Bigg Boss Tamil 7 Cinema Entertainment

Bigg Boss Tamil 7 நாள் 26: விதிகளை மீறிய இரண்டு வீடுகள் :பிக் பாஸ் கொடுத்த தண்டனை!

ரேங்க்கிங் டாஸ்க் என்பது முன்பெல்லாம் தெருக்கூத்து மாதிரி விடிய விடிய நடக்கும். ஆனால் இந்த முறை இவர்கள் அடித்த கூத்து காரணமாக பிக் பாஸிற்கே போரடித்து சீக்கிரம் முடித்து துரத்திவிட்டார். Ranking Task, Pranking Task மாதிரி அபத்தமாக முடிந்துவிட்டது.




ரேங்க்கிங் டாஸ்க் தொடர்ந்தது. ஆறாவது இடத்தில் மணி சென்று நிற்க, “நாலாவது இடம் காலியா இருக்கு. அங்க நான் நிக்கறேன்” என்று பஸ்ஸில் சீட் பிடிப்பது மாதிரி சுரேஷ் கிளம்ப, அப்போதுதான் விசித்ராவிற்கு எதிர்ப்புணர்ச்சி உள்ளுக்குள் இருந்து ஆவேசமாகக் கிளம்பியது. “அதெல்லாம் நான் விட மாட்டேன்” என்று ஆட்சேபத்தைக் கிளப்ப, நிக்சனும் அக்ஷயாவும் இணைந்து சுரேஷின் இடத்தை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள்.

இது சரி வராது என்று பிக் பாஸ், ‘கொஞ்ச நேரம் டைம் தரேன். ஆளாளுக்கு எங்கயாவது போய் நின்னு தொலைங்க. பஸ்ஸர் அடிச்சப்புறம் அதுதான் ஃபைனல்’ என்று கடுப்பாக அறிவித்தார். வாக்கெடுப்பில் நான்காவது இடம் யுகேந்திரனுக்குக் கிடைத்தது. என்றாலும்  ஏதோ தான் விட்டுக் கொடுத்தது போலவே எரிச்சலுடன் கிளம்பிச் சென்றார் சுரேஷ்.




ஒருவழியாக இந்தப் போங்காட்டம் நிறைவிற்கு வந்தது. முதல் இடத்தில் மாயா, இரண்டாம் இடத்தில் விக்ரம் (எதே?!), மூன்றாம் இடத்தில் நிக்சன் என்று இந்த வரிசை அமைந்தது. கோபித்துக் கொண்டு தனது பதவியை ரிசைன் செய்து விட்டுப் போன பிரதீப் கடைசி இடத்தில் நின்று கொண்டிருநதார். இந்த வரிசையிலும் கூட மணியும் ரவீனாவும் அடுத்தடுத்துதான் நின்று கொண்டிருந்தார்கள். (மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!)

“நீங்க டீல் பேசும் போது எனக்கு சிரிப்பா வந்தது” என்று பூர்ணிமா சொல்ல “அது அறியாமை. நானும் பிரதீப்பும் ஏற்கெனவே இது பத்தி பேசி இருக்கோம்” என்று வாதாடினார் மாயா. பெரும் புதையல் கிடைப்பது போல் கனவு காணும் ஒரு மோர் வியாபாரி, அந்த உற்சாகத்தில் மோர்க்கூடையை காலால் உதைத்து அன்றைய வியாபாரத்தை இழந்த கதைதான் நினைவிற்கு வருகிறது. “நாம பெண்கள் கூட்டணி ஒண்ணா சேர்ந்து சின்ன வீட்டுக்குப் போவோம். அப்ப தனியாத் தெரிவோம்” என்கிற பிளானைச் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா. 

ஷாப்பிங் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘ஜெயிச்சா சோறு… இல்லைன்னா வெறும் நீரு’ என்கிற டாஸ்க். இதில் பெரிய வீடு போராடித் தோற்றது. “உங்க ஸ்போர்ட்டிவ்னஸைப் பாராட்டறேன். ஆனா அதுக்காக சோறெல்லாம் கொடுக்க முடியாது” என்று கெத்து காட்டினார் பிக் பாஸ்.

 துணிகளை எடுத்துக் கொண்டு சின்ன பிக் பாஸ் வீட்டிற்குப் பயணம் கிளம்பினார் மாயா. கூத்தில் கோமாளி போல நடந்து கொள்ளும் சுரேஷூம், “தங்கச்சி. என்னை விட்டுப் போயிடாத. நானும் வரேன்” என்று அவரும் பையைத் தூக்கிக் கொண்டார். ‘மணி இருக்கும் இடம்தான் எனக்கு தாஜ்மஹால்’ என்பது மாதிரி இவர்களுக்கு முன்னால் ஓடிச்சென்றார் ரவீனா.




பிரதீப்பின் பெரிய வீட்டு என்ட்ரியைப் பார்த்து எரிச்சலான விஷ்ணு, ‘ரைட்டு… சனியன் சைக்கிள்ல வருது. இதை எப்படியாவது துரத்தணும்’ என்று முடிவு செய்து கொண்டார் போலிருக்கிறது. இருவருக்குமான ஈகோ உரசல் உச்சத்தை எட்டியது. “நீ போட்ட டீல் எல்லாம் அதிகப்பிரசங்கித்தனம். மக்கள் உன்னை அடிச்சு வெளிய அனுப்பப் போறாங்க என்று மீராட்டிக்கொண்டிருந்தார் கூடவே விசித்ராவும்.  

மதிய நேரத்தைத் தாண்டியும் உப்பில்லாத சோறு வரவில்லை. சின்ன வீட்டில் அடுப்பும் எரியவில்லை. விசித்ரா உள்ளிட்டவர்களுக்கு பசி. கேப்டன் ஏதாவது செய்தாக வேண்டும். ‘வீடு மாறிச் சென்றவர்கள் அவரவர்களின் இடத்திற்குத் திரும்பாமல் பிக் பாஸ் துரும்பை கூட அசைக்க மாட்டார்’ என்பது பூர்ணிமாவிற்கு புரிந்து விட்டது. எனவே மீண்டும் தனது ராஜதந்திர நடவடிக்கைகளை ஆரம்பித்தார். ரவீனாவையும் பிரதீப்பையும் காலில் விழாத குறையாகக் கெஞ்சி சம்மதிக்க வைத்தார். ஆனால் சோற்றுப் பிரச்னைக்கு நடுவிலும் மணி – ரவீனா கூட்டணி தங்களின் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்ததுதான் கொடுமை.

அப்பாடா ஒரு வழியாக சோறு வந்தது. அடுப்பு எரிய ஆரம்பித்தது. வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஒரு வார்த்தை கூட பேசாமல் வேடிக்கை பார்த்து தான் நினைத்ததை சாதித்த பிக் பாஸ் உண்மையிலேயே அறிவாளிதான். “உன்னைப் பார்க்கும் போதெல்லாம் விஷ்ணுவோட கண்ணுல பல்ப் எரியுது. நெஜம். நான் பார்த்தேன்” என்று பூர்ணிமாவிடம் மாயா சொல்ல, இதற்கு வெட்கப்படுவதா அல்லது வேண்டாமா என்பது மாதிரி பூர்ணிமா அமர்ந்திருந்தார்.

இந்த வாரத்தில் மேலும் ஐந்து புது என்ட்ரிகள் வரப்போகிறார்களாம். இனி என்னவாகுமோ பொறுத்திருந்து பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!