Bigg Boss Tamil 7 Cinema Entertainment

Bigg Boss 7: `அடுத்த போட்டியாளர்’ வைல்டு கார்டு என்ட்ரியாக களமிறங்கும் பிரபல பாடகர்!

இரண்டு வாரங்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 7. கூல் சுரேஷ், நடிகை விசித்ரா, ஜோவிதா, விஷ்ணு, சரவண விக்ரம், வினுஷா தேவி உள்ளிட்ட பதினெட்டுப் போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகத் தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் வாரமே எவிக்‌ஷன் இருந்தது.

முதல் போட்டியாளராக வெளியேறினார் அனன்யா. அனன்யாவின் எலிமினேஷன் நிகழ்ந்த மறுநாளே எழுத்தாளர் பவா செல்லத்துரையும் வெளியேற விரும்புவதாகச் சொல்லி தானாகவே வெளியேறினார். பவாவின் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை அது எவிக்‌ஷன் இல்லை. அவராகவே விரும்பி வெளியேறினார் என்றார்கள்.பவா வெளியேறியதால் சென்ற வாரம் எவிக்‌ஷன் இல்லை.




கலந்து கொண்ட பதினெட்டுப் போட்டியாளர்களில் அனன்யா, பவா செல்லத்துரை இருவர் வெளியேறியதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் நிச்சயம் எவிக்‌ஷன் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய வீட்டிலிருக்கிற போட்டியாளர்களில் குறைவான ஓட்டுகள் வாங்குகிற ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆக இருக்கிறார். இந்தச் சூழலில், மேலும் ஒருசில போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் செல்லலாம் என்கிற பேச்சு அடிபட்டு வந்தது.

 'கானா' பாலா!

மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வார்கள் எனப் பரவிய தகவல்களின் அடிப்படையில் விசாரித்த போது சீரியல் நடிகை அர்ச்சனாவின் பெயர் அடிபட்டது. இது தொடர்பாக ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது வைல்டு கார்டு மூலம் செல்ல இருக்கும் ஆண் போட்டியாளர் குறித்து நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி கானா இசைப் பாடகர் பாலாதான் அந்தப் போட்டியாளர் எனத் தெரியவந்துள்ளது.




பாலமுருகன் என்கிற கானா பாலா தன் இளமைக் காலத்தில் இருந்தே ‘கானா’ பாடுவதில் ஆர்வமிக்கவராகத் திகழ்ந்து வருகிறார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘கானா குயில் பாட்டு’   நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றவர். கானா பாடல்களைப் பாடிவரும் அதே நேரம் மறுபுறம் வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார்.

இசையமைப்பாளர் தேவாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கானா பாடல் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் என இவரைக் குறிப்பிடலாம். மேலும் சென்னை பகுதியின் கானா இசை வடிவத்தை கச்சிதமாகப் பாடுபவர் எனவும் இவருக்கு பெயருண்டு. ‘அட்டக் கத்தி’ படத்தில் ‘ஆடி போனா ஆவணி’, ‘சூது கவ்வும்’ படத்தில் ‘காசு பணம் துட்டு மணி’ முதலான இவரது பாடல்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. பாலா இந்த வாரத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வாரமோ பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லலாமென எதிர்பார்க்கப்படுகிறது.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!