Bigg Boss Tamil 7 Cinema Entertainment

Bigg Boss Tamil 7: நேற்று நடந்த சுவாரஸ்யம் :`அந்தப் பேரோட ஜெயிப்பேன்’ – ஜோவிகாவின் உறுதி

தினசரி எபிசோடுகளில் காட்டப்படும் ஒரு துளி காட்சியும் வீணானதல்ல. கடல் நீர் போல் திரண்டிருக்கும் 24 மணி நேர நிகழ்வுகளில் இருந்து அதன் சாரத்தை 45 நிமிடங்களுக்கு பிழிந்து பிக் பாஸ் எடிட்டிங் டீம் சமைத்துத் தருகிறது. எனவே அதன் ஒவ்வொரு துளியும் முக்கியமானது என்பதைக் காட்சிகளை முன்னே பின்னே பொருத்தி யோசித்தால் புரியும்.

‘சப்பாத்தி வேணுமா..எடுத்துட்டு வரட்டுமா?’ என்று நிக்சனிடம் பரிவாக கேட்டுக் கொண்டிருந்தார் ரவீனா. கட் செய்தால் அடுத்த காட்சியில் மணியின் காதில் பயங்கரமான புகை. மணி ‘பொசசிவ்’ மன்னனாக இருக்கிறாரோ? `அது எந்த ரிலேஷன்ஷிப்பாக வேண்டுமானால் இருக்கட்டும். யார் கூடயும் இங்க எமோஷனலா கனெக்ட் ஆகாத. நானும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன்’ என்று ரவீனாவிற்கு எச்சரிக்கை தந்தார் மணி. நல்ல விஷயம்தான். மணியிடம்கூட உணர்ச்சிரீதியான பிணைப்பை ரவீனா வைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது. பெரும்பாலான இளைஞர்களின் மனதே இப்படித்தான். தன்னுடைய காதல் ஏற்கப்படுவதற்கு முன்னால் ஆயிரம் பல்டிகள் அடித்து பெண்ணிடம் கெஞ்சுவார்கள். லவ் செட் ஆன பிறகு ‘இங்க போகாத.. அப்படி இருக்காத’ என்று ஆயிரம் கட்டளைகள் இடுவார்கள். பிராப்பர்ட்டியை காப்பாற்றிக் கொள்வது மாதிரி கண்காணிப்பு காமிராவாக மாறி விடுவார்கள்




‘ஜெஸ்ஸி.. உனக்கு கொசு கடிச்சா எனக்கு கடிச்ச மாதிரி. ஜாக்கிரதையா இரு. நிம்மதியா தூங்கு’ என்று பூர்ணிமாவுடன் ரொமான்ஸ் செய்ய முயன்று கொண்டிருந்தார் சுரேஷ். ஆனால் பூர்ணிமா புத்திசாலி. ‘அண்ணா’ என்று அவரை அழைத்து விட்டு ‘இந்த மணி – ரவீனா முன்னாடி மட்டும் என்னைக் கலாய்க்காதீங்க. அவங்க சிரிக்கறதைப் பார்த்தாலே எனக்கு காண்டாவுது’ என்றார். இது இன்னொருவிதமான புகை.

‘இங்க வந்து பேசும் போது மாயா நல்லாத்தான் பேசறா… அந்தப் பக்கம் போனவுடனே ஆளே மாறிடறா’ என்று மணியிடம் சிணுங்கிக் கொண்டிருந்தார் ரவீனா. ‘உனக்குப் பிடிக்கலையா.. சைலண்ட்டா எழுந்து வந்துடு. அவ்வளவுதான் சொல்வேன்’ என்று இன்னொரு கேட்டை சாத்திக் கொண்டிருந்தார் மணி.




நாள் 16 விடிந்தது. ‘வேக் அப்’ பாடல் காட்சியைக் காணவில்லை. எம்பி3 பிளேயர் ரிப்பேர் போலிருக்கிறது. `ஒருத்தனை தூக்கி அடிச்சு அப்படியே சுவத்துல நிறுத்தற மாதிரி கனவு வந்தது’ என்று மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நிக்சன். அந்த ‘ஒருத்தன்’ மணிதானோ?!

வீட்டின் நிகழ்வுகளை வைத்து ஒவ்வொருவருக்கும் ‘ராசி பலன்’ சொல்ல வேண்டும் என்று சுரேஷிற்கு டாஸ்க் தந்தார் பிக் பாஸ். ஜோசியர் மாதிரியான ‘லுக்’கை சிரமப்பட்டு உருவாக்கிக்கொண்டு சபையில் வந்து நின்றார். `பெரிய வீட்டாருக்கு மட்டும்தான் இந்த ஆரூடம். எனவே எதிர் வீட்டிற்கு வணக்கம் இல்லை’ என்று ஆரம்பத்திலேயே கலகலக்க வைத்தார் சுரேஷ். பிறகு ஒவ்வொருவரைப் பற்றியும் அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வைத்த நகைச்சுவைக் குத்தல்கள் அருமை. ஆனால் வழக்கம் போல சில கமென்ட்டுகள் எல்லை மீறியிருந்தன.

‘விசித்ராம்மாவிற்கு மீன ராசி. சென்சார் பண்ணாலும் பரவாயில்லை.. இதைச் சொல்லிடறேன். அது மீன ராசியில்ல.. ‘யான ராசி’ என்று சுரேஷ் சொன்னது நிச்சயம் ரசிக்கத்தக்க நகைச்சுவை இல்லை. விசித்ரா இதை இயல்பாக எடுத்துக் கொண்டாலும் மாயா உடனே ஆட்சேபித்தது நன்று. தூரத்தில் நின்று கொண்டிருந்த மாயா, சந்திரமுகியின் ஆவி உள்ளே புகுந்ததைப் போன்று சுரேஷையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி நமக்கே சற்று திகிலை ஏற்படுத்தியது என்றால், சுரேஷிற்கு சொல்ல வேண்டுமா? ‘அய்யோ.. பார்க்கறானே.. பார்க்கறானே’ என்று பம்மி பம்மியே பல விஷயங்களை சொல்ல முடியாமல் தத்தளித்தார். பிறகு ‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல. இத்தோட நிறுத்திக்கறேன்’ என்று முடித்துக் கொண்டார்.




எந்தவகையிலும் உருவக்கேலி தவறானது

ஒவ்வொருவரையும் பற்றி சுரேஷ் விவரித்த ‘ராசி பலன்’ காமெடிக்கு பெரிய வீடு விழுந்து விழுந்து சிரித்தது. அதிலும் ரவீனாவெல்லாம் கேட்கவே வேண்டாம். ‘இன்றைக்கு புதன்கிழமை’ என்று சும்மா சொன்னாலே சிரிப்பார். இப்போதோ சுரேஷின் சுமாரான காமெடிக்கு உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருந்தார். தான் எங்கே சறுக்குகிறோம், எல்லை மீறுகிறோம் என்பது சுரேஷிற்கே நன்றாகத் தெரிகிறது. ஆனால் ஒரு மாதிரியாக சமாளித்து எஸ்கேப் ஆகி விடுகிறார். விசித்ரா குறித்த உருவக்கேலிக்கு மாயா உள்ளிட்ட பலரும் ஆட்சேபம் தெரிவித்ததால் விசித்ராவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டார் சுரேஷ். அதையும் வீடு காமெடியாகவே எடுத்துக் கொண்டது. ‘ஜோக்காக எதையாவது பேச வேண்டும்’ என்று உந்துதல் காரணமாகவே சுரேஷ் அப்படிச் செய்கிறார் என்பதை வீடு புரிந்து கொண்டிருப்பதால் இதைப் பிரச்சினையாக மாற்றுவதில்லை.

 

தன் மீது செய்யப்பட்ட கேலிக்கு உடனே ஆட்சேபம் தெரிவித்த மாயாவிற்கு நன்றி சொன்னார் விசித்ரா. ‘இந்த மாதிரி விமர்சனம், கமென்ட்ஸ் எல்லாம் நடிச்ச காலத்துலயே நான் நிறைய பார்த்துட்டேன். ஆனா இது தப்பா போயிடக்கூடாதில்லையா?’ என்று பின்னர் யுகேந்திரனிடம் விசித்ரா சொல்லிக் கொண்டிருந்ததில் அவரது உள்ளார்ந்த வலி புரிந்தது. `சுரேஷோட காமெடி பல சமயங்கள்ல எனக்கு எரிச்சலூட்டுது. பாத்ரூம் போறதை வெச்சுல்லாமா காமெடி பண்ணுவாங்க?’ என்று பூர்ணிமாவிடம் தன் ஆட்சேபத்தை புலம்பிக் கொண்டிருந்தார் மாயா.

தனியாக சென்று கண்கலங்கிக் கொண்டிருந்த மாயாவிற்கு ஆறுதல் சொன்னார் விஷ்ணு. ‘ச்சே.. ச்சே. நான் இந்த கேமை நினைச்சுல்லாம் அழலை. வீட்டு ஞாபகம் வந்துடுச்சு. நான் கடந்து வந்த பாதை கண்ணு முன்னாடி ஓடுச்சு’ என்று சமாளித்தார் மாயா. ‘வீட்ல இருக்கறவங்க ஒவ்வொருத்தர பத்தியும் புட்டு புட்டு வெச்சாருல்ல மனுசன்?!’ என்று சுரேஷின் ராசிபலன் காமெடியை வியந்து கொண்டிருந்தார் மணி. `ஒரு நல்ல காமெடியன் தன்னைத்தான் தாழ்த்திப்பான். மத்தவங்களை சிரிக்க வைப்பான். சுரேஷ் சொல்றதுல்லாம் காமெடி இல்ல. அட்டாக்’ என்று மாயாவின் புலம்பல் தொடர்ந்தாலும் அது உண்மை. மற்றவர்களின் உருவத்தை மலினப்படுத்தியும் எட்டி உதைத்தும் செய்யும் கவுண்டமணியின் காமெடியை விடவும் தன்னையே ‘கைப்புள்ள’யாக இறக்கிக் கொண்டு வடிவேலு செய்யும் காமெடிகள் பல படிகள் உயரத்தில் இருக்கும்.




பிக் பாஸ் வீட்டில் காதலைப் போலவே கத்தரிக்காயும் குழப்பமான திசையில் இருக்கிறது. பூர்ணிமா வைத்த கத்தரிக்காய் குழம்பு குறித்து அவருக்கே உள்ளுக்குள் கலவரம் ஏற்பட்டு மாயாவை பரிசோதனைக்கு அழைத்தார். `ஏதோவொரு சாப்பிடற பொருள் மாதிரிதான் தெரியுது. குழம்பு வெச்சு பெரிய வீட்டை அட்டாக் பண்றியா.. வெரிகுட்.. வெரிகுட்’ என்று அகம் மகிழ்ந்தார் மாயா. ஆனால் பூர்ணிமா பயந்ததற்கு எதிர்மாறான விளைவு நிகழ்ந்தது. ‘குழம்பு செமயா இருக்கு’ என்று பெரிய வீட்டார் ஏகமனதாக சப்புக் கொட்டி பாராட்ட, ‘இதையெல்லாம் அனுபவிக்கறதா.. வேண்டாமா’ என்கிற திகைப்பில் இருந்தார் பூர்ணிமா.

 

இந்த வார ஸ்டாருக்கான டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். கதை சொல்லும் நேரம். ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி விவரிக்க வேண்டும். அது சலிப்பை ஏற்படுத்தினால் மூன்று நபர்கள் பஸ்ஸர் அடித்து கதையை நிறுத்தலாம். இல்லையென்றால் ஐந்து நிமிடத்திற்குக் கதை சொல்லலாம். இது முடிந்த பிறகு சின்ன வீட்டார் குறுக்கு விசாரணையை மேற்கொள்வார்கள்.

முதலில் வந்தவர் ஜோவிகா. ‘எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். டைவர்ஸ் ஆன அம்மா. நான் சின்ன பிள்ளையா இருக்கறப்ப ரொம்ப கஷ்டங்களை அனுபவிச்சிருக்கோம். இருக்க இடம் இல்லாம தாத்தா வீட்ல இருந்து துரத்தப்பட்டிருக்கோம். போலீஸ் ஸ்டேஷன்லாம் எனக்கு அப்பவே பழக்கமாயிடுச்சு. என் பெயர் ஜோவிகா விஜயகுமார். அந்த கடைசிப் பெயரால ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆனா அந்தப் பெயரோடதான் நான் கடைசி வரை இருப்பேன். அந்த அடையாளத்தோடதான் முன்னேறி ஜெயிச்சுக் காட்டுவேன்’ என்றார். இவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்தச் சமயத்தில் பரபரப்பாக வெளிவந்த வீடியோ காட்சிகள் மனக்கண்ணில் வந்து போயின.

அடுத்து வந்தவர் ஐஷூ. `நான் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு. ரொம்ப ஆச்சாரமான குடும்பம். எப்பவும் டான்ஸ் கிளாஸ்லதான் இருப்பேன். ஆனா நான் வயசுக்கு வந்தவுடன் அதை நிறுத்திட்டாங்க. பொண்ணா பொறந்தது தப்போ’ன்னுலாம் எனக்கு தோணியிருக்கு. அப்பதான்..’ என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவர், பிறகு உணர்ச்சி மேலீட்டால் பேச்சைத் தொடர முடியாமல் நிறுத்தி விட்டு அமர்ந்து கொண்டார். கதறி அழுது கொண்டிருந்த அவரை கட்டியணைத்து தேற்றினார் விசித்ரா.



 

அடுத்து வந்த அக்ஷயா.. ‘நான் எப்பவுமே பாசிட்டிவ். ஹாப்பியா இருப்பேன். பாதுகாப்பா என்னை வளர்த்தாங்க. +2 வரைக்கும் ரொம்ப ஹாப்பி. அப்ப நான் ஒரு டிராமால நடிச்சிட்டு வந்தப்ப ‘நல்லாயிருக்கு’ன்னு சிலர் பாராட்டுனதுதான் என்னோட ஹாப்பியஸ்ட் மொமன்ட். அப்பதான் நடிக்கணும்ன்ற ஆசை வந்துச்சு. வீட்ல சொன்னேன். அண்ணா மாதிரி ஒருத்தர் எனக்கு அது பத்தி சொல்லிக் கொடுத்தாரு. நான் அவரை அண்ணா மாதிரி பார்த்தேன். ஆனா அவரு என்னை அந்த மாதிரி பார்க்கலைன்றது அப்புறம்தான் தெரிஞ்சது. கொரானோ சமயத்து சிரமங்கள்ல கூட டிக்டாக் வீடியோல்லாம் பண்ணேன். ஒரு விஷயத்துல நாம உறுதியா இருந்தா நம்ம பெற்றோர்கள் நிச்சயம் அதைப் புரிஞ்சுப்பாங்க” என்று அக்ஷயா சொன்ன இறுதி வாசகத்திற்குக் கைத்தட்டல் கிடைத்தது.

 

கூல் சுரே வாழ்க்கைப் பின்னணி, ஒரு கீழ்நடுத்தர வர்க்க குடும்பத்தின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது. `அப்பா இருந்தாலும் அம்மா ஆதரவுலதான் வளர்ந்தேன். வீட்டு வேலை செஞ்சு என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. ஸ்கூல்ல சத்துணவு சாப்பிடுவேன். தினமும் முட்டை போட மாட்டாங்களான்னு ஏக்கமா இருக்கும். பல வீடுகள்ல வேலை செஞ்சு அம்மா கொண்டு வர்ற சாப்பாட்டை நைட்டு ஊட்டுவாங்க. எங்க அண்ணன் எனக்காக நிறைய தியாகம் செஞ்சிருக்காரு. படிப்பு வராம பேப்பர் போடற வேலைக்கு போயிருக்கேன். ஏசி மெக்கானிக் கிட்ட அண்ணன் சேர்த்து விட்டாரு’ என்று கலங்கிக் கொண்டே தன் கதையை சொல்லி முடித்தார் சுரேஷ்.

கதை நேரம் முடிந்ததும் அதைப் பற்றிய குறுக்கு விசாரணையை சின்ன வீட்டார் செய்தார்கள். `அவ்வளவு கஷ்டப்பட்டும் ஏன் அந்த கடைசிப் பெயரை வெச்சுக்கணும்னு நெனக்கறீங்க?’ என்று ஜோவிகாவிடம் பிரதீப் கேட்ட கேள்வி சரியானது. `அந்தப் பெயர்லதான் ஆரம்பிச்சேன். அந்தப் பெயரோடதான் கடைசி வரைக்கும் சாதிக்கணும்னு நெனக்கறேன்’ என்று போராட்டக் குணத்தோடு ஜோவிகா சொன்ன விளக்கமும் நன்று. நம்மை அவமானப்படுத்தியவர்களின் முன்னால் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வைராக்கிய உணர்வே நம்மை முன்னேற வைக்கும்.

அடுத்த கேள்வியை சுரேஷிடம் கேட்டார் பிரதீப். ‘அம்மா.. மனைவி.. ரெண்டு உறவையும் பேலன்ஸ் பண்ண கஷ்டமா இருக்குன்னு சொன்னீங்களே?’ என்ற கேள்விக்கு ‘வீட்டுக்கு வருகிற மருமகள் ‘இதுவும் நம்ம வீடுதான்’ன்ற உணர்வோட செயல்படணும். கணவரும் நிறைய விட்டுத் தரணும். அதே மாதிரி தன்னோட வீடு, சொந்த பந்தங்களை விட்டு வரும் மருமகளுக்கு புகுந்த வீடு நிறைய ஆதரவு தரணும். என்னோட மனைவி அவங்க சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணி பேசக்கூட பயப்படுவாங்க. எதுனா பிரச்சினையாயிடுமோன்னு.. என் மனைவி, மாமனார் எனக்கு கிடைச்ச பாக்கியம்’ என்று நெகிழ்ந்து கண்கலங்கினார் சுரேஷ்.




`நடிப்பு ஆசைக்காக உன் ஃபேமிலியை கன்வின்ஸ் பண்றது ஈஸியா இருந்துதா?’ என்ற கேள்வியை அக்ஷயாவிடம் கேட்டார் பூர்ணிமா. `ஆரம்பத்துல கஷ்டமா இருந்தது. நெறைய சண்டை போட்டிருக்கேன். ஆக்டிங் ஃபீல்டுல மரியாதையே இருக்காது. என்னை மாதிரி எந்தவொரு பேக்கிரவுண்டும் இல்லாம வர்றவங்களுக்கு மரியாதையே தர மாட்டாங்க. நடிக்கற இடத்துல எங்க அம்மாவிற்கு கூட மரியாதை கிடைக்காது. யாரா இருந்தாலும் மரியாதை குடுங்க. அவங்களும் ஒரு நாளைக்கு பெரிய ஆளா வருவாங்க’ என்று அக்ஷயா தந்த விளக்கத்தை வீடு கைத்தட்டி ஏற்றது.

யாருக்கு ஸ்டார் என்பதை சின்ன வீட்டார் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். கூல் சுரேஷிற்கு வாக்களித்தார் பிரதீப். ஆனால் வாக்குகள் மெஜாரிட்டியாக வராமல் கலவையாக வந்தது. எனவே மீண்டும் கூடி ஆலோசித்ததில் அக்ஷயா ஸ்டார் வென்றார். `பரவாயில்லையே.. படிப்படியா மின்ன ஆரம்பிச்சிருக்கீங்களே.. வாழ்த்துகள்’ என்று பிக் பாஸிடமிருந்து பாராட்டு கிடைத்ததும் அக்ஷயாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

திடீரென்று கிச்சன் ஏரியாவிற்குள் ஒரு மோதல். விஷயம் இதுதான். ரவீனா வந்து காஃபி கேட்டிருக்கிறார். ‘எனக்கு காஃபி போடத் தெரியாது’ என்று பூர்ணிமா அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். இது விஷ்ணுவிற்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது. ‘ஒண்ணு காஃபி போடணும்.. இல்லைன்னா சொல்லிட்டு வரணும்.. எதுவும் செய்யாம சுத்திட்டே இருக்கே. வேணும்ன்ட்டே பண்றே..” என்று அவர் அதட்டலாகச் சொன்னதற்கு பூர்ணிமா கோபித்துக் கொண்டார். கத்தரிக்காய் குழம்பு வைத்த பூர்ணிமாவிற்கு காஃபி போட தெரியாதா என்ன? கேட்டது ரவீனா என்பதுதான் அவருக்குப் பிரச்சினை போலிருக்கிறது. காஃபிக்குள் ஒரு ரணகள கலவரம்




ஆளுக்கொரு 50 மதிப்புள்ள நாணயத்தை உண்டியல் மற்றும் பூட்டுடன் தந்தார் பிக் பாஸ். கேப்டனுக்கு மட்டும் இரண்டு நாணயங்கள். டாஸ்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு நாணயங்களை சேர்த்துக் கொண்டே வந்தால் அதன் மூலம் சில லக்ஸரி வசதிகள் கிடைக்கும். பிடித்த உணவை வரவழைத்துச் சாப்பிடலாமாம். குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமையுமாம். மேலும் பல நலன்கள் உண்டாம். ‘மத்தவங்க நாணயத்தை உருவலாமா?’ என்று ஆரம்பத்திலேயே கோக்குமாக்கான கேள்வியைக் கேட்டார் பிரதீப். இப்படி அவர் கேட்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம். இதுவொரு நாணயம் தவறிய கேள்வி.

ஆக.. இந்த வாரத்தின் இரண்டாவது நாளும் பெரிய சம்பவங்கள் இன்றி இயல்பான வாழ்க்கையுடன் கடந்திருக்கிறது. கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சண்டை, கொஞ்சம் பிறாண்டல் என்று போயிருக்கிறது. இது எப்படியாக மாறும் என்பதைக் காத்திருந்து பார்ப்போம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!