தனது தம்பியை நோக்கி அடிக்கடி உபயோகிப்பாராம். ஒருமுறை விபத்தில் சிக்கி உண்மையாகவே அவரது தம்பி இறந்து விட்டார். அதன் பிறகு அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. சொந்தமாக சோகம் நிகழ்ந்த பிறகுதான் பலருக்கு அடுத்தவரின் வலி புரியும்” என்று கமல் விவரித்தது அருமை. ஜெயகாந்தன் எழுதிய ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ என்கிற சிறுகதை, இதே கருத்தைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.

கமலின் விளக்கத்திற்குப் பிறகு தனது தவற்றை உணர்ந்த பிரதீப், கை கூப்பி அதை மனதார ஏற்றுக் கொண்டார். இதுதான் ஒரு உபதேசத்தைச் சரியாகக் கடத்தும் விதம். மாறாக பிரதீப்பை நேரடியாக கண்டித்திருந்தால் அவர் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்காது. “வீட்டிற்குள் அனுப்பும் போதே ‘கேப்டன் பதவியைப் பிடுங்கணும்னு கொம்பு சீவி அனுப்பிச்சிட்டாங்க… என்ன சார் பண்றது?” என்று சிரித்தார் பிரதீப். ‘வீடியோ கேம் வன்முறை வேற. நிஜ வன்முறை வேற’ என்று சரியான வார்த்தைகளில் இதை உணர்த்தினார் கமல்.

காரசாரமான சொற்களால் பிரதீப்பை விசித்ரா எச்சரித்ததிலும் வன்முறை இருந்தது. பிரதீப் ஏற்படுத்திய எரிச்சல் காரணமாக விசித்ரா அப்படிச் சொல்லியிருந்தாலும் ஏறத்தாழ விஜய் செய்த வன்முறைப் பேச்சிற்கு நிகரானது அது. அவருக்கும் மஞ்சள் அட்டை தந்து எச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். “எல்லோரையும் வெளில அனுப்பிச்சுட்டா என்ன பண்றது?” என்று இதைச் சமாளித்தார் கமல். அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பிரதீப், விசித்ராவுடன் இணக்கமாகி விட்டதால் பிரச்னை பெரிதாகவில்லை. ஆனால் விஜய்க்கு மட்டும் ஏன் தரப்பட்டது என்றால் ‘ஒருவரின் சோகத்தைப் பற்றி கிண்டலடித்து பேசியது, கூட நின்று இருவர் சிரித்தது’ என்கிற காரணத்தைச் சொன்ன கமல், ‘இது விஜய்க்கு தெரியும்’ என்று பூடகமாகச் சொல்லி முடித்துக் கொண்டார். (என்னவா இருக்கும்?!)

‘பாலு மகேந்திரா படத்துல மேக்கப் இருக்காது’

அடுத்ததாக டாஸ்க்கின் போது பிரதீப் ஆடிய போங்காட்டம் பற்றியது. ‘டாஸ்க்கில் தோற்றால் மேக்கப் பொருள்களை பிக் பாஸ் பறித்துக் கொள்வார். இதன் மூலம் பெண்கள் மோசமாகத் தெரிந்து வாக்குகள் குறையும்’ என்கிற பிரதீப்பின் அரிய சிந்தனை பற்றியது. இயற்கையான அழகு குறித்து சிறப்பான விளக்கம் அளித்த கமல், “பாலுமகேந்திரா தன் படங்களில் மேக்கப் அணியவே சம்மதிக்க மாட்டாரு. ஆனா அவர் படங்களில்தான் பெண்கள் மிக அழகாக இருந்தார்கள்” என்று சொன்ன உதாரணம் அருமையானது.

பிரதீப்பின் அபத்தமான ஸ்ட்ராட்டஜிக்கு எதிரான கலகமாக மாயா உள்ளிட்ட பெண்கள் தங்களின் ஒப்பனையைக் கலைத்துக் கொண்டது சிறந்த எதிர்வினை. ஆனால் ஏனோ கமல் அதைப் பாராட்டவில்லை.. மாறாக ஒப்பனையைக் கலைக்காத ஜோவிகாவை தனியாகக் குறிப்பிட்டு பாராட்டினார். ‘நாமினேஷன்ல இருக்கறவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க’ என்று எலிமினேஷனுக்கான சஸ்பென்ஸைக் கிளப்பி விட்டு விட்டு பிரேக்கில் சென்றார் கமல்.

கமலின் தலை மறைந்ததும் விசித்ராவிற்கும் மாயாவிற்கும் இடையில் வார்த்தைப் போர் நடந்தது. “என்னைப் பற்றிய புகாரை அப்பவே சொல்லியிருக்கலாமே… ஏன் பிரேக்ல வம்பு பேசி, அது மைக்கில் கேட்டு… அப்புறமா பொதுவில் சொல்றீங்க? என்ன நடந்துதுன்னு உங்களுக்கு முழுசா தெரியுமா?” என்று மாயா மற்றும் பூர்ணிமாவிடம் விசித்ரா கோபமாகக் கேள்விகள் எழுப்ப “நாங்க வம்பு பேசலை. டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். நிச்சயம் அதைப் பற்றி ஆட்சேபம் எழுப்பியிருப்போம்” என்று மாயா விளக்கம் அளித்தாலும் இருவருக்குமான சூடு அடங்கவில்லை.

பிரதீப்பின் பேச்சு விசித்ராவின் எரிச்சலைத் தூண்டிப் பேச வைத்திருக்கலாம். ஆனால் அதற்காக அவர் அத்தனை வெறுப்பைக் கொட்டியிருக்க வேண்டியதில்லை. எனில் விஜய் செய்ததும் நியாயம் என்றாகி விடும். இரு தனிநபர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையால் வன்முறை வெடிக்கும் போது அது ஒட்டுமொத்த வீட்டையும்தான் பாதிக்கும். யாராவது அதை நிச்சயம் ஆட்சேபிப்பார்கள். ‘இது எங்களுக்குள்ள நடந்தது… உனக்கு என்ன முழுசா தெரியும்?’ என்று விசித்ராவைப் போல் நியாயம் கற்பிக்க முடியாது.

முதல் எலிமினேஷனில் நடந்த ட்விஸ்ட் – தப்பித்த பவா

பிரேக் முடித்து திரும்பிய கமல், “முதல் வாரம் எலிமினேஷன் இருக்காதோன்னு நெனக்காதீங்க. யாரையும் சேவ் பண்ணலையே… ரெண்டு வீடு, ஒருவேளை ரெண்டு எவிக்ஷன் இருக்குமோ… எந்தத் திக்குல போகப் போறாங்கன்னு தெரியலையே… திக்கு திக்குன்னு இருக்குதா” என்று சஸ்பென்ஸை சுவாரசியமாக ஆரம்பித்தார்.

‘யாரு வெளில போவாங்கன்னு நெனக்கறீங்க?’ என்று யூக விளையாட்டை கமல் ஆரம்பித்த போது பவாவைக் குறிப்பிட்டு பிரதீப் பேசியதும், “இவன் இம்சை தாங்கலை’ என்று பதிலுக்கு பவா ஜாலியாகச் சொன்னதும் சுவாரசியமான ஆட்டமாக இருந்தது. இதில் பெரும்பான்மையான வாக்குகள் ‘பவா’ பக்கம் விழுந்தன. அவருடைய வயதும் உடல்நிலையும் காரணமாகச் சொல்லப்பட்டன. ஆனால் பவா இதை ரசிக்கவில்லை. இதில் விஷ்ணு சொன்ன காரணம் ரகளையாக இருந்தது. “பவா வெளில போறார்னா… அதுக்கு பிரதீப்தான் காரணம். பாசிட்டிவ்வான கதையைக் கேட்டுட்டு கடைசில அநாவசியமா அழுவறாரு. எச்சில் புகாரைத் தனியா சொல்லியிருக்கலாம். கட்டுச்சோற்றை கூட்டத்தில் அவுத்துட்டாரு” என்று விஷ்ணு சொன்னதைக் கேட்டு அடக்க முடியாமல் சிரித்தார் கமல். “பவாவிற்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அவராக நிச்சயம் இருக்க முடியாது” என்று மாயா பரவசமாகச் சொன்ன யூகம் ஒருவகையில் பலித்துவிட்டது.

“எனக்கு இந்த கேம் பத்திலாம் தெரியாது. வெளில போறதா இருந்தாலும் பிரச்னையில்லை” என்று சுருக்கமாகச் சொல்லி அமர்ந்து விட்டார் பவா. ஆனால் எவிக்ஷன் வரிசையில் இருந்த எவருமே அனன்யாவின் பெயரைச் சொல்லவில்லை. ஆனால் கமல் அறிவித்த கார்டில் அனன்யாவின் பெயர் இருந்தது. ஒரு எதிர்பார்க்காத ட்விஸ்ட். முகத்தில் அதிர்ச்சி தெரிந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாத அனன்யா, ‘என்ன பண்றது?’ என்பது போல் தன்னைத் தேற்றிக் கொண்டு கிளம்பினார். மற்றவர்களும் ‘என்ன பண்றது?’ என்கிற பாவனையில் வழியனுப்பி வைத்தார்கள்.




புத்தகப் பரிந்துரை – இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு

பிரேக் முடிந்து மேடைக்கு வந்த கமல், முதல் வாரத்தின் புத்தகப் பரிந்துரையைச் செய்தார். ராமச்சந்திர குஹா எழுதிய ‘INDIA AFTER GANDHI’ என்கிற நூல். “இது காந்தியைப் பற்றியதல்ல. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு காந்தி. ஆனால் அவருக்குப் பிறகு இந்தத் தேசம் எவ்வாறெல்லாம் முன்னேறியது… துண்டு துண்டுகளாக இருந்த தேசம் எப்படி ஒன்றிணைக்கப்பட்டது… முதல் பொதுத் தோ்தல். தானிய விருத்தி… காஷ்மீர் பிரச்னை… என்று காந்திக்குப் பிறகு நடந்த முக்கியமான அரசியல் சம்பவங்கள் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பயணம் முன்னோக்கி இருக்க வேண்டும். தமிழிலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தியா போக வேண்டிய பாதையைத் தலைவர்கள் நிர்ணயிப்பார்கள் என்று காத்திருக்கக்கூடாது. மக்கள் நிர்ணயிக்க வேண்டும்” என்றெல்லாம் பேசி நூல் அறிமுகத்தைத் தந்தது சிறப்பு.

பரிதாபமான முகத்துடன் மேடைக்கு வந்த அனன்யா “எதிர்பார்க்கலை… என் மொழி, இல்ல டாட்டூ காரணமா இருக்கலாம்” என்று ஆரம்பிக்க… “நோ… நோ… அதெல்லாம் இல்ல… இன்னும் ரெண்டு கூட குத்திக்கங்க… நான் சில பேரை வார்ன் பண்ணியே அனுப்பிச்சேன். இந்த சீசன் புதுசு… முதல் லிமிடெட் ஓவர்லயே சிக்ஸர் அடிச்சுடணும்… அப்புறமா பார்த்துக்கலாம்… அப்சர்வ் பண்ணலாம்ன்னு இருந்திடக்கூடாது.. எனிவே இந்த மேடை உங்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்கிறது” என்று அனன்யாவை வாழ்த்தி விடை தந்த பிறகு அவரும் கிளம்பினார்.

பிக் பாஸிற்கு யார் மஞ்சள் அட்டைத் தருவது?

சின்ன பிக் பாஸ் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நபர்களை கேப்டன் தேர்வு செய்ய வேண்டிய சடங்கு ஆரம்பித்தது. இது கடந்த முறையைப் போல் எளிதாக இல்லை. இதில் வில்லங்கமானதொரு அம்சத்தை இணைத்தார் பிக் பாஸ். “போட்டியாளர்கள் மறைக்க விரும்பி ஆனால் வெளிப்பட்ட சில குணாதிசயங்கள் இருக்கும். அந்தக் குணாதிசயங்கள் சொல்லப்படும் போது பத்து நொடிகளுக்குள் பொருத்தமான நபரை காரணங்களுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் கூடுதல் நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று பிக் பாஸ் சொன்ன விதிகள் எல்லாம் ஓகே. ஆனால் குணாதிசயங்களின் தலைப்புகள் வில்லங்கமாக, அவமதிப்பு செய்வது போல் அமைந்திருந்தது கண்டிக்கத்தக்கது. இதற்கெல்லாம் யார் மஞ்சள் அட்டைத் தருவது?




சோம்பேறி, தொட்டாற்சிணுங்கி, சுவாரசியமற்ற நபர், அறுவை, சோர்வான நபர், சுயபுத்தி இல்லாதவர் என்றெல்லாம் அபத்தமான தலைப்புகள் இருந்தன. தன்னுடைய பெயருக்கான காரணம் சொல்லப்பட்ட போது கோபமும் எரிச்சலும் கலந்த முகபாவத்தைத் தந்தார் ஐஷூ. பெயர்கள் மற்றும் காரணங்களை அறிவித்த சரவணனையும் அதிகம் குற்றம் சொல்ல முடியாது. பிக் பாஸ் அவருக்குத் தந்த நெருக்கடி அப்படி. ஒரு காரணத்தைச் சொல்லத் தாமதம் ஏற்பட்டதால் கூடுதல் நபராக, தன் சாய்ஸாக பிரதீப்பைத் தேர்ந்தெடுத்தார் சரவணன். (எனில் பிரதீப்பின் வில்லங்கமான ஆட்டத்தில் இன்னமும் களைகட்டும் போலிருக்கிறது).

சரவணன் செய்த தேர்வின் படி இந்த வாரம் சின்ன பிக் பாஸ் வீட்டிற்குச் செல்லும் துரதிர்ஷ்டசாலிகள்: பவா, சுரேஷ், விஜய், மாயா, விஷ்ணு, ஐஷூ, பிரதீப் ஆகிய ஏழு நபர்கள். இதில் பவாவும் ஐஷூவும் ஏற்கெனவே அங்கிருந்தவர்கள்தான். ஆனால் மீண்டும் அதே தண்டனை கிடைத்திருக்கிறது.

இதற்கிடையே பவா செல்லத்துரை அவராகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. உண்மை என்னவென்று நாளை தெரிந்துவிடும். இரண்டாவது வாரத்தில் என்னென்ன பிரச்னைகள், விவாதங்கள் எழும் என்பதைக் காத்திருந்து பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!